விவசாயிகளின் போராட்டம்-ஊடகங்களின் அயோக்கியத்தனம் – அபய் குமார்

HOME

விவசாயத் துறையில் பெரிய கார்ப்பரேட் ஆட்டக்காரர்கள் நுழைவதற்கு வசதியேற்படுத்தி தரும் வகையில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக, நாட்டின் தலைநகருக்கு அருகாமையில், தங்களுடைய போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், இந்த விவசாய போராட்டத்தை தீமையான ஒன்றாக காட்டுவதிலும், போராட்டக்காரர்களை காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களாக காட்டுவதிலும், இந்தி மொழி செய்திப் பத்திரிக்கைகள் பலவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இந்த விவசாய போராட்டத்தை சட்டவிரோதமானது, வன்முறையானது மற்றும் சாமானிய மக்களுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடியது என சித்தரிக்க, ஊடகத்தினால் பல்வேறு கதைகள் கட்டப்படுகின்றன. இதிலும் மோசமானது என்னவென்றால், இந்த இயக்கமானது “குறுகிய அரசியல் ஆதாயங்களின்” விளைவாக ஏற்பட்டது என சித்தரிக்கப்படுவதுதான். விவசாய அமைப்புகள் “சுயநல” அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக மட்டுமே தெரிகின்றன. விவசாயிகளின் போராட்டங்களுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக காட்டும் அளவுக்கு ஒரு முன்னணி தேசிய நாளிதழ் சென்றிருக்கிறது, வன்முறையை உருவாக்க ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அது கூறியிருக்கிறது. 

வேறு வார்த்தைகளில் சொன்னால், இவ்வளவு மோசமான விஷத்தன்மைவாய்ந்த பிரச்சாரத்தை ஒருவர் கேட்டால், விவசாயிகளின் சட்டப்பூர்வமான கோரிக்கைகளும், வேளாண் துறையில் நிலவும் பிரச்சினையும் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கொண்டிருப்பதாகத்தான் தெரியும். கார்ப்பரேட் நலன்களுக்கு ஏற்ற வகையிலும், பெரிய தொழில்நிறுவனங்களுக்கும் சேவை செய்வது மட்டுமே மிகவும் முக்கியம் என்கிற வகையில் ஊடகங்கள் செய்தியளித்து வருகின்றன.

விவசாயிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து வருகின்றனர். ஆனாலும், எல்லாத் தரப்பினரையும் கேட்டறிதல் மற்றும் ஆலோசித்தலுக்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்பதுடன் அந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர், பாராளுமன்றத்தில் ‘தகராறு’ செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விஷயத்தை முறைப்படி ஆராய்வதற்கு பதிலாக, மையநீரோட்ட ஊடகமான, குறிப்பாக இந்தி மொழி பத்திரிகைகள் எதிர்க்கட்சித் தலைவர்களின் கவலைகளை பெருமளவுக்கு அலட்சியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஆளும் அரசாங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருக்கின்றன. இதனினும் மோசமாக, எதிர்ப்புகளை சட்டத்திற்கு புறம்பானது என்றும், விவசாயிகளின் கொந்தளிப்பை வைத்து எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் ஆட்டம்போடுகின்றன என்றும் கூறி அவற்றை சட்டவிரோதமாக்கவும் முயற்சி செய்கின்றன.

இச்சமயத்தில், இந்த விஷயம் தொடர்பாக, ஊடகமானது கார்ப்பரேட் திட்டத்திற்கு வழியமைத்துக் கொடுப்பதிலும், அதனை முதன்மைப்படுத்துவதிலும் கேடுகெட்ட முறையில், கொஞ்சமும் வெட்கமின்றி செயல்படுவதை தெள்ளத்தெளிவாகவே பார்க்க முடிகிறது. இப்படிச் செய்வதற்காக அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, விவசாயிகளின் பேரணி டெல்லியை நோக்கி நகரத் தொடங்கியபோது, கொரோனா பெருந்தொற்றிற்கு மத்தியில் இப்படியொரு போராட்டத்தை விவசாயிகள் நடத்துவது நியாயமற்றது என பஞ்சாப் கேசரி பத்திரிகை பிரச்சாரம் செய்தது. அதன் ஆசிரியரான ஆதித்ய நாராயண் சோப்ரா, முதல் பக்கத்திலேயே, விவசாயிகள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என எழுதியிருக்கிறார்: “விவசாய அமைப்புகள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். விவசாய மசோதாவின் எல்லா அம்சங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். ஒழுக்கத்துடனும், மற்றவர்களுக்கோ மற்ற மாநிலங்களுக்கோ தீங்கு விளைவிக்காத அமைப்புகள் மட்டுமே நல்ல அமைப்புகள். கொரோனா தொற்றுக்கு மத்தியில், டெல்லிக்கு அணிவகுத்து செல்லும் அவர்களது செயல் நியாயமற்றது.” இதில், விவசாயிகளைத் தவிர பிற எல்லாவற்றையும் குறித்து இந்த பத்திரிக்கை ஆசிரியர் மிகுந்த அக்கறை காட்டுவதை கவனியுங்கள். கொரோனா தொற்றுக்கு நடுவில் கூட்டம் கூடவேண்டாம் என்று அவர் அறிவுரை சொல்வதையும் பாருங்கள். சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் பூமி பூஜை போடுவதற்காக பிரதம மந்திரி கூட்டிய பிரமாண்டமான கூட்டத்திற்கு இவர் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்திருக்கிறாரா? தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வெற்றிவிழா நடத்த வேண்டாம் என்று பிஜேபி தலைவர்கள் யாரையாவது இவர் கேட்டிருக்கிறாரா? இது தெரிந்தே ஆகவேண்டும்.   

“முறையற்ற போராட்டம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், தெய்னிக் ஜாக்ரன் பத்திரிகை, விவசாயிகளுடைய கவலைக்குரிய விஷயங்களை வைத்து பெரிய கார்ப்பரேட் மற்றும் அரசாங்கத்தின் நலன்களுக்கே பணிவிடை ஆற்றியுள்ளது. குறுகிய பார்வை கொண்ட அரசியல் ஆதாயங்களினால் விவசாயிகள் தூண்டப்படுகிறார்கள் எனவும், அவர்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறார்கள் எனவும் இந்தக் கட்டுரையில் ஒரு புதிய கதை கட்டப்பட்டுள்ளது. இதனை ஷாகீன் பாக் போராட்டத்துடன் தொடர்புபடுத்தும் இது, இந்தப் போராட்டங்களை சுயநல அரசியல் ஆதாயத்தின் வேலை எனவும் குறிப்பிட்டுள்ளது. வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் இந்த தினசரி பத்திரிகை விவசாயிகளின் கவலைகளை புறம்தள்ளுகிறது. மேலும் இது, நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு இந்த மசோதாக்களால் எந்தப் பிரச்சினையும் எனக் கூறியுள்ளது. அரசாங்கத்தின் மீது பெரும் விசுவாசம் கொண்டுள்ள இந்தப் பத்திரிகை எத்தகைய எதிர்ப்புமே முறையற்றதுதான் என வாதிடுகிறது. அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும்போது விவசாயிகளால் நடத்தப்படும் போராட்டம் சட்டப்பூர்வமானதாக இருக்க முடியாது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.    

கடந்த சிலநாட்களாகவே, இந்த அறியாமையில் வாழும் ‘சாமனிய மக்களால்’ ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் அசௌகரியங்களைக் காட்டும் படங்களாலும் செய்திகளாலும் பத்திரிகைகளின் பக்கங்கள் நிரம்பியிருந்தன. “துன்புறுத்தும் விவசாயிகள்” என்று தலைப்பு வைத்தது தெய்னிக் ஜாக்ரன். மருத்துவ சிகிச்சைக்காக வருகின்ற மக்களும்கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அது கூறியது. மெட்ரோ ரயில் சேவைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டன, போக்குவரத்து நெரிசலுக்கு இந்தப் போராட்டங்கள் எப்படிக் காரணமாயின என்ற செய்திகளும்கூட வெளியிடப்பட்டன. இதேபோல், பயோனிர் என்ற இந்தி மொழி பத்திரிக்கை “விவசாயிகள் இயக்கத்தினால் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசல்” என்ற தலைப்பில் நான்கு பத்திகள் கொண்ட செய்தியை பதிப்பித்தது. அதற்கு அடுத்த பக்கத்திலேயே, போக்குவரத்து நெரிசல் பற்றிய மற்றொரு செய்தியையும் அது பதிப்பித்திருந்தது. இந்தக் கட்டுரையிலும் பல கார்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருப்பது காட்டப்பட்டிருந்தது.   

விவசாயிகளின் போராட்டத்தினால் மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அளித்துள்ள விவரங்களில், மக்கள் நான்கு மணிநேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்; மெட்ரோ ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது; அத்தியாவசிய பொருள்களின் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது என தெய்னிக் ஜாக்ரன் எழுதியுள்ளது. கற்களை விட்டெறிந்தும், லத்திகளை பயன்படுத்தியும் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அந்த செய்திக்கட்டுரை முடிவுரை எழுதியிருந்தது. ஆனால், காவல்துறையின் கை ஓங்கியதை அடுத்து இது வெறும் கிசுகிசுப்பாக மறைந்துபோய்விட்டது (உண்மையில் காவல்துறையின் தாக்குதலை மறைக்கவே அவ்வாறு எழுதப்பட்டது). இருப்பினும், இதற்கு நேர்மாறாக, தண்ணீர் பீரங்கிகளும், கண்ணீர் புகைக்குண்டுகளும் இந்த அமைதியான போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தப்பட்டன. வயதான விவசாயிகளைக்கூட விட்டுவைக்காத அளவுக்கு இந்த ஆயுதங்கள் கொடூரமான முறையில் பிரயோகிக்கப்பட்டன. இந்துஸ்தான் பத்திரிகைகூட விவசாயிகளின் தரப்பை கேட்பதற்கு எந்தவித ஆர்வமும் காட்டவில்லை. அந்தப் பத்திரிகை தனது முதல் பக்கத்திலேயே, “உ.பி. வாயிலில் விவசாயிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள்” என தலைப்பு வைத்ததன் மூலமாக இந்த ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தரம்தாழ்த்திவிட்டது.    

விவசாயிகளின் போராட்டத்தை சட்டவிரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் காட்டுவதற்கு அப்பால், இந்த அமைதியான போராட்டக்காரர்களை காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் சம்பந்தப்படுத்துகிற முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1980-களில் ஏற்பட்ட பஞ்சாப் கிளர்ச்சிகளின்போது, இந்த நாட்டை உறுதியற்ற நிலைக்கு கொண்டு சென்றதற்கான எல்லா குற்றச்சாட்டுகளும், இந்திய அரசு அமைப்புகள் மற்றும் மையநீரோட்ட ஊடகத்தால் காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது சுமத்தப்பட்டன. ஆனால் உண்மையில், ஒரு உள்நாட்டுப் பிரச்சினையை வெளிநாட்டுப் பிரச்சினையாக மாற்றுவதற்காக, காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய விரோத சக்திகளின் ஆதரவு கிடைத்து வருவதாக, இந்திய அரசு அமைப்புகள் வேண்டுமென்றே ஒரு பிம்பத்தை கட்டமைத்தன. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையில் சமநிலையற்ற உறவுகள் பற்றிய பிரச்சினையாகத்தான் பஞ்சாப் விவகாரம் உருவெடுத்தது, இந்தப் பிரச்சினையின் வேரை மறைப்பதற்காகவே காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற சித்தரிப்பு உருவாக்கப்பட்டது. இதேபோல், அப்போதும்கூட காலிஸ்தான் தீவிரவாதிகள் என்போர் விவசாயிகளின் நேர்மையான பிரச்சினைகளை சட்டவிரோதமாக்குவதற்கென்றே தூண்டிவிடப்பட்டனர்.

கடந்த நவம்பர் 29 அன்று, தெய்னிக் ஜாக்ரன் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு “காலிஸ்தான் தீவிரவாதிகளாலும் சமூக விரோதிகளாலும் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்படலாம்” என்பதாகும். விவசாயிகளின் போராட்டத்தை வைத்து வாசகர்களை பயமுறுத்தும் அளவுக்கு இந்தக் கட்டுரையில், “வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடிக்கலாம். காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் சமூக-விரோத சக்திகள் இந்த இயக்கத்தை வைத்து பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு விஷயம் நடக்கும் நிலையில் காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. சீருடை அணியாத சிறப்பு பிரிவு படைகள் ஹரியானா-டெல்லி எல்லையில் குவிந்துள்ள போராட்டக்காரர்களை கண்காணித்தபடியே இருக்கின்றன. காவல்துறையினர் தகவலின்படி, இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி காலிஸ்தான் தீவிரவாதிகள் வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினருக்கு செய்திகள் கிடைத்துள்ளன. காலிஸ்தான் தீவிரவாதிகளின் உரையாடலை டெல்லி சிறப்பு பிரிவு காவல்துறை பதிவு செய்துள்ளது. வன்முறையை பரவச்செய்வதே அவர்களுடைய நோக்கம்,” என்று எழுதப்பட்டுள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டிலுள்ள ஊடகத்திற்கு எல்லோருடைய கண்ணோட்டத்தையும் பதிவு செய்யவேண்டிய, திருப்தியான அளவுக்கு உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையை கொண்டுசெல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது. ஆனால், மையநீரோட்ட ஊடகங்கள் அனைத்துமே, குறிப்பாக இந்தி மொழி பத்திரிகைகள் இந்தக் கடமையை கைவிட்டுவிட்டன. அதற்கு பதிலாக, இது பெரிய முதலாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஊதுகுழலாக செயல்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய முதலீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக, ஊடகமானது மென்மேலும் தரம்தாழ்ந்து, நியாயமற்ற நிலைகளுக்குள் தஞ்சமடைந்துவிட்டது. அநீதி இழைக்கப்பட்டவரிடம் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அவர்களை தீங்கிழைப்பவர்களாகவும், தரம்தாழ்ந்தவர்களாகவும் காட்டுவதிலேயே சற்றும் அறமற்ற முறையில் செயல்படுகிறது. இதனால்தான் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்போருடன் இந்த அமைதியான போராட்டத்தை சம்பந்தப்படுத்துவதற்கு அது சற்றும் தயங்குவதில்லை.

தமிழில்: மர்மயோகி

நன்றி: countercurrents.org/

அபய் குமார் – இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி பத்திரிகையாளரான இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவருடைய ஒரு பத்திரிக்கையாளனின் வாக்குமூலம் கட்டுரையை சதுரங்கம் பதிவிட்டுள்ளது.