கருவாடு மீன் ஆகுமா ? சசிகலா ஆடியோவும் அதிமுக அரசியலும்

HOME

சமீபத்தில், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் செல்போனில் பேசும் ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக அழிவதை பார்த்து சசிகலா வருந்துவதாகவும், அதிமுகவை காப்பாற்ற தான் அரசியலுக்கு விரைவில் வரயிருப்பதாகவும் அந்த ஆடியோ பேச்சுகளின் மையக்கருத்து உள்ளது. சசிகலாவை விலக்கிவைத்து விட்டு, அதிமுகவை சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு, இந்த ஆடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுதியிருக்கிறது. அவர்களில் சிலர் இந்த ஆடியோக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கி இருக்கிறார்கள். தேர்தல் தோல்விக்குப்பின், அதிமுகவுக்கு இந்த விவகாரம் ஊடகவெளியில் கவனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதிமுக தொண்டர்களும் இதை உற்றுக் கவனிக்கத் துவங்கிவிட்டார்கள். அந்த வகையில் சசிகலா தரப்பின் இந்த தந்திரம் வெற்றிப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

சசிகலாவின் ஆடியோக்கள் வெளிவர தொடங்கியவுடனே, அவர்கள் குழப்பத்தை உண்டாக்க பார்க்கிறார்கள் என்று எடப்பாடி மேம்போக்காக பதிலளித்தார். அதே சமயம், ‘சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் அமமுக தொண்டர்களிடம்தான் பேசுகிறார்’ என்றார் கே,பி. முனுசாமி. அடுத்ததாக, முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவை செந்தம் கொண்டாடி சசிகலா எடுத்த எல்லா சட்ட நடவடிக்கைகளும் தோல்வியடைந்து விட்டன என்பதையும், உச்சநிதிமன்றம் வரை சசிகலா தொடுத்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்பதையும் குறிப்பிட்டதுடன், ‘அதிமுகவின் ஒன்றறைக் கோடி தொண்டர்களும் சசிகலாவை வெறுக்கிறார்கள். கருவாடு கூட ஒருநாள்  மீன் ஆகலாம். ஆனால், இனி சசிகலா அதிமுகவிற்குள் நுழைய முடியாது’ என்றார்.  

இவர்கள் இருவரின் பேச்சிற்குப் பின்னால், இந்த விவகாரம் ஒரு சாதியப் பிரச்சனையாக மாறியது. அதாவது அதிமுக வன்னியர்களுக்கும் கொங்கு கவுண்டர்களுக்கும் அதிகம் முக்கியத்துவம் தருவதாக இந்த விவகாரம் திசைத் திரும்பியது. இந்த விவகாரத்தை, இந்த திசையில் திருப்பிவிடதான் எடப்பாடியார் விரும்பியது போலவும் தெரிகிறது. ஆனால் அதற்கு மாறாக, சசிகலா தரப்பும் அதை எதிர்ப்பார்த்து காத்திருந்ததுபோல, பந்தை லாவகமாக பிடித்து ஆடத் துவங்கிவிட்டது.

அதற்குப் பின்னால் வந்த சசிகலாவின் ஆடியோக்கள் இந்த சாதியப் பிரச்சனையை வைத்தே வெளிவந்தன. சசிகலாவுடன் தென் மாவட்டத்தில் இருந்து உரையாடும் ஒரு தொண்டர், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதால், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் அதிமுகவிற்கு எதிராக திரும்பிவிட்டனர். அதனால்தான் நாம் தோற்றுபோனோம் என்கிறார். மற்றொருத் தொண்டர் வன்னியருக்கு தனி ஒதுக்கீடு வழங்கியதால், வட மாவட்டத்தில் உள்ள மற்ற சாதியினர் அதிமுகவிற்கு எதிராக ஓட்டுப் போட்டுவிட்டனர் என்கிறார்.

திருச்சியை சேர்ந்த ஒருவர் சசிகலாவுடன் உரையாடும்போது, ‘ஒரு காலத்தில் நம்ம கட்சி சாதிப் பார்க்காத கட்சி. பொதுத் தொகுதி ஒன்றில் தலித் எழில்மலையை நிற்க வைத்து ஜெயிக்க வைத்த கட்சி அதிமுக. ஆனால், இப்போது இது சாதிக் கட்சியாக மாறிவிட்டது’ என்கிறார். அதைத் தொடர்ந்து, அதிமுகவின் முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆனந்தனுடன் சசிகலா உரையாடும் ஆடியோவும் வெளியானது. மேலும், இந்த ஆடியோக்களில் பேசும் பெரும்பாலான தொண்டர்கள், இப்போது அதிமுக கவுண்டர்கள், வன்னியர்கள் கட்சியாக மாறிவிட்டது என்று குற்றச்சாட்டுகிறார்கள். ஆக மொத்தம், சசிகலாவின் ஆடியோ வெளியீடு, அதிமுகவிற்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை விவாதப் பொருளாக்கி உள்ளது..

சசிகலாவின் உரையாடல்கள் பெரும்பாலும், தாங்கள் வளர்த்த கட்சி எங்கள் கண்ணெதிரே அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியாது. விரைவில் அரசியலுக்கு வருகிறேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்தது போல, அதிமுகவை மீண்டும் பலம் பொறுந்திய கட்சியாக உருவாக்குவோம் என்ற ரீதியிலேயே உள்ளது. இந்த ஆடியோ வெளியீடுகள் அனைத்தும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலைகளை குறிவைத்து வீசப்படும் கத்திகளாகவே தெரிகிறது.

சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தது என்பதே, ஒரு அரசியல் சூதாட்டம். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் முதல்வராகிறார். பின்னர் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும், ஓபிஎஸ் முதல்வர் பதவிவை ராஜினாமா செய்ய வைக்கப்படுகிறார். அதை அடுத்து, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்யத் தொடங்கிறார். இன்னொரு பக்கம்,   சசிகலா முதல்வர் பதவியை ஏற்க காத்திருந்த நேரத்தில், அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, வேறுவழியின்றி எடப்பாடியை முதல்வராக்கி விட்டு  அவர் சிறைச் சென்றார்.

கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக, சசிகலாவை விலக்கி வைத்துவிட்டு அதிமுகவை நடத்திய எடப்பாடிக்கும் ஓபிஎஸுக்கும், சசிகலாவை அதிமுகவிற்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கு, பல சாதகமான சூழ்நிலைகள் அமைந்திருந்தன. முதலாவதாக சசிகலா சிறைக்குள் இருந்தார். அடுத்ததாக, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் எடப்பாடி கையில் இருந்தது. கூடுதலாக, மத்தியில் ஆளும் பிஜேபி சசிகலா அதிமுகவிற்குள் நுழைவதைத் தடுக்க எடப்பாடிக்கு உதவியது. ஆனால் இப்போது எடப்பாடி கையில் ஆட்சி அதிகாரம் இல்லை. அதே சமயம் சசிகலா வெளியில் இருக்கிறார். டெல்லியில் பிஜேபி ஆட்சியில் இருப்பது மட்டுமே எடப்பாடிக்கு சாதகமானது. அதனால்தான், சசிகலாவின் உரையாடல் ஆடியோக்கள் வெளிவரத் துவங்கியதும், அவர் பெங்களுரூ சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் போடப்பட்ட வழக்கு தூசித்தட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கடந்த கால வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டு, அதிமுக தொண்டர்களின் மனநிலையை குறிவைத்து வீசப்படும் வலைதான், சசிகலா தரப்பின் இந்த ஆடியோ வெளியீட்டு வியூகம்.

எம்ஜிஆர் இறந்தப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், ஜெயலலிதா ஒரு அணியாகவும் அதிமுக பிரிந்தது. கட்சியின் முக்கியப் பெறுப்பாளர்கள் பெரும்பாலும் எம்ஜிஆரின் அதிகாரபூர்வ மனைவி  என்ற அடிப்படையில் ஜானகியை ஆதரித்தனர். ஜானகி இருபத்திமூன்று நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். பின்னர் ஆட்சிக் கவிழ்ந்து தேர்தல் வந்ததும், இரு அணிகளும் தேர்தலைச் சந்தித்தனர். ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதா அணி 27 இடங்களில் வென்றது. ஆனால், ஆட்சியை இழந்து அதிகாரமற்ற அதிமுகவாக இருந்தது. அந்த காலகட்டத்தில், ஜெயலலிதாவை பராக்கிரமம் பெருந்திய கவர்ச்சிரகமான தலைவராக பிரபலப்படுத்தி, அதிமுக தொண்டர்களை ஏற்றுக் கொள்ள வைத்தார்கள். தொண்டர்களின் இந்த ஆதரவைப் பார்த்து, ஜானகி அணியில் இருந்த கட்சியின் முக்கியப் பெறுப்பாளர்கள் பலரும் ஜெயலலிதா அணிக்கு வந்தனர். இறுதியில், ஜானகியும் கட்சியை ஜெயலலிதாவிடம் விட்டுகொடுத்து விட்டு விலகிப்போனார். ஜெயலலிதாவின் இந்த பிம்பக் கட்டமைப்பு மற்றும் அதிமுக தொண்டர்கள் மீதான உளவியல் போரை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவார் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். இப்போது ம.நடராஜன் உயிரோடு இல்லை என்றாலும், சசிகலா தரப்பு அந்த காலகட்ட அனுபவத்தின் அடிப்படையில்தான், இந்த ஆடியோ வெளியீட்டு வியூகத்தை வகுத்திருக்கிறது.

ம.நடராஜன்

அதிமுக எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாத கட்சி. அதிமுகவின் தொண்டர்களுக்கு தங்களுடைய தலைவர் கவர்ச்சிகரமான, பராக்கிரமம் பெருத்தியவராக இருக்க வேண்டும். மேலும், அதன் தொண்டர்கள் அதிகாரத்தை விரும்பக் கூடியவர்கள். தங்களுடைய கட்சி ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக எப்படியோ ஆட்சியை எடப்பாடி தக்க வைத்துக் கொண்டார் என்ற காரணத்திற்காகதான் அவரை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், கடந்த தேர்தலில் அதிமுக தோற்று ஆட்சியை இழந்துவிட்டது.

அதிமுக தங்களின் பராக்கிரமம் பெறுந்திய தலைவரையும் இழந்து நிற்கிறது. அத்துடன், கடந்த பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக இப்போது ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டது. இந்த  சூழ்நிலையில், அதிமுக தொண்டர்களின் மனநிலை சோர்ந்துப்போய் இருக்கும் என்ற கணிப்புடன் சசிகலா தரப்பு காய் நகர்த்துகிறது.

சசிகலாவின் ஆடியோ வெளியீட்டிற்கு அதிமுகவின் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, சசிகலா தரப்பின் வியூகம் வெற்றிப் பெற்றிருப்பதாகத் தொன்றுகிறது. முன்னாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆனந்தன் உட்பட, சசிகலாவுடன் செல்போனில் உரையாடிய 17 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி சசிகலாவுக்கு எதிராக   தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அதிலும், முதல் கூட்டத்தை சேலம் மாவட்டத்தில் எடப்பாடிதான் கூட்டினார். அடுத்ததாக, விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் கூட்டினார். இந்த கூட்டங்களில் போடப்பட்ட தீர்மானங்களில் அதிமுக வலிவேடும் போலிவோடும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தோல்வியடைந்து, ஆட்சியை இழந்த ஒரு கட்சி தான் வலிவோடும் போலிவோடும் இருப்பதாகக் கூறிக் கொள்வது வேடிக்கையானது.

அடுத்ததாக, திண்டுகல்லில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்குபின் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி வெற்றிகரமான கவுரவத் தோல்விதான் என்கிறார். மேலும், ஈபிஎஸும் ஓபிஎஸும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்கிறார். அதிமுக துவங்கிய காலத்தில் இருந்து அது சர்வ அதிகாரங்களும் கொண்ட ஒற்றைத் தலைமையின் கீழ்தான் இயங்கிவந்துள்ளது. அந்த ஒற்றைத் தலைமையின் பராக்கிரமமும் கவர்ச்சியும்தான் அதன் பலமே. தற்போதுள்ள இரட்டைத் தலைமை அதிமுக தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்றதில்லை. அதை சமாளிக்கத்தான் விஸ்வநாதன் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று உவமைப் பேசுகிறார். அத்துடன் அவர், ஜெயலலிதாவின் இறப்பில் ஏதோ நடந்துள்ளது. அது சசிகலாவுக்குதான் தெரியும். ஓபிஎஸிற்கு எதுவும் தொரியாது. அதற்கு விசாரணை நடைப்பெறுகிறது. ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது என்றார். சசிகலா மீது ஏவப்படும் மிக வழுவான ஆயுதமான ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்ற ஆயுதத்தையும் விஸ்வநாதன் இறுதியாக வீசிவிட்டார். ஆனால், இவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையம் இதுவரை உருப்படியாக எந்த விசாரணையையும் நடத்தவில்லை. இந்த ஆணையத்தை அமைக்க வலியுறுத்திய ஓபிஎஸ் கூட இதுவரை அந்த ஆணைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. இனி அந்த ஆணையம் எந்த முடிவு எடுத்தாலும், அது எடப்பாடி, ஓபிஎஸ் தரப்புக்கு பயன்பட போவதில்லை. அதை செயல்படுத்தும் அதிகாரமும் திமுக ஆட்சியின் கையில்தான் உள்ளது. கடைசியாக விஸ்வநாதன், ‘சசிகலா தாய் அல்ல, பேய்’ என்கிறார். ஒருவேளை இவர்கள் பேயைக் கண்டு அரண்டுப் போய்விட்டார்களோ ?

அதிமுகவின் கடந்த கால வரலாற்றையும், அதன் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையையும் மனதில் வைத்து சசிகலா தரப்பு இந்த ஆடியோ வெளியீடு வியூகத்தை வகுத்திருக்கிறது. சில சந்தர்பங்களில் வரலாறு மீண்டும் நிகழக்கூடும். ஆனால், எப்போழுதும் ஒரே மாதிரி நிகழ்ந்து விடாது.  கருவாடு மீன் ஆகிறதா அல்லது கடலே வற்றிப் போகிறதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

  • கொம்புக்காரன்