பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தின் பழங்கதையும் – படிப்பினைகளும்

HOME

டெல்லியில் நடைபெறும் விவசாயப் போராட்டங்கள் துவங்கி இன்றுடன் ஆறு மாதங்களாகிறது. சமகாலத்தில் மிகவும் பிரபலமான இந்த நீண்ட போராட்டத்திற்கு, 1906-ஆம் ஆண்டு நிகழ்ந்த பஞ்சாப் விவசாயிகளின் கிளர்ச்சி என்ன மாதிரியான பாடிப்பினைகளை வழங்கிறது என்று பார்போம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளைநில காலனித்துவ மசோதாவிற்கு எதிராக, பஞ்சாப் மாகாணத்தில் மிக தீவிரமாக நடந்துவந்த விவசாயப் போராட்டங்களை, 1907 மே 26 அன்று இந்திய வைஸ்ராய் லார்ட் மிண்டோ தனது ‘தனியதிகார’ த்தைப் (வீட்டோ) பயன்படுத்தி, சட்டத்தை ரத்து செய்து முற்றுப் புள்ளி வைத்தார். தற்போது போராடும் விவசாயிகள் மோடி முதன்முதல் பதவியேற்ற நாள் என்ற வகையில், கடந்த மே 26 ம் தேதியை கருப்பு தினமாக அறிவித்திருந்தனர். ஆனால், பஞ்சாப் விவசாயிகளின் வரலாற்றில் அந்த மே-26 ஒரு வெற்றிகரமான தினமாக இருந்துள்ளது.

1907 மே 26 அன்றைக்கு முந்தைய மாதங்களில் பஞ்சாபில் நிகழ்ந்த விவசாயிகளின் கிளர்ச்சியையும், கிராமப்புறங்களில் பரவியிருந்த அதிருப்தியையும் ‘தனியதிகாரம்’ முடிவுக்கு கொண்டுவந்தது. பஞ்சாப் விவசாயிகளை மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நினைப்பை, இந்த விவசாய கிளர்ச்சி கேள்விக்கு உட்படுத்தியது. பிரிட்டிஷ் இந்தியா இராணுவத்திற்கு முதன்மையான ஆட்சேர்ப்புத் தளமாக பஞ்சாப் விவசாயிகள் இருந்ததால், அவர்களை மற்ற இந்தியர்களிடம் இருந்து வேறுப்படுத்திப் பார்த்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

வைஸ்ராய் லார்ட் மிண்டோ

1906-ன் புதிய விளைநில காலனித்துவ மசோதாவிற்கு நிறைவேற்றப்பட்டது, அப்போதைய கிளர்ச்சிக்கான உடனடி ஆத்திரமூட்டலாக அமைந்தது. அந்த மசோதா 1893 பஞ்சாப் விளைநில காலனித்துவ சட்டத்தை திருத்தியது. இந்த சட்டம் நில விநியோகம் மற்றும் நில ஒதுக்கீட்டை நிர்வகிப்பது தொடர்பானது. இதன் மூலம் மேற்கு மாவட்டங்களில் உள்ள பரந்த நிலப் பகுதிகளை, மாகாணத்தின் மத்திய மாவட்டங்களில் இருந்து குடிப்பெயர்ந்த விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏற்கனவே விரிவாக ஆலோசித்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த  நடைமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உத்தியோகபூர்வ உறுப்பினர்களின் பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நிதி ஆணையக அலுவலகம் அவசர அவசரமாக ஒரு தேர்வுக் குழுவை நியமித்து சட்டத்தை நடைமுறைப் படுத்த முயன்றது. அப்போது பஞ்சாபின் தலைமைச் செயலாளராக இருந்த மக்லான் வெளிப்படுத்திய அச்சங்களையும், பஞ்சாப் கவுன்சிலின் மூன்று உறுப்பினர்கள் எழுப்பிய கருத்துவேறுபாடுகளையும் பெருட்படத்தாமல், பிரிட்டிஷ் அதிகாரிகள் மசோதாவை லண்டனில் நிறைவேற்ற முயன்றனர்.

முந்தைய பத்தாண்டுகளில் வழங்கப்பட்டு வந்த மானியங்களுக்கான நிபந்தனைகளை இந்த மசோதா ஒருதலைப்பட்சமாக மாற்ற முனைந்தது. மேலும், நதிநீர் பங்கீட்டிற்கான விகிதங்களை மாற்றி அறிவித்தது. இது  மத்திய மாவட்டங்கள் வழியாக ஓடும்  பாரி தோவப் கால்வாயின் பாசன நிலப்பகுதி விவசாயிகள் மத்தியில் கோபத்திதை கிளப்பியது.

இது மேலும், கடந்த ஆண்டுகளில் தாக்கிய பிளேக் நோய் காரணமாக மன உளைச்சலுடன், சமீபத்திய அறுவடைகளை பாதிக்கும் காரணிகளால் ஏற்பட்ட அதிருப்தியும் சேர்ந்துக் கொண்டது. மேற்கு பஞ்சாபில் உள்ள விவசாயிகளின் மானியங்களை இந்த சட்டம் ரத்து செய்ததும், கிளர்ச்சி வெடிக்கும் சூழ்நிலைக்கு காரணமாக அமைந்தது.

பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் இந்த கிளர்ச்சிக்கு நகர்ப்புற அரசியல்வாதிகள்தான் காரணம் என குறைத்து மதிப்பிட்டனர். 1907-விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்த பேரியர், இந்த போராட்டங்கள் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் கிராமபுறதில் வசிக்கும் படித்த பஞ்சாபியர்களால் நடத்தப்பட்டது என்கிறார். மேலும், இந்திய இராணுவத்தினரிடையே எதிர்ப்புகள் பரவத் துவங்கியதையும், அனைத்து மதக்குழுக்களின் விவசாயிகளும் இந்த போராட்டங்களில் கலந்துக் கொண்டிருப்பதையும் பேரியர் குறிப்பிடுகிறார்.

பஞ்சாபில் விவசாயிகள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் ஒரு மாறுபட்ட வர்க்கமாக இருக்கின்றனர். சர்வதேச சந்தைகளுடன் விவசாய விளப்பொருட்களின் ஒருங்கிணைப்பு அதிகரித்ததும், விளைப்பொருட்களின் விலைவாசி மாற்றங்களும் பலரைப் பாதித்தது. இருந்தபோதும், நிலத்தை இழப்பதற்கான சாத்தியகூறுகளும், நிலத்தை முதன்மையான சொத்தாக அவர்கள் மதிப்பும், பஞ்சாப் விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைத்தது.

லாலா லஜ்பத் ராய்

இந்த கிளர்ச்சி துண்டு பிரசுரங்கள், செய்தி அறிக்கைகள், கார்ட்டூன்கள் மற்றும் உள்ளூர் பத்திரிக்கைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டதுடன், அரசாங்கத்திற்கு மனுக்களாகவும் தரப்பட்டது. பஞ்சாப் மாகணத்தில் உள்ள சங்லா, கோஜ்ரா, அமிர்தசரஸ் மற்றும் பல நகரங்களில் மக்கள் பெரியளவில் போராட்டங்கள் நடத்தினர். பார் கவுன்சில்கள் பல கண்டனக் கூட்டங்களை நடத்தின. அமிர்தசரஸ், லாகூர் மற்றும் ராவல்பிண்டி போன்ற நகரங்கள் கலவரங்களைக் கண்டது. 1907 மார்ச் மாதம் லியால்பூரில் 10,000 பேர் திரண்ட பிரமாண்ட கூட்டத்தில் லாலா லஜ்பத் ராய் மற்றும் சர்தார் அஜித் சிங் உரையாற்றினர்.

விவசாயிகளின் இந்த கிளர்ச்சிக்கு காலனிய அரசாங்கத்தின் பதில் என்ன ?

இந்த விவகாரத்தில் லாலா லஜ்பத் ராய் மற்றும் சர்தார் அஜித் சிங் ஆகியோரின் நுழைவு, இந்த கிளர்ச்சி ஒரு சில படித்த அரசியல்வாதிகளால் தூண்டப்படும்  போராட்டம் என்று குற்றச்சாட்ட அரசாங்கத்திற்கு வாய்ப்பை வழங்கியது. தற்காலிக சமாதான முயற்சிகள் எதுவும் எந்தவொரு சாதகமான முடிவையும் தராதபோது, அரசாங்கம் தனது வழக்கமான ஆயுதமான தேசத் துரோகம் மற்றும் தேச விரோத குற்றச்சாட்டுகளை கையிலெடுத்தது. அதன்படி, லாலா லஜிபத் ராய் மற்றும் சர்தார் அஜித் சிங் நாடு கடத்தப்பட்டனர். பஞ்சாப் முழுவதும் உள்ள  கிராமப்புறங்களில் பரவியிருக்கும் அதிருப்தியை அரசங்கம் கண்டுக் கொள்ளாமல், சில மாவட்டங்களுக்கு கூட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதன் மூலம் விவசாயிகளின் எதிர்ப்புகளை காலனிய அரசாங்கம் பொருட்படுத்தாது என்பது தெளிவானதால் போராட்டம் தீவிரமானது.

சர்தார் அஜித் சிங்

அரசாங்கத்தின் மிக முட்டாள்தனமான செயலை, அரசாங்கம் தங்களை காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்ததாக மக்கள் நினைத்தார்கள். இது ஒரு கொந்தளிப்பான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. கால்வாய் பாசனப்பகுதியில் உள்ள பல்வேறு சாதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் பரஸ்பர வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் மறந்து ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றுப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி, மிகபெரிய விவசாய எழுச்சியை எதிர்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டது.

இறுதியாக, பிரிட்டிஷ் இந்திய காலனிய அரசு, பஞ்சாபில் உள்ள கால்வாய் பாசனப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பிரித்தளிக்க வேண்டிய நதிநீர் பங்கீடு குறித்து ஆய்வு செய்தது. அந்த குழு வழங்கிய அறிக்கையில், மேற்படி சட்டமானது, மேற்கு மாவட்டங்களில் உள்ள கால்வாய் பாசன நிலங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டது. மேற்படி சட்டம் சாதாரன மக்களிடமும் மிக வலுவான எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டது. காலனித்துவ மக்களே ஆனாலும், அவர்களுக்கும் தனியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அரசின் விளைநிலம் வழங்கும் சட்டத்தின்படி ஒதுக்கீடு செய்யப்படும் நிலங்களைப் பெற்றவர்கள், அதை அரசின் அனுமதியுடன் மற்றவர்களுக்கு வழங்கும் உரிமை இருக்க வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.

1906-விவசாயிகளின் டிராக்டர் பேரணி

விவசாயத்திற்கு தேவையான பாசன நீரை வழங்குவதையும், தவறான விநியேகம் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் இந்த குழு முழுமையாக ஏற்றுக்கொண்டது. கிளர்ச்சிக்கு முந்தய ஆண்டுகளில் இந்த பகுதிகளில் விவசாயம் சுதந்திரமாக நடைப்பெற்றதையும், மேற்படி புதிய சட்டம் தேவையற்ற சுமையை ஏற்படுத்தி இருப்பதையும் குழு ஒப்புக்கொண்டது. ஆயினும், பண அபராதம் விதிக்கும் விதிமுறையை மட்டும் தக்க வைத்துக் கொள்ளப் பரிந்துரைத்தது. ‘ஏறக்குறைய எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன’. கிளர்ச்சியை ஏற்படுத்திய சிக்கல்களைக் கையால்வதில் குழு சிந்தனைப்பூர்வமாக அனுகியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் மக்களின் மனநிலையை அறிந்துக் கொண்டது.

இந்த சூழ்நிலையில்தான், பிரிட்டிஷ் இந்திய வைஸ்ராய் லார்ட் மின்டோ தனது ‘தனியதிகார’த்தைப் பயன்படுத்தி, புதிய விளைநில காலனித்துவ சட்டத்தை ரத்து செய்தார். நில ஒதுக்கீட்டு கொள்கையில் மாற்றம், மானியங்களை வழங்குவதில் விவசாயிகள் மீது அக்கறைக் கொண்ட நிலைப்பாடு, பஞ்சாப் விசாயிகளுடனான பேச்சுவார்த்தை விதிமுறைகளில் மறுசீரமைப்பு அவை அனைத்தும் பஞ்சாப் விவசாயிகளின் கிளர்ச்சிக்கு கிடைத்த வேகுமதிகள்.

அதே சமயம், தற்போதைய புதிய வேளாண் சட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டவர்களின் கருத்தும் நோக்கமும் அக்கறையும் என்னவாக இருக்கும் என்று பெரும் சந்தேகங்கள் எழுகின்றன.

சந்தைகள் மற்றும் வணிகர்கள் விவசாயிகள் மீது ஏற்படுத்தும் அழிவின் தாக்கத்தை அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதா ?

இந்தியா போன்ற விவசாய சமூகத்தை பிரதானமாக கொண்ட நாட்டில், விவசாயிகள் மத்தியில் நிலவும் அதிருப்தியின் நீண்டகால சமூக மாற்றங்கள் என்ன ?

மக்கள் இயக்கங்கள் மற்றும் கிராமப்புற மக்கள் எழுப்பிய பிரச்சனைகள் மற்றும் கவலைகளுக்கு அரசாங்கங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது ?

தற்போது டெல்லியில் விவசாயிகள் திரண்டு நடத்திவரும் போராட்டம், கடந்த மே 26 ஆம் தேதியுடன் 6 மாதங்களைக் கடந்திருக்கிறது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சமகால இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தேடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இந்த நீண்ட போராட்டம், எத்தகைய பாடங்களை வழங்குகிறது என்பது போன்ற ஆழமான கேள்விகள் எழுகின்றன.  

இந்த கேள்விகளுக்கு பல்வேறு பதில்கள் இருக்கலாம். ஆனால், மின்டோ பிரபு தனது ஆட்சிக் காலத்தில்  ஒரு முக்கியமான கட்டத்தில் உணர்ந்ததைப் போல – காலனித்துவ அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை விட அதிக அச்சங்கள் எழுப்பும் ஒரு சட்டத்தை  நடைமுறைப்படுத்தாமல்,  அதை கைவிடுவதே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் தங்களது குடிமக்கள் மீது கொண்டிருந்த அக்கறையில், ஒரு துளியளவு  கூட, ஜனநாயக ரீதியாக தேர்ந்தேடுக்கப்பட்ட தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

  • தழுவல் – ராகுல்யோகி

இந்த கட்டுரை தி வயர் மின்னிதழில் பேராசிரியர் இந்து அக்னிஹோத்ரி எழுதிய கட்டுரையைத் தழுவி உருவாக்கப்பட்டது.