இரவீந்திரநாத் தாகூரை அவமதித்த அமித் ஷா- கோபம் கொள்கிறது வங்கம்!

HOME

அமித் ஷா சமீபத்தில், மேற்கு வங்கத்தில் செய்த  இரண்டு நாள் சுற்றுப் பயணம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் ஒரு எம்.பி.யும் அமித் ஷா முன்னிலையில் பிஜேபியில் இணைந்துள்ளனர்.

இந்த சுற்றுப் பயணத்தின்போது அமித் ஷா, இரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட சாந்திநிகேதன் பள்ளி மற்றும் விஷ்வ பாரதி கல்லூரி இரண்டிற்கும் விஜயம் செய்தார். அப்போது பிஜேபி சார்பில் வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்களில், தாகூரின் படங்களை விட அமித் ஷாவின் படங்கள் பெரிதாக இருந்ததால், அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

காவி கட்சியாக பிஜேபி  வங்காளத்தின் சின்னங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குரு இரவீந்திரநாத் தாகூருக்கு உரிய மதிப்பளிக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன், தாகூரின் பிறந்த ஊரான ஜோராசங்கோவில், திர்ணமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு, ஒரு நாள் உள்ளிருப்பு போரட்டம் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர் சஷி பஞ்சா மற்றும் எம்.பி. சதீப் பந்தோப்பத்யாய ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சாந்தி நிகேதன் மற்றும் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் பேனர்களில் மேலே அமித் ஷாவின் புகைப்படத்திற்கும், கீழே மாநில பிஜேபி தலைவர் அனுபம் ஹாஸ்ராவின் புகைப்படத்திற்கும் நடுவில் தாகூரின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. இது தாகூரின் குடும்ப உறுப்பினர்களையும் இடதுசாரி சிந்தனையாளர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

“மேற்கு வங்கத்திற்கு வெளியில் இருந்து வருபவர்கள், நம் தேசத்தின் பெருமையாக கருதப்படும் தாகூரை அவமதிக்க அனுமதிக்க முடியாது. இந்த சுவரொட்டி தாகூரையும் நாட்டின் குடிமக்களையும் அவமதித்துள்ளது. அவர்கள் வங்கத்தின் பெருமைகளை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது நமது அடையாளச் சின்னங்கள் மீது பிஜேபிக்கு மரியாதை இல்லை என்பதை காட்டுகிறது” என்கிறார் மம்தா பானர்ஜி.

இந்த சுவரொட்டிகள் காவி முகாம் மீது அவதூறு பரப்புவதற்காக போடப்பட்டிருக்கிறது என பிஜேபி பதிலளித்துள்ளது. சர்ச்சைக்குறிய சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால், வழக்கம்போல பிஜேபி எதிரிகளின் மீது பழிபோடுகிறது.

  • கொம்புக்காரன்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *