குடியின்றி அமையும் இவ்வுலகு: மருத்துவர்.அரவிந்தன் சிவக்குமார்

HOME

பெருந்தொற்று அதிகமாகி வருகிறது, சென்னையில் நோய்த்தொற்று அதிகமாகியிருக்கும் சூழலில் மதுக்கடைகள் திறக்க அரசு முடிவெடுத்துள்ளதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

லாக்டவுன் மூன்றாம் கட்டம் 3.0-இன் தொடக்கத்திலேயே டாஸ்மாக் திறப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு எதிராக குரல்கள் ஒலிக்கும் நேரத்தில், குடியின்றி அமையாது இவ்வுலகு என்று பேசிவருபவர்கள் குடிப்பது அவரவர் உரிமை, அவரவர் தெரிவு என்றும், டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்ப்பவர்கள் ஒரு elite கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும், ஒழுக்கவாதம் பேசுவதாகவும் இருக்கிறார்கள் என்றும், கூறிவருகிறார்கள். மேலும், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதில் தொய்வு ஏற்படும் என்ற, அந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து மதுபானக் கடைகளை திறக்கக் கூடாதென்று சிலரும், பூரண மதுவிலக்கெல்லாம் முடியாது, கொள்கை அளவில்கூட பேசத் தயங்குபவர்களும் இருக்கும் நிலையில், நாம்  என்ன நிலைப்பாட்டில் இதை அணுகவேண்டும் ? பார்க்கலாம் வாங்க.

1.குடிநோய் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமா?

ஒரே உடல், ஒரே மூளை, அதே நரம்பு மண்டலம், அதே ரசாயனக் கலவை, அதனால் அந்த சாராயம் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் சொல்லலாம்.

கொரோனா ஒரு வைரஸ் கிருமிதானே, அது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும், அதன் பரவலை மட்டுப்படுத்தி தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகளைத்தானே ஏற்படுத்தும் என்று நான் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் ஒரு மனிதனின் உடல் தொடர்ச்சியாக சமூகத்தோடு தொடர்பிலேயே இருந்து கொண்டே இருக்கின்றது. சமூகமும் அந்த தனிமனிதனோடு தொடர்பிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த அந்த தொடர்பை நாம் ஒரே சமயத்தில் ஒன்றாகவும் தனியாகவும் பார்க்கவேண்டியுள்ளது. மனிதன் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் தனியே ஆய்வு செய்யும் அதே நேரத்தில், அதை அந்த சூழலோடு பொருத்திப்பார்த்தும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது.

நோய் உருவாவது, நோயின் தாக்கம், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள், அதிலிருந்து மீட்சி எல்லாம் உடல் சார்ந்தோ கிருமி சார்ந்தோ மட்டும் நாம் பார்க்காமல், அந்த கிருமியை biological entity-ஆக மட்டும் பார்க்காமல், அதை ஒரு social entity-ஆகவும் பார்க்கவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, வேலை ஏதும் இல்லா கூலித்தொழிலாளிகள் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறி கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்க வேண்டிய நிர்பந்தம். ஒரு நாளைக்கு லட்சக் கணக்கானோர் வந்துபோகும் கோயம்பேடு சந்தைக்கு சென்றால் கொரோனா வரும் என்று தெரிந்தும், அந்த தொழிலாளி வேறுவழியில்லாமல் தன் குடும்பத்தை காக்க மிகப்பெரிய ஆபத்தான, இக்கட்டானச் செயலில் ஈடுபட முடிவெடுக்கிறார்.

அந்த தொழிலாளிக்கு நம்மைப்போல்  ஊரடங்கு முடியும் வரை வீட்டில் உட்கார்ந்து, நெட்பிளிக்ஸ் சினிமா பார்த்துக் கொண்டு, ஆன்லைனில்  ஆர்டர் செய்த காய்கறிகளும் உணவும் சாப்பிட ஆசைதான். ஆனால் அது அவர்களுக்கு  எட்டா கனவாக இருக்கிறது. அவருக்கும்,  N95 முகக்கவசம் போட ஆசைதான், அவர் துண்டை முகத்தில் கட்டிக் கொண்டு வேலையில் ஈடுபடுகிறார். அரசாங்கம் கோயம்பேட்டு சந்தையை திறந்து வைத்திருக்கிறது என்றால், அதனால் நோய்ப்பரவல் குறைவாக இருக்கும் என்று கூட நம்பியிருக்கலாம்.

அந்த தொழிலாளிக்கு நோய்த் தொற்று சுலபமாக ஏற்படுகிறது, அவர் பாதிப்படைகிறார் இப்போது அவர் ஏதோ ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அவருடைய குடும்பச்சூழல் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி அவரை இந்த ஆபத்தான செயலில் ஈடுபடவைத்தது. இப்படியே எத்தனை நாட்கள், அவர் குடும்ப உறவுகளுக்கு என்ன சொல்வார்? யார் பாதுகாப்பது? எல்லாம் கேள்விக்குறிதான்.

ஆனால் ஒரு பெரிய கேட்டேட் கம்மியூனிட்டி, அல்லது அடையாறு போட் கிளப் ஹவுஸ், காதர் நவாஸ்கான் ரோடு, பெசண்ட் நகர், போயஸ் தோட்டத்தில் பங்களா வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்தும்? ஒரேவிதமாக நோய்த்தொற்று ஏற்படாது. இதைத்தான் Differential exposure என்பர்.

மேலும் அந்த பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி தான் செய்யும் வேலையின் தன்மை, கூலியின் சொற்பத் தொகையை வீட்டுக்கு அனுப்ப ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு, 5 தேநீர், தன்னுடைய தினசரி வேலை பளு, மற்றும் குடும்பச் சூழ்நிலை நெருக்கடி அதை தணிக்க பீடி புகைகிறார், அவர் உடலில் ஏதாவது வியாதியிருக்கா என்று மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துப் பார்த்துக்கொண்டது கிடையாது. ஒரு நாள் விடுப்பென்றால் கூலி கிடைக்காது. அதனால் வண்டி ஓடும் வரை ஓடட்டும் என்று இருந்திருப்பார். அவர் படுத்துறங்க பாதுகாப்பான சூழலோ, சுவாசிக்க மாசில்லாத காற்றோ, குடிக்க சுத்தமான நீரோ இல்லாத சூழ்நிலையில் அவர் ஏற்கெனவே பல்வேறு இடர்பாடுகளை சந்தித்ததால் அந்த பாதிப்புகள் உடலின் இயக்கப் போக்கையும், உறுப்புகளின் செயல்திறனையும், நோய் உண்டாவதற்கான எல்லாவிதமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் மேட்டுக்குடியில் இருக்கும் ஒருவருக்கு இந்த இடர்பாடுகள் இருக்காது. இப்படி மக்கள் இருப்பதும் அவர்களுக்கு  தெரிய வாய்ப்பில்லை.

இம்மாதிரியான இடர்பாடுகள் அதிகம் நிறைந்த சூழலில் வாழ்ந்து வந்த தொழிலாளியின் நுரையீரல், இருதயம் பாதிப்படைந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படுமாயின் அதன் விளைவுகள் அதிகமாகவும் நோயின் மீட்சி சிக்கலாகவும் இருக்கும்.  எனவே நோய் பற்றி நாம் பேசும்போது differential exposure,  differential vulnerability வெவ்வேறு விதமான வகையீட்டு இடர்பாடுகள்,  ஒருவர்க்கு  நோய் தொற்று ஏற்படுமா? அப்படி ஏற்படின் அது எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் ? என்பதை தீர்மானிக்கிறது.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானதொன்று என்னவென்றால், ஒருவன் சமூக ஏணிபப்டிக்கட்டில் எந்த படி நிலையில் இருக்கிறானோ அதைப் பொறுத்துதான் அவனுக்கு நோய் ஏற்படுமா? அதன் தாக்கம் எப்படி இருக்கும், அதிலிருந்து அவன் வெளி வர முடியுமா? எந்த மாதிரியான தற்போதைய, நெடுநாளைய பாதிப்புகள் இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது.

2.எனவே குடி ஒன்றுதான் அது ஒரேமாதிரியான பாதிப்பும் தாக்கமும் மனிதர்களுள் ஏற்படுத்தாது. ஒருவர் குடிக்கும் மதுவின் தன்மை, அவர் எடுத்துக்கொள்ளும் உணவின் தன்மை, அவருக்கு இருக்கும் இடர்பாட்டுகளின் அளவு, வயிற்று வலி வந்தால் அவர் வேலைக்கு போகாமல் விடுப்பெடுத்தல், ஏற்படப் போகும் பொருளாதார இழப்பு மற்றும் வேலையிழப்பு, டாஸ்மாக் கடையில் நின்று காவல்துறை லத்திகளைத்தாண்டி வீடு வந்து சேருவதற்குள் எத்தனை இடர்பாடுகள். இதே மேட்டுக் குடியிலிருக்கும் ஒருவர், குடித்துவிட்டு ஆடி காரில் சீறிப்பாயும் ஒருவருக்கு அதே தாக்கத்தை குடி எற்படுத்துமா? என்று கேள்விக்கு பதில் உங்களிடமே உண்டு.

3.தினக் கூலிகள், தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், உழைக்கும் கீழ்நடுத்தர வகுப்பினர்களில் சிறு வயதிலேயே குடிக்கு அடிமையாவது மட்டுமல்லாமல், குடிநோயின் தீவிரமும், உடல் நோயின் பாதிப்பும் அதிகமாகிவரும் சூழலில், தங்கள் வேலையில் இருக்கும் சிக்கல், வாழ்நிலையில் இருக்கும் நெருக்கடிகள், அது கொடுக்கும் அழுத்தங்கள், கடன், உழைபுக்கேற்ற கூலியோ, குறைந்தபட்ச சரியான ஊதியம் பணிப்பாதுகாப்போ இல்லாதச்சூழல், உறவுகளில் சிக்கல் இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு குடி அவர்களுக்கு வடிகாலாய் அமைந்துவிடுகிறது. உழைக்கும் மக்கள் குடியிலிருந்து மீள முடியாமலும் தங்களுடைய பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியாமலும், அரசியல்மயப்படாமலும் ஒன்றாய் இணைந்து போராட முடியாமைக்கும் இந்த குடி ஒரு பெரும்பங்கை வகிக்கிறது.

4.இப்படி பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றியும், அதை பாதுகாப்பது குறித்தும், பாதிப்புகளிலிருந்து மீள்வதிலும் அதற்கான கொள்கை முடிவுகளை தீர்மானிப்பதிலும் அவர்களுக்காக யாரோ ஒருவர் தீர்மானிக்கும் நிலையே உள்ளது. இச்சூழலில் இந்தியா முழுக்க புலம்பெயர் தொழிலாளர்களின் போராட்டம், வாழ்வாதரம் இழந்து நிற்கும் தொழிலாளர், தினக்கூலிகள், அவர்கள் மத்தியில் ஒரு போராட்ட தீப்பொறி பற்றிவிடக் கூடாதென்பதிலிருந்தும், பேரிடருக்கு முன்னும் அதற்குப் பின்னும் ஏற்படுத்தியுள்ள பொருளாதார மந்தநிலை மக்களை போராட தூண்டாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே இந்த மது நிச்சயம் உதவி செய்யும் .

5.கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியும் நிச்சயமற்ற சூழலும் குடியின் அளவை கட்டாயம் அதிகப்படுத்தும். அதற்கு அவர்களிடம் பணம் வேண்டும். நிச்சயம் அது எதை நோக்கி போகும் என்று நாம் எல்லோரும் அறிந்ததே. கொரொனா காலத்தில் குடி பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் மிகப்பெரிய வன்முறை. உடல் மற்றும் உளவியல் வன்முறை மட்டுமல்ல, வாழ்வாதாரம் இல்லா காலகட்டத்தில் அதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், தங்கள் உறவினர்கள் குடிப்பது நிச்சயம் தற்கொலைகளுக்கு இட்டுச்செல்லும். குடும்ப உறவுகள் சிதைவற்கு வழிவகுக்கும்.

6.என் வாழ்க்கை என் கையில், நான் குடிக்கணுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிக்கணும், அவன் குடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவனவன் தேர்வு (choice)செய்யவேண்டும். குடியின்றி இவ்வுலகு அமையாது என்று சிலர் சொல்கிறார்கள். தாரளமயமாக்கல் எல்லாவாற்றையும் சந்தைப் பொருளாக்கியிருக்கிறது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமோ தேர்வு செய்ய முடியும் என்று, நுகர்வோராக அவர்களை கட்டமைத்துள்ளது. அதே வேளையில் அவர்கள் விருப்பப்பட்டு செய்யும் தேர்வுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் அவரவர் பொறுப்பேற்க வேண்டும். அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் பாதிப்புகளுக்கும், தீர்க்கக் கூடிய பொறுப்பும் அந்த தனிநபரேதான் எடுக்க வேண்டும். அரசோ சந்தை சக்திகளோ அதற்கு பொறுப்பெடுக்காது. இதையே govermentality மற்றும் responsibilisation என்று முன்வைக்கிறது.

குடியின்றி அமையாது இவ்வுலகு, நண்பர்கள் சொல்லும் அவரவர் வாழ்க்கை அவரவர் தேர்வு செய்வது என்ற வாதத்தை இதனோடு பொறுத்தி பார்க்கவேண்டியுள்ளது.

தினக் கூலிகள் தினக்கூலிகளாகவே இருப்பதற்கு அவர்கள் விருப்பப்பட்டு தெரிவு செய்ததே காரணமாகிவிடும்.

தினக் கூலிகள் டாஸ்மாக்கில் குடிவாங்கி குடித்துவிட்டு, கல்லீரல் செயலிழந்து, ரத்த வாந்தி எடுத்து, துடிதுடித்து இறந்துபோவது அவர்கள் விருப்பப்பட்டு தேர்வு செய்ததே என்பதாகிவிடும்.

நச்சுத்தன்மை (toxic environment) மிகுந்த சூழலில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு துளியளவேனும் உதவாத நஞ்சை, அவர்கள் தெரிவு செய்யட்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை.

7.உலகம் முழுக்க மனநல மருத்துவத்துறை தாரளமயமாக்கலுக்கு தோதாக மனநலப்பிரச்சனைகளை தனிநபர் பிரச்சனையாகவும்,  ஒருவரின் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாகவும் சுருக்கிப் பார்க்கும் பார்வையை முன்வைக்கிறது. அந்த நபர்களின் உளவியல் சிக்கல்களுக்கு பின்னால் இருக்கும் சமூக அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளை நீர்த்துப் போகும் வகையில், அதனை அரசியலற்றதாக மாற்றி சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு மக்களை ஒத்துபோகச் செய்யும் வேலையச் செய்து கொண்டிருக்கிறது.

ரசாயனக் குறைப்பாட்டை சமன்செய்ய மாத்திரைகள், பிரச்சனைகளுக்கு காரணம் தனக்கிருக்கும் பிறழ் சிந்தனை முறை என்று தனிமனிதனே எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லாமல் சொல்லி, நிலவுகின்ற கட்டமைப்பு வன்முறையை பாதுகாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

8.பூரண மதுவிலக்கை கொள்கை அளவில் நிச்சயம் நாம் முன்வைக்கும் வேண்டிய கட்டாயமும் அவசியமும் தேவையும் இன்றையச் சூழலில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்போகும் பொருளாதார பாதிப்பும், தொழில்துறையில் அதன் தாக்கம், தனிமனித வாழ்வை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 12 மணி நேர வேலைக்கு தயராகுங்கள் என்று ஒலிக்கின்ற சூழலில், குறைந்தபட்ச தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும் அபாயமும் பெரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தை நோக்கி நகரவிருக்கும் சூழலில் மக்களுக்கு எதிராக இருக்கும் மதுவை நிச்சயம் ஒழிக்கவேண்டும். ஏனெனில் அது நிச்சயம் மிகப்பெரிய உளவியல் உடல் பாதிப்புக்கு இட்டுச்செல்வது மட்டுமல்ல, தற்கொலைகள் அதிகரிக்கும். அமெரிக்காவில் 2008 பொருளாதார நெருக்கடியின் பாதிப்பினால் குடி – போதைப்பொருள் – உடல் பாதிப்பு – தற்கொலைகள் அதிகமாக காணப்பட்டது, அதுவும் 40 வயதுக்குள்ளானவர்களின் மரணங்கள். இதை நம்பிக்கை இழப்பு மரணங்கள் (Death of despair ) என்று அழைத்தனர். அது போன்றொரு நிலை இங்கு ஏற்படுமாயின் மனிதவளத்தை நாம் இழக்க நேரிடும். அதற்காகவாவது குடிக்கு எதிரான குரல்கொடுப்பது மட்டுமல்ல மக்களோடு இணைந்த கூட்டமைப்பை மருத்துவர்கள் முன்னெடுக்கவேண்டும்.

9.தங்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று ஒருவர் முனையும்போது முதலில் அவர் தெளிவாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் தன் பிரச்சனையை சரியான கோணத்தில் புரிந்துகொள்ள முடியும் . அதன் பின் தீர்வுகளை முன்வைக்க முடியும். அந்த பிரச்சனைகளை கையாளவும் முடியும். குடி மனதை கலங்கலாக்கி தெளிவின்மையை அதிகப்படுத்தும். அது உழைக்கும் மக்களை அணு அணுவாய் சித்திரவதைக்கு உட்படுத்தி மரணத்தையே பரிசாகக் கொடுக்குமே அன்றி வேறெதையும் மக்களுக்கு கொடுக்கப் போவது கிடையாது .

கொரோனா பெருந்தொற்றுக்காலம் முழுவதும், அதற்குப்பின்னால் வரவிருக்கும் காலகட்டத்தில் மக்கள் விழுப்புடனும், ஒன்றாய் இணைந்தும் செயல்பட வேண்டுமாயின் குடியில்லாமல் இருக்கவேண்டும் .

10.சாமானிய மக்களுக்கான பிரச்சனைகளை அவர்களுக்கான சுகாதாரத்தை பற்றி பேசமுடியாதபோது மருத்துவர்கள் மக்களுக்கான வழக்குரைஞர்களாக செயல்படவேண்டும். மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வது, மக்களை பாதுகாப்பது அரசின்  கடமை.

அது உறுதி செய்யப்படாதபோது மக்களோடிணைந்து ,  அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் மருத்துவருக்கு உண்டு.

முன்பென்றும் இல்லாத வகையில் குடியில்லாத ஒரு சூழல்தான் மக்களுக்கு இப்போது தேவைப்படுகிறது.