சமூக-அரசியல் வரலாற்றில் கூட்டமும் கும்பலும் – பிரசன்ஜித் சௌத்ரி

HOME

அசாதாரணமான வெகுமக்கள் பிறழ்வுகளும் கூட்டங்களுடைய பித்தநிலையும் என்ற தலைப்பில் சார்லஸ் மெக்கே எழுதிய அற்புதமான ஆய்வுப் புத்தகத்தை மனதில் கொண்டதாலோ என்னவோ, கல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த வருட துர்கா பூஜையை தன்னுடைய நீதித்துறை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. “மனிதர்கள் மந்தைகளாகத்தான் சிந்திக்கிறார்கள் என நன்றாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது, மந்தைகளாக இருக்கும்போது பித்தநிலையில் திரியும் அவர்கள், ஒருவர்பின் ஒருவராக, மெதுவாகத்தான் தங்களுடைய உணர்நிலைக்கு திரும்புகிறார்கள்.” இந்தப் பெருந்தொற்றின்போது நம்முடைய கூட்டு நடத்தையில் உருவான மனப்போக்கும் பித்தநிலையின் விளிம்பில்தான் குடிகொண்டிருக்கிறது. கூட்டங்களின் பித்தநிலை என்ற கருத்தாக்கத்திற்கான கவர்ச்சிக்கு மெக்கேயின் புத்தகம்தான் சான்றாக விளங்குகிறது.

“தேசங்களுடைய விதிகள் தற்காலத்தில் பெருங்கூட்டத்தின் மனதில்தான் விரிவடைந்திருக்கிறதே தவிர, பிரபுக்களின் சபையில் அல்ல,” என்று கூட்டம்: வெகுமக்கள் மனநிலை குறித்த ஆய்வு என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார் குஸ்தாவ் லெ போன். பிளாட்டோவினுடைய குடியரசு என்ற படைப்பின்படி பார்த்தால் கொடுங்கோன்மையாக தரம்தாழ்ந்துபோகும் கும்பல் ஆட்சியே ஜனநாயகம். கூட்டத்தினுடைய பிம்பங்கள் காட்டுமிராண்டித்தனம் என்கின்ற கருத்துடனே தொடர்புகொண்டிருக்கிறது. இது, கிறிஸ்துவின் மரணத்திற்கு கூட்டமாக பின்தொடர்ந்து சென்றது முதல், ரோமானிய சர்க்கஸில் ரத்தம் கேட்டு கூச்சலிட்டது, பொதுவிடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பேராவலுடன் ஆரவாரமிட்டது வரையிலும் அடங்கும். ஆனால், இந்தக் கூட்டமானது மாற்றம் என்பதையும் குறிப்பிடுகிறது: 1381-ஆம் ஆண்டு விவசாயிகள் எழுச்சியானது லண்டனில் பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தக் காரணமானது; 1789-இல் பாஸில் கோட்டையை இதுபோன்ற கூட்டம்தான் முற்றுகையிட்டது.   

பிரெஞ்சு புரட்சியின் குறிக்கோள்களுள் ஒன்று, குறிப்பிடும்படியான அளவில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். ரஷ்யாவில் நடைபெற்ற போல்ஷெவிக் புரட்சி கம்யூனிச சர்வாதிகாரத்தைக் கொண்டு முதலாளித்துவத்துவ பிடிமானத்தை பதிலீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியே ஆகும். கடந்தகாலங்களின் பிரதிபலிப்புகள்தான் வாஷிங்டனில் அரசியல் மேட்டுக்குடியினரின் ‘சகதி வடியட்டும்,’ என்பது முதல் ‘வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்’ என்பது வரையிலான அறைகூவல்களில் எதிரொலித்தன, இதுவேதான் பிரான்சில் ‘மஞ்சள் கவசங்கள்’ போராட்டங்களிலும் எதிரொலித்தன. இவையெல்லாம், நிதி மற்றும் அரசியல் மேட்டுக்குடியினரின் மீது நீண்டகாலமாக உள்ளுறைந்து கிடந்த நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகள்தான்.    

மாற்றத்திற்கான முகவராக கூட்டத்தின் பண்புகளுக்கு எதிர்நிலையில் கும்பலாக கொலைசெய்தல் அல்லது கலாச்சார மற்றும் மதம்சார் குறியீடுகளை அழித்தல் ஆகிய பிம்பங்கள் வைக்கப்படுகின்றன. பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள், 1984-இல் கொலைகள் செய்து, கொள்ளைகளில் ஈடுபட்ட முகமற்ற கலவரக்காரர்கள் (சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்), 1992-93 (பாம்பே கலவரம்), 2002 (குஜராத் கலவரம்) மற்றும் 2020 (டெல்லி கலவரம்) ஆகியவற்றை வரம்புமீறிய செயல்களுக்கான சில உதாரணங்களாக சொல்லலாம்.

சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக திரளும்போது மட்டும் கூட்டத்தினுடைய இயல்பு ஏற்கப்படுவதே இல்லை. தியான்மென் சதுக்க இயக்கத்தை நசுக்குவதற்கு சீன அரசாங்கம் படைகளையும் டாங்கிகளையும் பயன்படுத்தியது. நரேந்திர மோடி அரசாங்கமானது ஷீகின் பாகில் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய போராட்டக்காரர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டது.

ஆனால், கும்பமேளாவிலோ அல்லது மெக்காவில் ஹஜ் பயணத்திலோ கூடுகின்ற கூட்டம் என வரும்போது, கூட்டமும் கும்பலும்: பிளாட்டோ முதல் கேனட்டி வரை என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜே.எஸ்.மெக்கலெண்ட் பட்டியலிடும்போது எல்லாமே எண்ணிக்கை அளவுகளில் வந்துவிடுகின்றன. இருந்தாலும், தொற்றுநோய் நிபுணர்கள் தங்களுடைய பார்வையில் இவற்றை பொது சுகாதாரத்திற்கு ஆபத்தானவையாக பார்க்கின்றனர்: 1783-இல் நடந்த கும்பமேளாவில் காலரா பரவியது. பண்டிகை காலத்தின்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அடைந்த தன்னிறைவுக்கு எதிராக பிரதம மந்திரி எச்சரிக்கை விடுத்திருப்பதில் பெரிதாக வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர் தேர்தல் காய்ச்சலுக்கு எதிராக எச்சரிக்கை செய்ய மறுத்துவிட்டார்: பீகார், ராம்கர் நகரில் நடந்த பேரணியில், சமூக விலகல் குறித்த தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு அந்தக் கூட்டமானது கும்பல் வேலையை மிகச்சரியாக செய்திருந்தது.      

கூட்டமான மக்களின் சக்தியை பயன்படுத்திக்கொள்ள அரசாங்கங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கின்றன. முன்பு பாகிஸ்தான், இப்போது சீனா என, வெகுமக்களின் அபிப்பிராயத்தை திரட்டுவதற்கு அவர்களுக்கு முன்பாக தற்போதுள்ள அரசாங்கத்தால் தொங்கவிடப்பட்டுள்ள இரைகள்தான் அவை. இவை தோற்றுப்போனால், இருக்கவே இருக்கிறது நம்பிக்கைக்குரிய சாதிய அரசியல். இவை எல்லாமும் தோற்றுப்போனாலும்கூட, கூட்டத்தை கும்பலமாக மாற்றமுடியும் என்பதில் பெரும்பான்மைவாதிகளுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு.

தமிழில்: மர்மயோகி

நன்றி;டெலிகிராப்