குடிநீர் கேட்டு திமுக போராட்டம் ! மழை வேண்டி அதிமுக யாகம் ! பெரியார் மண்ணில் பெருங்கூத்து !

HOME

 தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது எங்கு பார்த்தாலும் மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம்.

 தமிழக அரசு மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்ற கோரிக்கையுடன் திமுக, தமிழகம் முழுவதும் போராட்டங்களை அறிவித்து நடத்தியது.

  பருவமழை பொய்த்துவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. அதனால்தான் இந்த தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.  மழை பெய்தால் தான் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்று அதிமுக விளக்கம் அளித்ததுடன், அதற்காக மழை வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் யாகங்களும் நடத்தியது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் இந்த யாகங்களில் கலந்து கொண்டார்கள்.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற போது, தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாக வர வேண்டும் என்று அதிமுகவினர் யாகம் நடத்தினர். ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை சென்றதும், அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று அதிமுகவினர் யாகம் நடத்தினர். ஜெயலலிதா உடல்நலமின்றி அப்போலோ மருத்துவமனையில் இருந்த போதும்,அவர் இறந்ததாக   அறிவிக்கப்படுவதற்கு முதல் நாள் இரவு வரை அதிமுகவினர் யாகம் நடத்தினர். ஜெயலலிதா இறந்து போனார். அதன்பின், சொத்து குவிப்பு வழக்கில்அவர் குற்றவாளி என்ற இறுதி தீர்ப்பு வந்தது. இப்போது அதிமுகவினர் பருவ மழை வேண்டி யாகம் நடத்துகின்றார்கள்,என்ன நடக்குமோ? 

 தர்மாகோல் விஞ்ஞானி அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்ட  பின் செய்தியாளரிடம் பேசிய போது, மனிதர்களை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் யாகம் நடத்தச் சொல்லி அறிவிப்பு கொடுத்த உடனேயே சென்னையில் மழை  பெய்துவிட்டது.இந்த யாகம் முடிந்ததும் மதுரைக்கும் மழை வந்து விடும் என்றார். அறிவியல் அமைச்சர் திடீரென ஆன்மீக அமைச்சராகிவிட்டார் போலும்.

 மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மரங்கள் இல்லாததால் தான் பருவ மழை பொய்த்து விட்டது.  பருவமழை பெய்ய 6 கோடி மரங்கள் தேவைப்படுகிறது. மக்கள் ஒவ்வொருவரும் இனி மரம் வளர்க்க வேண்டும் என்கிறார்.

 சேலம் எட்டு வழி சாலை சாலைக்காக கோடிக்கணக்கான மக்களை அழிக்க போகிறார்களே,அந்த பிரச்சனையில் அமைச்சர் ஜெயக்குமாரின் அறிவியல் பூர்வமான சிந்தனை எங்கே போனது,

சமூக காடு வளர்ப்பு திட்டத்துக்காக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது இந்த நிதியை முறையாக செலவு செய்தாலே தமிழகம் இப்போது   காடாகியிருக்கும்,

தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடும் போது, தனியார் நிறுவனங்கள்  மட்டும் தண்ணீர் விற்பனையை ஜரூராக நடந்து எப்படி? இந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது ,தமிழக அரசு  கேரளாவில் இருந்து தண்ணீர் கொண்டு வரலாமா ? ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரலாமா ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது,தனியார் நிறுவனங்கள் மட்டும் என்ன அண்டை  மாநிலத்தில் இருந்தா தண்ணீர் கொண்டு வருகின்றன? நமது நிலத்தடி நீரை எடுத்து தானே விற்பனை செய்கின்றன…

 தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதற்கு மரம் இல்லாதது மட்டும் காரணம்  இல்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாகவ காவிரியில் முறையாக தண்ணீர் வராததும் ஒரு காரணம். ஒவ்வொரு வருடமும் காவிரியில் தண்ணீர் வந்த பின்னர்தான் தமிழகத்துக்கு பருவ மழை வரும் இதுதான் இயற்கை.

 காவிரி தண்ணீர் வந்ததும் காவிரி டெல்டா பகுதியில் சுமார் 10 இலட்சம் ஏக்கர் பரப்பளவில்   குறுவை சாகுபடி செய்யப்படும். அதனால் நிலத்தில் ஏற்படும் ஈரப்பதமும், நெற்பயிரால் வயல்வெளியில் ஏற்படும் பசுமையும்  பருவமழையை தமிழகத்துக்கு கொண்டு வரும். 

 தண்ணீர் மேலிருந்து கீழே வழியும் இயல்பு கொண்டது. அதை தடுத்து மேலே அணை கட்டி தேக்குவது இயற்கைக்கு எதிரானது. தண்ணீரை மேலே தூக்கி வைத்தால்,  இயற்கை சுழற்சி நிச்சயம் நின்று போகும்.கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியது. கர்நாடகத்தில் பெரும் மழை பெய்தாலும் வெள்ளம் எடுத்தாலும் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை வழக்கமாகியது கர்நாடகம். அதனால், தமிழகத்தில்  பருவமழையும் கொஞ்சம் கொஞ்சமாக, ஆண்டுக்காண்டு குறைந்து போனது. கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகத்திலும் பருவமழை குறைந்து விட்டது.கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் விட வில்லை என்றால் கர்நாடகத்திலும் மழை குறைந்து போகும். தமிழகம் இன்று காய்ந்தால், கர்நாடகம் நாளை காயம், இந்த இயற்கை அறிவியலை கர்நாடகத்துக்கு யார் புரிய வைப்பது?

 காவேரி பிரச்சனையின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி காங்கிரஸ் உடன் இருந்த  உறவால், காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தார். அதன்பின் ஆண்ட எம்ஜிஆரும் காங்கிரஸூடன்  இருந்த உறவால் காவிரி உரிமையை விட்டுக் கொடுத்தார். ஜெயலலிதாவும் ஆரம்ப காலத்தில் அதே தவறை செய்தார். பின்னர், நடுவர் மன்றம்  அமைக்க செய்ததும், அதன் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தது, ஜெயலலிதா செய்த நீண்ட சட்டப் போராட்டம் தான். ஆனால், தீர்ப்புகள் வந்தன, தண்ணீர் வரவில்லை.

 காவிரி நீர் பிரச்சினையில்  கர்நாடக அரசும், தமிழக அரசும் மட்டும் குற்றவாளிகள் அல்ல.கர்நாடக அரசு  தீர்ப்புகளை மதிக்காத போது, அதன் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசும் குற்றவாளிதான்.

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம், காவிரி நதிநீர் பிரச்சினை, பருவமழை பொய்த்துப் போவது இவையெல்லாம், தனித்தனி பிரச்சினைகள் அல்ல, இவை அனைத்தும் ஒரே பிரச்சினை, காவிரி நதிநீர் பிரச்சினை. 

 விந்திய மலைக்கு  கிழக்கே உள்ள நிலப்பகுதி இயற்கையாகவே வளமும் செழிப்பும் கொண்ட நிலப்பகுதி.  அதனால், இந்த நிலப்பகுதி திரு இடம் என்று பெயர் பெற்றிருக்கும், அதுதான் பின்னர், திராவிடம் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் ஒரு இடத்தில் பெரியார் . 

வரும் காலங்களில், இந்த  திரு இடம் திரிந்து பாலையாக போகிறது!

-கொம்புக்காரன்