சதி வலையில் உச்ச நீதிமன்றம்!

HOME

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்றத்தின் ஒரு முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் எழுப்பியது உச்சநீதிமன்றத்தை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. இது பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரக்கூடும்.

கடந்த 19-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளின் வீடுகளுக்கு அந்தப் பெண் தன்னை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கடிதம் அனுப்பினார். இது குறித்து 4 இணையதளங்கள் செய்தியும் வெளியிட்டன.

அந்தப் பெண், கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நூலகத்தில் பணியில் சேர்ந்தார். 2016 அக்டோபர் முதல் 2018 அக்டோபர் வரை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நீதிமன்ற இல்ல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் அந்தப்  பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அந்தப் பெண் 22 நீதிபதிகளுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், ‘கடந்த ஆண்டு அக்டோபர் 10, 11 தேதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார். அவரது விருப்பத்திற்கு இணங்காததால் நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். எனது கணவரும் மைத்துனரும் டெல்லி போலீஸ் பணியில் இருந்து வந்தனர். அவர்கள் இருவரும்கூட பணிநீக்கம் செய்யப்பட்டனர். எனது உறவினரான மாற்றுத்திறனாளி ஒருவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் சிறப்பு ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் என்னையும் எனது குடும்பத்தையும் துன்புறுத்துகின்றனர். கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பினோம். வேறு வழியின்றி தற்போது 22 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,’ என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கடந்த 20.04.2019 அன்று தலைமை நீதியரசர்கள் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா அமர்வு அவசர அவசரமாக கூடி விசாரணை நடத்தியுள்ளது.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘புகார் கூறிய பெண் குற்றப் பிண்ணனி உள்ளவர். அவர் மீது 3 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அவர் எவ்வாறு உச்சநீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. அவர் கணவர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அடுத்த வாரத்தில் எனது தலைமையிலான அமர்வு முன்பு மிக முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. தற்போது மக்களவை தேர்தலும் நடைபெறுகிறது.’

இப்போது என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் ‘மிகப்பெரிய சக்தி’ உள்ளது. என்னைப் பதவியில் இருந்து நீக்க அவர்கள் விரும்புகிறார்கள். நீதித்துறையின் அதிகாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

20 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி வருகிறேன். எனது வங்கிக்கணக்கில் ரூ.6.8 லட்சம மட்டுமே உள்ளது. பண விவகாரத்தில் என்னை சிக்கவைக்க முடியாது என்பதால் இதுபோன்ற சூழ்ச்சி நடக்கிறது. நேர்மையாக பணியாற்றியதற்கு எனக்கு கிடைத்த வெகுமதி இது. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். விருப்பு, வெறுப்பின்றி, அச்சமின்றி தலைமை நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றுவேன். இந்த விவகாரத்தில் நான் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. சக நீதிபதிகளிடம் முடிவை விட்டுவிடுகிறேன், என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, இந்து மகேந்திர, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர ரூ.1.5 கோடி லஞ்சம் தர இடைத்தரகர் பேரம் பேசினார் என்று வழக்கறிஞர் உத்சவ் பெயின் என்பவர் தனது முகநூலில் கடந்த 23-ஆம் தேதி தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள தகவலை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஷின்டன் நாரிமன், தீபக் குப்தா அமர்வு முன்பு கடந்த 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் உத்சவ் பெயின் ஆஜராகி தன்னிடம் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை சீலிட்ட உறையில் நீதிபதிகளிடம் வழங்கினார். அதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சிபிஐ இயக்குநர், உளவுத்துறை தலைவர், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் 12.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி 3 துறைத்தலைவர்களும் நீதிபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் நீதிபதிகள், ‘தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வழக்கறிஞர் உத்சவ் பெயின் பிராமாணப் பத்திரத்தில் சில இடைத்தரகர்கள் செயல்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில், நாங்கள் மட்டுமல்ல, உச்சநீதிமன்றமும் சூழ்ச்சி வலையில் இருந்து தப்பமுடியாது,’ என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாகவும், முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணை நடைபெறும் என உத்திரவிடப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் 2019 அக்டோபர் வரை இந்தப் பதவியில் இருப்பார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர். இவரது தந்தை கேசவ் சந்திர கோகாய், 1982-ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி முதலமைச்சராக இருந்தவர்.

இவர் தலித் உரிமைகள், ஜனநாயகம், கம்யூனிசம், சிறுபான்மையினர் பாதுகாப்பு பற்றி மேடையில் பேசி வருபவர்.

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரன், மதன்.பி.லோகூர், குரியன் ஜேகப் ஆகிய நால்வரும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சர்ச்சைக்குரிய, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை சில குறிப்பிட்ட நீதிபதிகளின் அமர்வுக்கு மட்டும் ஒதுக்குகிறார் என்று குற்றம்சாட்டினர். இந்த நிலையில்தான் தீபக் மிஸ்ராவுக்குப் பின் ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

அயோத்தி பிரச்சினையில் இந்திய அரசுக்கு எதிராக எம்.இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தவர் தீபக் மிஸ்ரா. மேலும்,சபரிமலைக்கு பெண்கள் தரிசனம் செய்ய செல்லலாம், பதவி உயர்வு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயரை கொண்டுவந்தது செல்லும், இந்திய தண்டனை சட்டம் 497 பிரிவை மாற்றி, கள்ள உறவு குற்றமில்லை என்பது போன்ற சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கினார் தீபக் மிஸ்ரா.

கடந்த சில ஆண்டுகளாகவே உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பி வந்தன. உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் காலகட்டம், வழக்கை ஏற்றுக்கொள்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மத்தியில் ஆளும் மோடி அரசின் கண்ணசைவில் நடப்பது போன்ற சந்தேகம் எழுந்து வந்தது.

இந்நிலையில், ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதி ஆனதும், உச்சநீதிமன்ற சூழலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக, ரஃபேல் விமான பேர வழக்கு. ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில் பிரதமரின் அலுவலகம் தலையிட்டுள்ளதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து வழக்கறிஞராக பிரசாத் பூசன், அருண் ஷோரி போன்றோர் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஊடகங்களில் வெளிவந்த ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டது,

அதுபோல, கடந்த 26-ஆம் தேதி பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

இந்த சூழ்நிலையில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கலகம் நடந்தால்தான் வழிபிறக்கும் என்பதுபோல, இந்த பாலியல் குற்றச்சாட்டின் மூலம், உச்சநீதிமன்றத்தின் மீது விரிக்கப்பட்டிருந்த சதிவலை அம்பலமாகும் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.

  • வசீகரன்