பிஜேபி மடியில் ஊழல் அரசியல்வாதிகள்- வீடியோக்களை நீக்கியது பிஜேபி!

HOME

திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று மிகமுக்கியமான அரசியல்வாதிகள், கட்சி தாவி பிஜேபியில் அடைக்கலமாகியுள்ளனர். சுவேந்து அதிகாரி, முகுல் ராய் மற்றும் சோவன் சாட்டர்ஜி ஆகிய இந்த மூவரும் ஏற்கனவே பிஜேபியால் ஊழல் அரசியல்வாதிகள் என்று அம்பலப்படுத்தப்பட்டவர்கள்.

2014-ல் ஒரு ஸ்டிங் ஆப்ரேசன் முலம் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்குவது ரகசியமாக படம்பிடிக்கப்பட்டது. 2016-ல் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, அந்த வீடியாக்கள் முதலில் பிஜேபி மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது. பின்னர் நாரதா என்ற பிஜேபியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போது உத்திரப் பிரதேச அமைச்சரும், பிஜேபியின் மேற்கு வங்க மேலிட பெறுப்பாளருமான சித்தார்த் நாத் சிங் அந்த வீடியோக்களை தொகுத்து வழங்கினார். அதில் ஒரு வீடியோவில், சுவேந்து அதிகாரி லஞ்சம் வாங்குவது போன்ற காட்சியும் உள்ளது.

கடந்த சனிக்கிழமை அமித் ஷா முன்னிலையில், பிஜேபியில் இணைந்த அதிகாரி, அந்த மேடையிலேயே 2014-ல் தன்னை முதல்முதலாக டெல்லியில் அமித் ஷாவை சந்திக்க வைத்தவர் சித்தார்த் நாத் சிங் என்று கூறினார். அந்த சந்திப்புக்கு பின் 2016-தேர்தலின்போதே, அதிகாரி பிஜேபிக்கு வந்துவிடுவார் என சித்தார்த் நாத் சிங்கி எதிர்ப்பார்த்தார். ஆனால் அதிகாரி கட்சி மாறாதது அவருக்கு ஏமாற்றமானது. அதனால்தான் சித்தார்த் நாத் சிங் அந்த வீடியோவை வெளியிட்டார் என்கிறது திரிணமுல் காங்கிரஸ் வட்டாரம்.

மற்றொரு வீடியோ, முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜி பற்றியது. இவர் லஞ்சப் பொருளை ஒரு துண்டில் சுற்றி வாங்குகிறார். ஆனால் அது டாலர்கள் இல்லை என அவர் மறுப்பு தெரிவித்தார். இந்த வீடியோ வெளிவந்த கொஞ்ச காலத்திலேயே சாட்டர்ஜி திரிணமுல் காங்கிரஸில் இருந்து தாவி பிஜேபியில் ஐக்கியமானர்.

இந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் சிக்கிய மற்றொருவர் திரிணமுல் காங்கிரஸின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவரான முகுல் ராய். இவரும் இந்த வீடியோ வெளிவந்த கொஞ்ச காலத்திலேயே பிஜேபியில் இணைந்துவிட்டார். இவருக்கு பிஜேபியில் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை அதிகாரி பிஜேபியில் இணைந்த பின்னரும், நாரதா யூடியூபில் அந்த வீடியாக்கள் இருந்தன. அன்றுமுதல் அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில பலமுறை பகிரப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் பின்தொடரக்கூடிய பல பிரபலங்களும் அவற்றை பகிர்ந்துள்ளனர். இதை அறிந்ததும் பிஜேபி உடனே அந்த வீடியோக்களை நீக்கிவிட்டது. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களின் லஞ்ச ஊழல் பற்றிய மோடி மற்றும் அமித் ஷா இருவரின் உரைகள் மட்டும் மிச்சமிருக்கின்றன. இதுதொடர்பாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

2016 மேற்குவங்க தேர்தலில், இந்த வீடியோவை வைத்து பிஜேபி, திரிணமுல் காங்கிரஸிற்கு எதிராக அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்தது. ஆனால், மம்தா அந்த தேர்தலில் வெற்றிபெற்று தனது பலத்தை நிரூபித்தார்.

இந்த வீடியோக்களில் உள்ள லஞ்ச ஊழல் புகார்கள் தொடர்பாக, இப்போதும் சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரனை நடத்தி வருகின்றன. ஆனால், அதில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது பிஜேபின் மடியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

  • கொம்புக்காரன்