தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைப்பதில்தான் பிரதமர் கவனம் செலுத்துகிறார்: ராகுல் காந்தி

HOME

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் பிரதமர் தன்னுடைய சொந்த பிம்பத்தை கட்டமைப்பதில் மட்டுமே 100% கவனம் செலுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

“ஒரே ஒரு மனிதருடைய பிம்பம் என்பது தேசத்தின் தொலைநோக்கு பார்வைக்கு மாற்றாகாது. இந்தியாவின் கைப்பற்றப்பட்ட ஊடக நிறுவனங்கள் எல்லாமே இந்த வேலையைச் செய்வதில்தான் மும்முரமாக இருக்கின்றன,” என ராகுல் டிவீட் செய்திருக்கிறார்.

சீனா உடனான சச்சரவை இந்தியா கையாளும் விதம் குறித்தும் ராகுல் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

“நீங்கள் உளவியல்ரீதியாக, பலத்தின் தகுதியை வைத்தே சீனாவைக் கையாள வேண்டும். அப்படி பலத்தின் தகுதியை வைத்து நீங்கள் கையாண்டால்தான் அவர்களை சமாளிக்க முடியும், உங்களுக்க வேண்டியதைப் பெற முடியும், உண்மையில் அப்படி மட்டும்தான் செய்யவும் முடியும். ஆனால் அவர்கள் நம்முடைய பலவீனத்தை உணர்ந்துகொண்டால் அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது.”

 “தொலைநோக்குப் பார்வை இல்லாமல் நீங்கள் சீனாவை கையாள முடியாது என்பதுதான் முதல் விஷயமே. அப்படிச் சொல்வதன் மூலம் நான் தேசத்தின் கண்ணோட்டத்தைக் குறிப்பிடவில்லை. நான் சர்வதேச கண்ணோட்டத்தை சொல்கிறேன். ஒரே சாலை [Belt and road – 2013-இல் சீன அரசாங்கம் முன்னெடுத்த திட்டம். இது பண்டைக்கால பட்டு பாதையைப்* (Silk Route) போன்றதுதான்.] என்பது இந்த கிரகத்தின் இயல்பையே மாற்றுவதற்கான முயற்சியாகும்.”

“இந்தியாவிற்கு உலகளாவிய கண்ணோட்டம் வேண்டும். இந்தியா என்பதே தற்போது ஒரு கருத்தாக்கமாக உள்ளது. அது இன்னமும் ஒரு உலகளாவிய கருத்தாக்கம் ஆக வேண்டியிருக்கிறது. அந்த விஷயம்தான் இந்தியாவைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கும். ஆம், நமக்கு இந்த எல்லைப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது, அதை நாம் தீர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நாம் நம்முடைய அனுகுமுறையையும், நாம் சிந்திக்கும் முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தப் புள்ளியில்தான் அந்த சாலை பிரிந்து செல்கிறது. நாம் இந்நிலையிலேயே போய்க் கொண்டிருந்தால், இந்நிலையில் மட்டுமே நாம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆகிவிட்டால், நாம் தொடர்பற்றுப் போய்விடுவோம்.”

“அதனால்தான் இதை தீவிரமாக வலியுறுத்துகிறேன். ஏனென்றால், நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு நழுவிப் போய்க்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏன்? ஏனென்றால், நாம் நீண்டகால நோக்கில் சிந்திப்பதில்லை; நாம் பெரிதாக சிந்திக்காததும், நம்முடைய சமநிலையை நாம் தொந்தரவு செய்வதுதான் இதற்கான காரணங்கள். நாம் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். அரசியலைப் பாருங்கள்; நாள் முழுவதும்; நாள் முழுக்க இந்தியர்கள் இந்தியர்களுடனே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நம்மிடம் முன்னோக்கிச் செல்வதற்கான, தெள்ளத்தெளிவான பார்வை இல்லாததே காரணம்.”

மேலும், “பிரதமர் எனக்கு ஒரு மாற்றுக்கட்சித்  தலைவர் என்பது எனக்குத் தெரியும். அவரைக் கேள்வி கேட்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. கேள்வி கேட்பதும், அவருக்கு அழுத்தம் கொடுப்பதும் என்னுடைய பொறுப்பு, அப்போதுதான் அவர் தன்னுடைய வேலையை செய்வார். ஒரு தொலைநோக்குப் பார்வையைத் தர வேண்டியது அவருடைய பொறுப்பு. அது அவரிடம் இல்லை. என்னால் உறுதியாகவும் உத்திரவாதமாகவும் அப்படி ஒன்று இல்லை என சொல்ல முடியும், அதனால்தான் சீனா இன்று நம்முடைய எல்லைக்குள் இருந்து கொண்டிருக்கிறது,” என்றார் ராகுல் காந்தி.

———–

பட்டுப் பாதை

*பட்டுப் பாதைபண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான்(Xi’an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான்(Chang’an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.

பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.