ஸ்ரீராம் ! ஹே ராம் !! நேபாள் ராம் !!! ராமன் எத்தனை ராமனடி !

HOME

நேற்று முன்தினம்(14/07/2020) நேபாள பிரதமர் சர்மா ஒலி, ‘உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, ராமர் ஒரு நேபாளி’ என்றார். மேலும் அவர், ‘ராமர் பிறந்த இடமான அயோத்தி,  நேபாளத்தில் உள்ள தோரி நகரம் பீர்குஞ்ச் என்ற இடத்துக்கு மேற்குப் பகுதியில் இருக்கிறது, அவ்வாறு இருக்க, ராமர் பிறந்த இடம் இந்தியாவில் உள்ளதாகக் கூறுவது எப்படி? எந்தவித தகவல்தொடர்பும் இல்லாத காலத்தில், நேபாளத்தில் உள்ள ஜனகபுரி வந்து இராமர் எப்படி சீதையை மணந்தார்?’ என்று பலவித சந்தேகங்களை எழுப்பி, அதிரடியைக் கிளப்பி இருக்கிறார். இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்தாலும், கடந்த இரண்டு மூன்று தினங்களாக சமுக வலைத்தளங்களை இந்தச் செய்தி ஆக்கிரமித்துவிட்டது.

நேபாளத்திற்கு வேண்டுமானால் ராமன் வெறும் தெய்வமாகவும், அயோத்தி வெறும் இடமாக இருக்கலாம். ஆனால், இன்றைக்கு இந்தியாவை ஆளும் பிஜேபிக்கு ராமன் ஒரு கதாநாயகன், அயோத்தி என்பது புனித ஸ்தலம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ச்சியாக இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியை, ராமன் என்ற கலாச்சார ஆயுதத்தை வீசித்தான் பிஜேபி வீழ்த்தியது. இன்றைக்கு இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் எல்லைப் பிரச்சினை உருவாகியிருக்கும் சூழ்நிலையில், நேபாளம் அதே ராமன் என்ற கலாச்சார ஆயுதத்தை இந்தியாவின் மீது வீசியிருக்கிறது. இந்த ஆயுதம் ஆளும் பிஜேபியின் அடித்தளத்தையே அசைத்திருக்கிறது.

நேபாள் ஜனக்பூரில் உள்ள ஜானகி கோயில்

வால்மீகி எழுதிய இராமாயணத்தில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக இல்லை. ராமன் சாகெத் என்ற இடத்தில் பிறந்ததாகத்தான் வால்மீகி குறிப்பிடுகிறார். கி.பி.11-ஆம் நூற்றாண்டில்தான் அயோத்தி எனும் பெயர் முதலில் வழக்கத்திற்கு வந்தது என்றும், அதற்கு முன்புவரை, ராமன் பிறந்த இடம் சாகெத் என்றே கருதப்பட்டது எனவும், உண்மையில் ராமன் பிறந்த இடம் வடமேற்கு பாகிஸ்தானில்தான் இருக்கிறது எனவும், இந்திய முன்னாள் தொல்பொருள்துறை ஆய்வாளர் ஜெஸ்சு ராம் தெரிவித்துள்ளார். மேலும், உ.பி.யில் உள்ள அயோத்தியில் ராமஜென்ம பூமியின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்குமானால், அது ஏன் துளசிதாசரின் இராமாயணத்தில்கூட குறிப்பிடப்படவில்லை? பாபரின் பேரன் அக்பர் காலத்தில்தானே துளசிதாசர் வாழ்ந்தார்? அதற்குப் பிந்தைய காலத்தில்கூட ராமர் பிறந்த இடத்தின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டிருப்பதாக யாரும் குறிப்பிடவே இல்லையே? என சந்தேகங்களை அடுக்குகிறார் ஜெஸ்சு ராம்.

இயற்பியல் வல்லுனரும், வேதகால வரலாற்றை ஆய்வு செய்தவருமான திரு. இராஜேஷ் கோச்சர், இராமர் பிறந்தது சராயு நதிக்கரை அருகில் எனக் குறிப்பிடுகிறார். அதோடு, அந்த நதி ஆப்கானிஸ்தானில் ஓடியது என்ற தகவல்களையும் தருகிறார். கிருஷ்ண ராவ் எனும் தொல்லியலாளர் 1998-ல் சிந்துவெளி முத்திரைகளை ஆராய்ந்து, ராமர் பிறந்தது சரஸ்வதி நதிக்கரையில்தான் என்ற முடிவுக்கு வந்தார். வரலாற்றாளர் ஷாம் நாராயண் பாண்டே, ராமர் பிறந்தது ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிராட் எனுமிடத்தில் என்கிறார்.

ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாத ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் விடாப்பிடியாக, பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமஜென்ம பூமி என்று கூறிவந்தன. அத்துடன், 1991 டிசம்பர் மாதம் 6-ம் தேதி இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டு ஒன்றுகூடி பாபர் மசூதியை இடித்தன.   

ராமஜென்ம பூமி – பாபர் மசூதி சர்ச்சையின் ஆரம்பகாலமான, 1850-களில், அயோத்தியில் வாழ்ந்த இந்துக்கள் ராமஜென்ம பூமியின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதை நம்பவில்லை. இதை அப்போதைய அலகாபாத் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 1970-களில் பி.பி.லால் தலைமையில் நடைபெற்ற அயோத்தி பாபர் மசூதி அகழ்வாய்வில், ராமர் இருந்ததற்க்கான எந்த தொல்லியல் எச்சமும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை.

அதேசமயம், ராமஜென்ம பூமி – பாபர் மசூதி பிரச்சினை துவங்கி, சுமார் 170 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம், ‘அகழ்வாய்வில் ராமருக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால், பெரும்பான்மையான இந்துக்கள் நம்புவதால், அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கெள்ளப்படுகிறது. இந்துக்களின் நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது,’ என்று தீர்ப்பு வழங்கியது. 

அதே உச்சநீதிமன்றம், சபரிமலை விசயத்தில் எப்படி இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக  தீர்ப்பு வழங்கியது?  பெரும்பான்மையான இந்துக்கள் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்றுதானே நம்புகிறார்கள். ஏனெனில், கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டுகளை சிக்கலில் மாட்டிவிடுவதற்காகவும், இந்துத்துவ அரசியலை வளர்ப்பதற்காகவும் வழங்கப்பட்ட தீர்ப்பு அது.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் பல இடங்களுக்கு ராமனுடன் தொடர்புபடுத்தப்பட்ட பல கட்டுக்கதைகள் உள்ளன. அதுபோலவே, அயோத்தி என்ற பெயரில் பல ஊர்களும் உள்ளன. ஆனால், இத்துத்துவவாதிகள் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திதான் ராமன் பிறந்த ராமஜென்ம பூமி என்றார்கள். அவர்கள் அப்படிச் சொல்லக் காரணம், அங்கு பிரபலமான பாபர் மசூதி இருந்ததுதான். அது அவர்களுக்கு இந்து-முஸ்லீம் பகைமையை உருவாக்க வசதியாக இருந்தது. எனவேதான், அதை வைத்து அவர்கள் இந்துத்துவ அரசியலைத் துவங்கினார்கள்.

வால்மீகியின் இராமாயணத்தில் ராமன் பிறந்த ஊர் சாகெத் என்று இருப்பதை மனதில் வைத்துதான், கமல் தனது ‘ஹே ராம்’ படத்தில், கதாநாயகன் பெயரை சாகெத் ராம் என வைத்திருப்பார் என்ற கருத்தும் சுவாரசியமானது. ஆனால், அந்தப் படத்தின் பெயரான ‘ஹே ராம்’ என்பது, மகாத்மா காந்தி சுடப்பட்டபோது, அவர் கடைசியாக  எழுப்பிய கூக்குரலான ஹே ராம் !

  • ராகுல் யோகி