அசாமில் பிஜேபி வெற்றி! இந்துத்துவ பிரிவினையின் வெளிபாடு!

HOME

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் அசாம் மாநிலம் ஒன்றில் மட்டும் பிஜேபி வெற்றிப் பெற்றிருக்கிறது. இது ஏற்கனவே பிஜேபி ஆட்சி செய்து வந்த மாநிலம்தான் என்றபோதும், இங்கு பிஜேபி வெற்றிப் பெற்றிருப்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு காரணம், கடந்த ஒராண்டிற்கு முன் அங்கு நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள். பிஜேபி மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் நேரடியாக பாதிப்பது அசாம் மாநிலத்தைத்தான். ஏற்கனவே, உச்சநீதமன்றத்தால் உத்தரவிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டால், அங்கு பல லட்சம் மக்கள் தங்கள் குடியுரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த சூழ்நிலையில், பிஜேபியால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, இந்திய முழுவதும் பரவிய போராட்ட தீ முதலில் அசாமில்தான் பற்றியது. அது மாதக்கணக்கில் தொடர்ந்தது.  

நம் கண்ணெதிரே, பிஜேபி மீதான மிகப் பெரிய எதிர்ப்புணர்வு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில்,  பிஜேபி தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுவிட்டது.126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்தில் பிஜேபி கூட்டணி 75 இடங்களை பெற்றிருக்கிறது. கடந்த 2016 தேர்தலில் 86 இடங்களில் வெற்றிப் பெற்ற பிஜேபி இந்த தேர்தலில் 11 இடங்களை இழந்தபோதும், ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுவிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் அசாம் மாநிலம் எந்தளவு இந்துத்துவ வகுப்புவாத்ததால் பிளவுப்பட்டுள்ளது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

பிஜேபி 60 இடங்களை கைப்பற்றி தனது கூட்டணியில் அதிக இடங்களை வென்ற கட்சியாக உள்ளபோதும், அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 4 இடங்களை அது தனது கூட்டணி கட்சிகளிடம் இருந்து பெறவேண்டிய நிலையில் உள்ளது, அசாம் கண பரிஷத் 9 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அசாம் கண பரிஷத் ஒரு காலத்தில் அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருந்தது. 1985-இல் உருவாக்கப்பட்ட அந்த கட்சி பிரபுல்லா குமார் மகாந்தா தலைமையில் மாநிலத்தின் இரண்டுமுறை ஆட்சியில் இருந்தது. ஆனால் அசாம் கண பரிஷத், தற்போது தனது கூட்டணி கட்சியான பிஜேபியை விட சிறியக் கட்சியாகிவிட்டது.

பிஜேபி-அசாம் கண பரிஷத் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ்-அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைமையிலான கூட்டணியும், இந்த தேர்தலில் அசாமில் மோதின. இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவு வாக்குகளைப் பெற்றுள்ளன. அதாவது பிஜேபி கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி ஒரு சதவீத வாக்குகளைதான் குறைவாகப் பெற்றுள்ளது. இருந்தபோதும், வெற்றிப் பெற்ற இடங்களைப் பொறுத்தவரை, பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான இடைவெளி மிக பெரியது. அசாம் மாநிலத்தின் புவியியல் மற்றும் சமூகவியல் அமைப்பு இந்த இடைவெளியை உருவாக்கியிருக்கிறது.

2021 அசாம் தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அது இந்த மநில வரலாற்றில் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது.1985-ல் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகவே இருந்து வருகிறது.

1983 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு மிக குறைவாக 30 சதவீதம் மட்டும்தான் இருந்தது. அப்போது அசாமில் மாணவர் கிளர்ச்சி நடத்துக் கொண்டிருந்தது. பங்களாதேஷில் இருந்து வங்காள முஸ்லீம்கள் சட்டவிரோதமாக அசாமில் குடியேறி, அசாம் பூர்வகுடிகளின் வாய்ப்பு வசதிகளை பறிக்கிறார்கள். மாநிலத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அதை மத்திய அரசு கண்டுக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் அசாம் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு  கிளர்ச்சியில் ஈடுப்பட்டது. அசாம் மாணவர்கள் நடத்திய தொடர் பந்தின் விளைவாக கூட்டு வன்முறை, தீவைத்தல் சம்பவங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

1985-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு அசாம் மாணவர் அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. அதன்படி அசாம் மக்களின் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், அசாம் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு, அசாம் கண பரிஷத் என்ற அரசியல் கட்சியாக மாறி தேர்தலைச் சந்தித்தது. ஒப்பந்தத்திற்கு பின் வந்த 1985-தேர்தலில் வெற்றிப் பெற்று அசாம் கண பரிஷத் ஆட்சியில் அமர்ந்தது. மத்திய அரசின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான பிரபல்ல குமார் மகந்தா முதல்வரானார், .   1996- தேர்தலிலும் அசாம் கண பரிஷத் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. அது 1998-ல் பிஜேபியுடன் கூட்டணி அமைத்தது. அந்த கூட்டணி இப்போது வரை தொடர்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அசாம் கண பரிஷத் சுறுங்கிப்போனதுடன், இன்று ஒரு சிறிய கட்சியாக பிஜேபி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதே சமயம், பிஜேபி இன்று ஆளும் கட்சியாகிவிட்டது.

பிரபல்ல குமார் மகந்தா

பங்களாதேஷ் முஸ்லீம்கள் அசாம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறி, மாநிலத்தின் பூர்வகுடி மக்களின் உரிமைகளையும் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கிறார்கள். அவர்களின் குடியேற்றத்தை தடுக்கவேண்டும் என்ற முழக்கத்துடன், அசாம் கண பரிஷத் உருவாக்கிய வாக்குவங்கி தளத்தை, பிஜேபி இந்து-முஸ்லீம் வெறுப்பு அரசியலாக மாற்றி, கைப்பற்றியது. ஏற்கனவே, அசாமில் பழங்குடி முஸ்லீமகளும் பூர்வகுடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இப்போது காங்கிரஸின் வாக்குவங்கி தளமாக உள்ளனர். இத்துடன் போடோ-லாண்ட் பகுதியும் உள்ளது. அங்கு போடோ பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் போடோ-லாண்ட தனி மாநிலம் வேண்டி போராடினர். பின்னர் அவர்களும் மத்திய அரசுடன் சமரசம் செய்துக் கொண்டு, ஜனநாயகவழிக்கு திரும்பியிருக்கிறார்கள். அங்கு செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சிகளான யுனைடெட் பிபிள்ஸ் லிபரல் கட்சி, பிஜேபி கூட்டணியில் உள்ளது. போடோ மக்கள் முன்னணி காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

அசாம் அரசியலில் புவியியல், புள்ளியியல் மற்றும் சமூகவியல் அமைப்பு முக்கிய பாங்காற்றுகிறது. லோயர் அசாம், தெற்கு அசாம் மற்றும் மத்திய அசாம் பிராந்தியங்களில் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. இங்கு காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. இங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

வாக்குகள் குறைவாக பதிவாகிய மேல் அசாம், வடக்கு அசாம் மற்றும் மலை மாவட்டங்களில் பிஜேபி அதிகமான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதே சமயம், காங்கிரஸ் கூட்டணியுடன் ஒப்பிடுகையில், பிஜேபி மாநிலம் முழுவதிலும் பரவலாக இடங்களைப் பெற்றிருக்கிறது. கடந்த 2016 தேர்தலிலும் வாக்குப்பதிவு நிலவரமும், வெற்றி வாய்ப்பும் இந்த தேர்தலை ஒத்ததாகவே இருந்துள்ளது.

சர்பானந்தா சோனோவால் – ஹிமாந்த பிஸ்வா சர்மா

சமீபத்திய ஆண்டுகளில் மிக ஆழமான அரசியல் மாற்றங்களுக்கு உள்ளான மாநிலங்களில் அசாம் ஒன்றாகும், அசாம் கண பரிஷத்துடன் கூட்டாக வளர்ந்த பிஜேபி, இன்று  அதை முந்திவிட்டது. காங்கிரஸ் செல்வாக்குடன் இருந்த பகுதிகளில் இப்போது பிஜேபி செல்வாக்கு பெற்றுவிட்டது. காங்கிரஸ் எல்லா மநிலங்களிலும் செய்யும் அதன் வழக்கமான தவறுகளை இங்கும் செய்துள்ளது. அதாவது மாநில தலைமைகளை நிர்வாகிக்க தெரியாதத் தடுமாட்டம். அதனால்தான்,  கடந்த ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா, தற்போது பிஜேபியில் இணைந்து முதல்வராகி விட்டார். அதே சமயம், கடந்த பிஜேபி ஆட்சியில் முதல்வராக இருந்த சர்பனந்தா சோனாவால் கழற்றிவிடப்பட்டுள்ளார். பழங்குடி சமூகத்தை சேர்ந்த சர்பானந்தா சோனோவாலை விலக்கிவிட்டு. உயர் சாதி பார்ப்பனர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவை முதல்வர் ஆக்கியதன் மூலம், இந்துத்துவா அசாமில் தனது இறுதி இலக்கை எட்டியிருக்கிறது.

  • ராகுல் யோகி