ஜார்ஜ் ரெட்டி- மாணவ தலைவன்- அவசியம் நினைவுக்கூறுவோம் !

HOME

‘ உண்மை இறப்பதற்கு முன், குரல் எழுப்புங்கள் ’

 – ஜார்ஜ் ரெட்டி,


வெறும் 25 வயதே ஆன நிலையில், 1970-களில் வலதுசாரி சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ரெட்டி, சிந்திக்கின்ற இளைஞர்களுக்கு இன்றும்கூட உத்வேகமாகவே இருந்து வருகிறார்.

ஜார்ஜ் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் சென்று பார்த்தேன்.

நவம்பர் 22, 2019-இல் வெளியான இந்தப் படம், ஏப்ரல் 14, 1972-இல் வலதுசாரி சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட, ஆஸ்மானியா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மாணவர் தலைவரான ஜார்ஜ் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. நியூக்ளியர் இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்ற இவர் கொலைசெய்யப்பட்டபோது, தன்னுடைய பிஎச்.டி. படிப்பை படித்துக் கொண்டிருந்தார்.

ஏழைகளுக்கான சோஷலிச கருத்தாக்கங்களில் நம்பிக்கை கொண்ட அவர், பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏழை மற்றும் பெண் மாணவர்களுக்கான உரிமைகளுக்காக போராடினார். குறுகிய காலத்திலேயே உருவான ஒரு தலைசிறந்த ஆளுமையானார். பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் பல்கலை வளாகத்திற்குள்ளேயே வைத்து அவரைக் கொலைசெய்ய இவ்வளவு காரணங்கள் போதுமானவை.

சுதாகர் தயாரித்து ஜீவன் ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் ஜார்ஜ் ரெட்டியின் காலகட்டத்தையும், அவருடைய பல்வேறு கருத்துக்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தப் படத்தை எடுத்தவர்கள் 1970-களின் ஆஸ்மானியா பல்கலை வளாகத்தை திறமையோடு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

முன்பே யூகித்திருந்தபடி, பாரதீய ஜனதா கட்சியின் தெலுங்கானா பிரிவு இந்தப் படம் வெளியாவதை எதிர்ப்பதற்காக தன்னுடைய பரபரப்பு தலைவரான ராஜா சிங்கை களமிறக்கியது. நீதிமன்றத்தை நாடுவது உட்பட பலதரப்பட்ட வகைகளிலும் அவர்கள் படத்தை தடைசெய்ய முயற்சித்துப் பார்த்தனர், ஆனாலும் படம் வெளிவந்துவிட்டது. இப்போது அந்தப் படம் தெலுங்கு பேசும் இரு மாநிலங்களிலுமே நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜார்ஜ் ரெட்டி

அவருடைய தீவிரமான கல்வித்துறை புலமையால் தாக்கம் பெற்றவர்களுள் நானும் ஒருவன். அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1974-இல் நான் எம்.ஏ. அரசியல் அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். அவர் இயற்பியல் பிரிவு மாணவராக இருந்தபோதிலும் நான் படித்த ஆஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உள்ள கலைக் கல்லூரி அந்த மாணவரின் செயல்பாட்டினால் கவரப்பட்டும், அதனுடைய குறியீடாகவும் வீற்றிருந்தது. அவருடைய கல்லூரி எங்கள் கலைக் கல்லூரியில் இருந்து சற்றே தள்ளியிருந்தது.

நிலமானிய நிஜாமின் பிரம்மாண்ட கட்டிடக்கலையாக இருந்தபோதிலும், அந்தக் கலைக் கல்லூரிதான் அரசியல் உரையாடல்கள் மற்றும் செயல்பாட்டிற்கான மையமாக விளங்கியது.

ஜார்ஜ் ரெட்டியின் கருத்தியல் மாணவர்களிடையே நீடித்திருந்தது, அவருடைய மரணத்தில் இருந்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு அதை வேறு எந்த ஆளுமையாலும் விஞ்ச முடியவில்லை. அவர் போல் வேறு எந்த ஆசிரியர் அல்லது மாணவராலும் அந்த வளாகத்தின் அறிவுசார் சூழலில் தாக்கமேற்படுத்த முடியவில்லை.

ஜார்ஜ் ரெட்டியாக திரைப்படத்தில் சந்திப் மாதவ்

அதிகம் எழுதிக்கூட இல்லாத ஒரு 25 வயது மாணவரால் எப்படி அவ்வாறு செய்ய முடிந்தது?

அவருடைய வசீகரம் மூன்று விஷயங்களில் அடங்கியிருக்கிறது: 1. அறிவை ஆயுதமாகப் பெற்றது, 2. அதனை குறுகிய காலத்திலேயே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக பயன்படுத்தியது, மற்றும் 3. ஒடுக்குகிறவர்களால் தியாகியானது.

மிகவும் இளையவர்கள் நீதிக்காக போராடும் போதும், வழக்கத்திற்கு மாறான மதிப்பீடுகள் குறித்த அறிவை வெளிப்படுத்தும் போதும், மனித சமத்துவத்தின் பக்கம் நிற்கும்போதும் சிவில் சமூகமானது அவர்களை மரியாதையுடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கிறது. அவர்களைச் சுற்றியுள்ள பிற்போக்குவாத சக்திகள் அவர்களை ஆபத்தாக பார்க்கின்றன. இதுதான் யேசு கிறிஸ்து விஷயத்திலும் நடந்தது, இன்னும் மிக அதிகமான சிந்தனையாளர்களுக்கும் நடந்திருக்கிறது. கிறிஸ்து ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தனது போராட்டத்தில் எத்தகைய வன்முறையையும் பயன்படுத்தவில்லை என்றாலும்கூட, அவர்  காலத்தினுடைய ஆட்சியாளர்களும் ஆன்மீக அதிகாரவர்க்கத்தினரும் அவரை சிலுவையில் ஏற்றினர்.

பல வருடங்கள் கழித்து ஹைதராபாத்தில் தோன்றிய மற்றொரு மாணவரான ரோஹித் வெமுலா நீதிக்கான போராட்டத்தில் வன்முறையை பயன்படுத்தவில்லை. சாக்ரடீஸ் தன்னுடைய மிக முதிர்ந்த வயதில் செய்ததைப் போன்று அவரும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். பகத் சிங் கொல்லப்பட்டார், ஜார்ஜ் ரெட்டியும் கொல்லப்பட்டார்.

ரோஹித் வெமுலா

இந்தப் படம் பொதுமக்களின் கற்பனைக்கு ஏற்ப, மையநீரோட்ட விவரணையாக ஜார்ஜ் ரெட்டியின் கதையை வெற்றிகரமாக மாற்றிக் கொடுத்திருக்கிறது. இது ஜார்ஜின் அரும்பிவரும் சோஷலிச-புரட்சிகர கருத்தியலை ஏழைகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் விவசாயிகளின் தற்கொலைக்குள்ளாக கொண்டுசென்று, அரசியல் மற்றும் சமூக-விரோத மற்றும் சாதிய கருத்தாக்கங்ளுக்கு எதிராக உணர்ச்சிகரமாக வீரத்துடன் போராடுகின்ற ஜார்ஜை சமகாலத்தவராக நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

அம்மாநிலத்தின் தீவிரமான கல்விக்கு எதிரான செயல்திட்டமானது இன்றும்கூட பல பல்கலை வளாகங்களிலும் பரவியுள்ள பிரச்சினையாகும்.

மாணவர் திரளுக்கு உள்ளேயும் வெளியேயும் சாமானியர்களானாலும் சரி, தசைபெருத்தவர்கள் ஆனாலும் சரி, ஸ்காலர்ஷிப் மற்றும் உடல்ரீதியான சண்டைகள் இரண்டையே ஒன்றுமில்லாமல் செய்தவர்தான் ஜார்ஜ். இந்தப் படம் ஜார்ஜின் அந்த ஆளுமையை மிக நன்றாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

1970-களின் ஜார்ஜ் ரெட்டியும், 2010-களின் ரோஹித் வெமுலாவும் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் ஒரேவிதமான காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உத்வேகமாக விளங்கியிருக்கின்றனர். வெறும் 25 வயதே ஆன நிலையில் ஜார்ஜ் ரெட்டி கொலை செய்யப்பட்டார். ரோஹித் வெமுலாவும் தன்னுடைய 26 வயதில் அதேபோன்ற மனித ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் தூக்கிட்டுக்கொண்டார். இவர்கள் இருவருமே தங்களுடைய சமூக-ஆன்மீகம் மற்றும் கலாச்சார வேர்களில் பொதுவான அம்சத்தைக் கொண்டவர்கள் – அதாவது, ஒடுக்குமுறை அறமற்றது, சமூகத்திற்கு எதிரானது என்பதுடன் அவற்றை எதிர்த்து நீதிக்காக போராட வேண்டும்.

ஜார்ஜின் அம்மா லீலா மற்றும் ரோஹித்தின் அம்மா ராதிகா இருவருமே அவர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக அறத்தை ஊட்டி வளர்த்தவர்கள்.

ஜார்ஜை 1970-களில் காட்சிப்படுத்துவதற்கு இந்தப் படம் தற்போது நடந்து வருகின்ற விவசாயிகளின் தற்கொலைகளை பயன்படுத்திக்கொண்டுள்ளது என்றாலும், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்காக அனுதாபம் கொண்டிருந்த அவருடைய குடும்பத்தின் அறம்சார் உணர்வுகள் யாவும் அப்போதைய உலகத்தை ஆட்டிப் படைத்த சோஷலிச அலைகளோடு நன்றாக பொருந்திப்போகின்றன. கெடுபிடி யுத்த காலகட்டத்தில் சோவியத் யூனியனின் கவர்ந்திழுக்கக்கூடிய சூப்பர் பவர் தகுதி, சீனாவில் நடந்துகொண்டிருந்த கலாச்சார புரட்சி, இளம் காஸ்ட்ரோ மற்றும் சே குவேரா தலைமையில் நடந்த கியூப புரட்சி ஆகியன அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

உலகம் முழுவதிலுமே வியட்நாம் ஆதரவு மற்றும் அமெரிக்க எதிர்ப்பு எனும் பல்கலை வளாக இயக்கங்கள் எல்லாமே ஜனநாயக சிவில் உரிமைகள் மற்றும் சோஷலிச பிரச்சாரங்கள் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு குறிப்பிடத்தகுந்த ஊடகமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. கூர்மையான அறிவுஜீவிகள் தீவிரமான வகுப்பறை மற்றும் நூலக ஆய்வுகள் மற்றும் தெருசார்ந்த செயல்பாடுகளின்பால் ஈர்க்கப்பட்டனர். ஜார்ஜின் வழக்கத்திற்கு மாறான ஆற்றலும் அத்தகைய மூலாதாரத்தில் இருந்துதான் வந்தது. ஜார்ஜின் இந்த ஆற்றல் எங்களில் பலருக்கும் உத்வேகமாக அமைந்தது. ஆனால், அவருக்குப் பின்னர் ஒருவர்கூட இந்த இரணடு வேகங்களும் கூடியவர்களாக அமையவில்லை. அவரைப் பின்பற்றியவர்கள் பலரும் நக்ஸலைட் இயக்கத்திற்குள் சென்றனர், சிலர் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி பாதி வெற்றிபெற்றனர். எங்களில் சிலர் வெவ்வேறு செயற்களங்களில் முயற்சித்தாலும் அவருக்குப் பின்னர் எந்த துறையிலுமே ஒரு பெரும் பாய்ச்சலை யாராலும் நிகழ்த்த முடியவில்லை.

மிகச்சிலரே இப்படிப்பட்ட சக்திவாய்ந்த விஷயங்களை இத்தகைய இளம் வயதில் செய்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் அதியற்புத பிறவிகளாக பார்க்கப்படுகிறார்கள். ஆன்மீகத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு ‘தனித்துவமான மனிதர்களிடத்தில் கடவுள் மாறுபட்ட விதையை இட்டிருக்கிறார்,’ என்று. அறிவியல், கலை மற்றும் அறப்பண்பு அவர்களின் ஊடாகத்தான் இயக்குவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய வாழ்க்கைவரலாற்று பாரம்பரியம் இத்தகைய தனித்துவமான தியாகிகளின் வாழ்க்கையை எப்போதாவதுதான் எழுதி வந்திருக்கிறது. இந்திய சினிமாவானது ஆடல் பாடல் எனும் மாயையில் இருந்து வெளியேறி வளர மனமில்லாமலே இருக்கிறது. ஒரு பிராந்திய, சிறு பட்ஜெட் படம்தான் இந்த பரிசோதனை அடியை எடுத்து வைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் மிகவும் கவரக்கூடிய அம்சம், இது ஜார்ஜின் தனித்துவமான குழந்தைப்பருவத்தில் கவனம் செலுத்தியிருக்கிறது என்பதுதான். தன்னுடைய தாயிடமிருந்து எல்லாவற்றையும் நேர்மறையாகவும் மனிதநேயத்துடனும் பார்க்க கற்றுக்கொள்ளும் அவர் தன்னுடைய உள்ளுணர்வைப் பின்பற்றி அதற்கும் அப்பால் செல்கிறார். அந்த உள்ளுணர்வை சமூகரீதியாக, கலாச்சாரரீதியாக மற்றும் ஆன்மீகரீதியாக பேணிவளர்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

குடும்பத்திலிருந்து பள்ளிக்கும் பிறகு பல்கலைக்கும் என அந்தப் படைப்பூக்கம், நல்லெண்ணம் மற்றும் அறிவுசார் தீவிரத்தன்மைக்கு உற்சாகமளிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்திய சிவில் சமூகத்தின் குணவியல்பானது அத்தகைய தனித்துவமான மனித கூட்டிணைப்பை கொல்லும் நோக்கம் கொண்டது, அது மொத்த ஆளுமையுமே கொல்லும் அல்லது அத்தகைய மனிதர்களிடத்தில் உள்ள அந்த முக்கிய ஜீவனைக் கொல்லும். அந்த ஜீவன் கொல்லப்பட்டுவிட்ட ஒருவரால் வரலாற்றை உருவாக்கவே முடியாது.

இப்போது, பல்கலை வளாகங்களில் இத்தகைய கூர்மையான அறிவுஜீவிகள் வந்துவிடாமல் இருப்பதற்கான முயற்சிகளே நடந்துகொண்டிருக்கின்றன.

எத்தகைய பிற்போக்குவாத வாக்கைச் சூழலும், அது குடும்பம், பள்ளி, பல்கலைக்கழகம் என எதுவாக இருந்தாலும், படைப்பூக்கமிக்க பரிசோதனைகளை அனுமதிக்கப் போவதில்லை. புதிய விஷயங்களை பரிசோதித்துப் பார்க்க விரும்பும் இந்த இளைஞர்கள் பிற்போக்குவாதம் எனப்படுகின்ற எந்த ஒன்றிற்கு எதிராகவும் கலகம் செய்ய வேண்டியிருக்கும்.

கலகக்கார மனநிலைகள் உரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை, ஒடுக்கப்பட வேண்டியவை அல்ல. அவை ஒடுக்கப்பட்டால் இந்த தேசமானது மாற்றத்திற்கு உண்டான மனத்திறன்களை இழந்துவிடும். தேசத்தின் எந்த மூலையிலும் அரும்புகின்ற எந்த ஒரு இளம் ஜார்ஜும் பேணி வளர்க்கப்பட வேண்டும். இதைத் தொடங்கிவைக்கும் வகையில், இந்தப் படம் எல்லாவகையான பார்வையாளர்களும் பார்க்கும் விதத்தில் எல்லா மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

   –காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

தமிழில்இரா. செந்தில்

காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்  – அரசியல் கோட்பாட்டாளர், சமூகப் போராளி மற்றும் ‘நான் ஏன் இந்து அல்ல’ உள்ளிட்ட புத்தகங்களின் ஆசிரியர்