‘புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும்’- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

HOME

மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை சுதந்திரப் போராட்டத்திற்கு இணையானதாக பார்க்கிறார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் என்று கூறியுள்ளார். அதே சமயம், நாட்டை ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க விவசாயிகள் மீண்டும் போராடுவார்கள் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை விவசாய அமைப்புகள் நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தத்தால் பஞ்சாப் முழுவதுமாக மூடப்பட்டது. ரயில் தடங்களையும் சாலைகளையும் விவசாயிகள் மறிப்பதை தடுப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மேலும், ஹரியானா, மேற்கு உத்திரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன.

ராகுல் காந்தி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது; இந்த மசோதாக்கள் இந்தியாவின் எதிர்காலத்தையே இல்லாமல் ஆக்கிவிடும். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் அன்றைக்கு சுதந்திரத்திற்காக போராடினார்கள். இன்றைக்கு விவசாயிகள் மீண்டும் போராடி இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்குவார்கள் என்று கூறினார்.

சில விவசாயிகள்; ‘அதானி-அம்பானி’ என்று குறிப்பிட்டு, “இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டங்களால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெறும்” என்று கூறியபோது, ராகுல் காந்தி; “அப்போது வந்தது கிழக்கிந்திய கம்பெனி, இப்போது வந்திருப்பது மேற்கு இந்தியா நிறுவனம்” என்றார். பிரதமர் மோடி மற்றும் பல பெரிய தொழிலதிபர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியை(குஜராத்) பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதைத்தான் ராகுல் காந்தி அப்படி குறிப்பிடுகிறார்.

ஹரியானா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் குழுக்களிடம் ராகுல் காந்தி பேசுகையில்; “இந்த மசோதாக்கள் மீதான உங்களின் ஆட்சேபனைகள் என்ன என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள்; “இந்த மாற்றங்கள் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும், இது எங்களை வெறும் தொழிலாளர்களாக மாற்றிவிடும்” என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள்; “பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை கையாளுவதற்கும், பேரம் பேசுவதற்குமான திறனும் செல்வாக்கும் எங்களிடம் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாங்கள் நீதி கேட்டால் நாங்கள் தாக்கப்படலாம் என அஞ்சுகிறோம்” என்றும் தெரிவித்தனர்.

இவர்களில் ஒரு விவசாயி; “மத்திய அரசு விவசாயிகளுக்கு உண்மையாகவே உதவ விரும்பினால், அவர்கள் ஏன் இப்போது நிறைவேற்றியிருக்கும் சட்டங்களில் குறைந்தபட்ச  ஆதரவு விலையை(எம்எஸ்பி) சேர்க்கக்கூடாது?” என்றார்.

மற்றொரு விவசாயி: “எம்எஸ்பி-க்கு கீழே செய்யப்படும் எந்தவொரு விளைபொருள் பரிவர்த்தனையும் சட்டபடி தண்டிக்கப்படும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடுவதில் என்ன சிக்கல்?” என்று சந்தேகம் எழுப்பினார்.

இந்தப் புதிய வேளாண் மசோதாக்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் மோசமான விளைவுகளை கொண்டுவரும் என்பதில் சாகுபடி செய்யும் எந்த விவசாயிக்கும் சந்தேகமில்லை. ஏற்கனவே, மோடி அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள். விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களைகூட விட்டுவைக்கவில்லை என்பதைக் கூறி புலம்பினார்கள்.

இந்த நிகழ்வுக்கு முன்னதாக ராகுல் காந்தி: “ஒரு குறைபாடுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு (சிறு, குறு தொழில்களை) எம்எஸ்எம்இ-க்களை அழித்தது. புதிய விவசாய சட்டங்கள் எங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும்.” என்று ட்வீட் செய்திருந்தார்.

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, எம்.எஸ்.பி.-க்கு சட்டரீதியான உத்தரவாதம் வேண்டும் என்று வலியுறுத்திவந்தார் என்றும், அவர் பிரதமரான பிறகு ஏன் தனது நிலைப்பாட்டை மாற்றினார் என்றும், காங்கிரஸ் கட்சி தகவல் தொடர்புத் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆச்சரியத்துடன் நினைவு கூர்ந்தார்.

இந்த மசோதாக்களை எதிர்த்து, அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிரச்சாரம் செய்வது என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. சென்ற சனிக்கிழமை அன்று ‘ஸ்பீக் ஆப் பார்மர்ஸ்’ என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி டிவிட்டர் பிரச்சாரத்தை நடத்தியுள்ளது.

  • கொம்புக்காரன்