அதிமுக-பிஜேபி கூட்டணி தொடருமா ?

HOME

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளதால், அதிமுகவின் இந்த ஆட்சிக்காலம் ஒருவழியாக முடிவிற்கு வரவுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணி தொடருமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

இந்த ஆட்சி, 2016-ல் ஜெயலலிதாவை முதல்வராக முன்னிறுத்தி கிடைத்த வெற்றியில் அமைந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் பல களேபரங்கள், காட்சி மாற்றங்கள். தமிழகமே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில், எம்எல்ஏக்களை கூவத்தூரில் அடைத்துவைத்து,  எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஓபிஎஸ் இந்த ஆட்சி அமைப்பு முயற்சிக்கு எதிராக தர்மயுத்தத்தில் இறங்கினார். சட்டபேரவையில் நடந்த எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர் ஓபிஎஸும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும். இதுவரை பின்னணியில் இருந்து இயங்கிவந்த பிஜேபி, அப்போதுதான் காட்சிக்குள் வந்தது. எடப்பாடிக்கும் ஓபிஎஸுக்கும் சமாதானம் செய்துவைத்து, ஓபிஎஸ்ஸை துணை முதல்வராகவும், அதிமுகவின் அமைப்பாளராகவும் ஆக்கியது பிஜேபி.

எடப்பாடி ஆட்சிக்கு ஏற்பட்ட  நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பிஜேபியின் உதவி அதிமுகவிற்கு தேவைப்பட்டதன் விளைவாக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணி அமைந்தது. அந்த  தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், தேனி ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிப் பெற்றது. மற்ற 38 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. அடுத்து வந்த 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், அதிமுக 13 தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. அந்த வெற்றியிலும் பிஜேபியின் பங்கு குறைவுதான்.

தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக வீசிய அலைதான், கடந்த எம்பி தேர்தலில் அதிமுக-பிஜேபி கூட்டணியின் படுதோல்விக்கு காரணம் என அதிமுகவினரே வெளிப்படையாக பேசிய நிலையில், வேறு வழியின்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, பிஜேபியுடனான கூட்டணியை அதிமுக தொடர்ந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், பிஜேபியுடனான கூட்டணியை தொடர்வதில் அதிமுகவிற்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்தது, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி என்ற பெயரில் இந்தியை திணிப்பது போன்ற திட்டங்கள் அதிமுகவின் நிலைப்பாட்டிற்கே எதிரானவை. இருமொழிக் கொள்கையே தொடரும் என எடப்பாடி ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்நிலையில், மத்திய பிஜேபி அரசு கொண்டுவரும் திட்டங்கள், தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுக்கு எதிரானவையாக உள்ளன. மோடி அரசு கொண்டு வந்திருக்கும் சுற்றுச்சூழல் வரைவு EIA2020 திட்டத்திற்கும் வடமாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில்கூட, மத்திய அரசு தமிழக அரசிற்கு போதுமான அளவு உதவவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியை மோடி அரசு தரவில்லை. ஜிஎஸ்டி பங்குத் தொகைக்கூட நீண்ட இழுத்தடிப்பிற்கு பிறகு ஒரு பகுதி மட்டும் தரப்பட்டுள்ளது.

அதிமுகவிற்கு என்று கொள்கை எதுவும் இல்லை என்றாலும், அது எப்போதும் பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் என்பதாகவே காட்டிக்கொள்ளும். ஆனால் இப்போது, பிஜேபியுடனான கூட்டணியால், சிறுபான்மையினருக்கும், தமிழ் மக்களின் உணர்வுக்கும் எதிரான நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை இந்துத்துவ மயமாக்குவதற்காக, எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பது, பெரியார் சிலையை சேதப்படுத்துவது, திருவள்ளுவர் சிலையை அவமதித்தது போன்ற   ஆர்எஸ்எஸ் செய்யும், பல ரகசிய வேலைகளும் அதிமுகவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, பிஜேபியுடனான கூட்டணியைத் தொடர்வதில் அதிமுக தலைமைக்கு தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் சட்டமன்றத் தேர்தல் எடப்பாடிக்கும், ஓபிஎஸுக்கும் மட்டுமல்ல, அதிமுகவிற்குமே எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் ஒரு தேர்தல்.

எடப்பாடி அரசுக்கு எதிராக, ஓபிஎஸுடன் சேர்ந்து வாக்களித்த 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும், திமுக தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பாதகமான தீர்ப்பு ஏதும் வருமெனில், அது எடப்பாடி ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அத்துடன் அதிமுகவிற்குள்ளும் பல குழப்பங்களை ஏற்படுத்தும். அந்த சூழ்நிலையை சமாளிக்க நிச்சயம் பிஜேபியின் ஆதரவு அதிமுகவிற்கு தேவை. மேலும், கடைசிவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபடியே தேர்தலை சந்திக்க எடப்பாடி விரும்புகிறார். ஆகவே, பிஜேபியின் உறவை முறித்துக்கொள்வது அதிமுகவிற்கு அவ்வளவு எளிதல்ல.

எப்படிப் பார்த்தாலும் அதிமுகவின் நிலை, இருதலைக்கொள்ளி எறும்புதான்.

  -கொம்புக்காரன்