வேளாண் மசோதா நிறைவேற்றம் – பாராளுமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை!

HOME

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்ச்சைக்குரிய 2 வேளாண் பண்ணை மசோதாக்களை, பாராளுமன்ற மாநிலங்களவையில் மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டபோது, சர்ச்சைக்குரிய முறையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


விவசாயிகளுக்கான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுதித் தருதல்) மசோதா. விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா ஆகிய 2 மசோதாக்களைத்தான் மோடி அரசு இப்போது நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவின் கோடிக்கணக்கான விசாயிகளின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்த மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் முறையே ஜனநாயக விரோதமாக அமைந்துவிட்டது. ஒரு மசோதாவின் மீது ஒருமித்த கருத்து இருக்கும்போது மட்டுமே குரல் வாக்கெடுப்பு நடத்துவது வழக்கம். ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில் மின்னணு வாக்கு இயந்திர முறையைப் பயன்படுத்த வேண்டும்.

ஹர்சிம்ரத் கவுர்


ஏற்கனவே, மக்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றுடன் சேர்ந்து பிஜேபியின் கூட்டணி கட்சியான அகாலிதளமும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், மோடி அமைச்சரவையில் விவசாயிகள், ஏழைகள் மற்றும் உணவு பதப்படுத்தல் துறை அமைச்சராக இருந்த, அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் தன் எதிர்ப்பைக் காட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர்சிங் பாதலின் மனைவி ஆவார். அகாலிதளத்திற்கு மக்களவையில் சுக்பீர் மற்றும் ஹர்சிம்ரத் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், மாநிலங்களவையில் மூன்று உறுப்பினர்களும் உள்ளனர்.


மாநிலங்கள் அவையில் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிஜேபி கூட்டணிக் கட்சிகள் சிலவும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன அல்லது தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பின. ஆனால், எந்த எதிர்ப்பையும், எந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். சில உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து குரல் எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும், சபையில் நடப்பவற்றையும் நாட்டு மக்கள் பார்க்க முடியாதபடி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்திவைக்கப்பட்டது.


திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன்; “இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளும்கட்சி அவசரம் காட்டுகிறது. இதில் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று பேசினார். அதன்பின் அவர் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த சபை விதிகள் அடங்கிய புத்தகத்தை கிழித்தெறிந்தார்.


அந்த நேரத்தில், சபை நடவடிக்கைகளை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். பின்பு சற்று நேரத்தில், மீண்டும் சபை துவங்கி மசோதாக்களை குரல் வாக்கொடுப்புக்கு விட்டார். அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

டெரிக் ஓ பிரையன்


ஒரே ஒரு உறுப்பினர் குரல் வாக்கெடுப்பின் மீது சந்தேகம் எழுப்பினாலும், அந்த வாக்கெடுப்பு வாக்குச்சீட்டு முறை அல்லது மின்னணு வாக்கெடுப்பு முறைக்கு மாற்றப்பட வேண்டும் என்று சபை விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவையின் துணைத் தலைவர் எந்த விதிமுறையையும் பொருட்படுத்தாமல், மசோதாக்களை நிறைவேற்றுவதில் குறியாக இருந்திருக்கிறார்.


தனிப்பட்ட முறையில், பிஜேபிக்கு மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு பலம் மட்டுமே உள்ளது. பிஜேபியின் தோழமைக் கட்சியான அகாலிதளம் போல, வேறு சில தோழமைக் கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில், மசோதாக்களை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், ஒரு குழப்பமான சூழ்நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.

நாட்டின் அடிப்படை ஜனநாயக அமைப்புகள் அனைத்திலும் அத்துமீறலை நிகழ்த்தி வந்த மோடி அரசு, இப்போது, நாடாளுமன்றத்திலும் ஒரு ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது.

  • கொம்புக்காரன்