அமர்த்தியா சென் மீது களங்கம் கற்பிக்கும் இந்துத்துவ காவி அரசியல்

HOME

நோபல் பரிசுப்பெற்ற பெருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சாந்தி நிகேதன் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாத விஸ்வ-பாரதி பல்கலைக்கழக எஸ்டேட் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. அது சமீபத்தில் வெளியிட்டுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர் பட்டியலில் அமர்த்தியா சென்னின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், இந்துத்துவ-காவி அரசியல் முகம் உலகப் புகழ்பெற்ற அமர்த்தியா சென்னின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறது என மேற்கு வங்க அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் கொந்தளித்துள்ளனர்.

சாந்தி நிகேதன் மேற்கு வங்கத்தின் ஒரு கலாச்சார அடையாளம். இவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதன் பள்ளியை நிறுவி, அதற்கு தனது ஜமீன்தாரிய நிலத்தை வழங்கினார். அந்தப் பள்ளியில் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றை இயற்கை சூழலில், திறந்தவெளியில் போதிக்கும் ஒரு புதிய வித்தியாசமான கல்விமுறையை தாகூர் உருவாக்கினார். பின்னாளில் அந்த சாந்தி நிகேதனை விரிவுபடுத்தி விஸ்வ-பாரதி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இரவீந்திரநாத் தாகூர் காலத்திலேயே கல்வியாளர்கள், கலைஞர்கள் குடியிருப்பதற்காக குத்தகைக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தாகூரின் குடும்பம் சனாதன இந்து மதத்திற்கு எதிரான பிரம்மமசமாஜத்தை சேர்ந்த குடும்பம். பிரம்மம சமாஜம் சமஸ்கிருதத்தில் உள்ள அறிவுசார்ந்த விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, சனாதான இந்து தர்மங்களை எதிர்த்த அமைப்பு. இந்த பிரம்ம சமாஜத்தின் பாரம்பரியத்தில் வளர்ந்த தாகூர், தனது இலக்கிய ஆளுமையையும், சோசலிச சிந்தனையையும் பயன்படுத்தி சாந்தி நிகேதனை வடிவமைத்தார். மோடியின் மத்திய அரசால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வ-பாரதியின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பித்யுத் சக்ரவர்த்தி, அன்று முதல் சாந்திநிகேதனை இந்துத்துவ காவி மயமாக்கி வருகிறார்.

நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த அமர்த்தியா சென்; சந்தி நிகேதனின் கலாச்சாரத்திற்கும் விஸ்வ-பாரதியின் துணை வேந்தருக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது பற்றி, சாந்தி நிகேதனில் பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் என்னால் கருத்துக் கூறமுடியும். அவர் டெல்லி மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர். வங்காளத்தின் மீது தனது அதிகாரத்தை செலுத்த முயற்சிக்கிறார்,” என்றார்.

விஸ்வ-பாரதி பல்கலைகழகம்

மேலும் அவர்; “விஸ்வ-பாரதி பல்கலைகழக நிர்வாகம், நாங்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், எனது பெயர் சட்டவிரோத குடியிருப்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எங்கள் வீடு அமைந்துள்ள விஸ்வ-பாரதி நிலம் 99 வருட குத்தகையில் உள்ளது. அது இன்னும் காலாவதி ஆகவில்லை. சில கூடுதல் நிலங்கள் என் தந்தைக்கு இலவசமாக வழங்கப்பட்டவை. அது முறைப்படி நிலப்பதிவு செய்யப்பட்டுள்ளது என இது தொடர்பாக, துணைவேந்தரை தொடர்புகொள்ள முயன்றபோது, துணை வேந்தர் பித்யுத் சக்கரவர்த்தி நில ஆக்கிரமிப்பு பணியில் பிஸியாக இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதே சமயம், என்னுடய மகள் காய்கறிகள் வாங்க சிரமமாக இருக்கும் என்பதால், என் வீட்டிற்க்கு அருகில் உள்ள பல்கலைக்கழக நிலத்தில் இருந்து வியாபாரிகளை வெளியேற்ற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதாக, ஒரு கற்பனையான உரையாடலை துணை வேந்தர் தெரிவித்திருக்கிறார். என்னை பாரத ரத்னா விருது பெற்றவர் என்றும், இல்லாத ஒன்றை அவர் குறிப்பிட்டதில் இருந்தே அந்த உரையாடல் ஒரு கற்பனை என்பது தெரியும். துணைவேந்தர் நிச்சயம் ஒரு கண்டுபிடிப்புக் கலைஞர்தான்,” என்று கேலிச் செய்துள்ளார்.

அமர்த்தியா சென் வீடு

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விவகாரம் தொடர்பாக அமர்த்தியா சென்னிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்; “சர்வாதிகாரத்திற்கு எதிரான உங்களது போரில், தயவுசெய்து என்னையும் உங்கள் சகோதரியாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளையும் நியாயமற்ற தாக்குதல்களையும் கண்டு நாம் திகைப்படைய வேண்டாம். நாம் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்வோம்” என்று எழுதியுள்ளார். மம்தாவின் ஆதரவு கடிதத்திற்கு சென் நன்றி தெரிவித்துள்ளார்.

“பித்யுத் சக்கரவர்த்தி துணை வேந்தராக பதவி ஏற்றதற்கு பின்னால், தாகூர் வாழ்ந்த சாந்தி நிகேதன் அதன் பாரம்பரியத்தை இழந்து வருகிறது. சாந்தி நிகேதனின் கலாச்சாரம் மிகவும் மாறிவிட்டது. புகழ்பெற்ற அமர்த்தியா சென்கூட அவமானப்படுத்துகிறார். இது இந்த துணைவேந்தரின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சீரழிவைக் காட்டுகிறது” என்று எழுத்தாளர் ஸ்வாபன் குமார் கோஷ் கூறியுள்ளார்.

அமர்த்தியா சென் முதலில் இருந்தே, மத்திய மோடியின் பொருளாதார நடவடிக்கைக்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால், அவரைப் பழிவாங்க துடிக்கிறது இந்துத்துவ காவி அரசியல் முகாம். மேலும், தமிழகத்தில் எப்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து, கல்வித்துறையில் திராவிட பாரம்பரியத்தை அழித்து, இந்துத்துவ காவி சிந்தனைகளை புகுத்த முயற்சிக்கிறதோ, அதேபோல், வங்காளத்தின் தனித்த பாரம்பரியத்தை இந்துத்துவ காவி அரசியல் முகாம் அழிக்க துடிக்கிறது.

  • வசீகரன்