தேசத்துரோக சட்டம்: நிரந்தர எமர்ஜென்சி சட்டமா?

HOME

கோவிட்-19 நோய்ப்பரவலை தவறாக கையாண்ட அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னணி பத்திரிக்கையாளரான திரு.வினோத் துவாவுக்கு, கடந்த ஜூலை 7 அன்று உச்சநீதிமன்றம், கைது நடவடிக்கையில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.

தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்-ஐ தள்ளுபடி செய்யக் கோரும் திரு.துவாவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதியான உதய் உமேஷ் லலித், நடந்துவரும் விசாரணை குறித்து ஒரு வாரத்திற்குள் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஹிமாச்சல பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதில், அரசாங்கத்திற்கு ஏற்புடையதாக அல்லாத கண்ணோட்டத்துடன் செய்தி வெளியிட்டமைக்காக மட்டுமே அந்த மூத்த பத்திரிக்கையாளர் துன்புறுத்தப்படுகிறாரா என்பதை உறுதிப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

லாக்டவுனுக்கு பிந்தைய காலத்தில், கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருவதை மட்டும் நாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை, நம்முடைய ஜனநாயகத்தின் நான்காவது தூணை பலவீனப்படுத்தி குழிதோண்டிப் புதைக்கின்ற மற்றொரு விஷயம் மேல்பரப்பிற்கு வந்துள்ளதையும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகிய பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை என்பது, பழமையான காலனிய சட்டத்தைப் பயன்படுத்தி நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம், 1860 (ஐபிசி), சட்டப்பிரிவு 124A குறிப்பிடுகின்ற தேசத்துரோக சட்டமானது, சுதந்திரம் பெற்ற 73 வருடங்களுக்குப் பின்னரும் அப்படியே இருந்துகொண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊடக சுதந்திரத்தை செல்லரித்துக் கொண்டிருக்கிறது. ஐபிசி சட்டப்பிரிவு 124A என்பது, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய வெகுமக்களிடையே வளர்ந்துவரும்  கொந்தளிப்பை கட்டுக்குள் வைப்பதற்காக, காலனிய ஆட்சிக்காலத்தின்போது சேர்க்கப்பட்டதாகும். அப்போதில் இருந்தே இந்த சட்டத்தில் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, அவையும்கூட மாற்றுக் கருத்தாளர்களின் குரலை மிகக் கடுமையாக நெருக்குவதற்காகத்தான் மேற்கொள்ளப்பட்டன.  

ஐபிசி சட்டப்பிரிவு 124A இன்றுள்ள வடிவத்தில், பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது இந்திய சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தை நோக்கி பேச்சு மூலமான அல்லது எழுத்துப்பூர்வமான வார்த்தைகளாலோ, அல்லது குறியீடுகளாலோ, அல்லது புலப்படக்கூடிய குறிப்பீடுகளாலோ, அல்லது வேறுவகையிலோ, வெறுப்பு அல்லது கண்டனத்தை ஏற்படுத்துகின்ற அல்லது ஏற்படுத்த முயற்சி செய்கின்ற, அல்லது அதிருப்தியை தூண்டிவிடுகின்ற அல்லது தூண்டுவதற்கு முயற்சிக்கின்ற யாராக இருந்தாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்படக்கூடிய வாழ்நாள் சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்படக்கூடிய, அல்லது அபராதத்துடன் கூடிய மூன்று வருடங்களுக்கான சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தேசத்துரோகம் ஒரு பிணையில் வெளிவர முடியாத குற்றம் என்பதுடன் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை, அபராதத் தொகையுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடியதாகும். இந்த சட்டம் ஆளும் கட்சிகளால் தங்களுக்கு ஏற்பில்லாத கண்ணோட்டங்கள், மாற்றுக் கருத்துக்கள், மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும்/அல்லது கொள்கைகளை கண்டிப்பவர்களை ஒடுக்குவதற்காக தொடர்ந்து தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற வழக்குகளில் தண்டனை அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றபோதிலும், மாற்றுக்கருத்து கொண்டவர்களின் வாயை அடைக்கும் வகையில் துன்புறுத்தவும் மிரட்டுவதற்குமான திறன்மிக்க கருவியாகவே இது பயன்படுத்தப்படுகிறது.  

முன்பிருந்த அரசுகளைப் போலவே இப்போதுள்ள அரசாங்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. சமீபத்தில்தான், உள்துறை விவகாரங்கள் அமைச்சரான திரு.நித்யானந்த ராயிடம் இந்தக் காலனிய காலத்து சட்டம் ரத்து செய்யப்படுமா என்று கேட்கப்பட்டபோது, தேசத்துரோக குற்றத்திற்கு உரிய, ஐபிசி-யின் கீழே வரும் இந்தப் பிரிவை நீக்குவதற்கு எந்த முன்மொழிவும் இல்லை. தேச-விரோதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாத சக்திகளுடன் திறன்மிக்க வகையில் போராடுவதற்கு இந்த சட்டத்தை தக்க வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது, என அவர் ராஜ்ய சபாவில் பேசினார்.

அரசாங்கத்தின் செயல்பாடின்மைகள் மற்றும் போதாமைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை நீதித்துறையே வலியுறுத்தி வருகின்றபோதிலும் இது இப்படியேத்தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய உச்சநீதிமன்றம் கேதர் நாத் சிங் எதிராக பிஹார் அரசாங்கம் (1962) வழக்கின் மிக முக்கியமான தீர்ப்பில், “ . . . ஒரு குடிமகன் சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிடாத வரையிலோ அல்லது பொது ஒழுங்கை குலைக்காத வரையிலோ அரசாங்கத்தையும், அதனுடைய நடவடிக்கைகளையும் பற்றி விமர்சனமாகவோ அல்லது கருத்தாகவோ தான் விரும்பியதை சொல்வதற்கான அல்லது எழுதுவதற்கான உரிமை குடிமகனுக்கு இருக்கிறது, என்று கூறியிருக்கிறது.

தேசத்துரோகம் குறித்த இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல, இது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வைக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி 1922-இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னர், உள்ளூர் பத்திரிக்கையில் வெளிவந்த அவருடைய கட்டுரையில் நான் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டப்பிரிவு 124A என்பதுதான், ஒரு குடிமகனின் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் இளவரசனாக இருக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இந்த அரக்கத்தனமான சட்டத்தை “அருவருப்பானது” மற்றும் மிகவும் ஆட்சேபத்திற்குரியது என்று குறிப்பிட்டதுடன் இதை எவ்வளவு சீக்கிரம் அகற்றுகிறோமோ அவ்வளவு நல்லது என்றும் கருதினார்.

துரதிஷ்டவசமாக, சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஆளும் கட்சிகள் மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்கும் ஆயுதமாக இந்த தேசத்துரோக சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் இதை நீக்குவதில் இந்தியா தோற்றுப்போயுள்ளது. இந்த தேசத்துரோக சட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பயன்படுத்தப்படுவதை இந்தியா சமீபத்தில்தான்  பார்த்து வருகிறது. லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில்தான் அரசாங்கத்தின் தோல்வியையும், செயல்பாடின்மையையும் கேள்வி கேட்கின்ற குரல்களை நசுக்க இந்த சட்டம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

திரும்பத்திரும்ப நேர்மையற்ற முறையில் இந்த தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவது ஒரு அத்தியாவசிய விவாதத்தை மறுபடியும் தொடங்கி வைத்திருக்கிறது; இந்த தேசத்துரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா அல்லது மாற்றுக் கருத்தாளர்களின் குரல் ஆளும் அரசாங்கத்தின் கருணை எதிர்பார்த்து விடப்பட வேண்டுமா என்பதுதான் அது. முரண்பாடாக, நம்முடைய காலனியத் தந்தையரான பிரிட்டிஷ் அரசாங்கமே, பிரிட்டன் சட்ட ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளின்படி தங்களுடைய இந்த தேசத்துரோக சட்டத்தை 2010-ஆம் ஆண்டிலேயே நீக்கிவிட்டது. ஆனபோதும், வேதனைமிகுந்த இந்த ஒடுக்கமுறை சட்டத்தின் காலனிய அழுக்குமூட்டையை இந்தியா தன்னுடைய குடிமக்கள் மீது இன்னமும் சுமத்தியே வைத்திருக்கிறது. துன்புறுத்தலுக்கு உரிய இந்தக் கருவியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழியை இந்தியா கண்டுபிடிக்காதவரை, அதனுடைய குடிமக்களின் அடிப்படை உரிமை என்பது ஒரு நிரந்தர-எமர்ஜென்சி சூழ்நிலையில்தான் இருந்து கொண்டிருக்கும்.

– மனு பஜாஜ்

தமிழில்: மர்மயோகி

(மனு பஜாஜ் – டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்)

நன்றி: newsclick.in