ஏழுவர் விடுதலை விவகாரம் கடந்து வந்த பாதை…

HOME

தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் வாழம் 7 பேரை விடுதலைச் செய்வதற்கு, சட்டபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநர் அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார். அதை தொடர்ந்து தமிழக அரசும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த 7 பேர் விடுதலை என்பது சாத்தியமா? எப்படி சாத்தியம்? எப்போது சாத்தியமாகும்? இப்படி பல கேள்விகள் உள்ளன.

அதற்கு இடையிலேயே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் என்.எஸ். அழகிரி, 7 பேரின் விடுதலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் 7 பேரையும் விடுதலைச் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது என பேசியிருக்கிறார். இந்த காங்கிரஸ் கட்சி சமீபத்திய எம்பி தேர்தலிலும், எம்எல்ஏ தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து லாபமடைந்திருக்கிறது. திமுக கூட்டணிக்காகதான் தமிழர்கள் காங்கிரஸிற்கு வாக்களித்திருக்கிறார்கள். அதை மறந்துவிட்டு, தமிழர்களின் உணர்வு சார்ந்து, திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக, எஜமான விசுவாசத்தில் வாலாட்டுகிறது தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி. 

இந்த 7 பேர் விடுதலை என்பது முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்களின் உணர்வுடன் பிணைக்கப்பட்டது. இந்த விவகாரம் எதிரெதிரான திசைகளில் பயணித்து, இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறது. இதன் பிரதானப் பிரச்சனையான ஈழத்தமிழர் விவகாரமும் தமிழக அரசியல் வரலாற்றில் பின்னிப் பிணைந்தது. இந்த 7 பேரின் விடுதலை என்பது, அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்காக நடந்த மக்கள் இயக்கத்தில் இருந்து துவங்குகிறது.

1991 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்கும், தமிழக சட்டமன்றத்திற்கும் சேர்த்து பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. அந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜிவ் காந்தி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் வைத்து கொல்லப்படுகிறார். அவருக்கு குண்டு வைத்த தனு என்ற பெண் அந்த குண்டு வெடிப்பிலேயே இறந்துப் போகிறார். அவருடன் வந்த ஒற்றைக் கண் சிவராஜனும் அவனது கூட்டாளிகளும் பெங்களூரில் வைத்து, சிபிஜயால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். குண்டு வெடிப்பில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்களின் கதை முடிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் இனவுணர்வாளர்கள் சிபிஜயாலும், தமிழக காவல்துறையாலும் பிடித்து சித்தரவதைச் செய்யப்பட்டார்கள். இறுதியாக, அவர்களில் 26 பேர் குற்றவாளிகளாக காட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் 26 பேருக்கும் தடா நிதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரனைகள் நடந்துக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்தது. ஆம், 1991-தேர்தலில் ராஜீவ் காந்தி கொலையின் அனுதாப அலையால், தமிழகத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரானார். மத்தியில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தது. நரசிம்ம ராவ் பிரதமரானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை, இந்திய ராணுவத்தை அனுப்பி கைது செய்ய வேண்டும் என்று, ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஜெயலலிதாவின் அந்த ஆட்சிக்காலத்தில் தமிழ், தமிழினம் என்று யாருமே பேசமுடியாத நெருக்கடி நிலை இருந்தது. தமிழ் மொழி சார்ந்த இலக்கிய கூட்டம் நடத்தியவர்கள் கூட காவல்துறையால் கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள். அதே ஆட்சிக்காலம்தான், ஜெயலலிதா- சசிகலா நடத்திய ஆடம்பர திருமணத்தின் புகழ் பெற்ற ஊழல் ஆட்சிக்காலம். மக்கள் ஜெயலலிதா மீது  கடுமையான கோபங்கொண்டார்கள். அதிமுகவிற்கு எதிராக அதிருப்தி அலை வீசியது. இந்த நிலையிலும் காங்கிரஸ், அதிமுக உறவை முறித்துக் கொள்ளவில்லை. இந்த பிரச்சனையை முன் வைத்துதான் ஜி.கே. முப்பனார் காங்கிரஸில் இருந்து பிறிந்து தமிழ் மாநில காங்கிரஸை துவங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்தார். 1996-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று தமிழகத்தில் ஆட்சியமைத்தது.

இதற்கிடையில், பழ,நெடுமாறன் தமிழர் தன்னுரிமை மாநாடு ஒன்றை நடத்த முயற்சி செய்தார். அந்த மாநாட்டை ஜெயலலிதா அரசு தடை செய்தது. அதன்பின் ஜாரஜ் பெர்ணான்டஸ் டெல்லியில் தனது இல்லத்தில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதற்கு பிறகு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை மெரினா கடற்கரையில், தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் ஜார்ஜ் பெர்ணான்டஸும் பழ.நெடுமாறனும் கலந்துக் கொண்டனர். இந்த பொது நிகழ்வுகளுக்கு பின்புதான், தமிழகத்தில் தமிழர், தமிழர் உரிமைகள், ஈழத்தமிழர் என்று பேசுவதற்கான சூழ்நிலை உருவானது.

1996- தேர்தல் தோல்விக்குப் பின், அதிமுகவும் காங்கிரஸும் பிரியத் துவங்கின. ஆனாலும், ஜெயலலிதா தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிராக பேசிவந்தார். ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு சோனியா காந்தியை விட கூடுதலாக துக்கம் கொண்டாடுபவராக ஜெயலலிதா தன்னைக் காட்டிக் கொண்டார். இது சோனியா காந்திக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே ஒரு ஈகோ பிரச்சனையாக மாறியது. இதன் பிரதிபலிப்பாக, சோனியா காந்தியை, ‘கணவனை இழந்த சோகம் கொண்ட பெண்ணாக’ தெரியவில்லை என்று ஜெயலலிதா பேசும் அளவுக்கு சென்றது.

1998-ல் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதும், அதற்கு எதிரான மக்கள் இயக்கம் பழ.நெடுமாறன் தலைமையில் எழுந்தது. இந்த மக்கள் இயக்கம் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதற்குமான மரணத் தண்டனை எதிர்ப்பு இயக்கமாக மாறியது. இறுதியாக, சென்னையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துக் கொண்ட மரணத் தண்டனை ஒழிப்பு பேரணி ஒன்றை பழ.நெடுமாறன் நடத்தினார். அது உலகளாவிய மனித உரிமை இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. அதன் விளைவாக, ராஜிவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை கைதிகள் விவகாரத்திலும், ஈழத்தமிழர் பிரச்சனையிலும் ஆம்னாட்டிக் இன்டர் நேசன் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தலையிடத் துவங்கின.

இந்த மக்கள் இயக்கத்தின் மூலம் உலகத்தமிழர் பேரவை உருவானது. அதன் பின்னணியில், ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 26 பேருக்கும் வழக்காடும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, வழக்காடுவதற்கான நிதியும் திரட்டப்பட்டது. இந்த குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்காடியது. அதன் மூலம், இந்த 26 பேரில் 19 பேருக்கு முற்றிலும் விடுதலையும், 4 பேருக்கு மரணத் தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மரணத் தண்டனை வழங்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோர் சார்பில் கருணை மனுக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பட்டது. அதில், பெண் என்ற அடிப்படையில் நளினிக்கு மட்டும், சேனியா காந்தி பரிந்துரை செய்ததால், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

1998- நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிஜேபி வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தது. அது பெரும்பான்மையில்லாத ஆட்சி. அதை வெளியில் இருந்து ஆதரித்த ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால்,  அந்த ஆட்சி 13 மாதங்களிலேயே கவிழ்ந்தது. பின்னர், 1999- தேர்தலில் வென்று பிஜேபி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. வாஜ்பாய் பிரதமரானார். ஜார்ஜ் பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சரானார். அப்போது திமுக, பிஜேபி கூட்டணில் இருந்தது. இந்திய அமைதிப் படையால் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, பலவீனமாக்கப்பட்ட விடுதலைப்புலிகள், இந்த காலக்கட்டத்தில் தங்களது ஆயுதப்பலத்தையும், அமைப்பு பலத்தையும் பெருகிக் கொண்டனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் இந்திய இராணுவ அமைச்சராக இருந்தது அதற்கு சாதகமான சூழ்நிலையாக அமைந்தது.

2001-ல் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருகிறது.  2004-ல் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது. இப்போது திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. இந்த ஆட்சி காலத்தில்தான், இறுதிக்கட்ட ஈழ மக்கள் அழிப்பு போர் நடைப்பெறுகிறது. இந்த போரை நடத்த இலங்கை அரசுக்கு பொருள் உதவியும், ஆயுத உதவியும் செய்ததுடன், இராணுவ ரீதியான ஆலேசனையும் தகவல் பரிமாற்றமும் செய்தது இந்திய அரசு. ஈழப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுக் கண்டு தாய் தமிழக மக்கள் கொந்தளித்தனர். பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர். மக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழர்களின் கோபம், வேண்டுகோள், கண்ணீர், இது எதையும் இந்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை.

2009- நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. தமிழ்வுணர்வாளர்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் பெருட்படுத்தாமல், இந்த தேர்தலில் திமுக மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து, அதிமுக கூட்டணியில் இணைந்தது. அதற்கு மாற்றாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது.  அந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களில் வென்றது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியே மீண்டும் அமைந்தது. இந்த தேர்தலுக்கு முன்பு வரை, ஈழ தமிழர் போராட்டத்திற்கும். விடுதலைப் புலிகளுக்கும் எதிராக பேசிவந்த ஜெயலலிதா, இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈழத்தில் நடந்த இன அழிப்பைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களை ஆதரித்தும் பேசினார். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு 11 எம்பிக்கள் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, 2011- சட்டமன்ற தேர்தல் வரை, ஈழத்தமிழர் பிரச்சனையை ஜெயலலிதா விடாமல் பேசி வந்தார். அவர் எதிர்ப்பார்த்து போலவே, 2011- தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெற்ற ஆட்சியமைத்தது.

இந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்ததும், ஈழத்தில் நடந்த இன அழிப்பு தொடர்பாக சர்வதேச நீதி விசாரனை வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ஈழத்தமிழர் இன அழிப்பு தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கெல்லாம், மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவில்லை என்றாலும், தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் ஊக்கம் பெற்றார்கள்.

2011 ஆகஸ்ட் மாதம், நளினியை தவிர, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2011 செப்டம்பர் 9 ஆம் தேதி அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை நாள் குறிக்கப்பட்டது. தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழ்வுணர்வாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர்நீதிமன்றம் 2011 ஆகஸ்ட் 30 ஆம் தேதி மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற 8 வாரங்களுக்கு தடை விதித்தது. இந்த சூழ்நிலையில்தான், இந்த 7 பேரின் விடுதலைக் கோரிக்கை  தீவிரம் பெற்றது. ஜெயலலிதா தனது மாநில ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டு, இந்த 7 பேரின் விடுதலையை சாத்தியமாக்க முயற்சி செய்தார். மூவரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் இயல்புப்படி, அவர் சட்டப் போராட்டத்தில் இறங்கினார். உச்சநிதிமன்றத்தில் வழக்காடினார். அதன் விளைவாக, 2014- பிப்ரவரி 18 அன்று உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, 4 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் அந்த உத்தரவில், முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற, தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்படும் என்றும்,  மத்திய அரசு 3 நாட்களில் பதிலளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலைச் செய்யும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த சமயத்தில், மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்துவிட்டது. மோடி பிரதமராக இருக்கிறார். இதுவரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அந்த கட்சியின் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில், அந்த கட்சியிடமே தயவுத்தாட்சன்யத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இப்போது காங்கிரஸின் எதிர்க்கட்சியான பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது 7 பேரையும் விடுதலை செய்யும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், எதிர்பார்த்ததிற்கு மாறாக, மத்திய பிஜேபி அரசு சிபிஐயை வைத்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, இந்த விவகாரத்தை இழுத்தடிப்பு செய்துவிட்டது.

ஜெயலலிதா இறந்தபின் வந்த எடப்பாடி ஆட்சியிலும், இந்த விவகாரம் பேசப்பட்டது. மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு எப்படி நடந்துக் கொண்டதோ, அப்படிதான் பிஜேபி அரசும் நடந்துக் கொண்டது. இதுவரை இந்த விவகாரம் அவ்வப்போது தமிழர்களின் உணர்வுகளை சீண்டி விளையாடும் அரசியல் ஆட்டமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இந்த விவகாரத்தில் இறங்கியுள்ளது. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும். 

கடந்த ஆண்டு பஞ்சாபில் நடைப்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துக் கொண்ட ராகுல் காந்தி, ‘நான் பஞ்சாப்பிற்கும் தமிழ் நாட்டிற்கும் செல்லும் போது, அந்த மக்கள் என் மீது காட்டும் அன்பு, என்னை ஆழ்ந்த தர்மசங்கடமான துயரத்தை உணரச் செய்கிறது’ என்றார். இது ராஜிவ் காந்தியின் குடும்பமே, இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியின் மரணம் பற்றிய விபரித நினைவுகளில் இருந்து வெளியேறிவிட நினைக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆனால், தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிகாரர்களோ, சமய சந்தர்பம் தெரியாமல், தங்களது எஜமான விசுவாசத்தை  தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

  • கொம்புக்காரன்