திரௌபதி குலதெய்வமா ?

HOME

சமீபத்தில் திரௌபதி என்ற சினிமாவின்  டிரைலர் வெளிவந்து பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்ஜாதி இளம்பெண்களை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தும் தலித் இளைஞர்களின், நாடகக்காதலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் மோகன். ஜி ( ஜி.மோகன் ஏன் மோகன்.ஜி ஆனார் ).

இயக்குனர் மோகன்.ஜி

இந்த இயக்குனர் மோகன்.ஜி சமீபத்தில் அளித்த ஒரு பத்திரிகைப் பேட்டியில்,  இந்த படம் பெண்களைப் பெற்ற தகப்பன்களின் படம் என்கிறார். அதே பேட்டியில், இந்த படத்திற்கு திரௌபதி என்று பெயர் வைத்ததற்கு காரணம் திரௌபதி எனது குலதெய்வம் என்கிறார். இவரைப்போலவே, வன்னியர்கள் பலரும் திரௌபதி எங்கள் குலதெய்வம் என்கிறார்கள்.

வியாசர் சமஸ்கிருத மொழியில் எழுதிய மகாபாரத காப்பியத்தின் கதாபாத்திரமான திரௌபதி,  எப்படி தமிழ் சாதியான வன்னியர்களின் குல தெய்வம் ஆனாள்? 

திரௌபதி

முதலாவதாக மகாபாரத கதைப்படி, பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் மனைவி திரௌபதி.  மகாபாரதம் இந்தியா முழுவதும் படிக்கப்படுகிறது, பேசப்படுகிறது. ஆனால், தென்னிந்தியாவில் மட்டும்தான் திரௌபதி வழிபாடு உள்ளது. அதிலும், வன்னியர்கள் அடர்த்தியாக வாழும்  வடதமிழக கிராமங்களில்தான் திரௌபதியை தெய்வமாக வழிபடுகிறார்கள். வன்னியர் கிராமங்களிலுள்ள இந்த கோயில்கள் பொதுவாக திரௌபதி அம்மன் கோயில் என்றே அறியப்படுகிறன. ஒரு சில இடங்களில் மட்டும் தர்மராஜா கோயில் என்று அழைக்கப்படுகிறது.  முறுக்கு மீசையும் முட்டை கண்களுமாக, தலை மட்டும் இருக்கும் அரவான் சிலைகள் திரௌபதி அம்மன் கோயிலின் அடையாளம்.

வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும், விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயில்  உண்மையில், ஒரு திரௌபதி அம்மன் கோயில். இங்குள்ள அரவான் சிலைக்கு தான் திருநங்கைகள் கூடி தாலிகட்டி, பின்பு தாலியறுத்து துக்கம் கொண்டாடும் பிரபலமான திருவிழா நடைபெறுகிறது.

அரவான் சிலை

இதுபோலவே, பெங்களூரு தர்மராயா- திரௌபதி அம்மன் கோவிலில்  வெகு விமர்சையாக நடைபெறும் கரகா திருவிழா. இந்த திருவிழாவை பற்றி 1964-ல்  டி. டி கோசாம்பி எழுதிய மாயையும் எதார்த்தமும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“இது திகளர்களுடைய சடங்காகும். இவர்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. பெங்களூரில் இவர்கள் பூ,காய்கறி  தோட்டம் வளர்ப்பவர்கள். இந்த கரகா விழாவில் பல மிருகங்களை பலியிடுவதற்கு பதிலாக தற்போது ஒன்றைமட்டும் பலியிட்டு, மற்றபடி எலுமிச்சைகளை வெட்டுதல், வேகவைத்த தானியங்கள் ஆகியவற்றை படைக்கின்றனர். இறுதியில் நடைபெறும் ஊர்வலத்தில் திகளா புரோகிதன்,  பெண் வேடமிட்டு தலையில் குடத்தை வைத்து செல்வான். இப்பண்டிகையின் போது, அவனது மனைவி ஆண்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். திகளா இனமக்கள் வீட்டுக்கு ஒருவராவது கூரான கத்தியால் தங்களை வெட்டிக் கொள்வார்கள். ஆனால், இரத்தம் வராது. 150 ஆண்டுகளாக, இவ்விழா பார்ப்பணீய மயமானது.(  ஆனால், இது ஒரு ஆரிய விழா அல்ல) தற்போது பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜாவுக்கும் மனைவி திரௌபதிக்கும் கோயில் கட்டி விழா கொண்டாடப்படுகிறது. பானையில் வைக்கப்படும் சக்தி என்ற பொருள் ஒரு போலித் தங்க நகை ஆகும்.( இந்த செய்திகளை வெங்கடேச வாத்தியார் என்ற பிராமண புரோகிதர் இடமிருந்து நான் தெரிந்துகொண்டேன்) 

பெங்களூரு கரகா திருவிழா

இந்த விழாவின் இறுதியில் நடைபெறும் ஒரு ரகசியமான சடங்கில்  இரு திகளர்கள் பங்கு கொள்வார்கள். ஒரு திகளர் புரோகிதர், மற்றொருவர் ஊர்வலத்தின் முன் செல்பவர். இந்த ரகசிய சடங்கு பற்றி எவரும் வெளியில் சொல்வதில்லை. பெண்கள் சடங்கான இதை ஆண்கள்  எடுத்துக் கொண்டுவிட்டனர் என்பதே உண்மை. திகளர்கள் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர். ஆயினும், இவர்களுடைய ஊர்வலத்தில் பங்கேற்க எல்லா சாதியினரும் ஒரு கடவுள் சிலையை அனுப்புகின்றனர். இது ஒரு சிறப்பான விழாவாகும். கரக விழா ஏப்ரல் மாதம் பௌர்ணமியில் முடிவடைகிறது. பயன்படுத்தப்படும் பானையை குயவர் செய்கிறார். இது ஒரு குறிப்பிட்ட குட்டையில்  இருக்கும் மண்ணால் செய்யப்படுகிறது. இதை சக்கரத்தில் வைத்து செய்யக்கூடாது. கையாலேயே செய்ய வேண்டும். சுட கூடாது. பச்சையாகவே இருக்க வேண்டும். கடைசியில் இந்த பானை அந்த குட்டையிலேயே எறியப்படும். அதில் உள்ள சக்தியை எடுத்து வைத்துக்கொண்டு அடுத்த ஆண்டு விழாவில் பயன்படுத்துவர்.”

கும்பம் அல்லது கடம் என்பது கர்ப்பப்பை என்று கதா சரித சாகரம் கூறுகிறது என்கிறார் டி டி கோசாம்பி. .குடம் கர்ப்பப்பையின் குறியீடு. இதிலிருந்துதான்  கும்பம், கடம், கரகம் போன்ற அடையாளங்கள் உருவாகின்றன.இதன் மூலம், டி. டி கோசாம்பி திகளர் இன மக்களின் தாய் தெய்வ வழிபாட்டை, பார்ப்பணியம் திரௌபதி வழிபாடாக  மாற்றி விட்டது என்ற முடிவுக்கு வருகிறார்.

திரௌபதி அம்மன் வழிபாடு  தென்னிந்தியாவில் பரவியதற்கு காரணம் பல்லவப் பேரரசு.பல்லவர்களின் ஆட்சி நிலையாக இருந்த பகுதிகளில் தான், திரௌபதி அம்மன் வழிபாடு அதிகமாக உள்ளது.

பல்லவர்கள் ஆரிய வம்சாவழியினர். அவர்கள் தங்களை பரத்வாஜ கோத்திரம்  என்று சொல்லிக் கொண்டனர். கோத்திர மரபு என்பது ஆரியர்களுடையது. பல்லவர்களின்  சாசனங்களிலும் செப்பேடுகளிலும் பல்லவர்கள் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. 

வட இந்தியாவிலிருந்து  தென்னிந்தியாவிற்கு வந்து  காஞ்சிபுரத்தை கைப்பற்றி ஆட்சி நடத்திய பல்லவர்கள்,  தங்கள் ஆட்சியின் கீழ் இருந்த குடிமக்களை தங்களுக்காக போர் செய்யும், ராஜவிசுவாசிகளாக  மாற்றுவதற்காக,போரை மையமாகக் கொண்ட மகாபாரத கதையை பரப்பினார்கள். தங்களது பரம்பரையை மகாபாரதத்துடன் தொடர்பு படுத்திக்கொண்டார்கள். மக்களையும் அந்தக் கதையோடு தொடர்புப் படுத்துவதற்காக, கிராமங்களில் மகாபாரத கதை சொல்லும் மடங்களை ஏற்படுத்தினர். இந்த மடங்கள் தான் பிற்காலத்தில் திரௌபதி அம்மன் கோயில்களாக மாறின. பல்லவர்கள் இப்படிதான் திரௌபதி அம்மன் வழிபாட்டை கட்டமைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் திரௌபதி அம்மன் வழிபாட்டு சமயம் என்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த  அமைப்பு 37 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த 37 கிராமங்களிலும் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாக்களை இந்த சமயம் அமைப்புதான் ஒழுங்கமைக்கும். .37 கிராமங்களை உள்ளடக்கிய இந்த சமயம்  அமைப்பிற்கு தலைவர் பதவி உள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் தர்மகர்த்தா, கணச்சாரி, போத்துராஜா, குமார வர்க்கம் அல்லது வீரகுமரர்கள் ஆகிய பதவிகள் உள்ளன. இந்த பதவிகள் பரம்பரையாக வரக்கூடியவை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ,போத்துராஜா என்பது பல்லவ மன்னர்களை குறிக்கும். மேலும், திரௌபதி அம்மன் கோயில்களில் பரிவார சாமியாக போத்துராஜா சிலையும் உள்ளது. இந்த சமயம் அமைப்பு பல்லவர்கள் திரௌபதி அம்மன் வழிபாட்டை எப்படி கட்டமைத்தார்கள் என்பதற்கான ஒரு சிறு உதாரணம்.

போத்துராஜா சிலை

மகாபாரதக் கதைப்படி, குருசேத்திரப் போர் முடிந்த பதினெட்டாம் நாள் இரவு, தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் ஐந்துப் பிள்ளைகளான உப பாண்டவர்களை கொலைச் செய்தவன் அஷ்வத்தாமன். பரத்வாஜ கோத்ரம் துரோணரின் மகன் அஷ்வத்தாமனின் வம்சாவழி என்று தங்களை சொல்லிக்கொண்ட பல்லவர்களே, திரௌபதி வழிபாட்டைப் பரப்பியது பார்பணிய  தந்திரத்தின் உச்சக்கட்டம்.

பல்லவர்களின் வம்சாவழி தோற்றம் பற்றி பல வினோதமான கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று:  துரோணருக்கும் மனைவி கிருபிக்கும் ஜம்பு மகரிஷியின் அனுக்கிரகத்தால் (?) அசுவத்தாமன் பிறந்தான் என்பது.  அசுவத்தாமன் என்ற பெயருக்கு அர்த்தம் குதிரைகளில் தலைவன் . இதே கதையை சற்று மாற்றி எழுதியது தான் ருத்ர வன்னியன் கதை. ருத்திர வன்னியன்  ஜம்பு மகரிஷியின் யாக குண்டத்திலிருந்து, குதிரையின் மேல் வாளுடன் பூ நூல் தரித்து தோன்றினான் என்பதே அந்த கதை.

ரிஷிகளின் யாக குண்டங்கள் தரையில் சதுரமாகவே அல்லது வட்டமாகவே  இருக்கும். ஆனால், வன்னியர்கள் அக்னி ஜூவாலை வெளிவரும் ஒரு கும்பத்தைதான்  அடாயாளாமாக வைத்துக்கொள்கிறார்கள். கும்பம் கர்ப்பபையை குறிக்கும் எனில், ருத்ர வன்னியன் பிறப்பில் மறைக்கப்பட்டிருக்கும் கர்ப்பபை யாருடையது என்பதில்தான் பார்பணிய தந்திரம் பதுங்கியிருக்கிறது.

வன்னியர் அக்னி கும்பம்

குலதெய்வ வழிபாடு திராவிடர்களின் தனிச் சிறப்பு என்கிறார் கால்டுவெல். குலதெய்வ வழிபாடு என்பது ரத்த உறவு உள்ள முன்னோர்களை வழிபடுவது. போரில் இறந்தவர்களையும், தன் சமூகத்திற்காக ஆட்சியாளர்களை எதிர்த்ததால் கொல்லப்பட்டவர்களையும், நடுகல் வைத்து வழிபட்டதில் இருந்து தொடங்குகிறது குலதெய்வ வழிபாடு.

பல்லவ மன்னர்கள் வீரன், இருளன் (கருப்பு) போன்ற சிறுதெய்வ வழிபாடுகளை தடைச் செய்தனர். இதன் மூலம், இந்த மண்ணில் இருந்த குலதெய்வ வழிபாடுகளை அழித்தனர்.அதே நேரத்தில், மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த தாய்தெய்வ வழிபாட்டை அழிக்க முடியாததால், ஏற்கனவே, இங்கிருந்த தாய்தெய்வகளுக்கு மாற்றாக ,திரௌபதி அம்மன் வழிபாட்டை புகுத்தினர். இதற்காக பார்ப்பணர்கள் மகாபாரதத்தில் இல்லாத புதிய கதைகளை எழுதி பரப்பினர்கள்.

கி.பி.2- ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரை சுமார் ஏழு நூற்றாண்டுகள் பல்லவர்கள்  தொடர்ந்த்து தமிழகத்தை ஆண்டார்கள். அவர்கள் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக பயன்படுத்தி, சமஸ்கிருதத்தை வளர்த்தனர். பார்ப்பணர்களுக்கு   பிரம்மதாயம், தேவதானம் என்று நிலங்களை வாரி வழங்கி, தமிழகத்தில் பார்ப்பணியத்தை வேருன்ற வைத்தனர்.

பல்லவர்கள்தான் முதலில் கற்றளி எனப்படும் கருங்கல் கோயில்களை கட்ட ஆரம்பித்தனர்.அதுவரை தென்னகத்தில் கூரை வேய்த கோயில்கள்தான் இருந்தன. .அதிலும், பார்ப்பணர்கள், அரசக் குடும்பத்தினர் மற்றும் உயர் சாதியனர்  வழிபடுவதற்காக விஷ்ணு மற்றும் சிவன் கோயில்களைதான் கற்க்கோயில்களாக கட்டினார்கள். .வன்னியர்கள் போன்ற பிற்ப்படுத்தப்பட்ட சாதியினர் வழிபட்ட திரௌபதிக்கு பல்லவர்கள் கற்க்கோயில்கள் கட்டவில்லை.   

பல்லவர்களின் தோற்றம் மற்றும் வன்னியர்களின் தோற்றம் பற்றிய கதைகள் அனைத்தும் பார்பணர்களால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.


பார்ப்பணர்கள் இட்டுக்கட்டிய சாதிப் பெருமை கட்டுக்கதைகளை  இன்னமும் சிலர் மூளையில் சுமக்கிறார்கள்.

         ——————————-

குறிப்புகள்-

பல்லவர்களின் வரலாற்று தகவல்களை அறிய அர்த்தநாரீச வர்மாவின் சத்ரியன் இதழ் தொகுப்பு  புத்தகம் தொகுதி 5-ஐ பார்க்கவும்.

தாய் தெய்வ வழிபாடு பற்றிய தகவல்களை அறிய டி.டி கோசாம்பி -ன் மாயையும் எதார்த்தமும்  புத்தகத்தை பார்க்கவும்.

மேலே போனாலும் பாம்பு கடிக்கும், கீழே வந்தாலும் பாம்பு கடிக்கும் , இடையில் சிக்கிக் கொண்ட வன்னியர்களின் நிலையை  அர்த்தப்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்ட திரௌபதி பட போஸ்டர்.

-வசீகரன்

.