‘உண்மை பேசுவதால் அரசியல் வாழ்க்கை அழிந்தாலும் கவலையில்லை’ – ராகுல் காந்தி

HOME

இந்திய ஊடகங்கள் ஒரே பக்கமாக சாய்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அரசு செய்திகளும், ஆளும் கட்சி செய்திகளும் இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்துவிட்டன. எதிர்க்கட்சிகளின் செய்திகள் ஓரங்கட்டப்படுகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுள்ளது. இருந்தபோதும், அரசின் செயல்பாடுகள் மீது, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் அவசியமானது. அதுதான் ஜனநாயகம். அதை வெளியிடுவதுதான் ஊடக தர்மம்.

ஊடகங்களின் இத்தகைய நேர்மைக் குறைவால் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, தனது உரையாடலை தனிப்பட்ட முறையில் வீடியோவாக வெளியிடுகிறார். அதை செய்தியாக ஒரு மூலையில் வெளியிடும் பத்திரிக்கைகள், அவர் படத்தைக்கூட போடுவதில்லை.

சமீபத்தில் ராகுல் காந்தி ஒரு ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள விடியோவில்:  ‘சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு நீங்கள் எழுப்பும் கேள்விகள் இந்தியாவை பலவீனப்படுத்துவதாக சிலர் கூறுகிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?’ என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதில் கூறும்போது, ‘இந்தியப் பகுதிக்குள் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அந்த உண்மையை மறைத்து, சீன ஆக்கிரமிக்கவில்லை எனப் பொய் சொல்லச் சொன்னால் நான் பொய் சொல்ல மாட்டேன். உண்மையைப் பேசுவதால் என் அரசியல் வாழ்க்கை நாசமானாலும் கவலையில்லை. இந்திய நிலப்பகுதிக்குள் சீனா ஆக்கிரமித்துள்ளதை மறைப்பதும், நமது நிலப்பகுதியை ஆக்கிரமிக்க அனுமதிப்பதும் தேச விரோதமாகும். அதை மக்கள் கவனத்திற்கு கொண்டுவதுவதே தேசபக்தியாகும்,’ என்று தெரிவித்திருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல்

ராகுல் காந்தியின் சமீபத்திய மற்றொரு ட்விட்டர் பதிவு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் பற்றிப் பேசுகிறது. ‘புதிய திவால் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மோடி அரசின் நடவடிக்கைகள், ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தின. இந்நிலையில், வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர, உர்ஜித் படேல் செய்த முயற்சிகள், அவரது பதவியை பறித்துவிட்டது,’ என ஊடகம் ஒன்றில் வெளிவந்த செய்தியை குறிப்பிட்டுள்ளர். மேலும், ‘வங்கி அமைப்பை சுத்தம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள், அவரது பதவியைப் பறித்தன. ஏன்?  ஏனெனில், வங்கிக் கடனை வேண்டுமென்றே கட்டத் தவறியவர்களை, தேடிச்சென்று வசூலிப்பதை பிரதமர் விரும்பவில்லை,’ என்ற விமர்சனத்தையும், அந்த ட்விட்டில் பதிவிட்டிருந்தார்.

ராகுல் காந்தி மிகச் சுருக்கமான விமர்சனங்களை வெளியிட்டாலும்,  அவை கவனிக்கத்தக்கவையாக உள்ளன.

  • கொம்புக்காரன்