கர்ணன் திரைப்பட வெற்றியும் டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியும்

HOME

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக கர்ணன் திரைப்படம் வெளிவந்தது. அது வெளிவருவதற்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு, வெளிவந்ததும் பல விவாதங்களை எழுப்பியது. அதில் முக்கியமானது, அந்த படம் காட்டும் சம்பவங்கள். அது 1997-ஆம் ஆண்டு நடந்ததாக காட்டப்பட்டது. அது எதேச்சையாக காட்டப்பட்டதா அல்லது உள்ளோக்கத்துடன் காட்டப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்தது. அதில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு ஒரு சமரசத்தை ஏற்படுத்தினார். அதற்கு பின்னும் கூட அந்த திரைப்படம் அது காட்டும் சம்பவங்கள் நிகழ்த காலகட்டத்தை சரியாக குறிப்பிடவில்லை பொத்தாம் பொதுவாக 1990-களின் பிற்பகுதி என போடப்பட்டது. அது கர்ணன் பட இயக்குனர் மாரி.செல்வராஜுக்கு ஒரு ரகசியமான உள்நோக்கம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

கர்ணன் திரைப்படம் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவர சம்பவங்களின் நிழலைக் கொண்டுப் புனையப்பட்ட திரைப்படம். குறிப்பாக ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கும் கொடியன்குளம் கிராமத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த சம்பவம் 1995-ல் நடந்தது.

1996-2001- கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிகாலம். 1991-1996- ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிகாலம். ஜெயலலிதாவின் இந்த ஆட்சி காலத்தில்தான் கொடியங்குளம் சம்பவம் நடந்தது,. இந்த ஜெயலலிதா ஆட்சிகாலம் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிமானது. ஜெயலலிதா வாழ்க்கையிலும் முக்கியமானது. அந்த ஆட்சி காலம் சுடுகாட்டிலும் ஊழல் செய்த காலம். அந்த ஆட்சி காலத்தில் ஜெயலலிதா சேர்த்த சொத்துகளுக்காக போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில்தான், தனது கடைசிகாலத்தில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைச் சென்றார். சசிகலாவும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பியிருக்கிறார்.

அந்த காலக்கட்டத்தில் சசிகலாவின் குடும்பம், ஜெயலலிதாவை தங்களது குடும்ப உறுப்பினராக காட்டிக்கொள்ள முயற்சி செய்தது. சசிகலா தனது அக்காள் மகன் சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக்கி, நடிகர் சிவாஜியின் பேத்திக்கு திருமணம் செய்துவைத்தனர். அந்த திருமணத்தின் ஆடம்பரத்தையும் படோடோபத்தையும் கண்டு தமிழக மக்கள் அதிர்ந்துப்போனார்கள்.

இந்த சூழ்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்த முக்குலத்தோர் ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் இருப்பதாக உணர்ந்தார்கள். அது ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்த முக்குலத்தோர்-பள்ளர் முரண்பாட்டை மேலும் கூர்மையாக்கியது. அந்த காலக்கட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் முக்குலத்தோர் சாதி உணர்வு தூக்கலாக இருந்தது. கொடியங்குளத்தில் நடந்ததுப் போன்ற சம்பவங்கள் அதன் வெளிப்பாடுதான்.

அதன்பின் வந்த 1996- பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது. அதே சமயம், அந்த தேர்தலில் கொடியங்குளம் கிராமத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றிப் பெற்றார். 1996-க்கு பின்னும் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர்-பள்ளர் சாதிய மோதல்கள் ஓயவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்டிருந்த முக்குலத்தோர் சாதி உணர்வு தாக்கத்தை, சரி செய்ய திமுக அரசிற்கு கொஞ்ச காலம் பிடித்தது. இதற்கிடையில், மாவட்டங்களுக்கும் போக்குவரத்து கழகங்களுக்கும் வைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்கள் சாதிய அடையாளமாக பார்க்கப்பட்டன. வீரன் சுந்தரலிங்கனார் போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏறமாட்டோம் என புறக்கணித்து முக்குலத்தோர் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரத்திற்கு வைக்கப்பட்ட பசும்பொன் தேவர் மாவட்டம் என்ற பெயருக்கு பள்ளர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். முடிவில், திமுக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் வைத்த தலைவர் பெயர்களை நீக்கியது.

இதற்கிடையில், மற்றொரு சம்பவம் நடந்தது. 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுகாக, புதிய தமிழகம் கட்சி திருநெல்வேலியில் பேரணி நடத்தியது. அந்த பேரணியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டிலும் தடியடியிலும் தாமிரபரணி ஆற்றில் விழந்து  17 பேர் உயிரிழந்தனர்.

கொடியங்குளம் சம்பவம் நடந்தது அதிமுக ஆட்சிக்காலம். தாமிரபரணி சம்பவம் நடந்தது திமுக ஆட்சிக்காலம். கொடியங்குளம் சமபவத்தை வைத்து படமெடுக்க விரும்பிய மாரி.செல்வராஜூக்கு, தாமிரபரணி சம்பவத்தை மனதில் வைத்து திமுக ஆட்சிக்காலத்தை குறிப்பிடுவதும் உள்நோக்கமாக இருந்துள்ளது. அதற்கு மற்றொரு காரணம் நிகழ்கால அரசியல்.

பள்ளர் சமூக மக்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பாக புதிய தமிழகம் கட்சியை டாக்டர் கிருஷ்ணசாமி உருவாக்கினார். காவல்துறை தாக்குதலுக்கு ஆளான கொடியங்குளம் மக்களுக்கு நீதி வேண்டி நடத்திய போராட்டங்களாலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிளாலர்களின் உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களாலும் புதிய தமிழகம் கட்சி தென் மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றது.

கொடியங்குளம் சம்பவத்திற்கு பின் வந்த 1996- தமிழக பொதுத்தேர்தலில், கொடியங்குளம் கிராமத்தை உள்ளடக்கிய ஒட்டபிடாரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றிப் பெற்றது, அவர் கொடியங்குளம் மக்களுக்காக போராடியதற்கு கிடைத்த வெற்றி. அதன் பின்,2011-ல் மீண்டும் ஒருமுறை அங்கு அவர் வெற்றிப் பெற்றுள்ளார்.

பின்னர் வந்த காலங்களில், தொடர்ந்து திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி வைத்து வந்த புதிய தமிழகம் கட்சி, கடந்த 2016-பொது தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது. அதனால், தென் மாவட்டங்களில் அதிமுகவை விட திமுக கூடுதல் இடங்களில் வென்றது. அதற்குபின் புதிய தமிழகம் கட்சி திமுகவிடம் இருந்து விலகி பிஜேபி மற்றும் அதிமுகவின் பக்கம் சென்றது. கடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.

பள்ளர் சமூகத்தினர் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற அழைக்கவேண்டும். அதை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். அத்துடன் தங்களை பட்டியலின வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இதை துருப்புச் சீட்டாக ஆர்எஸ்எஸும் பிஜேபியும் கையில் எடுத்துக் கொண்டன. மோடியும், அமித் ஷாவும் தமிழகம் வந்தபோது, பள்ளர்கள் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அறிவிப்போம் என மேடையிலேயே அறிவித்தனர். அறிவித்ததுபோலவே செய்தனர். இது பள்ளர் சமூகத்தினரில் ஒரு பகுதியை பிஜேபியின் விசுவாச வாக்குவங்கியாக மாற்றியது.

பள்ளர் சமூகத்தில் ஏற்பட்ட இந்த மனநிலை மாற்றத்தைப் பார்த்து, தனது கட்சியின் வாக்குவங்கியை இழந்துவிடுவோம் என்பதைப் தெரிந்துக் கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி, பெயர் மாற்றம் மட்டும் போதாது, பட்டியலின வெளியேற்றம் வேண்டும் என்று முறையிட்டார். அதை சாக்காக வைத்து பிஜேபி-அதிமுக கூட்டணியில் இருந்தும் விலகினார். இந்த தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டியிட்டது. பள்ளர் சமூக மக்கள் வாழும் 60 இடங்களில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் கர்ணன் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படம் கொடியங்குளம் சம்பவ நினைவுகளையும், பள்ளர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகள் பற்றியும் பெதுவெளியில் பேச வைத்தது. இது பள்ளர்களின் வாக்குகளை ஒன்று திரள வைத்திருக்க வேண்டும். அந்த வாக்குகள் புதிய தமிழகம் கட்சிக்கு கிடைத்திருக்க வேண்டும். அதே சமயம், கடந்த 2016 தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுக கூட்டணியில் இருந்ததால் திமுகவிற்கு கிடைத்த பள்ளர்களின் வாக்குகள், இந்த முறை திமுகவிற்கு எதிராக திரும்ப வேண்டும். இவை அனைத்தும் ஒருகாலத்தில் புதிய தமிழகம் கட்சியில் இருந்த இயக்குனர் மாரி.செல்வராஜின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. ஒட்டபிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி சுமார் 6,000 வாக்குகளே பெற்றார். ஒட்டபிடாரத்தின் பக்கத்து தொகுதியான டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டியில், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் அய்யர் என்பவரும் சுமார் 6,000 வாக்குகளே பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்களும் மிக குறைவான வாக்குகளே பெற்றுள்ளனர்.

பள்ளர் சமூகத்தினர் இந்துத்துவ மனநிலைக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையே அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது. சமஸ்கிருத நூல்களில் ஆரியர்களின் தலைவனாக சொல்லப்படும் தேவேந்திரன் பெயரை தங்களது சாதியின் பெயராக கொள்ள விரும்பும் அவர்களின் கோரிக்கையே அவர்களை இந்த வலையில் சிக்கவைத்தது. கர்ணன் திரைப்படத்திலும் இந்த சமூக உளவியல் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். சகஜமாக மக்கள் வைத்துக் கொள்ளாத துரியோதனன்,அபிமன்யு, திரௌபதி பேன்ற பெயர்களை பயன்படுத்தியுள்ளார். மகாபாரதத்தில் கர்ணன் மீன் மீது அம்பெய்யும் பேட்டியில் கலந்துக் கொள்ள முயற்சிக்கும் காட்சியும், எதார்த்தமாக்கி காட்டுகிறார் மாரி.செல்வராஜ். இதற்கு அவர் புத்த நூல்களை உதாரணமாக காட்டலாம். மகாபாரத்திற்கு பதினெழுக்கு மேற்பட்ட பிரதிகள் இருப்பதாக சொல்வார்கள். அதில் புத்த பிரதியும் ஒன்று என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இன்றைக்கு இரண்டு சமூகங்கள் இந்துத்துவ மனநிலைக்குள் விழந்திருக்கிறார்கள். ஒன்று தென் மாவட்டத்தில் பள்ளர்கள். இரண்டாவது வட மாவட்டத்தில் வன்னியர்கள். 18 புராணங்களில் கடைசி புராணமான வன்னிய புராணம் தங்களுடையது என வன்னியர்கள் பெருமைக் கொள்கிறார்கள். இந்த புராணம் அக்கினியில் பிறந்த ருத்திர வன்னியன் தேவேந்திரனின் மகளான மந்திரமாலையை மணந்தான் என்கிறது. பள்ளர்கள் தங்களை தேவேந்திரகுலம் என்கிறார்கள். இந்த வகையில், பள்ளர்களும் வன்னியர்களும் சம்பந்தி முறையாகிறார்கள். இந்த பின்னணியில்தான்,டாக்டர் ராமதாஸ் ஒரு காலத்தில், தெற்கே பள்ளர்களுக்கு தேள் கொட்டினால், வடக்கே வன்னியர்களுக்கு நெரிக்கட்டும் என்றார் போலும்.

எந்த சமஸ்கிருத பிரதியை நாம் கட்டுடைத்து பயன்படுத்தினாலும், அது முடிவில் பார்ப்பனர்களுக்குதான் பலனளிக்கும் என்பதை இப்போது அவர்கள் மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். பள்ளர்கள் இந்துத்துவ மனநிலைக்குள் விழந்துவிட்டார்கள், பிஜேபியின் வாக்காளர்களாக மாறிவிட்டார்கள்.

கர்ணன் திரைப்படம் வெற்றிப் பெற்றுவிட்டது. ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமி தோற்றுப்போனார்.

  • வசீகரன்