பீகார் தேர்தல்- கூட்டணி குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பிஜேபி

HOME

பீகாரைப் பொருத்தவரை என்.டி.ஏ.-கூட்டணியின் வாக்குகளை கவரக்கூடிய முகம் முதல்வர் நிதீஷ் குமார். அவரை எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதால், பிஜேபி தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. சமீபத்தில் மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் தற்போதைய மத்திய மோடி அரசில் அமைச்சராக இருந்தவர். ஆனால், பீகார் தேர்தலில் பாஸ்வானின் எல்ஜேபி தனி அணி அமைத்து போட்டியிடுகிறது. அதேசமயம், பிஜேபி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை எனவும் அறிவித்திருப்பதால், சிராக் பாஸ்வானுடன் எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று விளக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பிஜேபி.

நிதீஷ் குமாரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக பிஜேபி, சிராக் பாஸ்வானை ரகசியமாகப் பயன்படுத்துகிறது என்ற கருந்து ஊடகங்களில் அடிபடுகிறது. இதை தடுப்பதற்காக பாஸ்வானின் எல்ஜேபி கட்சியை ‘ஓட்டு கட்டர்’ என விமர்சித்திருக்கிறது பிஜேபி.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த வெள்ளிக்கிழமை செய்துள்ள டிவீட்டில்; ‘ பீகார் தேர்தலில் சிராக் பாஸ்வான் தனது சொந்த வழியில் சென்றுள்ளார். அவருடன் என்டிஏ-வுக்கு எந்த தொடர்பும் இல்லை. பிஜேபி-க்கு எந்த பி அணியும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளர். மேலும், அதில் வெளியிட்டுள்ள வீடியோலில்; ‘சிராக் பிஜேபியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்’ என்றும் தொரிவித்துள்ளர்.

பிரகாஷ் ஜவடேகர்

அதுபோல, பீகாரைச் சேர்ந்த பிஜேபியின் பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில்; ‘பிரதமரின் பெயரைப் பயன்படுத்துவதன் மூலம் சிராக் பாஸ்வான் குழப்பத்தை உருவாக்க விரும்புகிறார். . . எங்களுக்கு எல்ஜேபியுடன் எந்த கூட்டணியும் இல்லை. அது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். ஆனால், எல்ஜேபி மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னமும் அங்கம் வகிக்கிறது. அது தொடருமா? இல்லையா? என்பது குறித்து ஜவடேகர், யாதவ் இருவரும் மௌனம் சாதிக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், நிதீஷ் குமாரின் ஜேடியு-க்கு எதிராக மட்டுமே எல்ஜேபி வேட்பாளர்களை நிறுத்துகிறது. அது மட்டுமல்லாமல், பீகார் மாநிலத்தில் பிஜேபி-எல்ஜேபி அரசு அமைக்கப்படும் என்றும் பிரச்சாரம் செய்துவருகிறது.

பூபேந்திர யாதவ்

ராம் விலாஸ் பாஸ்வான் மறைவால், மத்திய மோடி அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப, எல்ஜேபிக்கு வாய்ப்பு தரப்படுமா என்பதை பீகார் தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும் என்று டெல்லி பிஜேபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, நிதீஷ் குமாரின் ஜேடியு-க்கு மக்களவையில் 15 எம்பிக்கள் உள்ளனர். பாஸ்வானின் எல்ஜேபி-க்கு 6 எம்பிக்கள் உள்ளனர். இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான ஜேடியு, அமைச்சரவையில் எல்ஜேபியை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதுபோலவே, ராம் விலாஸ் பாஸ்வான் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் எல்ஜேபி-க்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதிலும், எல்ஜேபிக்கு ஜேடியு உதவப்போவதில்லை. ஆகவே, இந்த விசயங்களில் முடிவெடுக்க, பீகார் தேர்தல் முடிவுகள் வரும்வரை பிஜேபி தலைமை காத்திருக்க விரும்புகிறது.

பிஜேபி-ஜேடியு கூட்டணியில் இருந்து வெளியேறி, தனி அணியாக எல்ஜேபி போட்டியிட்டு, நிதீஷை ஆல் அவுட் செய்ய முடிவு செய்திருப்பதால், ஜேடியு கடுங்கோபத்தில் உள்ளது. ஆகவே, பீகார் தேர்தலில் பிஜேபி-ஜேடியு கூட்டணி தோல்வி அடையுமானால், அது பிஜேபிக்கு பல தொடர் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடும்.

  • கொம்புக்காரன்