அரசுக்கு கடவுள் வழங்கிய வாய்ப்பு: கொரோனோ வைரஸ் !

HOME

ஏறக்குறைய இன்று நாம் எதிர்கொள்கின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் கோவிட்-19 மீதே பழி சுமத்தப்படுகிறது.

நாம் இந்த வைரஸ் ஏற்படுத்திய தற்காலிகமான, உடனடிப் பிரச்சினையில்தான் மிக அதிகமாக கவனம் செலுத்துகிறோமே தவிர, மிகவும் ஆழமான மற்றும் மிகவும் ஆபத்தான அடுத்தடுத்த பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்துவதே இல்லை.

காலம்கடந்து மெதுவாக வளர்ந்துவிடக்கூடிய பிரச்சினைகளைக் காட்டிலும், சட்டென்று தோன்றுவிடுகின்ற நெருக்கடிப் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதுதான் மனித இயல்பின் அடிப்படை அம்சமாக உள்ளது.

இந்தியாவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான CRISIL குறிப்பிட்டுள்ளபடி: ‘இந்தப் பெருந்தொற்று தாக்குதலுக்கு முன்பே பொருளாதாரம் முடங்கித்தான் போயிருந்தது.’ கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பாகவே 2019, அக்டோபர் மாத நிலவரப்படி வளர்ச்சி மைனஸ் 6.6% கீழே சென்றுவிட்டது, வாகன விற்பனை மைனஸ் 12% வீழ்ச்சியுற்றுவிட்டது, ஏற்றுமதி மைனஸ் 1% வீழ்ந்துவிட்டது. மீண்டு வருவதற்கான வழிகளை இத்தகைய உள்ளுறையும் பிரச்சினைகளே சிக்கலாக்கியிருக்கின்றன. இந்தியா “2014-ஆம் ஆண்டில் இருந்து அதிக சதவிகித டாலர்-மில்லினர்கள் புலப்பெயர்வு” காரணமாக முதலீட்டு இழப்புக்களையும் சந்தித்துள்ளது.  

இந்தப் பெருந்தொற்றுக்கு முன்பே நம்முடைய சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகள் இருந்துதான் வந்திருக்கின்றன, பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதையும் அவைதான் தாமதப்படுத்துகின்றன.

அந்நியமாக்கப்பட்ட மக்கள்

அமெரிக்காவில், பணக்கார தனிநபர்களும் கார்ப்பரேஷன்களும் பணம் பண்ணுகின்ற பங்குச் சந்தையில் இருந்து பொதுமக்களின் பொருளாதார நிலை துண்டிக்கப்பட்டது. பொருளாதாரம் தொடர்ந்து மந்தநிலையிலேயே இருந்துவந்த சமயத்தில் பங்குகளின் விலைகள் மீண்டுவரத் தொடங்கின. பொருளாதாரம் முடங்கிவரும் நிலையிலும்கூட உயர்நிலை அதிகார வர்க்கத்தினரும் பங்குதாரர்களும் பலன் பெற்றனர்.

இந்தியாவிலும் இதே விஷயம்தான் நடந்திருக்கிறது.  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின், சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர்.ராகுல் குமார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “நன்றாகத் தொடர்பில் இருந்த கார்ப்பரேட் மையங்களின் சிஇஓ-க்களுக்கு மட்டும்தான் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்கும் பொது நிதிகளை எவ்வாறு கறப்பது எனத் தெரிந்திருந்தது. பெரும் பங்குகள் எப்போதுமே அமைச்சர்கள், அதிகாரவர்க்கத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் கார்ப்பரேட் மையங்களால் கையகப்படுத்தப்பட்டன. உழைக்கும் நடுத்தர வர்க்க மக்கள் வரப்போகும் வருடங்களில்தான் இந்த பிடுங்கிக்கொள்ளப்பட்ட பங்கு எவ்வளவு என்பதை உணர்வார்கள். வரப்போகும் மோசமான காலங்களுக்காக அவர்கள் மனதளவில் தயாராகிக்கொள்ள வேண்டும்.”

அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினருடைய வருமானங்கள் இப்போதும் வீழ்ச்சியடையவில்லை. அதனால், நமக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் அவர்களுக்கு கிடையாது.

அரசாங்கத்தின் வரி வருவாய்கள் குறைந்துபோனால், அவர்கள் வரிகளை அதிகப்படுத்துவார்கள், பணவீக்கத்தை உருவாக்குவார்கள், உள்கட்டுமான செலவுகளைக் குறைப்பார்கள், அரசாங்கத்தின் கட்டமைப்பு, சலுகைகள் மற்றும் அரசாங்க ஊழியர்களை  அப்படியே வைத்துக்கொள்ள பொதுத் திட்டங்களை நிறுத்துவார்கள். நம்முடைய நஷ்டத்தை அவர்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

பல மாதங்களுக்கு பொருளாதாரத்தை இழுத்து மூடுதல் என்பது பொதுமக்களில் பெரும்பகுதியினரை அழித்துவிடும், ஆனால் அது அரசாங்கம், அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் வளத்தின் மீது மிகக்குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும். புலிட்சர் விருதுபெற்ற கிரிஸ் ஹெட்ஜஸ் சொல்வதன்படி, “கொரோனா வைரஸ் பெருந்துதொற்று மற்றும் சமூக விலகல் காரணமாக யாரும் தெருவில் இறங்கப்போவதில்லை என்பதை நினைத்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.”

மோடிமஸ்தான்

மோடிமஸ்தான் வித்தை: எதிர்பாராத நேரத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஏதாவது ஒன்றை மாயாஜாலமாக மறைய வைப்பவர்

பெருந்தொற்று காலத்தின்போது ‘பொதுமக்கள் பாதுகாப்பை’ மேம்படுத்தும் கண்ணோட்டத்துடன் சட்டங்கள் இயற்றப்பட்டு, பெருந்தொற்றிற்குப் பின்னரும் அவை நீட்டிக்கச் செய்யப்படும். இதனால், அவை ஜனநாயகத்தை, மனித உரிமைகள் செயல்பாட்டை, உண்மை உரைப்பவர்களை, அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் ஊழல்களை வெளியே கொண்டுவருகின்ற பத்திரிக்கையாளர்களை நசுக்கவும் பயன்படுத்தப்படும். உங்களுடைய கவனத்தை திசைதிருப்பிவிட்டு உங்கள் பையை காலி செய்கின்ற ஒரு மோடிமஸ்தான் வித்தையில் இருந்து இது வேறுபட்டதல்ல. அரசாங்கமும் கார்ப்பரேட்டுகளும் தாங்கள் செய்ய விரும்புகின்றவற்றுக்கு கடவுள் வழங்கிய வாய்ப்புதான் இந்தப் பெருந்தொற்று.

அரசாங்கம் அமல்படுத்துகின்ற பாதுகாப்பு மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் பயனற்றவையாகவும், ஆனால் அவையே பாதுகாப்பை வழங்குவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதையுமே ‘பாதுகாவல் அரங்கம்’ மற்றும் ‘கோவிட் அரங்கம்’ என்று புரூஸ் ஷெய்னர் குறிப்பிடுகிறார். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற கொடிய சட்டங்களை மறைத்துவிடுகின்றன, வைரஸ் நம்மைவிட்டுப் போனபிறகும்கூட அவை நீண்டகாலத்திற்கு நம்முடனே இருந்துவிடுகின்றன. இந்த சட்டங்கள்தான் எந்தவித வரம்பும் இல்லாமல் மனித-உரிமைப் போராளிகளை, உண்மை உரைப்பாளர்களை, அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் ஊழல்களை வெளிக்கொண்டு வருபவர்களை சிறையிலடைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.   

இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு பெரும் நிகழ்வுகளும் தமாஷ்களும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கின்றனவே தவிர, எதிர்-நடவடிக்கைகளும் தெளிவான கொள்கைகளும் இடம்பிடிப்பதில்லை.

கற்றுக்கொண்ட பாடங்கள்

நவீன வரவாற்றில் இந்த கோவிட்-19 என்பது கருத்துச் சுதந்திரம், உண்மையுரைப்போர் பாதுகாப்பு மற்றும் அரசு அதிகாரத்தை வரம்பிற்குள் வைத்தல் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு உண்டான மிகப்பெரிய பாடமாகும். சீனாவின் ஆராய்ச்சியாளர்கள், உண்மையுரைப்பவர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு கருத்துச் சுதந்திர உரிமையும், உண்மையுரைக்கும் பாதுகாப்பும் இருந்திருந்தால், இந்தப் பெருந்தொற்றைப் பற்றி உலகத்திற்கு முன்னதாகவே தெரிய வந்திருக்கும். அது பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கும், கோடிக்கணக்கான ரூபாய்களை பாதுகாத்திருக்கும், பில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை தடுத்திருக்கும்.

ஆனால், அரசாங்கம் இந்தப் பெருந்தொற்றை நம்முடைய கருத்துச் சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் நசுக்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டிருப்பது எவ்வளவு முரண்பாடாக உள்ளது?

இந்தப் பெருந்தொற்று வீணாகிப்போன வாய்ப்புகள் என்பதற்காகவும் நினைவுகூரப்படும். மதிப்பீடு செய்து அதை பிரதிபலிப்பதற்கு பதிலாக, இந்நிலையில் இன்னும் அதிகமாகத் தொடர்ந்திருக்கவே நாம் விரும்புகிறோம். நம்முடைய சமூ-பொருளாதார-அரசியல் மாதிரியில் உடைந்து போயிருப்பவற்றை சரிசெய்வதற்கான வாய்ப்பாக இந்த நெருக்கடிகளை பார்க்க முடியாது, பதிலாக என்ன விலைகொடுத்தேனும் தற்போதுள்ள நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு உரியதாகத்தான் அவை இருக்கப் போகின்றன. முழுக்கவே ஒரு அமைப்பு வகைப்பட்ட சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகள் நிரம்பியிருந்த காலங்களை நினைத்து நாம் ஏன் ஏங்கிப் புலம்புகிறோம்?    

இந்தப் பெருந்துதொற்றுக் காலம் நாட்டில் ஆட்சித் தரத்தினுடைய கடும் சோதனைக் கட்டமாக அமைந்துவிட்டது. ஒரு நாட்டில் ஆளுகையும் தலைமையும் சிறப்பாக இருக்கும்போது ஏழைகள் பாதிக்கப்படுவது குறைவாகவே இருக்கும். நல்ல ஆளுகைத் திறனுக்காக அறியப்படுகின்ற  நாடுகள் எல்லாம் இந்தப் பெருந்தொற்றின் காரணமாக மோசமாக நடந்துகொண்டதில்லை, உதாரணத்திற்கு வியட்நாம், தைவான், சிங்கப்பூர், பூடான், தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவற்றைச் சொல்லலாம். நம்முடைய ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது, நம் எல்லோரையுமே வருத்தம்கொள்ள வைக்கின்ற வகையில், ஒரு மோசமான ஆட்சிதான் நடக்கின்றது என்பதற்கான விழிப்புணர்வு அழைப்பே ஆகும்.

என்னதான் செய்வது

வைரஸ் வேண்டுமானால் நோயாளியை ஐசியூ-வுக்குள் தள்ளியிருக்கலாம், ஆனால் அதன் உள்ளுறையும் சுகாதாரப் பிரச்சினைகள் அந்த நபரை நீண்டகாலத்திற்கு, கடுமையான அதிர்ச்சியிலேயே வைத்திருக்கும். பணவீக்க உயர்வு மற்றும் மறைமுக வரிகள் போன்ற வடிவங்களில் நாம் இன்னும் பெரிய கட்டண ரசீதுகளுக்கு தயாராக வேண்டியதுதான்.

எதிர்காலம் இன்னும் நிறைய பொருந்தொற்றுக்களை கொண்டுவரும். காலநிலை நெருக்கடியால் உருவாகப்போகும் பிரச்சினைகள் இதைவிடப் பெரியவையாக இருக்கப் போகின்றன.

பிரெஞ்சு தத்துவவாதி புருனோ லட்டோர், ‘இந்த வைரஸ் மற்றும் அதற்கான எதிர்வினைகள் ஒரு பெரும் காலநிலை நெருக்கடிக்கான ஒத்திகைதானோ’ என்று கேட்கிறார். மேலும், “காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களும் முடிவுகளும், நம்மிடையே தற்போதுள்ள கொரோனோ வைரஸைக் காட்டிலும், பல மடங்கு அதிக சிக்கல் வாய்ந்தவை மற்றும் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை” என்கிறார் அவர்.

இந்த வைரஸால் ஏற்பட்டுள்ள தற்காலிகமான உடனடிப் பிரச்சினையில்தான் நாம் மிக அதிகமாக கவனம் செலுத்துகிறோம், ஆழமான, மிகவும் ஆபத்தான நீண்டகால படிப்படியான பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்தவே இல்லை. நம்முடைய உள்ளுறையும் சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சினைகளை மீட்டெடுக்க தாமதமாகும் நிலையில், அடுத்த சுற்று உலகளாவிய நெருக்கடி நம்மைத் தாக்கும் முன்னர் அவற்றை சரிசெய்தாக வேண்டும்.

பின்வரும் நம்முடைய உள்ளுறையும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே இதற்கான தீர்வாக இருக்க முடியும்: மோசமான ஆட்சி, சீரழிந்துபோன ஜனநாயக உரிமைகள், ஊழல், பாப்புலிசம் மற்றும் அதன் திசைதிருப்பல்கள், மூலவள வெட்டியெடுப்பை சார்ந்த பொருளாதாரம் மற்றும் உழைப்புச் சுரண்டல், நுகர்வோர் மற்றும் சில்லறை வர்த்தகம் சார்ந்த பொருளாதாரம், மோசமான உள்கட்டமைப்பு, நம்பிக்கையின்மை காரணமாக முதலீடு வெளியேற்றம், சரிசெய்தற்கான நம்முடைய திறனின்மையில் உள்ள நிராதரவான உணர்வு.

“உங்களுக்கு பிரக்ஞையற்ற பிரக்ஞை இல்லாவிட்டால், அதுவே உங்களுடைய வாழ்க்கையை இயக்குவிக்கும், அதைத்தான் நீங்கள் விதி என்பீர்கள்” – சி.ஜி.யுங்

  • அவ்னீத் சிங்

தமிழில்: மர்மயோகி

அவ்னீத் சிங்

அவ்னீத் சிங். Voice of Mankind அமைப்பு நிறுவனர். இந்த அமைப்பு நம்மை பாதிக்கின்ற பிரச்சினைகள் குறித்த மக்களின் அபிப்பிராயத்தில் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது. https://voiceofmankind.org/