காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கலகம் – தலைவர் ஆவாரா ராகுல்?

HOME

கடந்த சனிக்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் (என்.எஸ்.யு.ஐ) சங்கத்தின், தேசிய பொறுப்பாளர் ருச்சி குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேநாளில் என்.எஸ்.யு.ஐ. வாட்ஸ் அப் குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில அளவிலான பிரிவுகளுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு தாமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். குப்தா மற்றும் வேணுகோபால் இருவருமே ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர்களாக கருதப்படுபவர்கள்.

ருச்சி குப்தா ஒரு டிவீட்டில், சனிக்கிழமை அன்று தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட, காங்கிரஸின் மறுசீரமைப்பு, நீடித்த வளர்ச்சி பற்றிய தனது கட்டுரையை பகிர்ந்து கொண்டார். அத்துடன், “நான் ராஜினாமா செய்ததாக அறிவிக்க வருத்தப்படுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக ராகுல்ஜி மற்றும் சோனியாஜி ஆகியோருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,” என்று தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ருச்சி குப்தா

மேலும், “பொதுச் செயலாளரின் இந்த தொடர்ச்சியான தாமதங்கள் காங்கிரஸ் அமைப்பை சேதப்படுத்துகின்றன, இந்த சூழ்நிலை குறித்து, கட்சியின் தலைவரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியவில்லை. அதனால் நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு மோசமாகிவிட்டது,” என்று ருச்சி குப்தா என்.எஸ்.யு.ஐ. வாட்ஸ்அப் குழுவில் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸின் பல மாநில அளவிலான அமைப்புகளில், மிக நீண்டகாலமாக புதிய பெறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளன. இது கட்சியின் செயல்பாட்டை மோசமாக பாதித்துவிட்டது. ருச்சி குப்தா காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பை மறுசீரமைக்கவும், அதில் புதிய முகங்கள் இடம்பெற வேண்டும் என்று விரும்பியதாகவும், நியமனங்களின் தாமதத்தால் குப்தா வருத்தமடைந்ததாகவும் என்.எஸ்.யு.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கே.சி.வேணுகோபால்

ருச்சி குப்தா தி இந்துவில் எழுதியுள்ள கட்டுரையும் இதைத்தான் பேசுகிறது. ‘இந்தியா முழுவதற்குமான எதிர்க்கட்சி என்ற கட்டமைப்பை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ். ஆனால் துரதிஷ்டவசமாக, காங்கிரஸ் தனது மரபுரீதியான பாரம்பரிய பங்களிப்பை இந்த தருணத்தில் வழங்கத் தவறிவிட்டது. முன்னர் ஒரு காங்கிரஸ் நபர் தனது வலுவான தேசிய அடையாளத்துடன் தோன்றுவார். இப்போது அந்த அடையாளம் தொலைந்து போய்விட்டது. இதன் விளைவாக, காங்கிரஸை ஆதரிக்க விரும்புபவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெறக்கூடிய அடையாளம் மற்றும் திட்டம் எதுவும் காங்கிரஸிடம் இல்லை.’

‘ஆளும் கட்சியான பிஜேபி, ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சியின் தகவல்களை கொண்டுசெல்ல, கட்சிக்கு வலுவான அமைப்பு தேவை. அதை உருவாக்க கட்சிக்கு வலுவான, அனைத்து விசயங்களை கவனிக்கும் அதிகாரம் கொண்ட தலைவர் தேவை. தற்போது, அத்தகைய தலைமையை ராகுல் காந்தியால் மட்டுமே வழங்க முடியும்.’ 

ருச்சி குப்தா இப்படி கட்டுரையில் தனது கருத்துகளை வெளியிட்டுவிட்டு, பின்னர் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கட்சியையே ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளினார்.

இந்த சூழ்நிலையில்தான், சனிக்கிழமை அன்று, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலருடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ‘தலைமையில் மாற்றம் வேண்டும். செயல்படக்கூடிய முழுநேர தலைமை வேண்டும்’ என்று எழுதப்பட்ட, சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையொப்பமிட்ட 23 தலைவர்களில் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில், நீங்கள் அனைவரும் விரும்பினால் நான் கட்சிக்கு உழைக்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் இந்தக் கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்த தேவையான விசயங்கள் குறித்து ஆராய, காங்கிரஸ் பாரம்பரியமாக முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தும் சிம்லா அல்லது பச்மார்கியில் கட்சியின் சிந்தனையாளர்கள் கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த காரியகமிட்டி கூட்டத்தில், “நான் தனி ஒருவனாக மோடியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்,” என்ற குற்றச்சாட்டை வீசிவிட்டு வெளியேறினார்.

அதன் பின்னும், ஊரடங்கு காலத்தில் பொருளாதார நிபுணர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் உரையாடி, மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வீடியோக்கள் வெளியிட்டது. உ.பி.யில் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செயப்பட்டதை எதிர்த்து, இந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க, தடைகளை மீறி அவர் சென்றதால், அது இந்த கொடும் நிகழ்வின் மீது ஊடகப் பார்வையைத் திருப்பியது. விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகளுடன் டிராக்டர் பேரணியில் கலந்துக்கொண்டது என காங்கிரஸின் முகமாக ராகுல் காந்தி மட்டுமே செயல்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதி கலகம் செய்த 23 தலைவர்களில் பெரும்பாலானவர்கள், சனிக்கிழமை நடந்த கூட்டத்தில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்கும் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • கொம்புக்காரன்