மலபார் மாப்பிள்ளைமார் விவசாய கலகம் – ஓர் நூற்றாண்டு

HOME

கேரளா கடந்த சில மாதங்களாகவே நல்ல காரணங்களுக்காகத்தான் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. கோவிட்-19 பரவலுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு மனிதநேயம், செயல்திறன் மற்றும் பயன்மிக்க நடவடிக்கைகளுடன் கேரளா தாக்குதல் நடத்தி வருகிறது. அதனுடைய வியூகங்கள் எல்லாமே மக்களுக்கு குறைவான பாதிப்புடன் நல்ல பலன்களைத் தருவதை உறுதிப்படுத்துகின்றன. பொது சுகாதாரமானது மிகவும் முறைப்படுத்தப்பட்டதாகவும், அதனுடைய சேவைகள் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கும்படியாக இருப்பதும் கேரளா மாநிலத்தில்தான். மதத்தின் பெயரால் தேசியவாதத்தை திணிக்கின்ற சக்திகள் குறிப்பிடும்படியான தேர்தல் வெற்றிகள் எதையும் பெற முடியாமல் இருப்பதும் இந்த மாநிலத்தில்தான். ஆர்எஸ்எஸ் ஷாகாக்களின் மிகப்பெரிய நெட்வொர்க் இருந்தபோதிலும், சபரிமலைக் கோயிலில் பெண்கள் நுழையும் பிரச்சினை போன்றவற்றை சமுதாயப் பிரச்சினையாக்க அவை விடாப்பிடியாக முயற்சி செய்த போதிலும், அந்த மாநிலம் தன் நிலையை விட்டுக்கொடுத்ததே இல்லை.     

மாப்பிள்ளைமார் கிளர்ச்சி என்று அறியப்படுகின்ற மலபார் கிளர்ச்சியின் (1921) வரவிருக்கும் நூற்றாண்டு நினைவு நிகழ்வானது, சமூகப் பிரிவினை சக்திகளுக்கு இந்த சமூகத்தை பிளவுபடுத்தும் மற்றொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. சமீபத்தில், இந்தக் கிளர்ச்சியின்போது பிரிட்டிஷ் அரசால் கொல்லப்பட்ட கிளர்ச்சித் தலைவராகிய வரியன் குன்னத்து குஞ்சகமது ஹாஜியின் வாழ்க்கையை படமாக்கும் அறிவிப்பை சில சினிமா இயக்குநர்கள் அறிவித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் ஆஷிக் அபு அறிவித்துள்ள “வாரியம்குன்னன்” என்ற திரைப்படமும் அதில் ஒன்று. பண்ணையார்களாலும், அவர்களுடைய கைக்கூலிகளாலும் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான, விவசாயிகளின் பிரச்சினைகளைச் சூழ்ந்துள்ள ஹாஜியின் போராட்டங்களை இந்தப் படத்தில் முன்னிலைப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இந்தப் பண்ணையார்கள் அல்லது “ஜான்மிக்கள்” பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசால் பாதுகாக்கப்பட்ட மேல்சாதி இந்துக்கள் ஆவர். சுவாரசியமானது என்னவென்றால், பண்ணையார்கள் யாவரும் இந்துக்கள், விவசாயிகள் யாவரும் முஸ்லீம்கள்.

நமக்குத் தெரிந்த வகையில், அரேபிய வர்த்தகர்கள் மூலமாகத்தான் இந்தியாவின் மலபார் கடற்கரைக்கு இஸ்லாம் முதல்முறையாக வருகைபுரிந்தது. வர்ண-சாதி முறையால் பாதிக்கப்பட்ட மக்களில் பலரும் இந்த ஒருங்கிணைப்பின் போதுதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்த இந்த ஆரம்ப கட்டத்தின் குறியீடாக, இந்தியாவிலேயே முதல்முறையாக, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மெதல்லாவில், கி.பி.629-இல் அமைக்கப்பட்டதாக கருதப்படும் சேரமான் ஜூம்மா மசூதியை போற்றி வருகிறோம்.   

இந்தத் திரைப்பட அறிவிப்பு வெளியான உடனேயே, சமூகப் பிரிவினை சக்திகள் “ஹிந்து ஐக்கிய வேதி(Hindu Aikya Vedi)” என்ற வடிவில் இந்தப் படத்திற்கு எதிரான பிரச்சாரத் திட்டத்தைத் தொடங்கிவிட்டன. அதன்படி, மோப்லா கிளர்ச்சி என்றும் அழைக்கப்படுகின்ற மாப்பிள்ளைமார் கிளர்ச்சியின் முன்னிலையில் இருந்த ஹாஜி மற்றும் பிற தலைவர்களை “பெருமைப்படுத்தும்” இயக்குநரின் நோக்கத்தை எதிர்ப்பதையே அந்தப் பிரச்சாரம் தன் இலக்காக கொண்டிருக்கிறது. மலபாரின் தெற்குப் பகுதியில் 1921, ஆகஸ்ட் மாதம் இந்தக் கிளர்ச்சி வெடித்தது, 1922 ஜனவரியில் ஹாஜி பிடிக்கப்பட்டார். இது குரூரமான முறையில் பிரிட்டிஷ் அரசால் நசுக்கப்பட்டது. இந்தக் கிளர்ச்சியின் முக்கியத் தலைமையானது விவசாயிகளின் துயரத்தைப் போக்கும் ஒரு வழியாக இதனைக் கண்டபோதிலும், சில குறிப்பிட்ட சக்திகளால் இதில் இந்து முஸ்லீம் இருமைவாதம் ஊடுருவச் செய்யப்பட்டது. [ஆர்ய சமாஜத்தின் கூற்றுப்படி, சுமித் சர்க்கார் என்பவரின் ‘நவீன இந்தியா’ என்ற புத்தகத்தில், ஏறக்குறைய 2,500 இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும், அவர்களில் 600 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.]  

துருக்கியில் மறுசீரமைப்பு இயக்கமான கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டபோதுதான் இந்தக் கிளர்ச்சி நிகழ்ந்தது. காந்தியின் தலைமையில், இந்திய தேசிய காங்கிரஸ் கிலாபத் இயக்கத்தை ஆதரித்தது. இஸ்லாமியர்களும் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியினர்தான் என்பதை உறுதிப்படுத்துவதே இந்த ஆதரவின் பிரதான நோக்கமாகும். இந்தக் கிளர்ச்சியின்போது, இஸ்லாமியர் உட்பட பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் எல்லோர் மீதும் ஹாஜி நிறைய தாக்குதல்களைத் தொடுத்தார். சில தீவிர அடிப்படைவாதிகள் இதனை இந்துக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக காட்டும் வாய்ப்பையும் இந்தக் கிளர்ச்சி கொடுத்தது. உண்மை என்னவென்றால், இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்ற நிறைய முஸ்லீம் அல்லாதோரும் முஸ்லீம்களில் பலரும் இத்தகைய இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை ஏற்கவில்லை.    

மலபார் பகுதியில் விவசாயிகள் கலகங்களுக்கு ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. ஜான்மி பண்ணையார்களுக்கு பின்புலமாக காவல்துறை, நீதித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இருந்துகொண்டு, கீழ்நிலை வர்க்கங்கள் மீது மிகுந்த அடக்குமுறை நிகழ்த்தியதால் மோப்லா விவசாயிகள் கலகம் செய்யத் தொடங்கினர். அங்கே இந்தக் கலகங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. 1836-இல் முதலாவதாகவும், அதைத் தொடர்ந்து 1836 மற்றும் 1854 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 22 வேறுபல கலகங்களும் நடந்துள்ளன. இதில் 1841 மற்றும் 1849 ஆகிய ஆண்டுகளில் மிகத் தீவிரமான கிளர்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இந்தக் கலகத்தைப் பற்றி சமூகவியலாளரான டி.என்.தனகேர் குறிப்பிடுவதுதான் மிகவும் பொருத்தமானது. அவருடைய கூற்றுப்படி, “அடிப்படை நிலவுரிமைப் பாதுகாப்பு மொத்தமாக  புறக்கணிக்கப்பட்டது, நிலச்சுவன்தார்-குத்தகைதாரர் உறவுகள் சீர்கெட்டுப்போனது மற்றும் ஏழை விவசாயிகள் அரசியல்ரீதியாக அந்நியப்படுத்தப்பட்டது” ஆகியவைதான் இதற்கான காரணங்கள். குத்தகைப் பிரச்சினைகளைச் சூழ்ந்திருந்த அடிப்படை இயக்கமானது கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கங்களுடன் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டது.  

1919-இல் தொடங்கப்பட்ட கிலாபத் இயக்கம் முஸ்லீம் விவசாயிகளின் துயரங்களுக்கான ஒரு புதிய செயல்தூண்டலை வழங்குவதில் கருவியாக செயல்பட்டது. கிலாபத் இயக்கம் இஸ்லாமி சார்பு உணர்வை உருவாக்கியபோது, உள்ளூர் வருத்தப்பாடுகள் உலகளாவிய அக்கறைகளுடன் பின்னிப்பிணைந்து அதனுடைய தீவிரத்தன்மையை புதுப்பித்தது. கிலாபத் இயக்கத்தின் குலைவானது முழுமையான விரக்தி உணர்வுகளுக்கு காரணமாக அமைந்து வன்முறையை தீவிரப்படுத்தியது.   

இத்தகைய சிக்கலான நிகழ்வுப்போக்கில், ஹாஜியை வைத்து தன்னுடைய வாரியம்குன்னன் திரைப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் ஆஷிக் அபு, இந்தத் திரைப்படத்திற்கு ஒரு மதவாத சாயம் பூசப்படுவதை உறுதியாக எதிர்க்கிறார், அதேநேரம், ஜான்மிக்கள் என்போர் பிரதானமாக மேல்தட்டு இந்துக்களாக இருந்துள்ளபடியால் ஒரு சிறு பிரிவினர் இதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றிற்கும் மேலாக, நிலவுடமை வர்க்கத்தின் கடுமையாக சுரண்டலுக்கு மிகப்பெரிய பாதுகாவலானாகவே பிரிட்டிஷ் ஆட்சி இருந்து வந்திருக்கிறது. 

திரைப்பட இயக்குநர் ஆஷிக் அபு

மலபார் கிளர்ச்சியானது சமூகத்திற்குள்ளான பிளவை உருவாக்கும் அளவுக்கு செல்லத்தான் செய்தது, ஆனால் அதன் உள்நோக்கம் அதுவல்ல, அத்துடன் ஹாஜி போன்ற இந்தக் கிளர்ச்சியின் தலைவர்களுடைய செயல்திட்டம் எதிலுமே அப்படிப்பட்ட விஷயம் இருந்ததில்லை. இதனை இந்துக்களுக்கு எதிரான முஸ்லீம்களின் தாக்குதல் என்று பிரச்சாரம் செய்து, தங்களுடைய “பிரித்தாளும் கொள்கையை” மேலும் விரிவுபடுத்திய பிரிட்டிஷ் அரசே இதற்கு காரணம்.

இந்து சமூகவிரோத சக்திகள் இந்தப் பிரிவினையை மேற்கொண்டு விரிவுபடுத்தி, இந்துக்கள் இனப்படுகொலை என்றே இந்த மலபார் கலகத்தை அழைக்க முற்பட்டன. இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்ற ஏறக்குறைய 10,000 முஸ்லீம்களை பிரிட்டிஷ் அரசு இரக்கமற்ற முறையில் கொலைசெய்தது, மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தியது. இப்படிப்பட்ட எல்லாக் காரணங்களுக்காகவும், இந்தப் பிரதானமான விவசாயக் கலகத்தை முறைப்படி மதிப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும்தான், இந்த சமூகப் பெருநிகழ்வினை பிரகாசமான வெளிச்சத்தில் வைத்து, மிக விளக்கமாக திறந்து காட்டுவதில் பெரும் உதவி செய்ய முடியும்.   

                                                                             ராம் புனியானி

தமிழில்: இரா.செந்தில்