பிரசாந்த் பூஷண் அவமதிப்பு வழக்கு- பயத்திற்கு பதில் சீற்றத்தின் எதிர்வினைகள்!

HOME

“நான் மன்னிப்புக் கோர விரும்பவில்லை. எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நான் செய்தது தவறு என்று கருதினால் உச்சநிதீமன்றம் வழங்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்.”- பிரசாந்த் பூஷண்

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரண்டு ட்வீட்களுக்காக, அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளியாக, உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். பிரசாந்த் பூஷணுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பயத்தையும். குறிப்பாக வழக்கறிஞர்களிடம் பயம் கலந்த மௌனத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டதற்கு மாறாக, சீற்றத்தின் வெடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், நிதிமன்றத்தைப் புண்படுத்தியதாக கருதப்பட்ட அந்த இரண்டு ட்வீட்களும் தேடி எடுக்கப்பட்டு, பலரால் மீண்டும் வெளியிடப்பட்டன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே

அந்த சர்ச்சைக்குரிய ட்வீட்கள் எவை?

முதல் ட்வீட்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, ஒரு பிஜேபி தலைவருக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்யும் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. குடிமக்கள் தங்களின அடிப்படை உரிமையான நீதி பெறுவதற்காக, எளிதில் நீதிமன்றத்தை அனுக முடியாதபடி, உச்சநீதிமன்றத்தை மூடி வைத்துவிட்டு, தலைமை நீதிபதி சொகுசாக புல்லட் சவாரி செய்கிறார் என்ற கருத்தைக் கொண்டிருந்தது, அந்த ட்வீட்.

இரண்டாவது ட்வீட்;  கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டில் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத ஒரு அவசரகால நிலை நிலவுகிறது. அதன் மூலம் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருக்கிறது. இதில் உச்சநீதிமன்றத்திற்கும் பங்குள்ளது. குறிப்பாக சமீபத்தில் பதவியில் இருந்த நான்கு தலைமை நீதிபதிகளுக்கும் இதில் பங்கிருக்கிறது என்பதாக இருந்தது, இந்த ட்வீட்.

தீபக் மிஸ்ரா
தீபக் மிஸ்ரா

இந்த ட்வீட்டில் பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருக்கும் ஆறு ஆண்டுகாலம் என்பது மோடியின் ஆட்சிக் காலம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்திற்குள் தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருந்தபோது, அவருக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்த ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரன் உட்பட நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, தலைமை நீதிபதி மிஸ்ரா வழக்கு விசாரணைகளை அவருக்கு வேண்டப்பட்ட, தங்களுக்கு கீழ் உள்ள நீதிபதிகளுக்கு ஒதுக்குகிறார் என்று குற்றம்சாட்டினர். இதுபோன்ற ஒரு நிகழ்வு இதற்கு முன்பு எப்போதும் நிகழ்ந்ததில்லை.

நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு
நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அடுத்ததாக, ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக இருந்தபோது, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது அலுவலக செயலாளராக இருந்த ஒரு பெண்ணால் அந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றமே சதிவலையில் சிக்கியிருக்கிறது என்றார். அந்த விவகாரத்தை தற்போதைய தலைமை நீதிபதியான பாப்தே தலைமையிலான குழுதான் விசாரித்து, குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது எனக் கூறியது. அந்த விவகாரத்தில் நடந்த சதி தொடர்பாக, உளவுத்துறை, சிபிஜ, டெல்லி காவல்துறை மற்றும் உள்துறை ஆகிய நான்கு அமைப்புகள் விசாரணை நடத்தின. ஆனால், அந்த விசாரணையின் முடிவு வெளியிடப்படவில்லை.

இந்த நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் அயோத்தி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கியவர். நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து, தர்க்க முரண்பாடுகள் கொண்ட தீர்ப்பின் மூலம்,              அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கினார். இவர் ஓய்வுபெற்ற பின்னர், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

இந்த ஆறாண்டு காலத்தில், ஜனநாயகத்திற்கும், குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரான பல தீர்ப்புகள் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளன என்பதைத்தான் பிரசாந்த் பூஷண் குறிப்பிடுகிறார்.

பிரசாந்த் பூஷண் இரண்டாவது தலைமுறை உச்சநீதிமன்ற வழக்கறிஞர். இவரது தந்தை சாந்தி பூஷண் ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் மத்திய அரசில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர். மேலும், சட்டங்கள் தொடர்பான நூல்கள் எழுதிய சட்டவல்லுனர். சாந்தி பூஷண் அவரது மகன் பிரசாந்த் பூஷணுடன் இணைந்து இந்திய நீதித்துறை பொறுப்புடன் செயல்பட, நீதித்துறை பொறுப்பேற்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களுக்குமான இயக்கத்தை (CJAR) உருவாக்கினார்.  இந்த இயக்கம் நீதிபதி யோகேஷ் குமார் சபர்வாலின் தவறுகளை வெளிக்கொணர்ந்ததுடன்  நீதிபதிகள் தங்கள் சொத்து மதிப்புகளை பொது வெளியில் அறிவிக்கும் நடைமுறைக்கும் காரணமாக அமைந்தது.

சாந்தி பூஷண்
சாந்தி பூஷண்

பிரசாந்த் பூஷண் சோசலிச சிந்தனை கொண்டவர். ஊழல், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றிற்கு எதிராக பல வழக்குகளை நடத்தியிருக்கிறார். கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக, தொடர் போராட்டம் நடத்திய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை எதிர்த்து, உச்சநிதிமன்றத்தில் வழக்காடியவர் பிரசாந்த் பூஷண். சமீபத்தில் காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான, காஷ்மீர் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் ஆஜராகிவருகிறார். மேலும், பிஎம் கேர் நிதி தொடர்பான வழக்கு ஒன்றையும் பூஷண் நடத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதில் முக்கிய பங்காற்றிய பூஷண், பின்னர் அதிலிருந்து விலகிவிட்டார்.

கடந்த ஜூன் 27, 29-ஆம் தேதிகளில் நீதித்துறையை விமர்சித்து பூஷண் பதிவிட்ட இரண்டு ட்வீட்களையும், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொண்டு, அந்த வழக்கில் கடந்த 14-ஆம் தேதி பூஷணை குற்றவாளி என அறிவித்தவுடன், அதுவரை சில நூறு பேர்களால் மட்டுமே பார்க்கப்பட்டிருந்த அந்த ட்வீட்கள், அதன்பின் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. அத்துடன், இது அனைத்து வழக்கறிஞர்களின் மீதான தாக்குதல் என்ற விமர்சனங்களையும் எழுப்பியது.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா: “இந்தத் தீர்ப்பின் மூலம், உச்சநீதிமன்றம் தன்னைத்தானே குறைத்துவிட்டதுடன், குடியரசையும் வீழ்த்தியுள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு இது ஒரு இருண்ட நாள்.” என்று கூறியுள்ளார்.

“அவமதிப்பு பற்றி பேசும்போது, ​​பாபர் மஸ்ஜித் தொடர்பான குற்றவியல் அவமதிப்பு வழக்கு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை நாம் மறக்க முடியுமா?” என்று மக்களவை எம்.பி.அசாதுதீன் ஒவைசி  நினைவூட்டுகிறார்.

வரலாற்றாசிரியர் எஸ்.இர்பான் ஹபீப் செய்துள்ள ட்வீட்டில்: “ வக்கீல்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோரின் கருத்து வேறுபாடுகளை அல்லது விமர்சனக் குரல்களை பிரிட்டிஷ் அரசுகூட தண்டித்ததாக எனக்கு நினைவில்லை,” என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி சைஃபுதீன் சோஸின் மகன் சல்மான் அனீஸ் சோஸ்: “இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு குடிமகனின் விமர்சனத்தை அவமதிப்பாக் கருதுகிறது, ஆனால் அரசாங்கம் அதனிடம் வெட்கமின்றி பொய் சொல்லும்போது அமைதியாக இருக்கிறது. ஒரு குடிமகனாக, இந்த நிலைமையை நான் வெறுக்கத்தக்கதாகக் கருதுகிறேன், ” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“நீங்கள் கேட்க விரும்புவதை மட்டுமே நான் கூறுவேன். பகல் இருக்கும் போது, நீங்கள் அது இரவு என்று சொன்னால், நானும் அது இரவு என்றே கூறுவேன்,” என்று ஒரு வழக்கறிஞர் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

மற்றொரு வழக்கறிஞர்: “நான் பேசுவேன். நான் குழந்தை இல்லை, குழந்தை இல்லை,” என்று ஷேக்ஸ்பியரை மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 20-ஆம் தேதி பூஷணிடம் விளக்கம் கேட்ட உச்சநீதிமன்றம், பூஷண் தனது கருத்தை வாபஸ் பெறுவதற்கு இரண்டு, மூன்று நாள் அவகாசம் அளித்துள்ளது. ஆனால், தனது கருத்தை வாபஸ் பெறமுடியாது என்பதில் பூஷண் உறுதியாக இருக்கிறார். அவரது வார்த்தைகளைத்தான் நான் முதலிலேயே கொடுத்திருக்கிறேன்.

கரன் தாப்பர்
கரன் தாப்பர்

கடைசியாக, மூத்த பத்திரிக்கையாளர் கரன் தாப்பரின் வார்த்தைகளை பதிவு செய்து முடித்துக்கொள்கிறேன்: “இறுதியானது என்பதாலேயே அது உச்சநீதிமன்றமாக இருக்கிறது; தவறுகளே செய்யாதது என்பதால் அல்ல. நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேளையில், நீதிபதிகளும் தங்களை அவ்வாறே கருதிக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமரியாதையே பாதிக்கப்பட்டாலும்கூட, அது ஒருபோதும் உச்சநீதிமன்றத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதாகவோ அல்லது நீதியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவோ ஆகாது.”

ஏற்கனவே இந்துத்துவா அமைப்புகள் உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள பிரசாத் பூஷண் அலுவலகத்திலேயே புகுந்து அவரைத் தாக்கினர். இப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம் அவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

-ராகுல்யோகி