கோல்வால்கரின் மறைக்கப்பட்ட ஆபாசப் பேச்சுக்கள்: அ.மார்க்ஸ்

HOME

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களாக இருந்தவர்களிலேயே ஆகக் கொடூர நபர் கோல்வால்கர்தான் என நான் பலமுறை கூறியுள்ளேன். இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த அவரது கொடூர உரை ஒன்று இன்று அம்பலமாகியுள்ளது.

1960, டிசம்பர் 17 அன்று குஜராத் பல்கலைக் கழகத்தின் “சமூக அறிவியல் பள்ளியில்” உரையாற்ற இவர் அழைக்கப்பட்டிருந்தார். அதில் இந்த சாதி-இன-வருண வெறியனான கோல்வால்கர் எள்ளளவும் கவலைப்படாமல் தனது வருண-சாதி ஆபாசக் கோட்பாட்டை உமிழ்ந்தார். எதிரே உள்ளவர்கள் பச்சை இளம் குருத்துக்களான மாணவர்கள் என்பதற்காகக்கூட அவர் கவலைப்படவில்லை.

இந்திய சமூகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு ஆகப்பெரிய அபத்தமும், அசிங்கமும், ஆபாசமுமான ஒரு வழக்கம் குறித்த, இந்தப் படுகேவலமான உரையை இன்று ஆர்.எஸ். எஸ். கும்பலே வெட்கப்பட்டு மறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

இந்த ஆபாசப் பேச்சை இந்த ஆள் எங்கே பேசியுள்ளார் என்பதைப் பாருங்கள். பச்சை இளம் குருத்துக்களான மாணவர்கள் மத்தியில் பேசப்பட்ட உரை இது.

அந்தப் பேச்சு இதுதான்:

“இப்போது இனக் கலப்புக் கருத்தரிப்பு (Cross-breeding) என்பது மிருகங்கள் மத்தியில்தான் செய்யப்படுகிறது.  நவீன விஞ்ஞானத்தைப் புகழ்பவர்கள்கூட இந்த Cross-breeding கருத்தரிப்பை மனிதர்கள் மத்தியில்  செய்யத் தயங்குகின்றனர். இப்போதுகூட இனக்கலப்புக் குழந்தைகள் பிறந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் அது அறிவியல் சோதனைகள் மூலம் பிறப்பவை அல்ல. அவை வெறும் காம வெறியின் விளைவாகவே நடைபெறுபவை. 

“நமது மூதாதையர்கள் இந்தத் திசையில் மேற்கொண்ட சில சோதனைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்படியான இனக் கலப்பு மூலமாகப் பிள்ளைகளை உற்பத்தி செய்வதன் மூலம் மானுட இனங்களை மேலும் சிறந்தவையாக ஆக்குவது என்பதைக் காலம் காலமாக நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் செயல்படுத்தி வருகின்றனர்.   அதற்காகவே வடக்கில் இருந்த நம்பூதிரி பிராமணர்கள் கேரளாவில் குடியேறினார்கள். அங்கே ஒரு விதி உருவாக்கப்பட்டது. நம்பூதிரிக்குப் பிறந்த மூத்த மகன் கேரளாவில் உள்ள வைஸ்ய அல்லது சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த விதி.”

“இன்னும் துணிச்சலான இன்னொரு விதி ஒன்றும்  அங்கு உருவாக்கப்பட்டது. அது என்ன தெரியுமா? எந்த சாதியைச் சேர்ந்த பெண் ஆனாலும் அவளது முதல் குழந்தைக்கு ஒரு நம்பூதிரிப் பார்ப்பனன்தான் அப்பனாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி. அந்தப் பெண் அதற்குப் பிறகு தன் புருஷனுக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். இது நமது மூதாதையர்கள் செயல்படுத்திய ஒரு சோதனை.” 

“இன்று இந்தச் சோதனையை கள்ள புருஷனுடனான உறவு எனச் சொல்லலாம். ஆனால் அது அப்படி அல்ல. ஏன்னா அது முதல் பிள்ளை பெறுவதற்கு மட்டும்தான். அடுத்த பிள்ளைகளை அவள் சொந்தப் புருஷனுக்குப் பெற்றுக் கொள்ளலாம்.”

இந்த உரையின் ஒரிஜினல் வடிவம் ஆர்.எஸ்.எஸ்சின் 1961, ஜனவரி 2-ம் தேதியிட்ட  ‘ஆர்கனைசர்’ இதழில் 5-ம் பக்கத்தில் வந்துள்ளது. (படத்தில் காண்க):

இது எத்தனை கொடூரமானதும் அயோக்கியத் தனமானதும், வருணசாதி வெறியுடனும் சொல்லப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கொடூரங்களை இப்படி வரிசைப்படுத்தலாம்:

(1) முதலில் கோல்வால்கரின் கூற்றுப்படி இந்திய மக்களை உயர்ந்த, மேலான பிறவிகள் (Superior Race or Breed) எனவும், கீழான பிறவிகள் (Inferior Race) எனவும் இரண்டாகப் பிரிக்கலாம். 

(2) இதில் ஆகக் கொடுமை என்னவென்றால் இந்தக் கீழான பிறவிகளை மேம்படுத்தத் தகுதியானவர்கள், நம்பூதிரி பார்ப்பனன்கள்தானாம். .

(3) ஆணாதிக்கத் திமிர்பிடித்த இந்த கோல்வால்கரின் கொள்கைப்படி தெற்கே உள்ள இந்தத் தாழ்ந்த வருணப் பிறவிகளைத் தரம் உயர்த்த வரும் பொலிகாளைகள் பார்ப்பன நம்பூதிரிகளாக இருந்தால் மட்டும் போதாதாம். அவர்கள் வடக்கே இருந்து வரும் நம்பூதிரிப் பார்ப்பனர்களாகவும் இருக்க வேண்டுமாம்.   ஆக வருண ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல. வடக்கு / தெற்கு ஏற்றத்தாழ்வும் இங்கே முன்வைக்கப்படுகிறது!

கோல்வால்கரின் இன்னொரு கொடூர உரை:

“இன்று நாம் அறிவில்லாமல் வருண அமைப்பை விமர்சிக்கிறோம். ஆனால் இந்த அமைப்பின் ஊடாகத்தான் நாம் எல்லாவற்றையும் உரிமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையை அடக்கி வைக்க முடியும். சமூகத்தில் சிலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். சிலர் உற்பத்தித் துறையிலும் இன்னும் சிலர் சொத்து சேர்ப்பதிலும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் உழைக்கும் திறன் பெற்றுள்ளார்கள். இப்படியாக சமூகம் நான்கு பிரிவுகளாக இருப்பதை நம் மூதாதையர்கள் கண்டார்கள். வருண அமைப்பு என்பது வேறொன்றும் இல்லை. இந்த நான்கு பிரிவுகளையும் ஒருங்கிணைப்பதுதான் வருணம். அதன்மூலம் தனி நபர்களை இப்படியான அவர்களின் திறனுக்கேற்றவாறு ஆகச் சிறந்த வகையில் சமூகத்திற்குப் பயன்படச் செய்வதுதான் அது. மற்றும் ஒருவனுக்கு எந்தத் தொழிலில் தகுதியும் திறனும் இருக்கிறதோ அதற்கு அவனைப்  பாரம்பரியமாக வளர்த்தெடுப்பதுதான். இப்படியான அமைப்பு தொடர்ந்தால் ஒவ்வொரு நபருக்கும் வாழ்வாதாரத்திற்கான ஒரு பணி பிறவியிலேயே ஒதுக்கப்பட்டுவிடும்.” (Organizer, January 2, 1961, pp 5 & 16)

கோல்வால்கரின் இந்தப் பேச்சைவிடக் கொடுமையான, திமிர்பிடித்த, சாதீய ஆணாதிக்கப் பேச்சு என்ன இருக்க முடியும்? எல்லோரும் எல்லாவற்றையும் உரிமை ஆக்கிக்கொள்ள முடியாதாம். அவரவர் தகுதிக்கேற்ற பிறப்பு, அந்தப் பிறப்புக்கேற்ற தொழில் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். இதையெல்லாம் அவர் ஏதோ பாமர மக்களிடம் பேசியதாக நினைக்க வேண்டாம். கற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் மற்றும் கற்றறிந்த பேராசிரியர்கள் நிரம்பிய குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிய உரை இது. அந்தக் கல்வியகத்தின் இயக்குநர் பி.ஆர்.ஷெனாய் என்பவர்தான் கோல்வால்கரை வரவேற்றுப் பேசியுள்ளார் என்பதை இந்தச் செய்திப் பதிவில் காண்கிறோம். இந்த ஆக ஆபாசமும் அபத்தமும் நிறைந்த பேச்சுக்கு அன்று எந்த எதிர்ப்பும் இல்லை. இப்படியான வருண-சாதிவெறிப் பேச்சுக்கு அங்கு அப்போது ஒரு ஏற்பு இருந்தது என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டியது. 

சற்று யோசித்துப் பாருங்கள் 1960-களில் இப்படியான ஒரு உரையைத் தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எவனும் பேசி இருக்க முடியுமா? 

கோல்வால்கர் குஜராத்தில் பேசிய உரை இது. அடுத்த நாற்பது ஆண்டுகளில் அங்குதான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அரசின் கண்களுக்கு முன்னால் அதன் ஒப்புதலுடன் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். எரித்துக் கொல்லப்பட்டார்கள். 

அந்தக் காலகட்டத்தில் அது தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்றேன். ஏன் சாத்தியமில்லாமல் போனது? கால்டுவெல் காலம் தொடங்கி இங்கு உருவான திராவிடக் கோட்பாடு, தென்னிந்தியா என அடையாளப்படுத்தி எழுந்த நல உரிமை இயக்கங்கள், தந்தை பெரியார் என இங்கு எழுந்த ஒரு விடிவெள்ளி என, இங்கு வீசிய அறிவொளி இதன் பின்னணியாக இருந்ததை நாம் எப்படிப் புறக்கணித்துவிட முடியும்.

இன்று கோல்வால்கரின் இந்த உரையை நம் கேரள நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். அந்தக் கேரளத்தை எடுத்துக்காட்டாக வைத்துத்தான் அன்று கோல்வால்கர் இந்த இழிவுப் பேச்சைப் பேசியுள்ளார். கேரளா இன்று, இந்தத் தேதியில் குஜராத் மற்றும் ஒரிசாவுக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில் ஆர்.எஸ்.எஸ்.இன் ஷாகாக்ககள் நடக்கும் ஒரு மாநிலம். 

பெரியார் மண் என்றெல்லாம் நாம் பெருமைகொள்ளும் தமிழகத்தில் இன்றென்ன நடக்கிறது?

கடந்த இரண்டு மாதங்களாக ‘துக்ளக்’ இதழிலும், ‘தினமலம்’ இதழிலும் மீண்டும் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற கருத்துக்கள் தீவிரமாக எழுதப்படுகின்றன. இங்கு தமிழகத்தில் ஒரு மசுரு எதிர்ப்பையும் காணோம். ஏகப்பட்ட வெட்டிப் பேச்சுக்கள் பேசப்படும் முகநூலிலும் இதுகுறித்து ஒன்றையும் காணோம். இல்லையா?

ஆனால் இன்று “கருப்பர் கூட்டம்” எனும் ஒரு யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்திற்குப் பொழிப்புரை சொன்னதற்காக இருவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் அதைப் பேசியிருக்க வேண்டியதில்லை என நமது சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பெரிய அளவில் பதியப்படுகின்றன. 

நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம்? இது பெரியார் நாடு என்றெல்லாம் சொல்ல நமக்கு இனி தகுதி உள்ளதா?

கோல்வால்கரின் உரைகளை  2004-ஆம் ஆண்டில் Shri Guruji Samagr எனும் தலைப்பில் 12 தொகுதிகளாக ஆர்.எஸ்.எஸ் வெளியிட்டது. ஆனால்   இப்போது நாம் பேசிக் கொண்டுள்ள இந்தப் பகுதி மட்டும் அதில் நீக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் அவர்களுக்கும்கூட அப்போது ஒரு தயக்கம் இருந்துள்ளதை நாம் புரிந்துகொள்கிறோம். ஒருவேளை ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டில் (2025) இந்த நூல் மறு வெளியீடு செய்யப்பட்டால் அப்போதும் அவர்கள் இந்தப் பகுதியை நீக்குவார்களா இல்லை பெருமிதத்துடன் அதையும் சேர்த்து வெளியிடுவார்களா?

சொல்லுங்கள்.