ஊடகங்கள் மீதான தாக்குதல் – பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பின் கண்டனம்

HOME

ஊடகங்கள் மீதான இன்றைய தாக்குதல் குறித்த விரிவான தகவல்களைத் தரும்  ஒரு முக்கிய ஆவணம்

கோவிட் 19 வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இன்று தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தாக்குதல்கள்   மூன்று வழிகளில் நடைபெறுகின்றன.

  1. கோவிட்-19 பாதிப்பு மற்றும் அரசு அதைக் கையாளுதல் குறித்து தவறான செய்திகளை வெளியிடுவதாகவும், அச்சத்தை விதைப்பதாகவும் கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது வழக்குகள் தொடர்வது.
  2. கோவிட்-19ஐ முன்வைத்து எந்த இழப்பீடும் அளிக்காமல் பெரிய அளவில் பணி நீக்கம் செய்தல் மற்றும் 40 சதம் வரை ஊதியக் குறைப்புகள் மேற்கொள்ளுதல்.
  3. கோவிட்-19 பின்னணியில் இன்று நாடாளுமன்றம், மாநிலங்கள் அவை, சட்டமன்றங்கள் எல்லாம் மூடிக் கிடப்பதோடு பெரிய எதிர்ப்புகள் எதையும் வெளிப்படுத்த வாய்ப்புகளும் முடக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் ஊடகவியலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

சங்கப் பரிவாரத்தினர் இச்சூழலைப் பயன்படுத்தி ஊடக நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் ஊடாக சுயமரியாதையுடன் இயங்கும் ஊடகவியலாளர்கள் இன்று பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஜனநாயக உரிமைகள் பல முடக்கப்பட்டுள்ள சூழல் என்பது இந்த சங்கப் பரிவார ஆள்காட்டிகளின் வேலையை எளிதாக்குகிறது.

ஊடகவியலாளர்களின் மீது வழக்குகள்:

(i)  இந்திய அரசு கோவிட்-19 கொடுந்தொற்றைக் கையாளும் விதத்தை யாரும் விமர்சிக்க இயலாத வகையில் உரிய சட்டங்களை இந்திய அரசு திருத்த இருப்பதாக ஸ்க்ரால்.இன் இணைய இதழ் ஏப்ரல் 01 அன்று செய்தி வெளியிட்டது. இப்போது ஸ்க்ரால்-இன் இணைய இதழின் செயல்பாட்டு ஆசிரியர் (Executive Editor) சுப்ரியா ஷர்னே மீது சென்ற ஜூன் 13 அன்று உ.பி. காவல்துறையை அவதூறு செய்ததாகவும், நோய்த் தொற்றைப் பரப்ப முயற்சித்ததாகவும் வழக்குத் தொடர்ந்துள்ளது.

(ii)  நான்கு தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட இந்தியா முழுவதும் 55 ஊடகவியலாளர்கள் மீது இப்படிப் பல்வேறு விதமான வழக்குகள் தொடரப்பட்டுள்ள விவரங்களை Right and Risk Analysis Group (RRAG) வெளியிட்டது. டெக்கான் ஹெரால்ட் (June 12),  மற்றும்,  ப்ரின்ட்.இன் (June 15)  பக்கங்களில் இச்செய்திகள் வெளிவந்தன.

(iii)  மூத்த ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் மீது (The Wire Web Portal) இரு வெவ்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(iv)  இப்படி ஓரளவு அறிமுகமான ஊடகவியலாளர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்ட செய்தி வெளியில் பரவியபோதும் பலர் மீது இவ்வாறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது பெரிதாக வெளிவரவில்லை. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைப் பார்க்கலாம்.

(v)  அந்தமான் நிகோபார் தீவில் ட்விட்டர் பதிவொன்றின் மூலம் பொய்ச் செய்தி பரப்பியதாக சுபேர் அகமத் எனும் ஊடகவியலாளர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

(vi) Face of Nation எனும் குஜராத் இணையச் செய்தி இதழ் ஆசிரியர் தவல் படேல் என்பவர் தேசத் துரோகம் (Sedition) மற்றும் பேரழிவுகள் (Disaster) தொடர்பான சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்திய தொற்று நோய்ச் சட்டமும் (Indian Communicable Diseases Act) பலர் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வழக்குகள் தொடுக்கப்படுதல் மற்றும் கைதுகள் செய்யப்படுதல் ஆகியவற்றை எஸ்.பாஸ்கர் ராவ் (Media and Governance Analyst) சஞ்சய் கோஷ் (National Union for Journalists) முதலானோர் கண்டித்துள்ளனர். ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், ஊடக உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ‘எடிட்டர்ஸ் கில்ட்’ அமைப்பும் கிரிமினல் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்திப் பத்திரிக்கையாளர்கள் அச்சுறுத்தப்படுவதைக் கண்டித்துள்ளது. “உலக அளவிலான புலனாய்வு இதழ்களின் வலையமைப்பு” (Global investigative journalism Network) எனும் அமைப்பின் பொறுப்பாளர் சுதாகர் தட்கே இந்திய ஊடகவியலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதைக் கண்டித்துள்ளார் (மே 06).

பணி நீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புகள்:

கோவிட்-19-ஐ காரணம் காட்டி இன்று ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரித்தல், ஊதியத்தை 40 சதம் அளவு குறைத்தல், ஒட்டு மொத்தமாக எந்த இழப்பீடும் இன்றி பணி நீக்கம் செய்தல் முதலிய நடவடிக்கைளும் இன்று ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தமிழகத்தின் முக்கிய ஊடகக் குழுமமான ஆனந்த விகடன் தனது பணியாளர்களான சுமார் 600 பேர்களில் 176 பேர்களை பணிநீக்கம் செய்துள்ளது. முன்னதாக இக்குழுமம் கோவிட்-19ஐக் காரணம் காட்டி ஊடகவியலாளர்களின் ஊதியத்தில் 40 சதத்தைக் குறைத்தது. யாரையும் பணி நீக்கம் செய்யாது இருப்பதற்காகவே இவ்வாறு 40 சத ஊதிய வெட்டு என முதலில் சொன்ன நிர்வாகம் அடுத்து இந்தப் பணி நீக்கத்தையும் தயக்கமின்றி மேற்கொண்டது. ஜூன் 1 முதல் இந்தப் பணி நீக்கம் செயலுக்கு வந்தது.

எந்த வகையிலும் தங்களின் லாபம் ஒரு துளியளவும் பாதிக்கக் கூடாது என்பதில் முதலாளிகள் குறியாய் இருக்கின்றனர். பொருளாதாரச் சீர்திருத்தம், நவதாராளவாதம் முதலான பெயர்களில் காலம் காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகள் இன்று காவு கொடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் வேறு வழியே இல்லாமல், எந்த எதிர்ப்பும் இன்றி இன்று வெளியேறியுள்ளனர்.

இன்றைய சூழலில் அவர்கள் இப்போதைக்கு வேறெங்கும் வேலைகளில் சேரவும் முடியாது. வலுவான தொழிற்சங்கங்கள் சாத்தியமில்லாத சூழல், பொருளாதாரச் சீர்திருத்தம் எனும் பெயரில் தொழிலாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் பறிக்கப்படுதால் ஆகியவற்றை இந்த கோவிட்-19 இழப்புக்ளுக்கு மத்தியில் ஊடக முதலாளிகள் வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றனர். இப்படியாகத் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது உட்பட எல்லாவகைகளிலும் முதலாளிக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு என்றே இப்போதெல்லாம் ‘ஸ்ட்ரடஜிஸ்ட்’ (strategist) முதலான அதிகாரிகள் லட்சக்கணக்கில் ஊதியங்களுடன் நியமிக்கப்படுகின்றனர். கோவிட்-19 பெயரால் இன்று இப்படி ஊழியர்களும் ஊடகவியலாளர்களும் பணி நீக்கம் செய்யப்படுவதை அரசுகளும் கண்டு கொள்வதில்லை.

சங்கிகள் மற்றும் ஆள்காட்டிகளால் ஊடகவியலாளர்கள் அடையாளம் காட்டப்பட்டு வெளியேற்றப்படுதல்:

மாற்றுக் கருத்துடையவர்களை மூர்க்கமாக ஒழித்துக் கட்டுவது இன்றைய அணுகல் முறையாக உள்ளது. அவ்வாறு வெளியேற்றப்படுபவர்கள் மீண்டும் ஊடகத் துறையில் நுழையவே முடியாது என்பதற்கு சன் டிவியில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன் சங்கிகளால் வெளியேற்றப்பட்ட சன் டிவி வீரபாண்டியன் ஒரு சாட்சி. முதலாளிகள் யாராக இருந்தாலும் இன்று ஆள்காட்டிகளுக்கு அஞ்சுகிற நிலை உள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் நிதி சார்ந்த குற்றங்கள் அவர்களை அரசின் அடிமையாக்குகின்றன.

மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன், கிஷோர் கே சுவாமி முதலானவர்கள் தமிழகத்தின் ஆகப் பெரிய சங்கி ஆள்காட்டிகள். இன்னொரு பக்கம் கலியாண ராமன், பாண்டே, எஸ்.வி.சேகர் போன்றோர் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். அடியாட்களாக வலம் வருகின்றனர்.

இந்திய அளவில் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, நியூஸ் 18-இன் அமிஷ் தேவ்கான், டைம்ஸ் நவ்வின் நவிகா குமார், ஸீ நியூசின் சுதிர் சவுத்ரி, இந்தியா டுடேயின் ராகுல் கன்வால், முதலான ஆர்.எஸ்.எஸ் ஆள்காட்டிகள் பா.ஜ.க அரசு ஆதரவுடன் இன்றைய ஊடகங்களை முழுக்க முழுக்க அக்கட்சியின் ஊதுகுழலாகியுள்ளனர். தரமும் திறமையும் மிக்க பலர் இன்று இப்படியானவர்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று தமிழகத்தில் இவ்வாறு பலியாகி உள்ளவர்கள் நியூஸ் 18 டி.வியின் குணசேகரன், ஹஸீஃப், இளையபாரதி ஆகியோர். குணசேகரனின் திறமையை அனைவரும் அறிவர். சங்கபரிவார மற்றும் ஆள்காட்டிகளின் நெருக்கடியினால் நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய குணசேகரன் அவர்கள் தற்பொழுது சன் செய்திகள் தொலைகாட்சியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார். ஹஸீஃப் திறமையானவர் மட்டுமல்ல, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்”  என ஒரு அமைப்பை உருவாக்கி பாதிக்கப்படும் ஊடகவியலாளர்களுக்காப் போராடியவர். இளையபாரதி ஒரு பேரணியில் கலந்து கொண்டார் என்பதற்காக இன்று பழிவாங்கப்பட்டுள்ளார்.

நியூஸ்18 தொலைக்காட்சியில் செந்தில் அவர்களுக்கும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு தற்பொழுது அவரும் அங்கிருந்து வெளியேறும் நிர்பந்தத்தில் உள்ளார்.

திறமைமிகு ஊடகவியலாளரான நியூஸ் 7 நெல்சன் சேவியர் அவர்கள் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை மேற்கோள்காட்டிப் பேசியதற்காக இன்று ‘கலாட்டா’ யூடியூப் சேனலின் விக்ரமன் நெருக்கடியில் உள்ளார். “பிஹைண்ட் உட்ஸ்” ஆவுடையப்பன், “புதிய தலைமுறையின்” கார்த்திகைச் செல்வன் மற்றும் கார்த்திகேயன் என இவர்கள் எல்லோரும் இன்று ஆள்காட்டிகள் மற்றும் சங்கிகளால் இலக்காகப்பட்டுள்ளவர்கள்.

சென்ற ஆண்டில் இப்படியாகப் பலியானவர்தான் ஜென் ராம். அவர் “காவேரி டிவி”-யிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். தங்களது பக்கங்களில் கமென்ட் போட்டார்கள் என்பதற்காகப் புகார் செய்யப்பட்டுக் கடந்த ஆண்டில் வெளியேற்றப்பட்ட சிலர் குறித்தெல்லாம் எழுதினால் பட்டியல் நீளும்.

கோரிக்கைகள்:

ஒரு ஜனநாயக அமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படுவது ஊடகங்கள். அவற்றில் செயல்படுபவர்களின் சுதந்திரம் காக்கப்படுவது ஜனநாயக ஆளுகையின் அடிப்படைகளில் ஒன்று. இப்படி ஆள்காட்டிகளாலும் ஆளும் கட்சியில் உள்ள சிலராலும் புகார்கள் கூறப்பட்டு நேர்மையும் திறமையும் மிக்க ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவதை ஏற்க இயலாது. உலக அளவில் பாசிச வரலாறுகளைப் பார்த்தால் பாசிசம் இப்படித்தான் எங்கும் தொடங்கியுள்ளது.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சட்ட ஆளுகை ஆகியவற்றில் அக்கறையுள்ள நாங்கள் இந்த நிலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  1. ஆள்காட்டிகளால் அடையாளம் காட்டப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
  2. அவதூறுகள் பரப்பி ஆள்காட்டி வேலை செய்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
  3. இன்று கருப்பர் கூட்டம் அமைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் பதிவுகள் நூற்றுக் கணக்கானவை நீக்கப்பட்டுள்ளன. அதேபோல மாரிதாஸ், கிஷோர் கே சாமி, மதன் ரவிச்சந்திரன் ஆகியோரின் அவதூறு பரப்பும் வீடியோக்கள் பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
  4. ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் பாரதிய ஜனதா கட்சியும், மோடி அரசும் செலுத்தும் ஆதிக்கத்தையும், மறைமுக தணிக்கை முறைகளையும், இருட்டடிப்பு வேலைகளையும்முற்றிலுமாக கைவிடவேண்டும்.

                                                                                                                                    இவன்

                                                                                                                              பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு

கையெழுத்து இடுவோர்:

1.தொல்.திருமாவளவன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி

2.கொளத்தூர் மணி – திராவிடர் விடுதலைக் கழகம்

3.செந்தமிழன் சீமான் – நாம் தமிழர் கட்சி

4.கோவை கு .இராமகிருட்டிணன் – தந்தை பெரியார் திராவிடர் கழகம்

5.சுப. உதயகுமார் – பச்சைத் தமிழகம் கட்சி

6.தியாகு – தமிழ் தேசிய விடுதலை இயக்கம்

7.K K S M தெஹ்லான் பாகவி

8.இனிகோ இருதயராஜ் – கிருஸ்துவ நல்லெண்ண இயக்கம்

9.பொழிலன் – தமிழக மக்கள் முன்னணி

10.நெல்லை முபாரக் – எஸ்.டி.பி.ஐ. கட்சி

11.K. M. சரிப் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

12.நாகை திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் கட்சி

13.திருமுருகன் காந்தி – மே பதினேழு இயக்கம்

14.இயக்குநர் வ.கவுதமன் – தமிழ் பேரரசு கட்சி

15,குடந்தை அரசன் – விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி

16.சுந்தர்ராஜன் – பூவுலகின் நண்பர்கள்

17.முஹம்மது சேக் அன்சாரி – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

18.பேரா.அ. மார்க்ஸ் – NCHRO

19.இரா. அன்புவேந்தன் – இந்திய குடியரசு கட்சி

20.வழ.வெண்மணி – திராவிடத் தமிழர் கட்சி

21.பாலன் – தமிழ் தேச மக்கள் முன்னணி

22.கா.சு. நாகராசன் – தமிழ்நாடு திராவிடர் கழகம்

23.செள.சுந்தரமூர்த்தி – தமிழர் விடுதலைக் கழகம்

24.பேரா. த.ஜெயராமன் – மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

25.வழ.ஹென்றி திபேன் – மக்கள் கண்காணிப்பகம்

26.கோ.சுகுமாரன் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு

27.வழ. ரஜினிகாந்த் – மக்கள் அரசு கட்சி

28.உ.இளமாறன் – தமிழர் விடுதலைக் கட்சி

29.கண குறிஞ்சி – தமிழ்நாடு மக்கள் மன்றம்

30.யா. அருள்தாஸ் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு

31.சு.அகத்தியன் – தமிழ் சிறுத்தைகள் கட்சி

32.ஜாகுலின் ஜோதி – NAPM

33.K. S. அப்துல் ரஹ்மான் – வெல்பேர் பார்ட்டி