மோடிக்கு இனி தாடி தேவையில்லை! – வங்காள தேர்தல் முடிந்துவிட்டது

HOME

சின்ன ட்ரிம் செய்த தாடியுடன் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஓராண்டாக நீளத் தாடி வளர்த்து வருகிறார். அவரது தாடி ஒரே சீராக வளரவில்லை என்றாலும், சிரமப்பட்டு நீளமாக தாடி வளர்த்திருக்கிறார். அது இந்துத்துவ சக்திகளான பிஜேபியும் ஆர்எஸ்எஸும் மேற்கு வங்கத்தின் மீது போர்த் தொடுக்க முடிவெடுத்ததன் அடையாளம்தான். ஆம், அவர்கள் போர்த்தான் தொடுத்தார்கள்.

ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில், பிஜேபியும் ஆர்எஸ்எஸும்  மேற்கு வங்கத்தை தங்களது போர் களமாக தேர்வு செய்தன. மத்திய அரசின் முழு அதிகாரமும் வங்காளத்தின் மீது பாய்ந்தது. தேர்தல் ஆணையம், துணை ராணுவப் படை மற்றும் பணபலம் என அனைத்தையும் பிரயோகித்தனர்.  அதிகார ஆசை காட்டியும், சிபிஐ விசாரணையில் இருக்கும் ஊழல் வழக்கைக் காட்டியும், திணமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களை பிஜேபி தனக்குள் இழுத்து மம்தா பானர்ஜியை ‘தனிமரம்’ ஆக்கிய பின், பிஜேபி தேர்தல் களத்தில் இறங்கியது.

ஆர்எஸ்எஸும் பிஜேபியும் மேற்கு வங்கத்தை போர்களமாக தேர்வு செய்ததும், அவர்கள் முதலில் குறிவைத்தது வங்காளத்தின் தனித்தன்மையான பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் சிந்தனை வளத்தைத்தான். அவர்கள் அதை இந்து மயமாக்க வேலையில் இறங்கினார்கள். அவர்களின் இந்த வேலை, முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியை ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வைத்ததில் இருந்துத் துவங்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரனாப் முகர்ஜி இந்துத்துவம் பேசும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்துக் கொண்டதும், ஜனசங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவுகளை விளம்பரப்படுத்தி, வங்காளதில் தனக்கிருந்த வேர்களை இந்துத்துவம் வங்காள சிவில் சமூகத்திற்கு நினைவூட்டியது.

சியாம பிரசாத் முகர்ஜி

அடுத்ததாக, இந்துத்துவம் வைத்தக்குறி, மேற்கு வங்கத்தின் பெருமைக்குறிய அடையாளமான விஷ்வ பாரதி பல்கலைக்கழகம். அதன் துணை வேந்தராக ஆர்எஸ்எஸ் தங்களது ஆளை நியமித்து, அதை இந்து கலாச்சாரத்திற்கு மாற்ற முயன்றது. இரவீந்தரநாத் தாகூர் முதலில் சாந்தி நேகேதன் என்ற பள்ளியாக துவங்கி, பின்னர் அதை விஷ்வ பாரதி பல்கலைக்கழகமாக மாற்றினார். சுவர்களுக்கு இடையில் அடைக்கப்படாத திறந்தவெளி கல்விமுறையை, தாகூர்  அந்த பல்கலைக்கழகத்தின் மரபாக்கி உள்ளார். அது கலை,பண்பாடு மற்றும் இலக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தும் பல்கலைக்கழகம். தேர்தலுக்கு முன்பாக மோடி செய்த முதல் பயணத்திலேயே, மோடி விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார். அதன் பின்தான் மோடி நீண்ட தாடி வளர்க்கத் துவங்கினார். தாகூரைப் போலவே, மோடி மரத்தடியில் அமர்ந்து பத்தகம் படிப்பது, திறந்தவெளியில் வாத்து மேய்ப்பது, மயிலுக்கு இரைப்போடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

இப்படி வங்க கலாச்சார மாறுவேடத்துடன் தேர்தல் களத்திற்கு வந்த பிஜேபியை வீழ்த்துவதற்கு, மம்தா பானர்ஜி பிஜேபியை ‘ஆந்நியர்கள்’ என்று அழைத்தார். மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸில் பயன்படுத்தப்பட்ட இந்த துணை பிராந்திய தேசிய உணர்வு,  பிஜேபியின் இந்துத்துவ தேசிய அரசியலுக்கு கடுமையான போட்டியாக அமைந்தது.

2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் அற்புதமான வெற்றிக்கு, ம்மதா பானர்ஜியின் புகழ்மிக்க ஆளுமை காரணமாக இருக்கலாம். மம்தா பானர்ஜியே தனது கட்சியின் விளம்பர முகமாக இருந்து வருகிறார்.  பிஜேபி தனது முழு அரசியல் பலத்தையும் அவருக்கு எதிராக நிறுத்தியபோதும், ம்மதா பானர்ஜியின் புகழ் எப்படி இத்தகைய அற்புதமான வெற்றியை ஈட்டயது என்பதை நாம் புரிந்துக் கொள்வது அவசியம்.

மம்தாவின் அரசியல் வலது அல்லது இடது என வைப்படுத்த முடியாத ஜனரஞ்சக அரசியல். இந்த ஜனரஞ்சக அரசியல்  என்பது அரசியல் கோட்பாடுகளில் ஒரு மலிவான வகைதான் என்றபோதும், இந்தகைய வெகுஜன அரசியல் பாணிகள் இந்திய அரசியலில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி முன்வைத்த ஜனரஞ்சக அரசியல் விமர்சனங்களின் வேறுபாடுகளை நாம் கவனிக்க வேண்டும்.

மம்தா பானர்ஜியின் ‘ஆந்நியர்கள்’ என்ற ஜனரஞ்சக பிரச்சாரத்தை,  இரண்டு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் தந்திரமாக பார்க்கலாம். முதலாவதாக, அவர் ‘மற்றவர்கள்’ என்று குறிப்பிட்டது, சில தனித்துவமான பண்புகள் கொண்ட மனிதர்களை  வேறுப்படுத்திக் காட்டுவதற்காக. அதாவது, மற்றவர்கள் என்பது ‘ஊழல் நிறைந்த உயர் வகுப்பு மனிதர்கள்’ அல்லது ‘கெட்ட எண்ணம் கொண்ட அந்நியர்கள்’ என்று சித்தரிக்கப்பட்டது.

இரண்டாவதாக, திரிணாமுல் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கு, கட்சியின் நிர்வாகம் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் அதன் தலைவர் மம்தா பானர்ஜியை மையம் கொண்டே இருந்தது. பிரச்சாரங்கள் அனைத்திலும் மம்தா பானர்ஜியின் ஆளுமையே விளம்பரப் படுத்தப்பட்டது. இந்த இரண்டு அம்சங்களும் பெரும்பான்மையான வாக்காளர்களை ஈர்த்தது. 

பிஜேபி தனது இந்து தேசியவாதம் என்ற பின்னணியுடன், மம்தா பானர்ஜியின் மீது, ‘முஸ்லீம்களை திருப்தி படுத்துதல்’ மற்றும் ‘மாநில அளவிலான ஊழல்’ என்ற குற்றச்சாட்டுகளை வீசி, மம்தா பனர்ஜியின் ஆட்சிக்கு எதிராக தனது அரசியல் தாக்குதலைத் தொடங்கியது. மம்தா பானர்ஜி அதற்கு எதிராக, கலச்சார தனித்தன்மைக் கொண்ட வங்காள துணை பிராந்திய தேசியத்தை முன்வைத்தார். வங்காளத்தின் வரலாறு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் மதசார்பற்ற மரபு ஆகியவற்றை பிரதிநித்துவப்படுத்துபவர்கள் மேற்கு வங்க மக்கள் என்றார். வங்காள இலக்கியத்தையும் கலாச்சரத்தையும் தனது பிரச்சாரத்தில் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தினார். ராமகிருஷ்ணர், ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், இந்துஸ்தானி இசை கலைஞர் காசி நஸ்ரூல் இஸ்லாம் மற்றும் மேற்கு வங்கத்தின்  செழுமையான அறிவுசார் அடையாளங்களை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசினார்.

வங்காள பார்ப்பனர்களே சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் பசு பிராந்திய பார்பனர்களை பேன்றவர்கள் இல்லை. நீண்டகாலத்திற்கு முன்பே, வங்காள பார்ப்பனர்கள் வைதீக இந்து மதத்தில் இருந்த மூடபழக்க வழக்கங்களுக்கு எதிராக கலகம் செய்தார்கள். ராஜா ராம் மேகன் ராய் பிரிட்டீஷ் அரசிடம் பேசி பெண்கள் உடன்கட்டை ஏறுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவந்தார். ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் விதவைகள் மறுமணம் மற்றும் பெண்கள் கல்விக்காக உழைத்தார். இதையெல்லாம் தாண்டி, சமஸ்கிருத இலக்கியங்களை பயன்படுத்தியே இந்து வைதிக முறைகளை எதிர்த்தது பிர்ம சமாஜம். இந்த பிர்ம சமாஜ சிந்தனை மரபு வங்காள சிந்தனையாளர்கள் மத்தியில் ஆழந்த தாக்கம் செலுத்துகிறது. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த நோபல் பரிசாளர்களான இரவீந்தரநாத் தாகூர், சத்யஜித் ராய், அமர்தியா சென் ஆகிய மூன்று பேரின் குடும்பங்களும் பிர்ம சமாஜக் குடும்பங்கள்.

அதனால்தான், மம்தா பானர்ஜி பிரச்சாரம் முழுவதும், வங்காளிகள் பெருமைக் கொள்ளும் அவர்களுடைய ‘கதாநாயகர்களின்’ பெயர்களை திரும்ப திரும்ப நினைவூட்டினர்.  இந்து மதம், இஸ்லாம் மற்றும் கிருஸ்த்துவம் ஆகியவற்றின் அடையாளங்களையும், வங்காள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பழங்குடி வழிபாட்டு முறைகளையும் குறிப்பிட்டு, வங்காள சமூகம் எந்தளவு மத ஓத்திசைவுக் கொண்ட சமூகம் என்பதைப் பற்றியும் பேசினார்.

வங்காளக் கலாச்சாரம் மற்றும் அந்நியர்கள் பற்றிய தனது கருத்துகளை பிரச்சார வீயுகமாக வகுத்துக் கொண்ட மம்தா பானர்ஜி, மாநிலத்தில் கனிசமாக வாழும் வங்காளி அல்லாதவர்களை அந்நியப்படுத்தாமல் இருப்பதிலும் எச்சரிக்கையாக இருந்தார். அந்நியர்கள் என்று அவர் குறிப்பிடுவது, மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிஜேபி கொண்டுவரும் மக்களைத் தான் என்றும், அது மாநிலத்தில் உள்ள வாக்காளர்களை இல்லை என்பதை அவர் ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்திவிட்டார்.

வங்காள பிராந்திய அடையாளத்தின் அடிப்படையில் மக்களை அவர் கட்டியெழுப்புவதற்காக, பிஜேபியை ‘அந்நியர்கள்’ என பிரபலப்படுத்திய பிரச்சாரம் அவருக்கு கைக்கொடுத்திருக்கிறது. பிஜேபியை ‘உயர் வகுப்பு மனிதர்களின் ஊழல்’ மற்றும் ‘கெட்ட எண்ணம் கொண்ட அந்நியரகள்’ என்று நிறுவதில், மம்தா பானர்ஜி ஒரு அரசியல் கட்சி தலைவராக வெற்றிப் பெற்றிருக்கிறார். காளியை தெய்வமாக வணங்கும் வங்காளிகள், மம்தா பானர்ஜியை தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது கூட, வங்காள பண்பாடு அடையாளம்தான் போலும்.

இவ்வளவு செய்தும் மேற்கு வங்கத்தில் பிஜேபி தோற்றுப்போனது. ஆனால் அது தனது போரை நிறுத்தவில்லை. சிபிஜயை வைத்து மாநில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்கிறது. இனி, வங்காளிகளை தாஜா செய்து வெல்லமுடியாது என்பது பிஜேபிக்கு தெரிந்துவிட்டது. எனவே, இனி மோடிக்கு தாடி தேவையில்லை.

  • ராகுல் யோகி