அதிமுகவில் வெடித்தது தலைமை யுத்தம்! பற்றவைத்த ராஜன் செல்லப்பா !

HOME

“அதிமுகவிற்கு அதிகாரம் கொண்ட ஒற்றை தலைமை வேண்டும்”  என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், மதுரை முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பா இன்று (ஜுன் 8) பத்திரிகையாளர்களுக்கு அதிரடியாக பேட்டி  அளித்துள்ளார்.

இந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதிமுக சார்பில் மதுரையில் போட்டியிட்ட ராஜன்  செல்லப்பாவின் மகன் ராஜன் சத்யாவும் தோல்வியடைந்தார். தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆனால், டெல்லியில் ஓபிஎஸின் செல்வாக்கு கூடும் என்ற எண்ணத்தில், இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லையாம்.இதனால், பிஜேபி அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. இந்த சூழ்நிலையில் ராஜன்செல்லப்பா அளித்த பேட்டி தமிழக அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

“மக்களவைத் தேர்தலில் அதிமுக முக்கியமான தொகுதிகளை இழந்து விட்டது. இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ய பொதுக்குழு கூட்டத்தை ஏன் இன்னும் கூட்டவில்லை? ஆட்சியைக் காப்பாற்ற தேவையான 9 எம்எல்ஏக்களை வென்றுள்ளோம். ஆனால், அந்த ஒன்பது எம்எல்ஏக்களும் இன்னும் அம்மா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தாதது ஏன்? வெற்றி பெற்ற ஒரே  எம்பியான ஓபிஎஸ் ரவிந்திரநாத்குமார் அம்மா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார் அவருடன் ஒன்பது எம்எல்ஏக்களும் அம்மா சமாதிக்கு செல்வதை தடுத்தது யார்? கட்சி யார் தலைமையில் இயங்குகிறது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது, அதை போக்க வேண்டும். அதிமுகவில் தினகரன் மாயை எல்லாம் முடிந்து விட்டது இனி ஒரு அதிகாரமிக்க ஒற்றைlத் தலைமை வேண்டும். அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமைக்கு வர வேண்டும். பொதுக்குழுவை கூட்டினால், எங்கள் ஆதரவு யாருக்கு என்று வெளிப்படையாக தெரிவிப்போம். எந்த ஒரு பலமான கட்சிக்கும்   ஒற்றைத் தலைமை தேவை. எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள், இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி நீடிக்கும். ஆனால், எதிர்காலத்தில் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற ஒரு அதிகாரம் கொண்ட ஒற்றை தலைமை வேண்டும்”. இப்படி ராஜன்செல்லப்பா பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதா அடையாளம் காட்டிய ஒற்றை தலைமை என  ராஜன் செல்லப்பா சொல்வது, ஓபிஎஸைதான் என்று ஓரளவுக்கு வெளிப்படையாக தெரிகிறது. ஆனால்,அதிகாரம் கொண்ட தலைமை என்பது  எடப்பாடியாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.எப்படியோ ராஜன் செல்லப்பா பற்ற வைத்து விட்டார்,,இனி இந்த தலைமை யுத்தத்தின் காட்சிகள் டெல்லியின் விருப்பத்துக்கு ஏற்பத்தான் அரங்கேறும்.

.ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி நதி நீர் பிரச்சனை, நீட் தேர்வு தற்கொலைகள், கர்நாடகம் மேகதாட்டுவில் அணை கட்டுவது,எட்டுவழி சாலை, இந்தி திணிப்பு மும்மொழிக் கொள்கை, இப்படி மத்திய அரசால், தமிழகத்திற்கு நித்தம் ஒரு பிரச்சினை என்பது தமிழகத்தின் தலையெழுத்து ஆகிவிட்டது. இந்த சூழ்நிலை,தமிழகத்தை ஆளும் அதிமுக இரண்டுபட்டால்,மத்தியில் ஆளும் பிஜேபிக்கு கொண்டாட்டம்தான்.

-கொம்புகாரன்