பூமிபூஜையின் நேரம் சரியில்லை – ராமன் ராசி இல்லாதவனா ?

HOME

ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவுக்கு குறித்த நேரம் சரியில்லையாம். இது பிஜேபி, ஆர்எஸ்எஸ் தலைமையிலேயே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இரண்டுவித குழப்பங்கள் நிலவுகிறது ஒன்று. அடிக்கல் நாட்டுவதற்கு குறித்த முகூர்த்த நேரம் தொடர்பானது. காசியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆச்சார்யா கணேஸ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட் என்ற ஜோதிட வல்லுநர் இந்த முகூர்த்த நேரத்தைக் குறித்திருக்கிறார். ஆகஸ்ட் 5-ஆம் தேதி, மதியம் 12.15.15–க்கும்-12.15.47-க்கும் இடையில் உள்ள 32 வினாடிகளில் அடிக்கல் நாட்டப்பட வேண்டுமாம். மோடி இந்த 32 வினாடிக்குள், 40 கிலோ எடையுள்ள, 5 வெள்ளி செங்கற்களை அஸ்திவாரத்தில் வைக்க  வேண்டுமாம்.

ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா
ராமர் கோயில்

இந்த முகூர்த்த நேரம் தொடர்பாக, ஜோதிஷ பீடாதிபதி மற்றும் துவாரகா ஷாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்ச்சை எழுந்துள்ளது. இந்துமத நம்பிக்கையின்படி, சாதுர்மாஸ காலத்தில் எந்த சுபகாரியங்களும் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அதாவது இந்த நான்கு மாதங்களும் விஷ்ணு தூங்கும் காலமாம். அதனால்தான் இந்த முகூர்த்த நேரத்தை அவர்கள் எதிர்க்கிறார்களாம். ஆனாலும் மோடி, விடாப்பிடியாக இந்த நாளை முடிவு செய்திருக்கிறார். இந்துக்களின் நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு மட்டும்தான் போலும்.

மொத்த நாடே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், இந்த அடிக்கல் நாட்டு விழா அவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிஜேபியில் மோடிக்கு இணையான சக்தி வாய்ந்த மனிதர் அமித்ஷா. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி இருக்கும் மாநிலமான, உ.பி-யின் தொழிற்கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி வருண் கொரோனா நோய் பாதித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி இறந்திருக்கிறார். அதே உ.பி.யின் பிஜேபி மாநிலத் தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அயோத்தி அடிக்கல் நாட்டு விழா ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த கோயில் குருக்களுக்கும் கொரோனா பாதித்துள்ளதாம்.  

பாபர் மசூதி இடிப்பிலும், ராமர் கோயில் கட்டுவதிலும், தீவிரமாக இருந்த உமா பாரதி, கொரோனா தொற்று அச்சுறுத்தலின் காரணமாக, விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துவிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ‘இந்த பூமி பூஜையை நடந்தி எத்தனை பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் போகிறீர்கள் மோடி ஜீ?’  என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தயாராகிவிட்டார் மோடி.

இந்த அடிக்கல்நாட்டு விழா தொடர்பாக பிஜேபியின் தலைமை வட்டத்திலேயே பல சுவாரசியமான பேச்சுக்கள் அடிபடுகின்றன. பாபர் மசூதி இடிப்பிலும், ராமர் கோயில் கட்டுவதிலும் தீவிரமாக செயல்பட்டதில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களும், சங்பரிவர் அமைப்புகளைச் சேர்ந்த வேறு சிலரும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் மோடிக்கு விருப்பமில்லையாம். இவர்களைத் தவிர்ப்பதற்காகவே, இந்தக் கொரோனா காலத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்தாராம் மோடி.    

உமா பாரதி
uma barathi

ராமன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 14 ஆண்டுகள் வனவாசம் சென்றதும், அதுவரை அவரது செருப்புதான் ஆட்சிக்கட்டிலில் இருந்தது என்பதும், கடைசியாக அவர் சரயூ நதியில் இறங்கி தற்கொலை செய்துக்கொண்டதும், ராமனை ஒரு ராசி இல்லாதவராக காட்டுகிறதாம். அதனால், பதவியில் இருக்கும் பலரும் அந்த விழாவில் கலந்துக்கொண்டால், தங்கள் பதவிக்கு ஏதும் ஆபத்து வரும் என தயங்குகிறார்களாம். அமித்ஷா கொரோனா தொற்று சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதன் பின்னணி இதுவாகக்கூட இருக்கலாம் என்கிறார்கள். ஆக.5-ம் தேதி மோடியின் ஜாதகத்திற்கு பொருத்தமான நாள் என்பதால், அந்த நாளை மோடி தேர்வு செய்தாராம்.  

சங்பரிவார் அமைப்பினர் அவர்களின் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்காக, ஒரு நிகழ்வுக்கு பல கதைகள் கட்டுவதில் கெட்டிக்காரர்கள்.

modi
advani

1990-ல் பிரதமாராக இருந்த வி.பி.சிங்கின் அரசை பிஜேபி ஆதரித்து வந்தது. அந்த சமயத்தில், இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த மண்டல் கமிஷனின் அறிக்கையை வி.பி.சிங் அரசு ஏற்றுக்கொண்டு, அதன் பரிந்துரைகளை அமல்படுத்தியது. அதன் மூலம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க வழிசெய்தது. இதை விரும்பாத சங்பரிவார் அமைப்புகள், டெல்லில் மாணவர்கள் போராட்டத்தைத் தூண்டிவிட்டன. அதில் ஒரு மாணவர் தீக்குளித்து இறந்துபோனார். இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவும் என சங்பரிவார் அமைப்புகள் எதிர்பார்த்தன. ஆனால், அது நடக்கவில்லை. டெல்லியில் நடந்த போராட்டங்களையும் வி.பி.சிங் அடக்கிவிட்டார்.

வி.பி.சிங் அரசைக் கவிழ்ப்பது என்று முடிவெடுத்த பிஜேபி ராமஜென்ம பூமி பிரச்சினையை கையில் எடுத்தது. அத்வானி அயோத்திக்கு ரதயாத்திரை புறப்பட்டார். இந்த ரதயாத்திரை எட்டு மாநிலங்கள் வழியாக ஆயிரம் கிலோமீட்டர் மேல் நீண்டது. இதனால் பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. சுமார் 300 உயிர்கள் வரை பலியாகின. இறுதியாக, அப்போதைய பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுடைய உத்தரவின் பெயரில், அத்வானி கைது செய்யப்பட்டார். இதை சாக்காக வைத்து வி.பி.சிங்கிற்கு கொடுத்துவந்த ஆதரவை பிஜேபி வாபஸ் பெற்றது. 11 மாதங்களே பிரதமராக இருந்த வி.பி.சிங் ராஜினாமா செய்தார்.

இந்த சமயத்தில், இந்தியா முழுவதும், பிஜேபி தனது ஒவ்வொரு கூட்டமேடையிலும், ஒரு கதை சொன்னது, ராமன் வனவாசம் புறப்பட்டபோது, அயோத்தி மக்கள் அனைவரும் கூடவே வந்தார்களாம். சராயு நதிக்கரைக்கு வந்ததும், ராமன் மக்களைப் பார்த்து, நான் நதியை கடந்து செல்லப்போகிறேன். எனவே, இங்கே என் பின்னால் வந்திருக்க கூடிய ஆண்களும், பெண்களும் அயோத்திக்கு திரும்பிச் செல்லுங்கள். நான் வனவாசம் முடிந்து வந்து, தர்மத்தின் ஆட்சியைத் தருவேன் என்று சொல்லிவிட்டு சென்றானாம்.

v p singh
வி.பி.சிங்
வி.பி.சிங்

ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, மீண்டும் சரயூ நதிக்கரைக்கு வந்தபோது, அங்கே இன்னும் சிலர் தங்கியிருப்பதைப் பார்த்து, ‘நீங்கள் யார், ஏன் இங்கே தங்கியிருக்கிறீர்கள்’ என்று கேட்டானாம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் வனவாசம் புறப்பட்டபோது, உங்களுடன் வந்தோம். நீங்கள் ஆண்களையும், பெண்களையும் அயோத்திக்கு திரும்பிப் போகச் சொன்னீர்கள். ஆனால், நாங்கள் ஆணுமில்லாத பெண்ணுமில்லாத இரண்டுங்கெட்டான்கள், எனவே, நாங்கள் இங்கேயே தங்கிவிட்டோம்’ என்றார்களாம். அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோன ராமன், அவர்களுக்கு ஒரு வரம் கொடுத்தானாம். அது என்னவென்றால், கலியுகத்தில், இந்தியாவில் 11 மாதங்கள் நீங்கள் ஆட்சி செய்வீர்கள் என்பதுதான் அந்த வரமாம். அந்த அலிகளின் ஆட்சிதான் வி,பி.சிங் ஆட்சியாம்.

இப்படித்தான், இந்தியா முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதற்காக கொண்டாடும் ஒரு தலைவனை, பிஜேபி குரூரமாக கேவலப்படுத்தியது.

உண்மையில், ஆர்எஸ்எஸ் எந்த நிகழ்வுக்கு நாள் குறித்தாலும் அதில் ஒரு உள்நோக்கம் இருக்கும். அம்பேத்கரின் பிறந்த நாளான டிசம்பர் 6-ல் பாபர் மசூதியை இடித்தார்கள். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த ஆகஸ்ட் 5-ம் தேதியை ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவுக்கு வைத்திருக்கிறார்கள். இப்படிப் புராண அடையாளங்களை வரலாறாக கட்டமைத்து, உண்மையான வரலாற்றை மறைப்பதுதான் அவர்களின் தந்திரம்.

அதேபோல. இப்போது ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழாவிற்கு  ஆர்எஸ்எஸ் பல கதைகளைக் கட்டுகிறது.

பூனை குறுக்கே போனால் அபசகுணம் என்பார்கள். சில நேரங்களில். சாலையை கடக்கும் பூனையும் வாகனத்தில் அடிபட்டு சாவது உண்டு. யார் குறுக்கே போனால், யாருக்கு அபசகுணம் என்பது யாருக்குத் தெரியும்.

– கொம்புக்காரன்