குழந்தைகளின் கல்வியில் கைவைக்கும் ஆர்எஸ்எஸ் – ராம் புனியானி

HOME

கொரோனா இந்த உலகம் முழுவதிலுமே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஆனால், சில அரசுகள் இதனை ஜனநாயக சுதந்திரத்திற்கு திரை போடுவதற்கு பயன்படுத்துகின்றன. சில நாடுகளில், இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்காவின் “இறுக்கமான” கலாச்சார சூழலையும்,  “வெளிப்படையான விவாதத்தை” வளர்த்தெடுக்க வேண்டிய மேடைகள் வேண்டும் என்றே பலவீனப்படுத்தப்படுவதையும், அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்துவரும் பிரச்சாரத்தையும் சொல்லலாம். இந்தியாவிலும்கூட, போராட்டக்காரர்கள் மற்றும் வெகுமக்கள் இயக்கங்களை மிரட்டுவது தீவிரமடைந்திருப்பதுடன் அதற்கான எதிர்வினைகளும் தோன்றத் தொடங்கியுள்ளன. ஆனால், மதவாத சக்திகள் தங்களால் முடிந்தவரை இந்த கொரோனா பெருந்தொற்றை நம்மீது சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதலில் அவர்கள் முஸ்லீம் சமூகத்தை வசைபாடுவதற்குப் பயன்படுத்தினார்கள். இப்போது, கல்விச் “சுமையை” குறைக்கிறோம் என்ற பெயரில், இந்திய அடையாளத்தை வடிவமைத்திருக்கும் மையக் கருத்தாக்கங்களை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கும் வேலையை செய்திருக்கிறார்கள். 

கூட்டாட்சி, குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, மனித உரிமைகள், சட்ட உதவி மற்றும் உள்ளூர் சுயாட்சி ஆகிய அத்தியாயங்கள் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு இந்தளவுக்குத்தான் தெரிய வந்திருக்கிறது. மேலும், மதவாத சக்திகளின் முக்கிய இலக்காக கல்வி ஏன் இருக்கிறது என்பது ஒன்றும் மர்மமான விஷயமல்ல. சொல்லப்போனால், இந்திய பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் “இடதுசாரிகள்” ஆக்கிரமித்திருக்கிறார்கள் எனவும், “மெக்காலே, மார்க்ஸ் மற்றும் முகம்மதுவின்” பார்வைகள்தான் பள்ளிகளில் பிரசங்கம் செய்யப்படுகின்றன என்றும், அதனால் இந்தப் பாடங்கள் எல்லாம் “இந்தியமயப்படுத்தப்பட வேண்டும்” எனவும் இந்த சக்திகள் தொடர்ந்து புகார் அளித்தபடியே இருக்கின்றன.     

இருப்பினும், பாரதீய ஜனதா கட்சியின் முதலாவது ஆட்சியில் கல்வியின் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்கம் குறித்து அவர்கள் பேசுவதே இல்லை. பிஜேபி, முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை 1998-இல் அமைத்தபோது, மனித வளத்துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியை வைத்து அந்த அரசாங்கம் கல்வியை காவியமாக்க மட்டுமே செய்தது. இந்தியமயமாக்கல் என்று அவர்கள் அழைத்துக் கொண்டவை சமூக அறிவியல்களை, குறிப்பாக வரலாற்றை மூடி மறைப்பதாகவே மாறிப்போனது. பிஜேபி-யின் கண்ணோட்டத்தில் இந்தியமயமாக்கல் எனப்படுவது, ஜோசியம் மற்றும் சமஸ்கிருத சுலோகங்கள் ஆகியவற்றில் இருப்பதுதான். இவை இரண்டுமே பள்ளிக் கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், சாதி அமைப்பை பாதுகாத்தல் மற்றும் ஹிட்லரால் வகுத்தளிக்கப்பட்டது போன்ற தேசியவாதம் குறித்த வெற்று வார்த்தைகளும் (உண்மையில் விஷமத்தனமானவை)  அவற்றில் இடம்பெற்றன.  

2004 தேசியத் தேர்தலில் என்டிஏ தோல்வியடைந்த பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த திசைதிருப்பல்களை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியது. ஆனால், 2014 தேர்தலுக்குப் பின்னர், அதிகாரத்திற்கு வந்த பிஜேபி அரசாங்கம் அதே பெருங்குழப்பத்தை மறுபடியும் தொடங்கியது. பிஜேபி-யின் தாய்க் கழகமாகிய ஆர்எஸ்எஸ்-இன் கூட்டாளிகள் மறுபடியும் கல்வித்துறையில் இறங்கி சுறுசுறுப்பாயினர். தங்களுடைய இந்து தேசியவாத செயல்திட்டத்திற்கு பொருத்தமான வகையில் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அவர்கள் மனிதவள அமைச்சக அதிகாரிகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கினர்.    

தீனநாத் பத்ரா

சிக்சா சான்ஸ்கிரிட் உத்தான் நியாஸ் மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகள் பாடநூல்களில் இருந்து ஆங்கிலம் மற்றும் உருது வார்த்தைகளை நீக்கிவிட வற்புறுத்தின. தேசியவாதம் குறித்த ரவீந்திரநாத் தாகூரின் கருத்துக்களை அவர்கள் நீக்கிவிட்டனர். இந்துத்துவ சக்திகளால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இறந்துபோன, உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்எஃப் ஹூசைனின் சுருக்கமான சுயசரிதையை அவர்கள் அழித்தனர். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வழங்கிய கொடை குறித்த விவரங்களை மட்டுமல்லாமல், பிஜேபி ஒரு இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்ற குறிப்புகளையும், 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கவலரத்திற்காக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மன்னிப்புக் கோரியதும்கூட பிஜேபி-இன் தணிக்கைக்கு ஆளாகின. இதேபோன்ற நிலைதான் 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்த விவரங்களுக்கும் ஏற்பட்டது – அவை அப்படியே நீக்கப்பட்டன.  இதைத்தான் பிஜேபி, பள்ளிப் பாடங்களின் “பாரதீயகரன்” அல்லது இந்தியமயமாக்கல் என்று அழைத்துக் கொண்டது. 

ஆர்எஸ்எஸ் கண்ணோட்டத்திற்கு ஒத்துப்போகாத புத்தகங்களை கைவிடும்படி பதிப்பாளர்களை வற்புறுத்துகின்ற சிக்சா பச்சாவ் அபியான் சமிதி என்ற அமைப்பை நிறுவிய, பலதலை அரக்கனாகிய தீனநாத் பத்ரா என்பவரை ஆர்எஸ்எஸ் தன்னுடைய பிரசங்கியாக வைத்திருந்தது. டோனி வெண்டிகரின் புகழ்பெற்ற இந்துக்கள் என்ற புத்தகம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது இதற்கு ஒரு உதாரணமாகும். ஆர்எஸ்எஸ் கூற்றுப்படி, வெண்டி டோனிகர் பண்டைக்கால இந்தியாவை எப்படிக் “காட்டியிருக்க வேண்டுமோ” அப்படிக் காட்டாமல், அவர் விளிம்புநிலை மக்களின் பார்வையில் இருந்து அனுகியிருக்கிறார். 

அதேநேரத்தில், சங்கப் பரிவாரத்தின் கிளைப்பிரிவான வித்யா பார்தியின் அங்கத்தினரான பத்ரா, கடந்தகாலத்தைப் பற்றிய ஆர்எஸ்எஸ்-இன் கண்ணோட்டம் மற்றும் சமூக அறிவியல்கள் பற்றிய ஆர்எஸ்எஸ்-இன் புரிதல்கள் என்ற வகையில், பள்ளி மாணவர்களுக்கான ஒன்பது புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இவை குஜராத் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, மேற்கத்திய மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன, இதில் 2014, ஜூலை 14 முதலே உயர்நிலைக் கல்வி மாணவர்களும் அடங்குவர். அவை முழுக்க முழுக்க “ஆரியர்” ஆதரவும், “மேற்குலக” கருத்தாக்கங்களுக்கு எதிரானதும் ஆகும். “ஆர்எஸ்எஸ் ஷாகாவிற்கு தினமும் செல்கின்ற மாணவர் தன்னுடைய வாழ்க்கையில் ஆச்சரியப்படக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதைக் காண்கிறார்,” என்று தன்னுடைய ஷிக்சான் மா திரிவேணி என்ற புத்தகம் ஒன்றில் பத்ரா எழுதியுள்ளார்.

இப்போது, பாடத்திட்டத்தின் பகுதிகளை அப்படியே நீக்கிவிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது – அந்தப் பகுதிகள்தான் இந்திய தேசியவாதம், மதச்சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை வழங்கக்கூடியவை. இந்த விஷயங்கள்தான இந்து தேசியவாதிகளுக்கு எப்போதுமே ஒரு வெறுக்கத்தக்க விஷயங்களாக இருந்து வந்துள்ளன, கடந்த சில வருடங்களில் அவையெல்லாம் இன்னும் அப்படியேத்தான் இருக்கின்றனவே என்ற நெருடல் அவர்களுக்கு அதிகரித்துக்கொண்டே சென்றது. சொல்லப்போனால், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கூட்டாளிகளும் ஆதரவாளர்களும் அதிகாரத்தில் இல்லாதபோது செய்து வந்துள்ளதைப் போலவே, அதிகாரத்தில் இருக்கின்ற சமீபத்திய காலங்களிலும் மதச்சார்பின்மையை இழிவுபடுத்தி வருகின்றனர். 2015-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் ஆர்எஸ்எஸ் பொதுமக்களுக்கு வெளியிட்ட விளம்பரத்தில், அரசியல் சாசனத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை குறித்த பகுதியை நீக்கிவிட்டு வெளியிடும் அளவுக்கு அவர்கள் அதை எதிர்க்கின்றனர்.            

ஓவியர் எம்எஃப் ஹூசைன்

பல பத்தாண்டுகளுக்கு முன்னர் ராமர் கோயில் இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தினுடைய மதச்சார்பின்மை நலன்களும், மதச்சார்பின்மை மதிப்பீடுகளும் இந்துத்துவ சக்திகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றன. உளப்பூர்வமான சுதந்திரம் மற்றும் எல்லோரும் சமம் என்பவற்றிற்கு அரசியல் சாசனம் ஆதரவாக இருக்கிறது என்ற காரணத்திற்காகவே, ஆர்எஸ்எஸ் சிந்தாந்தவாதிகள் பலரும், பிஜேபி தலைவரும் அரசியல் சாசனத்தை திருத்தி எழுத வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

மதச்சார்பின்மை என்பது இந்திய தேசியவாதத்தில் இருந்தும், சுதந்திரத்திற்கான தேசிய இயக்கத்திலிருந்தும் பிரித்துப் பார்க்க இயலாத ஒன்று என்பதே உண்மை. இந்துத்துவ சக்திகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அல்லது ஒப்புக்கொள்ள மறுப்பதும் இதுதான். மதவாத தேசியவாதத்தின் பெயரில், அவர்கள் ஒரு பிரிவினைவாத மற்றும் வேறுபாடுகள் கொண்ட தேசம் எனும் கருத்தாக்கத்தையே விரும்புகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை உண்மையாக்கும் வகையிலும், அரசியல் சாசனத்தை ஆதரிக்கின்றவர்களை பலவீனமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் மாணவர்களையே குறிவைத்து தாக்கி வருகின்றனர். இந்திய தேசியவாதத்தின் தோற்றுவாயிலேயே நம்முடைய காலனிய எதிர்ப்பியக்கத்தின் பன்முகத்தன்மை நமக்கு சொல்லப்பட்டுவிடுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மதவாதிகள் இருவருமே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகியே இருந்திருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகத்தான், இந்திய தேசத்தைக் கட்டமைத்த காலனிய எதிர்ப்புப் போராட்டமானது, விரிவான பார்வைக் கொண்ட தேசம் எனும் கருத்தாக்கத்தை நாடிச் சென்றது.     

ரவீந்திரநாத் தாகூரின் -பள்ளி

அதேபோல், இந்திய அரசியல் சாசனமானது, எல்லாக் குடிமகன்களுக்குமான சமமான உரிமைகளுக்கு இடமளித்திருகிறது என்பதன் காரணமாகவே, குடியுரிமை குறித்த அத்தியாயங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. கூட்டாட்சித் தத்துவமே இந்தியாவின் நிர்வாக மற்றும் அரசியல் கட்டமைப்புகளின் மையாக இருந்திருக்கிறது. சர்வாதிகார மனப்போக்கு வலுப்பெறுகையில் கூட்டாட்சித் தத்துவம் பலவீனமாகிறது, இந்தப் பாடம் நீக்கப்பட்டதற்கான காரணமே இதுதான். அதிகாரத்தைப் பரவலாக்குதல் என்பதுதான் ஜனநாயகம்; அதாவது இந்த அமைப்பில், வெகு தொலைவில் இருக்கின்றவர்களையும், அதனுடைய கிராமங்கள் மற்றும் குடிமக்கள் ஒவ்வொருவரையும் அதிகாரம் பெற்றவர் ஆக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதுதான், மிகவும் அடிப்படையான அதிகார அலகாகும். மூலவளங்கள் மீதான கட்டுப்பாட்டைப் பெறுவதை  நோக்கமாக கொண்டுள்ள உள்ளூர் சுயாட்சி அமைப்புகளை போற்றிப் பாதுகாக்கின்றன அரசியல்சாசன திருத்தங்கள். இந்தியாவில் உள்ள கிராமங்கள், நகரங்கள், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையே அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கூட்டாட்சித் தத்துவம் மற்றும் உள்ளூர் சுயாட்சி குறித்து கற்றுத்தரப்படுவதை நீக்குவதன் மூலமாக, அதிகாரத்தை மையப்படுத்தும் தூண்டுதலைத்தான் ஆளும் கட்சி காட்சிக்கு வைத்திருக்கிறது.        

மனித உரிமைகள் குறித்த பிரிவு நீக்கப்பட்டிருப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். மனித உரிமைகள் மற்றும் மனித கண்ணியம் என்கிற கருத்து ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துவை. இந்த ஷரத்துக்களை நீர்த்துப்போகச் செய்வதும்கூட, மனித உரிமைகள் குறித்த விஷயத்தில் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்பதால், சர்வதேச சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாகும். பள்ளிக்கூட அளவில் மனித உரிமைகள் குறித்து படிப்பதை நீக்குதல் என்பது, இப்போதில் இருந்தே “உரிமைகள்” என்பவை எல்லாம் குறிப்பிட்ட மேட்டுக்குடியினருக்கு மட்டுமே உரியவை என்பதையும், மற்றவர்கள் தங்களுக்குரிய பங்காக “கடமைகளை” மட்டுமே செய்ய வேண்டும் என்பதையுமே குறிப்பிட்டுக் காட்டுகிறது.         

கல்வித்துறையில் ஆளும் கட்சியின் செயல்திட்டத்தைச் நடைமுறைப் படுத்துவதற்கான வாய்ப்பாக, கொரோனா வைரஸ் கொடுத்த இந்த வாய்ப்பைப் அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிஜேபி-க்கு அசௌகரியமாக உள்ள பாடத்திட்டத்தின் இந்தப் பகுதிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இந்த நீக்கல்கள் நடைமுறை அரசியலில் பிஜேபியின்  செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களைத்தான் அதனுடைய தாய்க் கழகமான ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடைய கூட்டாளிகள் செயல்படுத்த விரும்புகிறார்கள். ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய கற்பனைக் காப்பியங்கள் ஆர்எஸ்எஸ்-க்கு வரலாறு. அவை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக கணேசன் எவ்வாறு உருவாக்கப்பட்டது, புஷ்பக விமானங்கள் இருந்த காலத்தில் எந்தளவுக்கு விமானத்துறை செழிப்புற்று விளங்கியது என்பவைதான், இவை எல்லாம் இந்தியாவின் வரலாற்றையும் தொன்மத்தையும் தரம்தாழ்த்தவே செய்கின்றன. மதவாத சக்திகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் வைத்து பெருமைகொள்ளச் செய்யும் விஷயம் எல்லாமே, அதீத கற்பனைகள்தான்.

தமிழாக்கம்: மர்மயோகி

நன்றி: https://newsmyth.com/