விவசாயிகள் போராட்டம்– குடியரசு தினத்தின் மீது ரத்தக் கறைப் படியுமா?

HOME

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர். அதில் ஒரு லட்சம் டிராக்டர்கள் கலந்துக்கொள்ளும் என சொல்லப்படுகிறது. இந்த பேரணிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம் விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளப்போதும், மத்திய அரசு விவசாய சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக அறிவித்தபோதும், போராடும் விவசாயிகள் மூன்று மசோதாக்களையும் முழுவதுமாக ரத்து செய்யவேண்டும் என்ற தங்களின் கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். மசோதாக்களை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துவிட்டனர். ஜனவரி 26-குடியரசு  தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மோடி அரசு என்ன செய்யப்போகிறது? விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வழிகண்டுப்பிடிக்குமா? அல்லது டெல்லியில் லட்சக்கணக்கில் கூடியிருக்கும் விவசாயிகளை அப்புறப்படுத்த வன்முறையைப் பயன்படுத்துமா?  டெல்லி போர்களமாவதை தடுப்பதும், குடியரசு தினத்தின் மீது ரத்தக்கறைப் படிவதை தவிர்ப்பதும் மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

முதலாவதாக, பிரதமர் மோடி ஒரு இந்துத்துவவாதி மட்டுமல்ல, கார்பரேட் பெரும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்க கூடியவராகவும் இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிறது. மனித உரிமைகள் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சுதந்திரங்கள் அனைத்தின் மீதும் அவரது அரசாங்கம் திட்டமிட்ட தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், மோடி அரசு விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் இருந்து விலகி, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க அனுமதித்து இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது, மூன்று விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த போதும், டெல்லியில் விவசாயிகள் நீண்ட நாட்களாக தங்கியிருப்பது தொடர்பான தனது கவலையையும் உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

‘எதிர்பாளர்களை அங்கிருந்து அகற்ற முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம், டெல்லி நெடுஞ்சாலையில் இருந்து பலத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை அப்புறப்படுத்த, மோடி அரசிற்கு உச்சநீதிமன்றம் ஜாடைக் காட்டியிருப்பதுபோல தோன்றுகிறது. தற்போது விவசாயிகளின் சுதந்திர தின டிராக்டர் பேரணிக்கு தடைவிதிக்கும் விஷயத்திலும், உச்சநீதிமன்றம் விலகிக்கொண்டுவிட்டது, அதே சமயம், டிராக்டர் பேரணியை தடை செய்யவோ அல்லது அனுமதிக்கவோ டெல்லி காவல்துறைக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இந்த சந்தர்பத்தில், ஷாகின் பாக்கில் போராடியவர்களை எத்தகைய சாக்குபோக்குகளை சொல்லி, அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி வெளியேற்றினார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் நிலையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அதற்கு இருப்பது ஒன்றும் கடவுளின் கண் அல்ல. மாறாக, பொருளாதாரம் மற்றும் அரசியல் கலந்த மூன்று விவசாய சட்டங்களின் தன்மை குறித்து முடிவெடுப்பதற்கான  குறைந்த தகுதி வாய்ந்த அமைப்புதான் உச்சநீதிமன்றம்.

நீதிமன்றம் எத்தனை பேரிடம் கருத்துக் கேட்டாலும், கல்வியறிவுக் கொண்ட நீதிபதிகள் எவ்வளவு வீட்டுப்பாடம் செய்தாலும், அவர்கள் அரசியல் பொருளாதார வல்லுநர்களாக மாற முடியாது. ஏனெனில் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம், அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள வழிமுறைகள் ஆகியவற்றை பாதுகாக்க கூடியவர்கள் மட்டும்தான்.

இந்த மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயத்தை அழிக்கும், வறுமையை ஏற்படுத்தும் என்றும், கார்பரேட் பெரும் முதலாளிகளின் லாபத்திற்காகவே, இந்த சட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது என்றும் நம்புகிற விவசாயிகள்,மிகப்பெரிய அளவில் திரண்டு போராடி வருகிறார்கள்

மோடி அரசு தனது விவசாயச் சட்டங்களை அமல்படுத்துவதில் பிடிவாதமாக இருந்தால், உச்சநீதிமன்றம் செய்யக்கூடியது என்னவென்றால், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப விவசாயச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா என்பதை தீர்மானிக்க வேண்டும். மோடியும் அவரது சட்ட ஆலோசகர்களும் இதில் அரசியலமைப்புச் சட்டரீதியாக எந்த தவறும் செய்யப்படவில்லை என்பதை நிருபிக்க தயாராகவே உள்ளனர். அதன் வெளிப்பாடாகதான், ‘சட்டவிரோத போராட்டங்கள் மூலம், ஜனநாயக வழிமுறையைத் தகர்த்துவிட முடியாது’ என்ற மோடியின் கடுமையான அறிவிப்பு.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை, தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான வழியைக் கண்டுப்பிடிக்கப்பதா அல்லது வலுக்கட்டாயமாக விவசாயிகளை வெளியேற்றுவதா என்பதை முடிவு செய்ய மோடி அரசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. ஜனவரி 26- குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியை ஒரு போர்களமாக மாற்றப்படுமானால், அது பல விபரித பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

உண்மையாகவே, மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்தவொரு அரசாங்கமும் பின்வாங்குவதில் தயக்கம் காட்டாது. 2005-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படுக்கைக்கு, இதுபோன்ற ஒரு நாடு தழுவிய எதிர்ப்பை எதிர்கொண்டார். நாடாளுமன்றம் நடைப்பெறாத நேரத்தில், ஒரு அவசரச் சட்டமாக நிறைவேற்றிவிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் முன் வைக்கும், தவறான வழியை அவர் பின்பற்றவில்லை, அதற்குப் பதிலாக, அந்த உடன்படிக்கைப் பற்றி ஊடகங்களில்  நாடு தழுவிய விவாதத்திற்கு கால அவகாசம் வழங்கினார். காங்கிரஸின் கூட்டணி கட்சிகளான இடதுசாரிகளின் ஆதரவைப் பெற அவர் ஒரு வருடகாலம் எடுத்துக் கொண்டார். இறுதியாக, நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதத்திற்கு பிறகு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதற்கு நேர்மாறாக, மூன்று வேளாண் சட்டங்களையும் மோடி அரசு நிறைவேற்றிய விதம் சர்வாதிகார ஆட்சியின் முன்மாதிரியாகும். நாட்டின் 65 சதவீதம் மக்களின் வாழ்க்கையில்  பூகம்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவை, மோடி அரசு எந்தவொரு முன்னறிவிப்பும் விவாதமும் இல்லாமல், கேவியட் முடக்கம் என்ற பொய்யான காரணத்தைக் கூறி, நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  முடிவுகளை, அவர்களிடம் கேட்காமலே மோடி அரசு எடுத்திருப்பதால்,,அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்த போராட்டத்தையும் மோடி அரசு மோசமான வழிகளிலேயே அணுகிவருகிறது, அதில் மிகவும் மோசமானது; போராடுபவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர்கள் என்பதால், இந்த போராட்டம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தூண்டப்படுகிறது என்ற விஷம பிரச்சாரம். மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலேயே இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.

மோடி அரசின் இந்த விஷமத்தனமான பொய் பிரச்சாரம் விபரிதமானது. பஞ்சாப்பில் 80 மற்றும் 90-களின் முற்பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதம், பஞ்சாப் வரலாற்றில் கொடுங்கனவாகும். 1990-ல் பஞ்சாப்பைச் சேர்ந்த 700,000 சீக்கிய முன்னாள் படைவீர்ர்கள் அரசாங்கத்திடம் துப்பாக்கி உரிமம் கோரினார்கள். இது காலிஸ்தானியர்களுக்கு எதிரான சீக்கியர்களின் கிளர்ச்சி என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். வயல்வெளிகளில் பயங்கரவாதிகளை துரத்திச் சென்று கொன்றுதான்,பஞ்சாப் காவல்துறை காலிஸ்தான் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

இந்த வரலாற்று படிப்பினைகளை நினைவில் கொள்ளாமல், மோடி அரசு எதிர்வரும் ஜனவரி 26- குடியரசு தினத்தில் ஒரு ரத்தக்களரி ஏற்பட அனுமதித்தால், சீக்கியர்களின் பிடிவாதமான வீரம் மிக்க ஒரு தலைமுறையை அரசாங்கம் எதிர்க்கொள்ள வேண்டிவரும். இந்த சந்தர்ப்பத்தில் இந்திரா காந்தியின் துர்மரணம் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

  • ராகுல் யோகி