விவசாயிகள் போராட்டம்: மற்றொரு மகாபாரதம் -ஜி.என்.தெவி

HOME

“டெல்லி புறநகர்ப் பகுதியில் ஐந்து பிரதான நெடுஞ்சாலைகளை சுற்றிலும் விவசாயிகள் முகாமிட்டிருக்கிறார்கள். ‘கருப்பு சட்டங்கள்’ என்று அவர்கள் குறிப்பிடுபவைகளை, அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்வரை அங்கிருந்து போகப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.” இதுதான் டிசம்பர் 8 அன்றைய செய்தி, அன்றைய தினம்தான் இந்த தேசமே தன்னார்வத்துடன் பாரத் பந்த் அனுசரித்துக் கொண்டிருந்தது. பந்த் நடந்த தினத்தன்று நான் பேசிக்கொண்டிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு விவசாயக் குழுவினர், ‘இந்த ஐந்து முகாம்களும் பாண்டவர்கள் ஐந்துபேரையும் போன்றவை’ என்றனர். அந்த எதிர்பாராத ஒப்புமை என்னை யோசித்துப் பார்க்க தூண்டியது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ஐந்து நதிகள் பாயும் நிலமான பஞ்சாப்பில் இருந்து அணிவகுத்திருக்கிறார்கள். அவர்களுடைய இலக்கு புது டெல்லி, அது பண்டைய காலத்தில், இந்திரப்பிரஸ்தம் எனப்பட்டது. பனிரெண்டு நாட்களுக்கு முன்னர் கடந்த நவம்பர் 27 அன்று, அவர்கள் வரும் பாதையில் பள்ளங்களைத் தோண்டியும், தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியும், பிரமாண்டமான தடைகளை ஏற்படுத்தியும் ஹரியானா காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது. மோதல் நடந்த அந்த இடம், மகாபாரதப் போர் நடைபெற்ற பண்டைய குருஷேத்திரத்தில் இருந்து ரொம்பவும் தொலைவில் இல்லை.

வருடத்தின் அந்த மாதம்கூட மார்கஷிர்ஷா மாதம்தான், அது அந்தப் புராதன போரின் கதைக்கருவுடன் நெருங்கிய தொடர்புகொண்டது. விவசாயிகள் தாங்களாகவே இந்த மோதலுக்கு அணிவகுத்ததில் இருந்து, மீடியாவின் பார்வையான, திவ்ய-சாக்சு, அந்தச் செயல் நடந்த இடத்தை நோக்கித் திரும்பியது. மகாபாரதத்தில், தெய்வீக தொலைநோக்கு பார்வை கொண்ட சஞ்சயனுக்கு, தன்னுடைய கண்தெரியாத, கௌரவர்களின் தந்தைக்கு போரின் ஒவ்வொரு அடியையும் சொல்ல வேண்டிய பணி விதிக்கப்பட்டது. புராதன குருஷேத்ர போர்க்களத்தில் முதல் நாள் போர் முழக்கங்களை எழுப்புவதிலும், சங்குகள் முழுங்குவதுடனும் கழிந்தது. அன்றைய நாள்முதல், பத்தாம் நாள்வரையில், கௌரவர் தரப்பின் தலைவராக பீஷ்மர் இருந்தார். பீஷ்மர் வீழ்த்தப்பட்டார் என்றாலும், மார்கஷிர்ஷா மாதம் முடியும் வரையில் அவர் தன்னுடைய மரணத்திற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. பீஷ்மருக்குப் பின்னர் தலைமையேற்ற துரோணர், ஐந்து நாட்கள் தாக்குப்பிடித்தார், அதைத்தொடர்ந்து கர்ணன் மூன்று நாட்களுக்கு தாக்குபிடித்தார், இறுதியாக தோல்வியடைந்த கௌரவர் படைக்கு சல்லியன் தலைமையேற்றார்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கிய முதல் பத்து நாட்களுக்கு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் களத்தில் தாக்குப்பிடித்தார். பிறகு தோமர் ஓரம்கட்டப்பட்டு, பதினோராம் நாள் அந்த வேலை உள்துறை அமைச்சர் அமித் ஷா வசம் வந்தது. மற்றொரு பக்கம், உச்சநீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட நாடாளுமன்ற மைய வளாகத்தின் அடிக்கல் நாட்டுவிழா நடந்துகொண்டிருப்பதும்கூட, அந்தக் காப்பியத்தில் வருகின்ற, கட்டுமானத்தில் இருக்கும் அரண்மனையை நினைவுபடுத்துகிறது. அத்துடன் தேவ் தீபாவளியை குறிக்கும் வகையில் கங்கை காடுகளில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டதும், சரியாக அதே நேரத்தில் முஸ்லீம் பையன்களை காதல் செய்யும் இந்துப் பெண்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு, சட்டத்தை இந்துக்களே தங்கள் கையில் எடுத்துக்கொள்வதற்கும் வழியமைக்கின்ற ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு இயற்றியதுமேகூட, பண்டைய காசி அரசனுடைய மகள்களை விருப்பமின்றி பீஷ்மர் கடத்திச் சென்ற இழிவிற்கு சற்றும் குறைவானதல்ல, இந்த காசி நகரம்தான் நரேந்திர மோடியின் தொகுதி(வாரணாசி) என்பதற்காகவும் தற்போது புகழ்பெற்று விளங்குகிறது.     

வெளிப்படையாகவே இது மேலோட்டமானதுதான் என்றாலும், இதன் ஒப்புமைகள் கவர்ச்சியானவை. புராதன காப்பியம் இந்தப் போரை ‘இனத் தூய்மையை’ பாதுகாப்பதற்கானது என சித்தரிக்கிறது. பகவத் கீதையின் ஆரம்பம் குறிப்பிடுவதன்படி, தூய வம்சாவளி இழப்பு எனப்படும் ‘குலநாசம்’, மற்றும் ‘மற்றவர்களால் பெண்கள் அசுத்தமாவது’ ஆகியவைதான், போருக்கு செல்லத் தயங்கும் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் முறையிடுகின்ற முக்கிய காரணங்களுள் சிலவாகும். ஒருவன் தன் கடமையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே கிருஷ்ணனுடைய அறிவுரை, இதுவே கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தர்மம் ஆகும். இந்தக் காப்பியப் போரின் முதல் நாளைத்தான் கீதை குறிக்கிறது. அரசியலமைப்பு தினமான நவம்பர் 26 என்பது விவசாயிகள் அணிவகுப்பை குறிக்கிறது.    

உண்மையில், விவசாயிகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான மோதலும் ஒரு காப்பிய அளவில்தான் இருக்கிறது.

சமூகமானது வரலாற்றுரீதியாக மேய்ப்புத் தொழிலில் இருந்து விவசாயத் தொழிலுக்கு மாற்றம் அடைந்ததைக் கண்ட காலத்தில்தான் மகாபாரதம் நடந்திருக்கிறது. தற்போதைய மோதலானது, ஒரு பொறுப்புமிக்க ஜனநாயக அரசில் இருந்து சர்வாதிகார அரசியல்-தொழில் கூட்டு முதலாளித்துவத்திற்கு சமூகம் மாற்றம் பெறுவதை காண்கின்ற காலத்தில் நடக்கிறது. பாண்டவர்கள் கேட்டதெல்லாம் அஸ்தினாபுரத்தின் மீதான தங்களுடைய உரிமையைத்தான். விவசாயிகள் கேட்பதெல்லாம், சமீபத்திய விவசாயம் சார்ந்த சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள்தான். அவர்களுடைய வாதம் என்னவென்றால், அரசாங்கமானது தங்களுடைய உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆகரவு விலை கொடுக்காவிட்டால், திறந்தவெளி சந்தையின் ஏற்ற இறக்கங்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்பதுதான். ஒரு தொழிலாக விவசாயத்துடன் நேரடியாக தொடர்பில்லாத நம்முடைய நாட்டு மக்கள், வங்கி, காப்பீடு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிற துறைகள் ஏற்கனவே தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், விவசாயத்தை மட்டும் ஏன் ஒப்படைக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறார்கள். தினமும், நிறைய பொருளாதார நிபுணர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் இந்தக் கேள்வியை கேட்கிறார்கள்.   

இந்தக் கேள்வியில் உள்ள தர்க்கம் பிழையற்றதுதான், ஆனால் இந்த விஷயத்தை புரிந்துகொண்ட விதம் ஆழ்ந்த பிழைகொண்டது. விவசாய சமூகம் என்பது ‘ஒரு துறை’ அல்ல; அது ஒரு தனித்துவமான நாகரிகம், குறிப்பாக இந்தியா, ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அது அப்படித்தான். இந்த நாடுகள்தான், பண்டைய காலங்களில் தனித்துவமான நாகரிகங்களை பிறப்பித்தன, அதற்கு காரணம் அவை மேய்த்தல் சமூகத்திலிருந்து விவசாய சமூகமாக மாறியதுதான். ஒரு விரிவான வரலாற்று நோக்கில் இருந்து விவரிக்கப்படும்போது, இந்திய விவசாயிகள்தான் உண்மையிலேயே இந்தியாவை உருவாக்கியவர்கள். இந்த தேசம் ஒன்றும் இந்திய விவசாயிகளை உருவாக்கிவிடவில்லை; இங்கிருக்கும் விவசாயிகள்தான் இந்திய தேசத்தை உருவாக்கியுள்ளார்கள். விவசாயம் என்பது வெறும் தொழிலோ அல்லது வாழ்க்கைப்பாடோ அல்ல, அவற்றிற்கும் மேலானது. கிராம அமைப்பின் அடிப்படையே இதுதான், அவர்கள் தீவிரமாக பின்தங்கியிருந்த போதிலும், இதுதான் இந்திய சமூகத்திற்கு அதனுடைய மீள்திறனையும் சகிப்புத்தன்மையையும் வழங்கியிருக்கிறது. ஆகவேதான், அவர்கள் ஏழ்மையாக்கப்படும்போதும், கடும் கடன் வலையில் சிக்கி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு ஆளாகும்போதும், ஆளுபவர்கள் மற்றும் பொருளாதார திட்ட வல்லுநர்கள் அவர்களை வெறுமனே பொருளாதார சுமையாக மட்டும் பார்க்கக் கூடாது.    

இந்த அரசானது, தன்னுடைய வழக்கமான பிரச்சார முறையினால், விவசாயிகள் கொந்தளிப்பை பிரிவினைவாதிகளால் தூண்டிவிடப்பட்டு, எதிர்க்கட்சிகளால் எண்ணெய் வார்க்கப்படும் ஒன்றாக தோன்றும்படி செய்திருக்கிறது. விவசாயிகளின் நேர்மையான கவலைகள் ஓரம்கட்டப்பட்டு கேலி செய்யப்படுகின்றன. நிறைய அரசாங்க செய்தித்தொடர்பாளர்களும், மலிவுவிலை மின்சாரம் மற்றும் மானிய உரங்கள் வடிவில் ஏற்கனவே பெற்றுக்கொண்டிருக்கும்போது, இன்னும் அதிகம் கேட்டு ஏன் வற்புறுத்துகிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர். அரசாங்கம் ஒன்றும் விவசாயிகளுக்கு மானியம் தரவில்லை, விவசாயிகள்தான் அரசாங்கத்திடம் ஓய்வூதியமோ, முதிய வயது சலுகைகளோ, வருடாந்திர ஊதிய உயர்வோ,  பஞ்சப்படி பயணப்படியோ கேட்காமல் இந்த நாட்டிற்கு மானியம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய உற்பத்திற்கு நியாயமான மற்றும் ஒரு குறைந்தபட்ச விலைக்கான உத்திரவாதத்தைதான் அவர்கள் கேட்கிறார்கள்.  

விரிவான போர்க்கால விவாதங்கள்தான் காப்பிய பாடல்களின் சிறப்பம்சத்தை வழங்கியுள்ளன. எல்லோரையும் அழித்துவிட்ட மகாபாரதப் போரை முதலிலேயே ஏன் யாராலும் தடுத்துநிறுத்த முடியவில்லை என்பது குறித்து, மகாபாரதத்திலேயே நிறைய விவாதங்கள் உள்ளன. இந்த விவாதங்களில் பலவும் பேராசை, அவமதிப்பு மற்றும் துரியோதனனின் கோபம் மற்றும் அவனுடைய தந்தையின் குருட்டுக் கண்கள் தீமையின் பக்கம் (உள்ளபடியே) திரும்பியதையும்தான் சுட்டிக்காட்டுகின்றன. கீதை போன்ற ஒரு இயல்கடந்த தன்மை கொண்ட பிரதி உருவாவதற்கான தருணத்தையும் புராதன மகாபாரம் வழங்குகிறது. பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் கொண்டவர்களை நோக்கிப் பாயும் கோபம் மற்றும் அரசியல்சாசன நெறிமுறைகளை அவமதித்தல் ஆகியவைதான் தற்போதுள்ள ஆட்சியின் தெள்ளத்தெளிவான அம்சங்கள். இந்தியா இப்போதும் எப்போதும் ஜனநாயகமாகவே தொடரும் என அரசியல் சாசனம் உறுதியளித்துள்ளது. இதிலுள்ள வழிகாட்டு கொள்கைகள் யாவுமே அரச கொள்கைகள் நகர்ந்துசெல்ல வேண்டிய திசை குறித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளன. இந்திய விவசாயிகளால் நடத்தப்படும் இந்தக் காப்பியத்தன்மை கொண்ட கொந்தளிப்பானது, அரசியல் சாசன நெறிமுறைகள் பற்றி சிந்திப்பதற்கான ஆவலை வழங்கும் எனவும், ஜனநாயகத்தை காக்கும் வகையில் மகாபாரதம்-போன்ற அழிவை நோக்கி செல்ல வேண்டியதில்லை என்பதையும் நம்புவோமாக.

  • ஜி.என்.தெவி – இலக்கிய ஆய்வாளர் மற்றும் கலாச்சார செயற்பாட்டாளர் 
    [email protected]