அதிமுகவில் மீண்டும் ஆடுபுலி ஆட்டம்!

HOME

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏ-க்களின் பதவியை பறித்ததால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு இப்போதுதான் இடைத்தேர்தல் முடிந்துள்ளது.  இதன் முடிவுகள் வரும் மே 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன்தான் தெரியும். அதற்குள்ளாகவே, அடுத்த 3 எம்எல்ஏ-க்களின் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் அதிமுக இறங்கிவிட்டது.

அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் வி.டி.கலைச்செல்வன்,கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடந்த 26-ஆம் தேதி அதிமுகவின் கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் மனு கொடுத்துள்ளார். பேரவைத் தலைவரும் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.

ஜெயலலிதா மறைந்த பின் முதல்வரான ஓ.பி.எஸ்., சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்மயுத்தத்தில் இறங்கினார். சசிகலா கூவத்தூரில் எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்ததுடன் தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்துவிட்டு சிறை சென்றார்.

ஓ.பி.எஸ். அணியும் எடப்பாடி அணியும் மத்தியில் ஆளும் பிஜேபியால் 2017 ஆகஸ்டில்  இணைத்து வைக்கப்பட்டது. ஓ.பி.எஸ். விதித்த நிபந்தனையின் அடிப்படையில் சசிகலாவும் தினகரனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது தினகரனுக்கு ஆதரவாக 19 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டனர். அவர்கள் முதல்வரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு அளித்தனர்.

அந்த நிலையில், எடப்பாடியின் அரசு பெரும்பான்மையை இழந்தது, எடப்பாடி தன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பேரவைத் தலைவர் தனபால் மூலம் 18 எம்எல்ஏக்களின் பதவியைப் பறித்தார். இதில் பெரியகுளம் எம்எல்ஏ ஜக்கையன் மீண்டும் எடப்பாடியை ஆதரித்ததால் அவர் பதவி தப்பியது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந் வழக்கில் ஒரு நீதிபதி பேரவைத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்றும் மற்றொரு நீதிபதி செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். அதனால் அந்த வழக்கு மூன்றாவதாக நீதிபதி சத்தியநாராயணன் விசாராணைக்கு சென்றது. அவர் பேரவைத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்களும் மேல்முறையீடு செய்யாததால் இப்போது இடைத்தேர்தல் நடந்துள்ளது.

இதில், அரவக்குறிச்சிக்கும் ஒட்டப்பிடாரத்திற்கும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரவக்குறிச்சி எம்எல்ஏ-வாக இருந்த செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றுவிட்டார்.

தற்போது இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள 18 தொகுதிகளில் 4 தொகுதிகளை அதிமுக பிடித்தால் போதும், எடப்பாடி ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளலாம். இந்நிலையில், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் வரும் 23-ஆம் தேதி 22 இடங்களுக்கான முடிவுகள் வெளிவரும். அதில் 7 இடங்களை அதிமுக வென்றால் மட்டுமே ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இதில் அரவக்குறிச்சியும் சூலூரும் வடமாவட்டத்தில் உள்ளன. ஒட்டப்பிடாரமும் திருப்பரங்குன்றமும் தென்மாவட்டத்தில் உள்ளன. அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த செல்வாக்கும் திமுகவின் வாக்குகளும் சேர்ந்தால் அவரை வெல்வது சிரமம். சூலூரில் பாமகவை கொண்டு அதிமுக வெற்றிபெறலாம். ஆனால், முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் இருக்கும் திருப்பரங்குன்றத்திலும் ஒட்டப்பிடாரத்திலும் தினகரன் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பதால் அங்கும் அதிமுக வெல்வது கடினம்.

இதனால், எடப்பாடி மீண்டும் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிவிட்டார். 3 எம்எல்ஏ-க்களின் பதவியை பறித்துவிட்டால், திரும்பவும் 4 இடங்களைப் பிடித்தாலே போதும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது எடப்பாடியார் கணக்கு.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் பேரவைத் தலைவர் 3 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்று செக் வைத்துள்ளார். அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறாது என்றாலும், பேரவைத் தலைவரின் பதவியை கேள்விக்கு உள்ளாக்குவோம் என்பதுதான் அதன் அர்த்தம்.

இந்தமுறை புலி ஆட்டை வெட்டுகிறதா? அல்லது ஆடுகள் புலியை கட்டுக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கொம்புக்காரன்