ஜேஎன்யு தாக்குதல் – இந்துத்துவா ஆணவ அசிங்க அரசியல் !

HOME

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், முகமூடி அணிந்த இந்துத்துவா ரௌடிகள் நுழைந்து, மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் ஆய்ஷி கோஷ் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, அதிகப்படியாக உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் உணவக கட்டணங்களை எதிர்த்து ஜேஎன்யு மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு வேறுபல பல்கலைக்கழகங்களின் ஆதரவுகளும் கிடைத்தன. இந்தக் கட்டண உயர்வு பொருளாதாரரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

முகமூடி அணிந்த இந்துத்துவா ரௌடிகள்

தொடர்ச்சியாக உயர்த்தப்படும் கட்டணங்களும், நிதித் தடைகளும் சமூகத்தின் உயர் சாதி பிரிவு மக்களுக்கு மட்டுமே தரமான கல்விக்கான வாய்ப்புகளை வழங்கும். இந்த சூழலில்தான், சமூகரீதியாக பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான நம்பிக்கையாக ஜேஎன்யு திகழ்ந்து வருகிறது. உண்மையில், ஜேஎன்யு-வில் நடந்துவரும் போராட்டங்கள் இந்தியாவின் கல்விச்சூழல் சிக்கல்களையே வெளிக்காட்டுகின்றன. இந்தத் தாக்குதல், ஜேஎன்யு-வில்  சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி மற்றும் சுதந்திர அரசியல் சிந்தனைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜேஎன்யு மாணவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பின், ஜேஎன்யு வாசலில் நிரந்தரமாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் சமீபத்திய தாக்குதல் நடந்துள்ளது.

ஜேஎன்யு-வுக்கு வெளியில் இருந்து யாரேனும் அந்த வளாகத்திற்குள் நுழைய விரும்பினால் பாதுகாவலர்கள் அவர்களுடைய அடையாள அட்டைகளை பரிசோதிப்பதும், பார்வையாளர் பதிவேட்டில் அவர்களுடைய விவரங்களை பதிவு செய்வதும் வழக்கமாக நடக்கின்ற விசயம். இப்போதோ, வன்முறையில் ஈடுபட்ட இந்தளவுக்கு அதிகமானவர்கள் வளாகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள், சொல்லப்போனால் டெல்லி போலீஸ் அவர்களை வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தது, மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்கள் தாக்கியபோதும் கொஞ்சம்கூட அசையவே இல்லை என்பதெல்லாம் அரசாங்கத்துடன் சேர்ந்து நிர்வாகமும் இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பவத்திற்கு ஆதரவாய் இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. மேலும், இந்த சம்பவத்திற்குப் பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வளாகத்தைவிட்டு வெளியே செல்லும்போது டெல்லி போலீஸ் உண்மையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்கிறது என்பதையும் இதனுடன் சேர்த்தே பார்க்க வேண்டியிருக்கிறது. பல மணிநேரத்திற்கு காவல்துறை ஒரு மௌனப் பார்வையாளராகவே இருந்திருப்பதும் அவர்களுடைய நோக்கம் மற்றும் நடத்தை மீது தீவிரமான கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மையிலேயே மிகவும் அச்சுறுத்தக்கூடியது என்னவென்றால், காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வந்த ஆம்புலன்சுகள்கூட இந்த முகமூடிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன என்பதுதான். சொல்லப்போனால், காயமடைந்த மாணவர்களுக்கான மருத்துவ உதவிக்கு மருந்துகளுடன் வந்த மருத்துவர்களும், ஊழியர்களும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அன்றைய இரவில், ஜேஎன்யு-வில் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சையளிக்க விரைந்துவந்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இப்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகப் போர்கள் நடந்த காலகட்டங்களில்கூட, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசென்ற ஆம்புலன்சுகளை எந்தச் சூழ்நிலையிலும், யார் ஒருவரும் தடுத்து நிறுத்தியதில்லை. இந்த முகமூடி கூட்டம்தான் அவர்கள் மீது இத்தகைய பகையுணர்ச்சியை காட்டியிருக்கிறது. ஆம்புலன்சுகளை தாக்குவது ஒன்றும் தவறில்லை என்றே அவர்கள் நினைத்திருக்கிறார்கள், காரணம், தாங்கள் தாக்கியவர்களை இவர்கள் காப்பாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஜேஎன்யு மாணவர் போராட்டம்

இந்த சமீபத்திய தாக்குதல், மற்ற வழக்கமான தாக்குதல்களைப் போன்றதல்ல. இங்கே வலதுசாரிகளின் வெளிப்படையான அரசியல் விளையாட்டு ஆடப்பட்டிருக்கிறது. பின்னிரவில், ஜேஎன்யு மீது நடத்தப்பட்ட தாக்குதல், குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் உள்ள சாஹீன் பாகில் நடந்துவரும் நிரந்தர போராட்டத்தை அகற்றுவதற்குத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜேஎன்யு தாக்குதல் நடந்த இதே நேரத்தில்தான், சாஹீன் பாக் பகுதியில் இருக்கும் போராட்டக்காரர்களை அகற்றுவதற்கான உத்தரவுகள் காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது எல்லா மீடியா கவனமும் ஜேஎன்யு மீதே இருக்கிறது, இச்சமயத்தில் அந்தப் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது டெல்லி போலீசுக்கு மிகவும் சுலபமான காரியம். பிஜேபி, ஜேஎன்யு நிர்வாகத்துடன் கைகோர்த்து அவர்களுடைய போராட்டத்தை நசுக்குவதற்காக செயல்பட்டிருப்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. வழக்கத்திற்கு மாறான இந்த தாக்குதல் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வை நசுக்குவதற்கு பிஜேபியால் வழங்கப்பட்டது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. காவல்துறையும் பல்கலை நிர்வாகமும் வெறுமனே அரசாங்கத்தின் கருவிகளாகத்தான் செயல்பட்டிருக்கின்றன.

ஜனநாயகம், சமத்துவம் சார்ந்த சிந்தனைகளை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ளாத இந்துத்துவவாதிகள், தங்களுக்கு எதிரான மாற்றுச் சிந்தனையின் மீது வன்முறையை ஏவிவிடும், வழக்கமான ஆணவ அசிங்க அரசியலின் மேலும் ஒரு உதாரணம்தான் இந்த ஜேஎன்யு தாக்குதல் !

  • வசீகரன்