கொங்கு மண்டலம் குற்றவாளியா?

HOME

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது. திமுக வென்றது. அதிமுக வீழ்ந்தது. ஆனாலும், அதிமுக வெற்றிப் பெற்றிருகக்கூடிய 75 தொகுதிகளில் 44 தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாளில் இருந்தே இந்த தகவல்களை முன்வைத்து, சமுக ஊடகங்களில் பரபரப்பான விவதங்கள் நடந்துவருகின்றன. கொங்கு மக்கள் துரோகிகள், சுயநலவாதிகள், சாதிவெறியர்கள் என குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றன.

தமிழகம் எங்கும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் இந்த நேரத்தில், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக வாழம் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், எடப்பாடி பழனிசாமி தங்களது சாதி என்ற சுயசாதி பாசத்தில், அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிலும், பாலியல் கொடுரம் நிகழ்ந்த பொள்ளாச்சியில், தன்னை பாலியல் வன்கொடுமைச் செய்யும் ஆணிடம் கெஞ்சிக்கதறும் பெண்ணின் அவலக்குரல் தமிழகம் எங்கும் எதிரொலித்ததே, அதே பொள்ளாச்சியில் அதிமுக வெற்றிப் பெற்றிருக்கிறது. அந்த பாலியல் கொடுரச் சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பதாக சொல்லப்பட்ட அரசியல் முக்கியப்புள்ளி முன்னாள் துணைச் சபாநாயகர் ஜெயராமனே இங்கு மீண்டும் வெற்றிப் பெற்றிருக்கிறார். அது கொங்கு மண்டலத்தை மனசாட்சி மறத்துபோன மண்டலமாக காட்டுகிறது.

மோடியின் மத்திய இந்துத்துவ ஆட்சி; தொடர்ந்து தமிழ் மொழியை புறக்கணிக்கிறது, சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகிறது, தமிழ் கலாச்சாரத்தை அழித்து இந்து கலாச்சாரமாக மாற்ற முயற்சி செய்கிறது.. அதன் தவறான பொருளாதார கொள்கையால் தொழில்கள் நசிந்து வருகின்றன. கொரோனா நெருக்கடியை சமாளிக்க தெரியாமல் மோடி அரசு வேடிக்கைப் பார்க்கிறது. அது மக்களின் எதிர்ப்பை பெருட்படுத்தாமல் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றியிருக்கிறது. மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்ந்துக் கொண்டே செல்கிறது. தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறான, மத்திய மோடி அரசின் இந்த செயல்பாடுகள் அனைத்திற்கும் எதிர்ப்பின்றி ஆதரவாக இருந்தது தமிழக எடப்பாடி அரசு. அதனால் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். கொங்கு மண்டலமோ தனது சுயநலத்தால் அதிமுக-பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலேயே அதிமுக ஆட்சிக்கட்டிலில் ஏற காரணமாக இருந்தது கொங்கு மண்டலம்தான். அந்த தேர்தலிலேயே கொங்கு மண்டலத்தில் 42 இடங்களை அதிமுக கைப்பற்றியிருந்தது. அதன்மூலம் கொங்கு மண்டலத்திற்கு 3 முக்கிய அமைச்சர் பதவிகள் கிடைத்தன.

கடந்த 2011-2016 ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கொங்கு மண்டலத்தில் ஒரு காண்ராக்ட் சாம்ராஜ்யம் உருவானது. இந்த காண்ராக்ட் சாம்ராஜ்யம் பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை மையமாக வைத்து கொங்கு வேளாளக் கவுண்டர்களால் கட்டமைக்கப்பட்டது. அப்போது அதிகார மையமாக இருந்த சசிகலாவிற்கு, தமிழகத்தில் உள்ள மற்ற காண்ராக்டர்களை விட கொங்கு வேளாளக் கவுண்டர் சாதி காண்ராக்டர்கள் கூடுதலாக கமிஷன் கொடுத்தனர். அதனால், தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற பிரமாண்டமான சாலை மற்றும் கட்டுமான பணிகள் அனைத்தும் கொங்கு மண்டல காண்ராக்டர்களுக்கே தரப்பட்டது. சசிகலாவின் பவர் ஏஜெண்டாக அவரது உறவினர் ராவணன் கொங்கு மண்டலத்தில் இருந்தபடி, இந்த காண்ராக்ட் சாம்ராஜ்யத்தைக் கண்காணித்து வந்தார்.   

கொங்கு மண்டல காண்ராக்ட் சாம்ராஜ்யத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக இருந்த இரண்டு முக்கியபுள்ளிகள், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும். இவர்களில் அமைச்சர் தங்கமணி எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர். மற்றொரு அமைச்சரான எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை காண்ராக்ட்களையும் கொங்கு மண்டலத்துக்காரர்களுக்கே கிடைக்க ஏற்பாடு செய்தார். அதற்கு முந்தைய ஆட்சிகாலங்களில் உள்ளாட்சித்துறை காண்ராக்ட்கள் அந்தந்த பகுதி கண்டாக்டர்களுக்கு கிடைக்கும். ஆனால், எஸ்.பி. வேலுமணி அமைச்சரானதும் உள்ளாட்சித்துறை காண்ராக்ட் விதிமுறைகளை மாற்றினார். அதாவது கோடி கணக்கான ரூபாய் பண வரவு செலவு  இருக்கும் காண்ராக்டர்கள்தான் சிறிய உள்ளாட்சித்துறை காண்ராட்களையும் எடுக்க முடியும் என்பதாக விதிமுறைகள் மாற்றப்பட்டன. இதன்மூலம் உள்ளாட்சித்துறை காண்ராட்களும் பெரும்பாலும் கொங்கு மண்டலத்திற்கு சென்றது. உள்ளாட்சித்துறையில் நடந்த ஊழல்களையும் விதிமீறல்களையும் ஆதாரங்களை சேகரித்து அம்பலப்படுத்தினார் மக்கள் செய்தி மையம்,கம் ஆசிரியர் அன்பழகன். அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது எடப்பாடி அரசு.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அனைவரும் காண்ராக்டர்கள் இல்லை. அதுபோல, பணக்காரர்களும் இல்லை. அதே சமயம், இந்த காண்ராக்ட் சாம்ராஜ்யம்  கொங்கு மண்டலத்தில் ஏற்பட்டுத்திய பணப்புழக்கம் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சம்பத்தியத்திற்கான வாய்ப்பை வழங்கியது. அத்துடன் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலரும் இதில் லாபமடைந்தனர். இந்த காண்ராக்ட் சாம்ராஜ்யத்தால் குவிந்த பணத்தில் ஒரு பகுதி அதிமுகவின் வளர்ச்சிக்கும் செலவிடப்பட்டது.

கடந்த 2011-2016 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாள், எம்ஜியார் பிறந்த நாள் – நினைவு நாள், அண்ணா பிறந்த நாள் – நினைவு நாள், மேலும் கட்சியின் ஆண்டு விழா என ஒவ்வொரு ஆண்டும் அதிமுகவில் ஆறு விழாக்கள் கொண்டாடப்படும். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு வேட்டி-சேலை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நடைமுறை கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை, கட்சியிலிருந்து தொடர்ந்து லாபம் பெறும் பயனாளிகளாக மற்றி வைத்திருந்தது. தமிழகம் முழுவதும் சாதாரணமாக நடைப்பெற்ற இந்த விழாக்கள், கொங்கு மண்டலத்தில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டன. இது 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் மட்டும் கூடுதலான இடங்களைப் பெற்றுத் தந்தது.

ஜெயலலிதா இறந்து, சசிகலா சிறைச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும், சசிகலா வகையறா தங்களது நம்பிக்கைக்குறிய காண்ராக்ட் சாம்ராஜ்யத்தின் தலைவர் என்ற முறையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கினார்கள். அதற்குபிறகு கொங்கு மண்டலத்தில் அதிமுக மெல்ல நிறமாறியது. தங்களது சாதிக்காரர் முதல்வராகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது என கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிக் கருதியது. அந்த சாதியும் அதன் பணபலமும் எடப்பாடி பழனிசாமியை தாங்கிப்பிடித்தது. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இந்த அதிமுக ஆதரவு மனநிலை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோடி மீதான எதிர்ப்பும், எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் தலைமையில் இருந்த ஒரு நிலையற்ற தன்மையும், கொங்கு மண்டலத்தில் அதிமுகவைத் தோல்வியுற செய்தது. அதற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி உணர்வு முழு வேகமெடுத்தது.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் அருந்ததியர்களின் பிஜேபி ஆதரவு மனநிலை. இயல்பாகவே அருந்ததியர்கள் அதிமுக வாக்கு வங்கியாகதான் இருந்து வந்தனர் என்றாலும், கடந்த சில வருடங்களாக அருந்ததியர்கள் இந்துத்துவ உணர்வூட்டப்பட்டுள்ளனர். அருந்ததியர் வாக்குவங்கியை குறிவைத்துதான் எல். முருகன் பிஜேபியின் மாநிலத் தலைவராக்கப்பட்டார். மேலும், அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள 3 சதவீத உள் இடஒதுக்கீடு, அவர்களை பிஜேபியின் விசுவாச வாக்குவங்கியாக மாற்றியிருக்கிறது.

கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சாதி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் என்றால், அந்த நிலப்பரப்பின் கடைநிலைச் சாதி அருந்ததியர்கள். கொங்கு வேளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் கூட்டு ஆதரவுதான், கொங்கு மண்டலத்தில் அதிமுக-பிஜேபி கூட்டணியின் வெற்றிக்கு முழுக் காரணம்.

கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றிப்பெற்ற இடங்களில் திமுக கூட்டணி இரண்டாவதாக வந்துள்ளதே, திமுகவிற்கும் மக்கள் வாக்களித்திருக்கிறார்களே. அவர்களையும் சேர்த்து குற்றவாளிகள் ஆக்களாமா என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் வேளாளக் கவுண்டர்களும் அருந்ததியர்களும் மட்டும் வாழவில்லை. வேட்டுவ கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுகள், கொங்கு நாட்டு செட்டியார்கள், சைவப் பிள்ளைகள், நாடார்கள் மற்றும் மத சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். அந்த நிலப்பகுதியின் பெரும்பான்மை சாதிகளான வேளாளக் கவுண்டர்களும் அருந்ததியர்களும் அதிமுகவை ஆதரிக்கும்போது, இயல்பாகவே மற்றவர்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள். இதுதான் திமுகவும் அங்கு வாக்குகள் பெற்றதற்கு காரணம்.

உதாரணமாக, தொண்டை மண்டலத்தில் பெரும்பான்மையாக வாழம் வன்னியர்கள், இந்த தேர்தலில் அதிமுகவின் விசுவாச வாக்குவங்கியாக மாறியிருந்தனர். அதே சமயம், அந்த நிலப்பகுதியில் கடைநிலையில் வாழும், மற்றொரு பெரும்பான்மை சாதியான பறையர்கள் திமுகவிற்கு வாக்களித்ததாலும், மற்ற சிறுபான்மை சாதியினரும் திமுகவிற்கு வாக்களித்ததாலும் அதிமுகவின் வெற்றி இங்கு தடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில். டாக்டர் ராமதாஸ் தமிழ் நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்றாரே, அதன் பின்னணி இதுதான். அதற்கு முன்புவரை, தமிழ் நாட்டை வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என இரண்டாக பிரிப்பதுப் பற்றிதான் ராமதாஸ் பேசி வந்தார். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் அமோக அதிமுக ஆதரவையும் அதற்கு பின்னால் இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் பார்த்துதான் ராமதாஸ் கொங்கு மண்டலத்தை தனியாகப் பிரிக்க வேண்டும் என்றார். கொங்கு மண்டலத்தையும் வடதமிழ்நாட்டுடன் சேர்த்துப் பிரித்தால், என்றைக்கும் வன்னியர்கள் ஆட்சி ஆதிகாரத்திற்கு வரமுடியாது என்று ராமதாஸ் நினைத்திருப்பார் போலும்.

ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மனநிலையை வைத்துதான் அந்த சமூகம் மதிப்பிடப்படுகிறது. ‘கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’ என்று தற்பெருமைக் கொள்ளும் ஒரு நிலப்பகுதியின் பெயரை, தனது பெயராக தாங்கும் கொங்கு வேளாள கவுண்டர்கள், ஆட்சி மாற்றத்திற்கு எதிராக வாக்களித்திருப்பதால், கொங்கு மண்டலத்தையே குற்றவாளி என கருதுவது இயல்பான ஒன்றுதான்.

  • வசீகரன்