பிஜேபி-யின் இந்தி மொழி செயல்திட்டம் – முன்னேற்றத்திற்கும் கல்விக்கும் நேர் எதிரானது -காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

HOME

தென்னிந்தியாவும், வடகிழக்கும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியதன் மூலம்  அமித் ஷா, குறிவைத்து, யார் மீது இந்தியை திணிக்கிறார்? இந்த முன்மொழிவு அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்குத்தான் பொருந்தும் என்பது தெளிவாகத் தெரிகிறதே.

சமீபத்தில், கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு முழுவதிலும் நான் விரிவுரைகள் ஆற்றினேன். உலகின் ஐடி மையமான இந்த சிலிகான் பள்ளத்தாக்கு அண்மைகாலத்தில்,ஆப்பிள்,கூகுள் போன்ற பல முன்னோடி முயற்சிகளுக்கான தளமாக விளங்கிவருகிறது. அத்துடன் இணையத்தள புரட்சியை துரிதப்படுத்திய மின்னணுத் துறையில் பல்வேறு புத்தாக்கங்களையும் படைத்திருக்கிறது. 

சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஐடி முதல் எலக்ட்ரானிக் என்ஜினியரிங் வரை பல்வேறு துறைகளிலும் பணியாற்றுகின்ற இந்தியர்களில் வட இந்தியர்களை காட்டிலும் தென்னிந்தியர்கள்  எண்ணிக்கையில் விஞ்சிவிடுகின்றனர். எந்த ஒரு முன்னணி ஐடி மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனங்களிலும் ஹிந்தி-பசு பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய பிரநிதிநிதித்துவமானது மிக மிக குறைவாகவே இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இரண்டு ஐடி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் – சத்ய நாதெந்லா மற்றும் சுந்தர் பிச்சை – தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஏன்? இதற்கு ஹிந்தி காரணமல்ல, ஆங்கிலமே காரணம்.     

ஈ.வே.ராமசாமி

தென்னிந்தியர்கள் தங்களுடைய பிராந்திய மொழியான தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகியவற்றை கற்பதற்கும் மேலாக, ஆங்கிலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொள்கின்றனர். ஹிந்தியை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, பள்ளிக்கல்வி வரையிலும் இரண்டு மொழிகளை மட்டுமே கற்பது என்ற இயக்கம், தமிழ்நாட்டினால் வழிநடத்தப்படுவதற்கு காரணம், ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ஹிந்துத்துவத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட திராவிட கழகத்தின் இயக்கமே ஆகும். 

கேரளாவானது ஹிந்தியைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கிலவழி கல்வியை மேம்படுத்துவற்கு தனக்கேயுரிய மாதிரியை உருவாக்கிக் கொண்டது, இதற்கு காரணம் அங்கு பெரும் எண்ணிக்கையில் இருந்த கிறிஸ்து ஆங்கிலவழி பள்ளிகள். தெலுங்கு மாநிலங்களும் கர்நாடகாவும்கூட தமிழ்நாடு மற்றும் கேரளாவின் முன்மாதிரிகளால் செல்வாக்கு பெற்றிருக்கின்றன. இந்தியாவின் முதல் தலித் குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் மற்றும் இந்தியாவின் முதலாவது தலித் தலைமை நீதிபதியான கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கேரளாவைச் சேர்ந்தவர்களே ஆவர். இவர்கள் வெறுமனே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லர், இத்தகைய உயர்நிலையை அடைவதற்கு முன்னரே அவர்கள் தங்களுக்கென்று தனித்துவமான பெயரை உருவாக்கிக்கொண்டனர். ஏன்? இதற்கும் ஹிந்தி காரணமல்ல, ஆங்கிலமே காரணம்.  

ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி

இப்போது, ஆந்திரப் பிரதேச முதலமைச்சரான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கை கட்டாய பாடமாக வைத்துக்கொண்டு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பாடம் என்ற ஒரு புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இது எந்த ஒரு வட இந்திய முதலமைச்சரும் செய்வதற்கு துணிச்சலற்ற ஒரு காரியம். ஆங்கிலக் கல்வியில் குஜராத் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள கல்வி முறைகள் எந்த ஒரு வட இந்திய மாநிலங்களைக் காட்டிலும் மிக உயரிய நிலையில் இருக்கிறது. மேலும், ஹிந்தி-பசு பிராந்தியங்களைக் காட்டிலும் மிகமிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களுடைய ஆங்கிலவழிக் கல்வியின் காரணமாகவே, சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் தங்களுக்கான பாதையை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது, தொடர்ந்து, அவர்களுடைய பிரதான பயிற்றுமொழி ஆங்கிலமாக இருக்கும் பட்சத்தில், அடுத்த  பத்தாண்டுகளில் அவர்கள் பல துறைகளிலும் முன்னிலை வகிக்க வாய்ப்பிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி இந்த முன்னேற்றத்தை விரும்பவில்லை, பாதகமானதாக பார்க்கிறது. ஆனாலும், வடகிழக்கில் ஹிந்தியை திணிக்கும் எந்த ஒரு முயற்சியுமே வரவேற்கத்தக்கதாக இருக்காது.

 கடிகாரத்தை பின்னோக்கித் திருப்பி தென்னிந்தியா மற்றும் வட-கிழக்கில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை திணிப்பது என்ற அமித் ஷா மற்றும் பிஜேபி-யின் திட்டங்கள் கல்வித்தர நிலையில் மொத்த நாட்டையும் பின்னோக்கித் தள்ளிவிடும். அத்துடன் ஹிந்தி-பசு பிராந்திய பகுதியின் தரத்தையும் தாழ்த்திவிடும். அதன்பிறகுதான் ஹிந்து-ஹிந்தி ராஷ்டிரம் என்ற தங்களுடைய நீண்டகால இலக்கை பிஜேபி-யால் நிறுவிக்கொள்ள முடியும்.

இந்தி திணிப்பு குறித்து அவர்கள் தெரிவிக்கும் மறுப்பு சந்தேகத்திற்குறியது.இந்தி திணிப்பு பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் நீண்டகால செயல்திட்டம்.  பிரதம மந்திரி நரேந்திர மோடி செப்டம்பர் 22 அன்று ஹூஸ்டனில், அமித் ஷாவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்த பயத்தை மட்டுப்படுத்தவே முயற்சித்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு இந்த பிரச்சினையில்,பிரதம மந்திரியானவர் தனது கருத்தை வெளிநாட்டில் தெரிவித்திருப்பதற்கு பதிலாக இந்தியாவிலேயே  தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

ஹிந்தி-ஹிந்து-ஹிந்துஸ்தான் தேசியத்தை நிறுவிவிட்டு, தேசத்தின் பெயரை இந்தியா என்பதில் இருந்து – பாரதம் என்ற பெயர் அரசியலமைப்பின் அறிமுக உரையிலேயே இருக்கிறது – ஹிந்துஸ்தான் என்று மெதுவாக மாற்றிவிட வேண்டும் என்ற பிஜேபி-யின் நீண்டகால இலக்கு நன்கறிந்த ஒன்றுதான்.

 இந்த விஷயத்தில்,ஒரு பிற்போக்கு முஸ்லீம் தேசம் மற்றும் கடவுளின் பெயரால் ஆளப்படுகிற தேசம் என்ற வகையில் பாகிஸ்தான் ஒரு முன்மாதிரியாக இருக்கின்ற அதேநேரத்தில் ஒரு போட்டியாளராகவும் இருந்துகொண்டிருக்கும். மாறாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என உலகளாவிய போட்டியில் குறிப்பிடும்படியான அளவுக்கு முன்னேறிச் செல்கின்ற சீனாவோ அல்லது தென்னாப்பிரிக்காவோ இவர்களுக்கு ஒரு போட்டியே அல்ல. ஆங்கிலத்தை கற்பதற்கு இந்த இரண்டு நாடுகளும் செலுத்துகின்ற கவனம் நம்முடைய தென்னிந்தியாவைப் போன்றதுதான்.

நவீனமயமாக்கல் மட்டுமல்லாது நவீனமயமாக்கலுக்கு பிந்தைய காலப்பகுதியிலும் மொழியானது ஒரு முக்கிய இணைப்புக் கண்ணியாகவே விளங்கி வருகிறது. ஆப்பிரிக்காவில் இருந்த முன்னாள் பிரெஞ்சு காலனிகள் தங்களுடைய தாய்மொழியில் கல்வியை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தவில்லை, அவர்களும்கூட மெதுவாக பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்திற்கு இடம் மாறினார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி இப்போது வேகமாக இருப்பதற்கு காரணம் ஆங்கில மொழி தகவல்தொடர்புடன் தங்களுடைய உலகளாவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டதும், தொழில்நுட்ப-பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டதும்தான்.

பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மொழி மற்றும் கலாச்சார சார்புநிலைகளின் உலகளாவிய போக்கினை எந்த வகையிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. பிஜேபியும் ஆர்எஸ்எஸ்-ம் போற்றுகின்ற இஸ்ரேலில்கூட, ஹீப்ரூவுக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஒரு பொதுவான கலாச்சார மாற்றமாகவே இருக்கிறது.

பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு நிதியளிக்கின்ற, இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த தொழில்துறை வர்க்கம்கூட ஹிந்தியைப் பற்றி அவ்வளவாக அக்கறைப்படுவதில்லை. வட இந்தியாவில் மொழி மற்றும் கலாச்சார வர்க்க வேறுபாடானது, தென்னிந்தியாவைப் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கிறது. தெற்கில், தங்களுடைய பிராந்திய மொழிகளுடன் சேர்த்து ஆங்கிலத்தைக் கற்க வேண்டிய தேவையை எல்லாப் பிரிவினரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், இந்த மொழி மற்றும் கலாச்சார இடைவெளியானது வட இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே சென்றால், அது திரும்பவும் பொருளாதார மற்றும் கலாச்சார மூலாதாரங்களை கடுமையானதாக மாற்றிவிடும்.

வட இந்தியாவில் பணக்காரர்களுக்காக, உலகத் தரத்திலான, ஆங்கில வழிப் பள்ளிகளை நடத்தும் முன்னணி நிறுவனங்களை ஹிந்தி வழிக் கல்விக்கு மாறும்படி அமித் ஷாவாலோ அல்லது ஆர்எஸ்எஸ்-சினாலோ சொல்ல முடியுமா? வடக்கிலும் தெற்கிலும் தங்களுடைய பிள்ளைகளை ஹிந்தி வழிக் கல்விக்கு அனுப்பி வைக்குமாறு தன்னுடைய கட்சித் தலைவர்களை அமித் ஷாவால் கட்டாயப்படுத்த முடியுமா? தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் ஹிந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா யார் மீதுதான் திணிக்கிறார்? அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற கிராமப்புற  ஏழை மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த முன்மொழிவு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தலித்துகள், ஓபிசி-க்கள், சொல்லப்போனால் மேல்தட்டு சூத்திரர்கள் ஆகியோர் ஹிந்துத்துவ சக்திகளால் முன்வைக்கப்படும் உணர்ச்சிகரமான மொழி உரையாடல் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகள் இப்போதுதான் நவீன நாகரீகத்தையும், உலகமய கலாச்சாரங்களையும் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரே தேசம், ஒரே மொழி மற்றும் ஒரே கலாச்சாரம் என்ற ஹிந்துத்துவ மாயைகளுக்குள் செல்ல அவர்கள் தங்களைத் தாங்களே அனுமதித்துக் கொண்டால், அவர்கள் மறுபடியும் மத்தியகால வறுமை, அறியாமை மற்றும் ஏற்றத்தாழ்விற்குள் சென்று விழவேண்டியதுதான்.

ஹிந்தி-பசு பிராந்தியம்

ஹிந்தி-பசு பிராந்தியத்துடன் தென்னிந்தியாவில் உள்ள மக்களின் அறிவியல்பூர்வ மனப்போக்கை ஒப்பிட்டுப் பார்த்தால், மூடநம்பிக்கை, அறியாமை மற்றும் சுரண்டல் இல்லாத தென்னிந்தியாதான், அறிவியல்பூர்வ சிந்தனைக்கான புறச்சூழலை மேம்படுத்த பங்களித்திருப்பது தெளிவாகத் தெரியும். 

சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் சமநிலைக்கு உண்டான அறிவு நிலைகள் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை தென்னிந்தியாவில் மிக அதிகமாக இருக்கின்றன. தன்னுடைய சொற்பொருள் அகராதியில் செழிப்பாக இருக்கின்ற உலகளாவிய தகவல்தொடர்பு மொழியைக் கற்கின்ற ஒரு குழந்தையானது, சிறு அளவில் இருக்கின்ற மக்களால் அல்லது ஒரேயொரு சிறு பிரதேசத்தில் இருக்கின்ற சிறு குழுவினால் பேசப்படும் மொழியில் சரளமாகப் பேசுகின்ற ஒரு குழந்தையைக் காட்டிலும் நம்பிக்கையையும் அறிவையும் சிறப்பாக வெளிப்படுத்தும்.

சமூகம் மற்றும் இயற்கை அறிவியல்களைப் பற்றிய படிப்பை பலவீனப்படுத்தியதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்  ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. புராண அறிவியலும் புராணீகப் புத்தகங்களுமே எல்லா அறிவியல்களைப் பற்றிய அறிவையும் தந்துவிடும் என்ற அவர்களுடைய நம்பிக்கை நகைப்பிற்குரியது. டிஎன்ஏ மற்றும் அகழ்வாராய்ச்சி அறிவியலில் அவர்கள் போலி அறிவியலாளர்களை நியமித்துவிட்டு, உலகளாவிய அறிவியலாளர்களின் மனித இன புலப்பெயர்வு பற்றி எல்லா கோட்பாடுகளும் தவறானவை என்று அறிவித்து வருகிறார்கள். அறிவியல் உலகம் இவை எல்லாவற்றையுமே ஒரு நகைச்சுவைத் துணுக்காகத்தான் பார்க்கிறது. அவர்களுடைய அரசியல்வாதிகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், நாம் மற்ற எல்லா மொழிகளையும் கைவிட்டுவிட்டு ஹிந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அகண்ட பாரதமானது தங்கமும் வெள்ளியும் நிரம்பிய நிலமாகும் என்பதைத்தான்.

மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும்

அதிர்ஷ்டவசமாக, தென்னிந்தியர்கள் அனைவருமே அமித் ஷாவின் அபத்தமான ஹிந்தி-ஹிந்து-ஹிந்துஸ்தான் கோட்பாட்டிற்கு எதிராக கலகத்தில் இறங்கிவிட்டார்கள். நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டைப் போன்று நாமும் இருமொழிக் கொள்கையுடன் உறுதியாக இருந்து நம்முடைய அறிவியல் மனநிலையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும், அதன்மூலமாகவே வேகமாக வளர்ந்துவரும் சீனா போன்ற நாடுகளால் இந்தியா காலனியாக்கப்படாமல் வைத்திருக்க முடியும்.

தமிழில் : மர்மயோகி

காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

காஞ்சா அய்லய்யா ஷெபர்ட் அரசியல் கோட்பாட்டாளர், சமூகப் போராளி மற்றும் ‘நான் ஏன் இந்து அல்ல’  புத்தகத்தின் ஆசிரியர். கன்சிராம் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கியபோது,அதன் கொள்கையை வடிவமைத்தவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிப் பற்றி தொடர்ந்து பேசிவருபவர். சமீபத்தில்,இவரது அலுவலகத்தை பார்பனர் சங்கத்தினர் கரோ செய்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,தனது ஆடு மேய்க்கும் சமூகத்திற்கு,பார்பனர்கள் வைத்தப் பெயரை தவிர்த்துவிட்டு, ஷெபர்ட் என்ற ஆங்கில வார்த்தையை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டார்.