வேலி தாண்டும் கருப்பு ஆடுகள் ! வங்கத்தில் காவி அரசியல் சூதாட்டம் !

HOME

வழக்கம்போல, பிஜேபியின் சாணக்கியன் அமித் ஷா மேற்குவங்கத்தில் கால் வைத்ததும், மேற்குவங்க அரசியல் களம் அதிரத் துவங்கிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் அமித் ஷா மேற்குவங்கத்தில் செய்த சுற்றுப்பயணத்தின்போது, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு எம்பி, 11 எம்எல்ஏக்கள் பிஜேபியில் இணைந்தனர்.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தை பிஜேபி இப்போதே துவங்கிவிட்டதன் அடையாளம்தான் அமித் ஷாவின் இந்தப் பயணம். சனிக்கிழமை மிட்னாபூர் கல்லூரி மைதானத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அமித் ஷா முன்னிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில்பத்ர தத்தா, பனாஸ்ரீ, சக்ரா முண்டா, விஸ்வத், சாய்கத் பன்ஜா, சுவேந்து அதிகாரி ஆகிய 6 எம்எல்ஏக்களும், எம்.பி. சுனில் மண்டலும், முன்னாள் எம்.பி. தசரத் திரகியும் பிஜேபியில் இணைந்துள்ளனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியை சேர்ந்த அசோக் திண்டா, திபாலி விஸ்வாஸ், தபசி மண்டல், ஆகிய 3 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சந்திப் முகர்ஜி மற்றும் ஒரு எம்எல்ஏவும் பிஜேபியில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் பிஜேபியில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. அமித் ஷா அந்த மேடையில் பேசும்போது, வரும் சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தனிமரம் ஆவார் என்றார்.

சனிக்கிழமை அமித் ஷா கலந்துகொண்ட கூட்டத்தில், திரிணமுல் காங்கிரஸில் இருந்து விலகி பிஜேபியில் சேர்ந்த எம்எல்ஏ சவேந்து அதிகாரி பேசுகையில், “2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், உத்தரப்பிரதேச தேர்தலிலும், பிஜேபியின் வெற்றிக்கு அமித் ஷா முக்கிய பங்காற்றியதற்கு பின்னர், டெல்லியில் பிஜேபியின் பழைய அலுவலக அறையில் எனக்கு அமித்ஜி தரிசனம் கொடுத்தார். இந்த சந்திப்பை தற்போது உத்தரப் பிரதேசத்தில் சுகாதார அமைச்சராக இருக்கும் சித்தார்த் நாத் சிங் ஏற்பாடு செய்திருந்தார்” என்றார். அமித் ஷாவை தனது மூத்த சகோதரர் என அழைக்கும் சுவேந்து அதிகாரி, அமித் ஷாவை தான் நேரில் பார்த்த முதல் சந்திப்பு பற்றி, நீண்டநாள் பிரிந்திருந்து சந்திக்கும் சகோதரர்களின் பாலிவுட் சினிமா கதைப் போல விவரிக்கிறார். கூடவே. அமித் ஷா அழைத்து தான் பிஜேபிக்கு வரவில்லை என்றும் சொல்லிக்கொள்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு அறையில் அமித் ஷாவை சந்தித்து பிரிந்த அதிகாரி, மிட்னாபூர் கல்லூரி மைதானத்தில் அமித் ஷாவிடம் அடைக்கலமாகி இருக்கிறார்.

எனக்கு சுயமரியாதை இருக்கிறது. நம்பிக்கை இல்லாத, மரியாதை இல்லாத இடத்தில் என்னால் இருக்க முடியது என்று துவேந்து அதிகாரி தனது கட்சித் தாவலை நியாயப்படுத்தியும், திரிணமுல் காங்கிரஸ்கார்ரகள் அவரை துரோகி என்று அழைப்பதற்கும் பதிலளித்துப் பேசினார். ஆனால், இவர் மம்தாவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர். இவரது தந்தை சிசிர் மற்றும் சகோதரர் திபேண்டு ஆகிய இருவரும் எம்.பி-களாகவும், மற்றொரு சதோதரர் சுவுமேந்து குடிமை அமைப்பின் தலைவராகவும் இருந்தார்கள். இவர்களது பதவிக்காலம் சமீபத்தில்தான் முடிந்துள்ளது. கடந்த காலங்களில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அதிகாரிக்கு போதுமான முக்கியதுவம் அளித்தும், தனது சுயநலத்திற்காக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி தாவியுள்ளார். அதிகாரி தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களும் முக்கிய பதவிகள் வேண்டும் என பிஜேபி தலைமையிடம் பேரம் பேசிய பின்தான் கட்சியில் இணைந்திருப்பதாக மேற்குவங்க பிஜேபி வட்டாரம் முணுமுணுக்கிறது.

இதுநாள் வரை மம்தா பானர்ஜியை ஒரு பிராந்தியவாதி என பிஜேபி விமர்சித்து வந்தது, இப்போது சுவேந்து அதிகாரியிடம் ஒரு மண்ணின் மைந்தனை கண்டுபிடித்துள்ளது. மம்தா பானர்ஜி காவி அரசியல்வாதிகளை வெளியாட்கள் என்பதாலும், மேற்குவங்க மக்கள் தனித்தன்மை கொண்டவர்கள், பிராந்திய உணர்வு கொண்டவர்கள் என்பதை புரிந்துக்கொண்டதாலும், காவி அரசியல் முகாம் இப்போது பிராந்திய அசியல் பக்கம் திரும்பி இருக்கிறது.

சுவேந்து அதிகாரி மிட்னாபூரில் ஒரு மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, மாநில தலைவராக உயர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு சரிவை ஏற்படுத்திய நந்திகிராம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. கடந்த மம்தா அமைச்சரவையில் பல முக்கிய துறைகளின் அமைச்சர். மிட்னாபூரில் மட்டுமல்லாமல், தென் வங்கம் முழுவதிலும் உள்ள 40 எம்எல்ஏ தொகுதிகளில் செல்வாக்கு உள்ளவர். ஆகவேதான், பிஜேபி அவரை மண்ணின் மைந்தனாக முன்நிறுத்துகிறது.

மற்றொரு விஷயத்திற்கும் அதிகாரியை பிஜேபி பயன்படுத்த நினைக்கிறது. மம்தா தனது அரசியல் வாரிசாக மருமகன் அபிஷேக் பானர்ஜியை முன்நிறுத்துகிறார். இது கட்சியில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் இதைக் குறிவைத்து, ‘மிரட்டி பணம் பறிக்கும் மருமகனை அகற்று’ என்ற முழக்கத்துடன் பிரச்சாரம்  செய்யப்போவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுவேந்து அதிகாரி பிஜேபியில் இணைந்த அன்று, அதை மேற்குவங்க பிஜேபியினர்  கொண்டாட்டமாக நடத்தினர். பதிலுக்கு அதே அளவு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரும் துரோகிகள் வெளியேறினர் என்று கொண்டாடினர். இது மேற்குவங்கத்தை தேர்தல் பிரச்சார களம்போல மாற்றியது. மம்தாவின் மருமகன் கட்சிக்குள் அதிகாரம் செலுத்துவதையும், பிரசாந்த் கிஷோரின் அரசியல் தலையீடும் பிடிக்காமல் இவர்கள் வெளியேறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வரும் தேர்தலில் சீட்டு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டவர்கள்தான் வெளியேறுகிறார்கள் என்கிறது திரிணமுல் காங்கிரஸ் வட்டாரம்.

ஜனநாயக மரபுகளை ஒரு துளியும் மதிக்காத காவி அரசியல், வங்கத்தில் தனது ஆள்தூக்கி அரசியலை ஆரம்பித்துவிட்டது. கருப்பு ஆடுகளும் வேலி தாண்ட துவங்கிவிட்டன.

  • ராகுல் யோகி