பிஜேபியின் அஸ்வமேதா யாகத்தை தடுத்து நிறுத்திய வங்காளம் !

HOME

சமஸ்கிருத இலக்கியங்களில் அஸ்வமேதா யாகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அது இரண்டு வகையாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்று, ஒரு மன்னன் அஸ்வமேதா யாகம் நடத்த அண்டை நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு விடுப்பான். அந்த அழைப்பை ஏற்று யாகத்தில் கலந்துக் கொள்ள வரும் மன்னர்கள், அழைப்பு விடுத்த மன்னனை சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தம்.

மற்றொன்று, ஒரு மன்னன், ஒரு குதிரையை வைத்து யாகம் நடத்தி, அந்த குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அந்த குதிரையை வரவேற்று மரியாதை செய்யும் மன்னன், குதிரையை அனுப்பிய மன்னனை சக்கரவர்தியாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். மாறாக, குதிரையை தடுத்து நிறுத்தி சிறை வைக்கும் மன்னன் போருக்கு அறைகூவல் விடுவதாக அர்த்தம். வங்காளம் பிஜேபியின் குதிரையை பிடித்து கட்டியிருக்கிறது.  

2021 மாநில தேர்தல் முடிவின் மூலம், வங்காளம் பிஜேபியின் அஸ்வமேதா யாகத்தை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதே சமயம், இந்த வெற்றியும் கூட முழுமையானது இல்லை.வங்காளத்திலும் கேரளாவிலும் பிஜேபியின் படுதோல்வி, முழுமையான ஜனநாயக மீட்பு இல்லை என்பதை இந்தியர்களாகிய நாம் ஒப்புக்கொணடுதான் ஆக வேண்டும்.

இந்த இருண்ட காலத்தில் மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு துவக்கத்தை, கடைசியாக மேற்கு வங்கம் நமக்கு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பை நாம் சம்பாதிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டால்தான், கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நம்மால் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மேற்கு வங்க தேர்தல் முடிவின் விளைவுகள் தேர்தல் அரசியலின் சாதாரண கணக்குகளுக்கு அப்பால் உண்மையிலேயே முக்கியமானவை. ஒரு முதல்வர் என்னதான் பிரபலமானவராக இருந்தபோதும், மூன்றாவது முறையாக வெற்றிப் பெறுவது என்பது சாதாரணமானது இல்லை. அதே சமயம், ஒரு சாதாரண தேர்தலில் பிஜேபியின் வாக்குகள் அதிகரித்திருப்பது ஒரு பெரிய பாய்ச்சலாக கருதப்படும். அதாவது, ஒரு அரசியல் கட்சிக்கு 3 எம்எல்ஏ.கள் மட்டுமே இருந்த ஒரு மாநிலத்தில், அந்த கட்சி அதிகாரபூர்வ எதிர்கட்சியாக வந்திருப்பது பெரும் பாய்ச்சலாகும். இது அந்த கட்சிக்கு  கொண்டாடுவதற்கான காரணத்தையும் வழங்கியிருக்கும்.

ஆனால், 2021 மேற்கு வங்க தேர்தல், ஒரு சாதாரண தேர்தலாக இருக்கவில்லை. நிகழ்காலத்தின் துணிச்சல் மிக்க அரசியல் கொள்ளையர்களான பிஜேபி, தனது மேலாதிக்கத்தை பலப்படுத்த, அது கடக்க வேண்டிய இறுதி எல்லையாக வங்காளத்தைக் கருதியது. அதனால், வங்காளத்தின் மீது பெரும் தாக்குதலை நடத்த பிஜேபி இந்த தேர்தலை தேர்ந்தேடுத்தது. பணம், ஊடகம், மத்திய அரசு நிறுவன இயந்திங்கள் எல்லாவற்றையும் மேற்கு வங்கத்தின் மீது ஏவியது. தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை முதல் பாதுகாப்பு படைகள் மற்றும் கொரோனா விதிமுறையின் நடுநிலைமை வரை ஒவ்வொரு எச்சரிக்கையையும் விதிமுறையையும் மோடி அரசு ஆயுதமாக மேற்கு வங்கத்தின் மீது வீசியது. பிஜேபி தலைவர்களின் புகழையும், மேற்கு வங்கத்தில் பிஜேபி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற கணிப்பையும், பிஜேபி ஊதுகுழல் ஊடகங்கள் மிகைப்படுத்தி எதிரொலித்தன. இருந்தபோதும், அங்கு பிஜேபி தோற்கடிக்கப்பட்டது. தேற்கடிக்கப்பட்டது மட்டுமல்ல, முறையாக அவமானப்படுத்தப்பட்டது.

மாற்றத்திற்கான சாரளம் திறந்துள்ளது. ஒரு நிகழ்கால அஸ்வமேதா யாகம் தடைப்பட்டுள்ளது. தந்திரம் மிக்க ஒரு மாய நிகழ்ச்சி முறியடிக்கப்பட்டது. வங்காளத்தை கைப்பற்றுவதில் பிஜேபி உண்மையில் வெற்றிப் பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்பதற்கே பயமாக உள்ளது. நமது இந்திய குடியரசு ஒரு நாளில் எவ்வளவு நம்பிக்கையை மீட்டேடுத்துள்ளது.

இந்த நேரத்தில், வங்காள தேர்தல் முடிவு போன்ற குறுக்கீடு எதிர்பாராத சாத்தியங்களை திறத்திருக்கிறது. பிஜேபியின் ஆதரவாளர்கள் கூட இந்த அரசாங்கத்தை அவநம்பிக்கையுடன் பார்க்க வைத்த நெருக்கடியான, மிக மோசமான தொற்றுநோய்க்கு நடுவில் நாம் இருக்கிறோம். ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார சரிவில் இருந்து நாம் இன்னும் மீண்டுவரவில்லை. மேலும், இது கொரோனா இரண்டாவது அலையால் இன்னும் மோசமடையக் கூடும். தற்போதைய விவசாயிகளின் எதிர்ப்பு நாம் இதுவரை வரலாற்றில் அறிந்திராத ஒன்றாக உள்ளது. இந்த சூழலில், வங்காளத்தின் இந்த தீர்ப்பு மோடி அரசாங்கத்தின் பாதிப்புகளை அம்பலப்படுத்துகிறது. மோடி அரசின் நம்பகமான ஆதரவாளர்களையே குழப்புகிறது. அதன் எதிர்பாளர்களை தைரியப்படுத்துகிறது. மேலும், கேரளா மற்றும் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பிஜேபியின் எதிர்பாளர்களை ஒருங்கிணைக்க பயன்படும். வங்காளத்தின் இந்த தீர்ப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக நமது நாட்டை வீழ்த்திய எழுத்துப்பிழைகளை அழிக்கக்கூடும். இது மோடி என்னும் ‘மகாசக்தி’-யின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம்.

இந்த வாய்ப்பை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்துதான் அது  நடக்கும். ஒரு வேளை அது அவ்வாறு நடக்காமலும் போகலாம்.

என்ன நடத்தது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். ஆனால், அதை விதி என தவறாக எண்ணிவிடாதீர்கள். இந்த தீர்ப்பை அங்கீகரிப்பது முதல் படி. இது வகுப்புவாத அரசியலை நிராகரிப்பது மட்டுமல்ல. இந்த தேர்தல் வங்காளத்தில் தேசப் பிரிவினைக்கு முந்தைய வகுப்புவாத தீயை மீண்டும் அங்கு எழுப்பியுள்ளது. இதைச் சமாளிக்க மேற்கு வங்க அரசிற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். தவிர, பிஜேபிக்கு எதிராக ஆர்வமுள்ள முஸ்லீம் வாக்காளர்களை திரட்டுவது மட்டும் மதசார்பற்ற அரசியலின் அடையாளம் அல்ல. கொரோனா தோற்றுநோய் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கின்போது, மோடி அரசின் செயலற்ற தன்மைக்கு எதிராகவும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி,கேரளாவைத் தவிர வேறு எங்கும் ஒரு தேர்தல் பிரச்சனையாக மாறவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை போலவே, மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்ட திறமையற்ற பொருளாதாரக் கொள்கைகளுடன், மக்களின் பொருளாதார அவலநிலையை, மக்கள் இன்னும் விளைவுகளை காரணத்துடன் இணைத்துப் பார்க்கவில்லை. உண்மையில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றிக்கும், மக்கள் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கும் சிறிதுகூட சம்பந்தமில்லை. விவசாயிகளின் அமைப்புகள் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் என திவிரமாக பிரச்சாரம் செய்தபோதும், 3 வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகத்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது என்று இன்னும் நிரூபனமாகவில்லை.

ஜனநாயக விரோத பிஜேபிக்கு எதிரான இந்த தேர்தல் முடிவுகள், ஜனநாயகத்தை மீட்பதற்கானது என்ற பெரிய விஷயமாக மட்டும் பார்க்காமல், வேறு பல காரணிகளின் விளைவாகும் என்பதை சாதாரணமாக ஒப்புக்கொண்டு நாம் இதை அணுக வேண்டும். வங்காளத்திலும் கேரளாவிலும் தற்போதைய முதலமைச்சர்களின் புகழ் ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளது. ஆனால்,இது வெறுமனே நல்லாட்சிக் குறித்த தீர்ப்பும் அல்ல. அப்படியானால், தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி தொடர்ந்திருக்கலாம். அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கக்கூடாது. மம்தா பானர்ஜியின் நிர்வாகம் ஒரளவுக்குதான் சிறப்பானது. ஆனால், சில பிரபலமான திட்டங்கள் மக்களுக்கு விரோதமாக தோன்றின. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸின் வெற்றியிலும், அசாமில் பிஜேபியின் வெற்றியிலும் திறமையான தேர்தல் பணி நிர்வாகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வழக்கமான காரணிகள் ஒவ்வொரு முறையும் பிஜேபிக்கு எதிராக செயல்படாது.

காங்கிரஸைத் தவிர அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு யாருக்காகவும் இல்லை என்பது குறித்த கடுமையான உண்மையை நாம் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவேண்டிய நேரம் இது. மம்தா பானர்ஜி அல்லது பிரசாத் கிஷோர், பினராய் விஜயன் அல்லது இடதுசாரி கட்சிகள், ஹிமந்தா பிஸ்வா சர்மா அல்லது சர்பானந்தா சோனோவால் என்று உண்மையான வெற்றியாளர் யார் என்பது பற்றி பல கருத்துகள் இருக்கலாம். ஆனால், உண்மையான தோல்வியாளர் யார் என்பது பற்றி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.

ராகுல் காந்தி கேரளாவில் இருந்து  பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்  கேரளாவில் நடந்த முதல் மாநிலத் தேர்தலில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இந்திய தேசிய காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது. ஆனால், ஆளுங்கட்சியான இடதுசாரி கட்சி அந்த வாய்ப்பை  தவறவிடவில்லை. அதுபோல, அசாமில் ஒரு வருடத்திற்கு முன்னர், மாநிலம் முழுவதும் மிக பெரிய அளவில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தபோதும், அங்கு மீண்டும் பிஜேபி ஆளுவதற்கு அனுமதிக் கிடைத்திருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் வாய்ப்பை இங்கும் இழந்திருக்கிறது. மேலும்,அது புதுச்சேரியில் ஆட்சியை இழந்துள்ளது. மேற்கு வங்கத்தில் முற்றிலும்  தோற்றுப்போனது. இந்த செய்திகளில் இருந்து நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது. ஜனநாயகத்தை மீட்பதற்கானப் போரில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அதன் தற்போதைய வடிவத்தில் இந்தியாவை வழிநடத்த முடியாது.

மீண்டும் மீண்டும், மாநிலத் தேர்தல்கள் மோடியின் ‘வெல்லமுடியாதவர்’  என்ற கட்டுக்கதையை சிதைக்கின்றன. ஆயினும்கூட,மோடியின் புராணம் தொடர்கிறது. ஏனென்றால் மாநில அளவிலான அதிருப்திகள் ஒரு தேசிய உணர்வாக மொழிப் பெயர்க்கப்படவில்லை. 2021 தீர்ப்பு வேறு, இது ஒரு தெளிவான துவக்கத்தை வழங்கியுள்ளது. மேலும், இது ஒரு பாதையைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து 2021-இன் தொடக்கத்தில் நடைப்பெறவுள்ள உத்திரபிரதேச மாநிலத் தேர்தலில் பிஜேபி தேல்வி அடைந்தால், அது நிச்சயமாக மோடி ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுனாக இருக்கும்.

மோடியை தோற்கடிக்க முடியும், ஆனால் அது காங்கிரஸால் அல்ல, வழக்கமான எதிர்க்கட்சி ஒற்றுமையாலும் அல்ல, முட்டாள்தனமான மோடி எதிர்ப்பு முழக்கத்தாலும் அல்ல, இங்கு அது ஒரு சந்தர்ப்பம்! அது ஒரு சவால்!

யோகேந்திர யாதவ்
  • ‘ஸ்வராஜ் இந்தியா’இதழின் தேசிய தலைவர் யோகேந்திர யாதவ் அவர்களின் கருத்துகளை, தி பிரின்ட் மின்னிதழுக்காக பிரசாந்த் தீட்சித் தொகுத்துள்ளதை தழுவி, தமிழில் உருவாக்கப்பட்டக் கட்டுரை.