பரசுராம் சிலை வைக்கும் முன் ஜோதிபா புலேவை படியுங்கள் – திலீப் மண்டல்

HOME

சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டினுடைய திட்டப்படி எல்லாம் நடக்கும் என்றால், நாம் குறைந்தபட்சம் இரண்டு பிரம்மாண்டமான பரசுராம் சிலையையாவது பார்க்க வேண்டியிருக்கலாம். இரண்டு கட்சிகளுமே சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலேயை சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், பரசுராமை ‘ஒழுக்கமற்றவன்’ ‘கிறுக்கன்’ மற்றும் ‘இதயமில்லாதவன்’ என்று அழைத்த புலேவை நினைவுகூர்வது இப்போது முன்னெப்போதையும் காட்டிலும் அதிகம் தொடர்புள்ளதாக தெரிகிறது.

கடந்த வாரம், 108 அடி உயரமுள்ள பரசுராம் சிலையும், அதை நிர்வகிக்க ஒரு தனியார் அறக்கட்டளையும் நிறுவப்படும் என சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) அறிவித்துள்ளது. இந்த 108 என்பது மங்களகரமானது என கருதப்படுகிறது என்பதுடன், சமாஜ்வாதி கட்சியின் தலைமை இந்த சிலையின் உயரத்தை அறிவிக்கும் முன்னர் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்குப் பிறகு, சீக்கிரத்திலேயே அதைவிடப் பெரிய பரசுராம் சிலையை தன்னுடைய கட்சி அமைக்கும் என பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் முதலமைச்சர் மாயாவதி அறிவித்தார். பரசுராமின் பெருமையை சமாஜ்வாடி கட்சி சொந்தம் கொண்டாடுவது தவறு என்றும் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார், அத்துடன் பகுஜன் சமாஜ் கட்சிதான் பிராமணர்களின் உண்மையான ரட்சகன் என்றும் கூறியுள்ளார்.

இரண்டு கட்சிகளுமே பார்ப்பன வாக்குவங்கியை அதிகப்படியாக கவர்ந்திழுக்க முயற்சி செய்கின்றன. சீக்கிரத்திலேயே இதுபோன்ற ஒன்றை நாம் காங்கிரசிடம் இருந்தும்கூட எதிர்பார்க்கலாம், ஏனென்றால் உத்திரப் பிரதேசத்தில் தான் இழந்துவிட்ட பார்ப்பன வாக்கு வங்கியை மீட்கும் கட்டாயத்தில் இந்தக் கட்சியும் உள்ளது.

யார் இந்த பரசுராம்?

பார்ப்பன புராணீகங்களில்கூட பரசுராம் ஒன்றும் போற்றப்படக்கூடிய உருவம் அல்ல. பரசுராமுக்கென்று நிறைய கோயில்கள் இல்லாததை வைத்தே இதை நாம் அனுபவப்பூர்வமாக சரிபார்த்துக்கொள்ளமுடியும். பிரம்மனுக்கும் இதேபோன்ற கதைதான். விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்று எனக் கருத்தப்படாலும், முக்கியமான தீர்த்த ஷேத்திரம் என்று எதுவும் பரசுராமுக்கு அர்ப்பணிக்கப்படவில்லை. ராமன் மற்றும் கிருஷ்ணனைப் போல் அல்லாமல் இந்து பக்தர்களால் பரசுராம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கையில் கோடாரி ஏந்தியிருக்கும் சீற்றம்கொண்ட பரசுராமை தங்களுடைய முக்கிய அடையாளமாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒருவேளை, தசைமுறுக்கும் மூர்க்கத்தனமும் கொண்ட ஒரு அடையாளத்தை தங்களுடைய வம்சாவளியில் தேடிப்பார்த்த அவர்கள் தங்களுடைய பார்ப்பனிய அடையாளமாக பரசுராமைக் கண்டடைவதில் வந்து நின்றிருக்கலாம். சொல்லப்போனால், இது ருத்ர சிவன், ருத்ர ஹனுமன் மற்றும் போர்வீரன் ராமனுடைய யுகம். அதனால், கோபக்கார கடவுளர்கள் வரிசையில், கோடரி ஏந்திய பரசுராமன், உத்தரப்பிரதேச பார்ப்பனர்கள் தங்களுடைய நீண்டகால அரசியல் வலிமையை மறு உத்தரவாதப்படுத்திக்கொள்ளும் எழுச்சியில் உண்மையிலேயே அவர்களுக்கு உதவி செய்யக்கூடும்.

பரசுராம் சம்பந்தமாக நிறைய விவரணைகள் அளிக்கப்படுகின்றன. அதனால், பல்வேறு மூலங்களில் இருந்தும் பிரதிகளை சேகரித்த நான் ஏறக்குறைய எல்லோருமே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு சுருக்கமான விவரணையை பின்னியிருக்கிறேன். பரசுராம் என்பவர் ஜமதக்னி முனிவருடைய மகன். தன்னுடைய மனைவி ரேணுகாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஜமதக்னி தன்னுடைய மூன்று மகன்களிடமும் அவர்களுடைய தாயின் கழுத்தை அறுக்கும்படி உத்தரவிட்டார். இதற்கு பரசுராம் மட்டும்தான் உடன்பட்டார், தன் அம்மாவின் தலையையும் வெட்டிவிட்டார். பின்னர், தன்னுடைய அம்மாவை உயிர்ப்பித்துத் தரவேண்டுமாய் தன்னுடைய அப்பாவிடம் கேட்கவே ஜமதக்னி முனியும் அவ்வாறு செய்தார். ஒரு சத்திரிய அரசனால் ஜமதக்னி முனிவர் கொல்லப்பட்டதால் சீற்றம் கொண்ட பரசுராம் இதற்கு பழிவாங்கும் வகையில், பூமியில் உள்ள சத்திரியர்கள் எல்லோரையும் 21 தடவை கொலை செய்தார். ராமாயணத்தில் குறிப்பிடப்படும் மற்றொரு கதையில் அவருடைய சீற்றமான மற்றொரு பக்கம் சொல்லப்படுகிறது. ஜனகரின் அரண்மனையில் ராமன் தன்னுடைய வில்லை ஒடித்துவிட்டதை தெரிந்துகொண்டபோது ராமனுக்கும் பரசுராமுக்கும் இடையே மூண்ட சண்டையில் பரசுராம் தோற்கடிக்கப்படுகிறார். இந்த தோல்விக்குப் பின்னர், தற்போதைய மகாராஷ்டிரத்தில் உள்ள கொங்கன் பகுதிக்கு சென்ற பரசுராம் மீதமிருந்த தன்னுடைய வாழ்நாளை அங்கேயே செலவிட்டார்.

பார்ப்பனர்கள் ஏன் பரசுராமை தங்களுடைய ஜாதி அடையாளமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டதாகும். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கட்டாயங்கள் இருக்கின்றன, அதனால் பிஎஸ்பி அல்லது எஸ்பி பராசுராம் பெயரில் பிராமணர்களை வளைக்க முயற்சிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த சமூகத்தினர் இன்னும் சிறப்பான ஏதாவது ஒரு அடையாளத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

 

ஆனாலும்கூட, எஸ்பி மற்றும் பிஎஸ்பி ஆகியவை தங்களுடைய பின்புலமாக 19-ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதியும், பரசுராமைப் பற்றி நல்லவிதமாக எதுவும் சொல்லாதவருமான ஜோதிபா புலேவை உரிமை கொண்டாடிக்கொண்டு, ‘பார்ப்பன அடையாளத்துடன்’ பொருந்திப்போகச் செய்யும் நகர்வுதான் சுவராசியமாக இருக்கிறது. ஜோதிபா புலேயின் படம் இல்லாமல் பிஎஸ்பி-யின் பேனர் அல்லது சுவரொட்டியை யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாது. 1997-இல் உ.பி. முதல்வராக மாயாவதி இருந்தபோது, ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்திற்கு ஜோதிபா புலே பெயரை வைத்ததுடன், அம்ரஹா மாவட்டத்தை ஜோதிபா புலே நகர் என்றும் பெயர் மாற்றம் செய்தார்.

இருப்பினும், 2012-இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர் சமாஜ்வாதி கட்சி அந்த மாவட்டத்தின் பழைய பெயரையே திரும்பவும் வைத்தது, பிற்காலத்தில்தான் அந்தக் கட்சி புலேயின் நற்குணங்களை கண்டுகொண்டது, அத்துடன் இப்போது அந்தக் கட்சி அந்த சமூக சீர்திருத்தவாதியையும், அவருடைய பணிகளையும் நினைவுகொள்ளத் தவறுவதே இல்லை.

 

இந்த இரண்டு கட்சிகளுமே பரசுராம் மற்றும் ஜோதிபா புலே ஆகிய இருவரையும் ஒருநேரத்தில் சமமாக வைத்து பார்க்க முடிகிறது என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை, தங்களுடைய அரசியல் காரணங்களால் புலே மற்றும் பரசுராம் ஆகிய இருவரையும் அவர்களால் சமன்செய்ய முடியலாம் – இது இன்றைக்குள்ள இந்துத்துவா கும்பல்கள் காந்தி, அம்பேத்கர் மற்றும் கோட்சேவை ஒரே நேரத்தில் ஆராதிக்க முடிவதைப் போன்றதுதான். இந்தியாவின் உச்சகட்ட போட்டி நிலவும் பசு-பிராந்திய அரசியலில், அறிவுக்கும் கருத்தியலுக்கும் இடையிலுள்ள இணக்கம் அளவுக்கதிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பரசுராம் குறித்து புலே

பரசுராமைப் பற்றி புலே நிறைய எழுதியிருக்கிறார், அவருடைய கடவுள்தன்மை குறித்த இறைமறுப்பு மற்றும் விமர்சனப்பூர்வமான பார்வைகளையும் அவர் கொண்டிருந்தார். இந்தக் கட்டுரையில், அவருடைய பிரபலமான ஆய்வாகிய அடிமைத்தனம் (மராத்தியில் எழுதப்பட்ட இதன் அசல் தலைப்பு குலாம்கிரி) என்பதில் இருந்து நான் சிலவற்றைக் குறிப்பிட்டுளேன். புலேயின் புத்தகத்தினுடைய மராத்தி பதிப்பு 1873-இல் முதல்முறையாக பதிப்பிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தை நெல்சன் மண்டேலாவுக்கு கொடுக்க வேண்டியிருந்தபடியால் அதனுடைய ஆங்கிய மொழியாக்கத்திற்கு மகாராஷ்டிர அரசாங்கமே பொறுப்பேற்றிருந்தது. அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சரான சரத் பவார் அதன் ஆங்கில மொழியாக்கத்திற்கு முன்னுரை எழுதினார். இந்த 1991-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பில் இருந்தே பின்வரும் எல்லா மேற்கோள்களும் எடுத்தாளப்பட்டுள்ளன.

  1.  “பரசுராம் சத்திரியர்களை (இந்தியாவின் அசல் வந்தேறிகள்) கொன்று குவித்தார், அவர்களுடைய பாவப்பட்ட பெண்களை அவர்களது குழந்தைகளுடன் சேர்த்து பட்டினிக்கு ஆளாக்கிவிட்டு, அப்பாவிகளை படுகொலை செய்தார். அவர் இன்னும் ஒருபடி மேலே சென்றார். குழப்பத்தினால் திக்குதெரியாமல் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய சத்திரியர்களுடைய கர்ப்பிணி மனைவிகளை தேடிப் பிடித்து வயிற்றில் அவர்களுடைய குழந்தைகளுடனே சிறையில் அடைத்தார். அவர்கள் ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தால் பரசுராம் அங்கு வந்து புதிதாக பிறந்த குழந்தைகளை கொன்றுவிடுவார்.” (பக்கம் xlvi)
  2.  “அநேகமாக வரலாறு நெடுக்க தேடிப்பார்த்தாலும்கூட, மிகவும் சுயநலவாதியான, கொடூரத்திற்கும் மனிதத்தன்மை இல்லாமைக்கும் பெயர்பெற்ற பரசுராம் போன்று மற்றொரு கதாபாத்திரத்தை கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை. நீரோ, அலாரிக், அல்லது மாக்கியவெல்லியின் செயல்கள் எல்லாமே பரசுராமின் மூர்க்கத்திற்கு முன்பாக ஒன்றுமே கிடையாது.” (பக்கம் xxxi)
  3.  “கோபக்காரரான பரசுராம் ஒழுக்கமற்றவர், சாகசக்காரர், கிறுக்கன், இதயமில்லாதவன், முட்டாள் மற்றும் அசிங்கப்பிடித்தவன் (உச்சகட்ட ஒழுங்கீனமானவன்). தன்னுடைய சொந்தத் தாயினுடைய தலையை வெட்டுவதற்குகூட அவர் தயங்கவில்லை.” (பக்கம் – 27)
  4.  “. . . உள்ளூர் அரசனான தசரதனின் மகன் ராமச்சந்திரன் பரசுராமின் புகழ்பெற்ற, வல்லமை மிகுந்த வில்லை ஒடித்து ஜானகியின் கரம் பிடித்தான். இது பரசுராம் மனதில் பொறாமையை ஏற்படுத்தியது. தன்னுடைய புது மனைவியுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ராமச்சந்திரனை குறுக்கிட்ட பரசுராம் ராமச்சந்திரனை சண்டைக்கு அழைத்தான். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராமச்சந்திரன் பரசுராமை சுலபமாக தோற்கடித்தான். இந்தத் தோல்வியினால் மிகவும் அவமானப்பட்டு வெறுத்துப்போன பரசுராம் தன்னுடைய ராஜ்ஜியத்தை துறந்தான் . . . கொங்கன் மலையடிவாரத்திலேயே இருந்துவிட்டான். தன்னுடைய முந்தைய மூர்க்கத்தனங்களுக்கும் கொடுமைகளுக்கும் பிராயச்சித்தம் தேடிய (அவ்வாறு சொல்லப்படுகின்ற) பரசுராம் அங்கே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்.” (பக்கம் – 29)
  5. புலே உண்மையில் பரசுராமுக்கு ஒரு கடிதம்கூட எழுதியுள்ளார் – “அன்புள்ள அண்ணன் பரசுராமுக்கு, பார்ப்பனர்கள் தங்களுடைய வேதங்களில் உங்களை சாகாவரம் பெற்றவனாக சித்தரித்துள்ளனர் . . . என்னிடமிருந்து நீங்கள் ஓடி ஒளிய வேண்டாம். இந்த அறிவிக்கை கிடைத்த ஆறு மாதங்களுக்குள் நீங்களாகவே (எனக்கு முன்பாக) வந்தாக வேண்டும், எனக்கு முன்னால் மட்டுமல்ல, இந்த உலகின் பல்வேறு நாடுகளிலும் உங்களை ஆதி நாராயணனின் நம்பகமான அவதாரம் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களுக்கு முன்பாகவும் நீங்கள் தோன்ற வேண்டும். நீங்கள் அப்படிச் செய்யத் தவறினால், இந்த நிலத்தில் உள்ள மஹர் மற்றும் மங் மக்கள் உங்களுடைய பலதரப்பட்ட பார்ப்பன அடியார்கள் எனப்படுவோரை வெளியே இழுத்து வந்து, நடு வீதியில் வைத்து அவர்களுடைய உண்மையான நிறத்தை வெளியே காட்டுவார்கள்.” (பக்கம் 30-31)

சீர்திருத்தவாதி புலே

19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான ஒருவர், எதற்காக ஒரு கட்டுக்கதையாகவோ அல்லது கடந்த காலங்களின் வழிபாட்டுக்கு உரியதாகவோ இருந்திருக்கக்கூடிய ஒரு பிரதியையும் நபரையும் சம்பந்தப்படுத்த வேண்டும் என கேள்வி எழலாம். அடிமைத்தனம் புத்தகத்தில், பார்ப்பன புராணீகங்கள் பற்றி, குறிப்பாக அவதாரங்கள் குறித்து படிக்கும் வாசகர்கள் மனதில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதே தன்னுடைய திட்டம் என புலே எழுதியுள்ளார். சாஸ்திரங்களுடைய புனிதத் தன்மையை தகர்க்கவே புலே முயற்சி செய்தார், ஏனென்றால் சாதி மற்றும் வர்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்து சமூக அமைப்பின் பட்டயக் கற்களாகவே(கல்வெட்டு) இந்த மதம்சார்ந்த பிரதிகளை அவர் பார்க்கிறார்

இந்திய தத்துவத்திற்கான அவருடைய பங்களிப்பிற்காக, அரசியல் மற்றும் கருத்தியல் தளங்கலில் புலேவுக்கு உலகளாவிய மரியாதை இருக்கிறது. அவர் குறிப்பிட்ட எந்த சாதிக்கும் எதிரானவர் அல்ல. அவருடைய புத்தகத்தை மொழிபெயர்த்த பி.ஜி.பாட்டில் இதனை பின்வருமாறு விளக்குகிறார் “அவர் (புலே) தங்களை தெய்வீக வம்சாவளியின் என்று சொல்லிக்கொண்டு, அப்பாவி மக்களின் மனதை திருப்திப்படுத்தி அவர்களுடையதை அபகரித்தும், பேராசை கொண்டு சுரண்டிப் பிழைக்கின்ற  சோம்பேறி பூசாரி வர்க்கத்தினுடைய ஒடுக்குமுறை அமைப்புக்குத்தான் எதிரானவராக இருந்தார்.”

இந்திய அரசாங்கம் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டிருக்கிறது. மகராஷ்டிர அரசாங்கம் புனே பல்கலைக்கழகத்திற்கு, ஜோதிபா புலேயின் மனைவியும், மற்றொரு மகத்தான கல்வியாளருமாகிய சாவித்ரிபாய் புலே பெயரை சூட்டியிருக்கிறது.

மாயாவதியும் அகிலேஷ் யாதவும் புலேயை சரியாகப் படித்திருக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமே. அப்படி இருந்திருந்தால், தங்களுடைய அரசியல் திட்டங்களுக்காக அவர்கள் வேறு ஏதாவது பார்ப்பன அடையாளத்தை கண்டுபிடித்திருப்பார்கள்.

அம்பேத்கர் தன்னுடைய யாரெல்லாம் சூத்திரர்கள் என்ற புத்தகத்தை இந்த சமூக சீர்திருத்தவாதிக்கு அர்ப்பணிக்கும் அளவு புலேயால் தாக்கம் பெற்றிருந்தார். புலேயைப் பற்றி அம்பேத்கர் வார்த்தைகளிலேயே சொன்னால், “உயர் சாதியினருக்கு அடிமைகளாக இருக்கும், இந்து உணர்வுள்ள கீழ்சாதி மக்களிடம் தங்களுடைய நிலையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மகத்தான சூத்திரர். வெளிநாட்டினர்

ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதைக் காட்டிலும் இந்திய சமூக ஜனநாயகமே மிகவும் முக்கியமானது என்பதை பிரச்சாரம் செய்த பிரசங்கி.”

 

திலீப் மண்டல்

 

கட்டுரையாசிரியர் இந்தியா டுடே இந்தி பத்திரிக்கையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர். ஊடகம் மற்றும் சமூகவியல் புத்தகங்கள் பலவற்றின் ஆசிரியர்.

தமிழாக்கம்: மர்மயோகி

நன்றி: newsmyth.com