கேரளா தங்கக் கடத்தல் வழக்கு- விபரமும்-விசாரனையும்

HOME

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும், வைரஸ் தாக்கியவர்களை குணப்படுத்தியதிலும் கேரளா அரசு சிறப்பாக செயல்பட்டது மேலும், கொரோனா பொது முடக்கத்தில் இருந்து, மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டுக்கொடுத்ததில், இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் கேரளா. இத்தகைய சூழ்நிலையில், பினராய் விஜயன் தலைமையில் கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஒரு சோதனையாக வந்தது, தங்கக் கடத்தல் விவகாரம். இந்த சந்தற்பத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியான மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றத்துடித்தது பிஜேபி.

ஆனால், இந்த தங்கக் கடத்தல் வழக்கு விசாரனைப் போக்கில் பிஜேபி சிக்கிக் கொண்டது. வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரனைச் செய்கிறது. முதல்வர் பினராய் விஜயன் விசாரனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.

நடந்தது என்ன?

கடந்த 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, டெல்லியில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திற்கு ஒரு அரசுமுறை பார்சல், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக அரசுமுறை பார்சல்கள் தீவிர பிசோதனை எதுவும் செய்யப்படுவதில்லை. இம்முறை சுங்க இலாக்கா அலுவலர்களின் மேம்போக்கான பரிசோதனையின்போது, அந்த பார்சலின் தகவல்களில் முரண்பாடு இருப்பது கவனிக்கப்பட்டது. பர்சலின் எடை 30 கிலோகிராம் என அதில் குறிப்படப்பட்டிருந்தது. ஆனால், பார்சலின் எடை 80 கிலோகிராம் இருந்தது. உடனே டெல்லியில் உள்ள மேலதிகாரிகளிடம் அனுமதிப் பெற்று, பார்சலை பிரித்துப் பார்த்தப்போது, அதில் 29.240 கிலோகிராம் இருந்தது. அன்றாடத் தேவைப் பொருட்கள்  என்று குறிப்பிட்டுவிட்டு, தங்கம் கடத்தப்பட்டிருந்தது. சரித் என்பவர் இந்த பார்சலை வாங்கிச் செல்ல, பார்சலுக்கு உரியவரின் அனுமதி கடிதத்துடன், சுங்க இலாக்காவை அனுகியபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரனையில், சுவப்னா சுரேஷ் மற்றும் சந்திப் நாயர் ஆகிய இருவரும் தங்கக் கடத்தல் தொடர்புடையவர்கள் என்று தெரிந்தது.

சுவப்னா சுரேஷ் கேரளா அரசின் தகவல் தொழில்நூட்ப பிரிவில் ஒரு அதிகாரி. முதல்வர் பினராய் விஜயனின் நேர்முக உதவியாளராக இருந்த சிவசங்கரின் சிபாரிசில் சுவப்னா சுரேஷ் பணி நியமனம் பெற்றுள்ளார். இதனால் முதல்வருக்கும் இந்த தங்க கடத்தலில் தொடர்பு உண்டு என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டன. தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்தை ஊடகங்கள்,  முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்ட விழாக்களில் அவர்களுடன் சுவப்னா சுரேஷ் கலந்துகொண்டது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, இடதுமுன்னணி அரசுடன் சுவப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்று நிருபிக்க முயன்றனர்.

சரித் கைது

 இந்த சிக்கலான சூழ்நிலையை மிக சாமர்த்தியமாக எதிர்கொண்டார் பினராய் விஜயன். , சில தவறான செய்திகள் மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு, இப்படி உண்மைக்கு புறம்பான புகைப்படங்களையும் செய்திகளையும் வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்தக் குற்றச்சாட்டில் தொடர்பு படுத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரனை தகவல் தொடர்புத் துறை செயலாளர் மற்றும் தனது தனிச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துவிட்டார். மேலும், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளிது, தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட மாயதோற்றத்தை உடைத்தெரிந்தார்.

சுவப்னா சுரேஷ் கேரள அரசின் துறை எதிலும் பணி புரியவில்லை. கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் துணை நிறுவனம், கேரளா ஸ்டேட் இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட். அதற்க ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பணிகள் செய்வது விஷன் டெக் தனியார் நிறுவனம். இந்த விஷன் டெக்கில்தான் சுவப்னா சுரேஷ் வேலை செய்கிறார். கேரள அரசு நேரடியாக சுவப்னா சுரேஷுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்குவதில்லை.

விஷன் டெக் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தில் செயலாளர்களில் ஒருவராக சுவப்னா வேலை செய்துள்ளார். அப்போது இந்தியாவில் இருந்து வரும் அரசுமுறை விருந்தினர்களை வரவேற்று தங்குமிடம், உணவு, போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை கவனித்துள்ளதாகவும் அதில் கேரள முதல்வர், சபாநாயகர், கேரள எதிர்க்கட்சித்தலைவர், மத்திய அரசுப் பிரதிநிதிகள் என பலருக்கும் தூதரகம் சார்பில் இவ்வாறான பணிகளை நீண்டகாலம் ஒருங்கிணைத்துள்ளதாகவும் சுவப்னாவே நியூஸ் 24 என்னும் செய்தித் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறினார். அந்த வகையில் பல நிகழ்ச்சிகளிலும் பல முக்கிய பிரமுகர்களுடனும் தான் பங்கேற்றுள்ளதாகவும் கூறினார்.

சுவப்னா- சிவசங்கர்-சரித்

-இதற்கு அடுத்ததாக அவர் பணியாற்றிய இடம் அதைவிட ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகும். ஐக்கிய அரபு அமீரகத் தூதரகப் பணியில் இருந்த போது சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக சுவப்னா அந்த வேலையிலிருந்து தூதரக நிர்வாகத்தால் நீக்கப்படுகிறார். ஆனால், அவர் தனது தூதரகப் பணியின் வாயிலாக கிடைத்த சில நட்பு வட்டத்தின் மூலம் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான, ஏர் இந்தியா சாட்ஸ் என்ற நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் பணியாளராக நியமனம் பெறுகிறார். ஐக்கிய அரபு நாட்டின் தூதரகப் பணி மற்றும் ஏர் இந்தியா சாட்ஸ் போன்ற பணிகளின் முன்னனுபவச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி விஷன் டெக் என்ற உள்ளூர் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்குவது அவ்வளவு ஒன்றும் கடினமான விஷயமல்ல என்பது யாருக்கும் எளிதில் விளங்கும்

தங்கக் கடத்தல் வழக்கில் சுவப்னாவுடன் சேர்ந்து சிக்கியுள்ள  சந்தீப் நாயர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேந்தவர் என்பது அடுத்த குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுக்கு சந்தீபின் தாயாரே, இல்லை என பதிலளித்து விட்டார். ஆனால் அதையும் திரித்து செய்தியாக்கிய, மலையால மனோரமா போன்ற தொலைக்காட்சிகள் பிறகு வருத்தம் தெரிவித்துத் திருத்திக்கொண்டன. சந்தீபுக்கு  சங்க பரிவாருடன் இருக்கும் தொடர்பு அவரது முகநூல் பக்கம் மூலம் நிருபிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பாஜக கேரள மாநிலத் தலைவர் கும்மனம் இராஜசேகரனுடன் கட்டிப்பிடித்து நின்றவாறு எடுத்த புகைப்படம், சில கருத்துப் பதிவுகள் போன்றவை சந்தீப் தீவிர பாஜக, சங் பரிவார் ஆதரவாளர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொடுத்துவிட்டன.

.அதோடு சரித் சுங்க இலாகாவில் மாட்டிக்கொண்ட செய்தியறிந்தவுடன் தொலைபேசியில் சுங்க இலாகாவைத் தொடர்பு கொண்ட பாஜக தொழிற்சங்கத் தலைவர் ஹரிராஜ், இந்த குற்ற சம்பவத்தில் சங் பரிவாரத்தின் தொடர்பை நிருபிக்கும் அடுத்த ஆதாரமாக ஹரிராஜ் நிற்கிறார். இந்த வழக்கு விசாரணையின் பகுதியாக, சுங்க இலகா அவரது வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறது.

ஹரிராஜ்

ஹரிராஜ் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனை சேவைகளைச் செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான BMS சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆவார். அதன் மூலம், தனக்கு இருக்கும் சுங்க இலாகா அதிகாரிகளின் தொடர்பைப் பயன்படுத்தி சரித்தை விடுவிக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாகிறது. இந்த சரித், ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தில் சுவப்னாவுடன் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குடனான, ஹரிராஜின் தொடர்பு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரனை இந்த வாழக்குடன் தொடர்பு படுத்தும் விதத்தில், அவரை நோக்கி விரலை நீட்டுகிறது. ஹரிராஜின் முகநூல் பக்கம் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஹரிராஜ் இறுதியாக பகிர்ந்த பதிவு எதுவெனில், “இந்த வழக்கு விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்” என்று முகநூலில் முரளீதரன் பதிவிட்ட பதிவாகும். அதோடு, தீவிர சங் பரிவார் ஆதரவுப் பதிவுகள் பலவும் ஹரிராஜின் முகநூல் பக்கத்தில் காணக்கிடைக்கின்றன. ஹரிராஜ் அமைச்சர் முரளீதரனின் தீவிர ஆதரவாளர் என்ற தகவலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து மத்திய அரசுத்துறைகளில் சுவப்னாவுக்கு உள்ள செல்வாக்கு எப்படிப் பட்டது என்று, இப்போது நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.

வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன்

அதுபோல், எஸ். கே. பி . இரமேஷ் என்ற திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் , கே. சுரேந்திரன் என்பவர் மாநிலத் தலைவராக பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே கட்சியில் வேகமாக உயர் பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டுளார். அவருக்கும் சந்தீப் நாயருக்கும் நெருங்கிய நட்பு உள்ளது நிருபிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து பாஜக மாநிலத் தலைவருக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சுவப்னா தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கறிஞர் மூலமாக மனு அளித்துள்ளார். அந்த வழக்கறிஞர் யாரெனில், ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான “இந்து எக்னாமிக் பாரம்” என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் இந்த முன்ஜாமீன் மனுவை சுவப்னாவுக்காக சமர்ப்பிக்க, எவ்வாறு, யாரால் அமர்த்தப்பட்டார் என்பதும் அடுத்த கேள்வியாக எழுந்து சங்க பரிவார் அமைப்புகளுக்கு இந்த வழக்குடனான நெருக்கத்தை நிருபிக்கும் ஆதாரங்களுக்கு வலுவூட்டுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல்வரோ சபாநாயகரோ ஏனைய இடதுமுன்னணித் தலைவர்களோ சுவப்னாவை எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்ததில்லை. வேறு யாராவது ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், குறிப்பாக ஐக்கிய அரபு நாட்டு தூதரக நிகழ்ச்சியில் தங்களுடன் பங்கேற்பவர்களைப் தாங்கள் எப்படி அறிய முடியும் என்பது தான் இடது முன்னணித் தலைவர்கள் எழுப்பும் கேள்வி.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் ரமேஷ்சென்னிதல நடத்திய இப்தார் விருந்தில் சுவப்னா விருந்தினராக சென்னிதலாவின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார் என்ற சம்பவமும் நடந்துள்ளது. இருந்தபோதிலும் இரமேஷ் சென்னித்தல, முதல்வருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுவப்னாவின் புகைப்படங்களை வைத்து, இந்த சம்பவத்தில் முதல்வரையும் மற்ற இடது முன்னணித் தலைவர்களையும் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டி வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத் தூதரகப் பணியில் இருக்கும் போது கேரளத்தில் இருந்து பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் என்ற முறையில் நிறைய தடவை கேரள தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கும் பலமுறை வந்து சென்றதாகவும் சுவப்னா கூறுகிறார். இன்னொரு நாட்டு தூதரகப் பணியாளரான ஒருவர் ஒரு முதல்வர் அலுவலகத்துக்கோ தலைமைச் செயலகத்திற்கோ அரசுமுறைப் பணிக்காக, முறையான அனுமதி பெற்று வரும் போது, அவரை எப்படி கேரள அரசு தடுக்க முடியும்?

எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் ரமேஷ்சென்னிதல

கேரளாவில் உள்ள ஆலப்புழை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை உறுப்பினராக இருந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தில் சுவப்னாவுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்த தகவல் காங்கிரஸ் கட்சியில் விவாதமாகியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான சித்திக் என்பவர் தங்கக் கடத்தல் குற்றவாளியுடன் இணைந்து துபாய் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது எடுத்துக்கொண்ட படமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவப்னா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் கேரள போலீஸ் தோல்வியடைந்துவிட்டது என்றும், அவர் பெங்களூரு தப்பிச் செல்ல கேரள போலீஸ் உதவியது என்றும் புதிய குற்றச்சாட்டை கிளப்பியது. உண்மை என்னவெனில் துவக்கத்தில் இருந்தே இந்த வழக்கை சுங்க இலாகா தான் விசாரித்து வந்தது. அதன் பிறகு தேசிய புலனாய்வுத்துறை தான் விசாரித்து வருகிறது. ஆனால் கொரோனா கட்டுபாட்டுக்காலத்தில் குற்றவாளிகள் கேரளாவிலிருந்து தப்பித்து பெங்களூரு சென்றது கேரள போலீசின் தோல்வி என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
தற்போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், கேரளத்தில் இருந்து வெளியேற கர்நாடக மாநில அரசின் அனுமதிச்சீட்டு இருந்தாலே போதும்.

குற்றவாளிகள் கர்நாடகாவுக்குத் தப்பிச் செல்லவும், கர்நாடகாவில் தங்குவதற்கும் “இந்து எக்னாமிக் பாரம்” என்ற சங் பரிவார் அமைப்பு தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள சங்க பரிவார் அமைப்புகளிடம் பேசி ஏற்பாடு செய்தது என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
குற்றவாளிகள், தொலைபேசி வாயிலாக அழைத்ததால் கிடைத்த தொலைபேசி சமிக்ஞை தான் அவர்களின் இருப்பிடத்தைக் காண்பித்துக் கொடுத்துள்ளது.

இவ்வளவு நடந்தும் கூட, ஊடகங்கள், பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு இந்த வழக்குடனான தொடர்புகளைக் கேள்வி கேட்க தயங்குகின்றன.

இதுவரை இதே முறையில் மட்டும் 14முறை தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது என்றும், கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு முறைகளில் வெவ்வேறு விமானநிலையங்கள் மூலம் நாட்டுக்குள் 2000கிலோகிராம் தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகம் தங்களுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டது..

இப்போது சிக்கியுள்ள குற்றவாளிகள், இந்த வழக்கின் சங்கிலித்தொடரில், இந்த முனை தொட்டு அந்த முனை வரை உள்ள தொடர்புகளில், இடையில் உள்ள சில கண்ணிகளே ஆவர். சில பிரமாண்ட நகைக்கடை உரிமையாளர்கள் இந்த குற்றத்தின் பின்னணியில் இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. சுங்க வரித்துறையும் பிரமாண்ட நகைக்கடைகளை நோக்கி தனது விசாரனையை நகர்த்திச் செல்கிறது.

ஆனால் இப்போதும் கூட ஊடகங்களும் எதிர்கட்சிகளும் விவாதிக்கத் தயங்கும் ஒரு விஷயம் இந்த தங்கம் யாரால் அனுப்பப்பட்டது. யாருக்காக அனுப்பப்பட்டது என்பதே. பாஜக தலைவர்கள் அவசர அவசரமாக “இது எந்த நகைக்கடை நிறுவனங்களுக்காகவும் கடத்திக் கொண்டு வரப்படவில்லை என்று தெரிகிறது ” என்று ஒரு விஷயத்தை கூறியுள்ளார்கள்.

அதற்கு ஏற்ப, தேசிய புலனாய்பு அமைப்பும், இந்த தங்கக் கடத்தல் வழக்கை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உடனே, தீவிரவாத செயல்களுக்காக இந்த கடத்தால் நடத்திருக்குமா? என்ற கோணத்தில் விசாரனை நடத்துகிறது.

நடப்பதை கவனித்திருப்போம். உண்மை வெளிவரும் வரைக் காத்திருப்போம்.

                                                                         -கொம்புக்காரன்