சர்ச்சைக்குரிய நீதிபதி அருண் மிஸ்ரா- மனித உரிமை ஆணைய புதிய தலைவர்

HOME

மோடியைப் புகழ்ந்த சர்ச்சைக்குரிய நீதிபதி இப்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு தலைவர்  ஆகியுள்ளர். நீதிபதி அருண் மிஸ்ரா 2020-இல் உச்சநீதிமன்றத்தில் பதவியில் இருந்தபோது, ஒரு சர்வதேச மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை, ‘இந்தியாவிற்குள் செயல்பட்டாலும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற, உலகளவிய சிந்தனைக் கொண்ட தொலைநோக்கு பார்வையாளர்’, என்று புகழ்ந்தவர்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்குமார் மிஸ்ராவை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்த, 5 பேர் கொண்ட தேர்வுக் குழுவில், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில், எதிர்க்கட்சி மல்லிகார்ஜுன கார்கே, என்.எச்.ஆர்.சி நியமனம் குறுத்து தனது அதிருப்தி தெரிவித்துள்ளார். அத்துடன், தனது கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களை முறையாக பதிவு செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்காத, வெறும் நீதிபதியாக மட்டும் இருந்த முன்னாள் நீதிபதியை, என்.எச்.ஆர்.சி.யின் தலைவர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பது, என்.எச்.ஆர்.சி-யின் 27 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். உச்சநீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிதான் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்ற மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2019-ஆம் ஆண்டு பிஜேபி ஒன்றிய அரசால் சர்ச்சைக்குரிய வகையில் திருத்தப்பட்டது. அதன் மூலம், உச்சநீதிமன்றத்தின் எந்தவொரு முன்னாள் நீதிபதியையும் என்.எச்.ஆர்.சி-யின் தலைவராக நியமிக்க அனுமதியளிக்கப்பட்டது. மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்த பதவிக்கு ஒரு நபரை தேர்வு செய்வதில், பிரதமருக்கு கூடுதலான அதிகாரத்தை வழங்கியது.

நீதிபதி அருண்குமார் மிஸ்ரா

அரசாங்கம் விரும்பிய எந்த நீதிபதியையும் தேர்ந்தெடுப்பதற்கு, அரசாங்கத்திற்கு அதிகப்படியான அதிகாரம் வழங்குவது பெரிய ஆபத்து என, மனித உரிமை ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர்.  “இந்த நியமனக் குழுவானது தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தலைமை தாங்க, அரசாங்கத்திற்கு சாதகமான நீதிபதியை மட்டுமே அனுமதிக்கும். இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதபதி தலைமை தாங்குவதுதான், அந்த நிறுவனத்தின் நோக்கத்தைப் பாதுகாக்கும். அதுவே, தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் நீதித்துறை மீதான அரசாங்கத்தின் செல்வாக்கை கட்டுப்படுத்தும். எனவே, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி தலைமை தாங்குவதே சரியானது. 2006-ல் மனித உரிமை சட்டத்தில் இதே போன்ற திருத்தம் முன்மொழியப்பட்ட போது அதை நீதிபதி ஜே.எஸ்.வர்மா எதிர்த்தார். பின்னர், அந்த மசோதா மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்டது. தேசிய மற்றும் மாநில மனித உரிமை நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் அகில இந்திய வலையமைப்பு இப்படி எச்சரித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு குறுகிய பட்டியலை ஒப்பிடுகையில், நீதிபதி அருண் மிஸ்ராவின் பெயர் எந்த மதிப்பும் இல்லாததாகிவிட்டது என்று ஆங்கில தி இந்து நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்காக பரிசிலிக்கப்பட்ட மற்ற இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகளின் பெயர்கள் வெளியில் தெரியவில்லை. இருப்பினும், தற்போது ஐந்து முன்னாள் தலைமை நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஜே.எஸ்.கெஹர், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய் மற்றும் ஷரத் போப்டே ஆகிய இவர்கள் ஐந்து பேரும் வயதின் அடிப்படையில் இந்த பதவிக்கு தகுதிப் பெற்றவர்கள்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவான்ஷ், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோர் அடங்கிய உயர் அதிகாரக் குழு பெயர்களை தேர்வு செய்ய, மே 31 திங்கள் அன்று  மாலை கூடியது.

மல்லிகார்ஜுன கார்கே

இந்த கூட்டம் கூட்டப்படுவதற்கு முன்னரே, எதிர்க்கட்சியை கலந்து ஆலோசிக்காதது குறித்து கார்கே ஆட்சோபனை எழுப்பினார். மேலும், தலித்கள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினர் சமுகங்களைச் சேர்ந்த எந்தவெரு நபரின் பெயரும்  தேர்வு பட்டியலில் இல்லாதது குறித்தும், கூட்டத்தில் பேசும்போது கார்கே கேள்வி எழுப்பினார். மனித உரிமை ஆணையம் கையாளும் பெரும்பாலான புகார்கள், மேற்கண்ட சமூகங்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையவை. அதனால், குறைந்தபட்சம் அந்த சமூகங்களின் ஒரு பிரதிநிதியாவது இருக்க வேண்டும் என்று கார்கே வாதிட்டார். பின்னர் அவர் தனது கருத்து வேறுபாட்டை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ததுடன், அதையே பிரதமருக்கு ஒரு கடிதமாகவும் அனுப்பினார்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு, எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த சில பெயர்கள் குறித்து பரிசிலிக்க, ஒரு வார காலத்திற்குள் குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கார்கே தனது குறிப்பில் பதிவு செய்தார். ஆனால் அது வீணானது, ஒன்றிய பிஜேபி அரசு அதை சிறிதும் பெருட்படுத்தவில்லை.

அருண் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில், அவர் ஒன்றிய பிஜேபி ஆட்சியாளர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் வகையில் அடிக்கடி தீர்பளித்துள்ளார். தி வயரின் சட்ட ஆசிரியர் வி. வெங்கடேசன் எழுதியது போல, இந்தியாவின் அரசியல் ரீதியாக மிக முக்கியமான, குறிப்பிடத் தக்க சில வழக்குகள் அவரது பெஞ்சில் இருந்தன. அந்த வழக்குகள் வேண்டும் என்றே அவரது அமர்வுக்கு மாற்றப்பட்டன. மனித உரிமைகளை பாதிக்கும் ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கு குறித்த மிஸ்ராவின் தீர்ப்பு ஒன்றே, அவர் தேசிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லை என்பதைக் காட்டுகிறது.

ஹரேன் பாண்ட்யா

ஹரேன் பாண்ட்யா குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது, அமைச்சராக இருந்தவர். மோடிக்கும் பாண்ட்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதல் வழுக்கிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திலும், குஜராத் கலவரத்திலும் மோடிக்கு இருக்கும் தொடர்பை, பாண்ட்யா வெளியில் கசிய விடுகிறார். அதனால், பாண்ட்யாவை மோடி கட்சியை விட்டு நீக்கினார். அதன்பின், பாண்ட்யா ஆர்எஸ்எஸ் தலைமையிடம் முறையிட்டார். ஆர்எஸ்எஸ் பாண்ட்யாவிற்காக மோடியிடம் சமரசம் பேசுகிறது. ஆனால், மோடி அதற்கு பணியவில்லை. பின்னர், ஆர்எஸ்எஸ் பாண்ட்யாவை டெல்லிக்கு மாற்றும் உத்தரவு பாக்ஸ் மூலம் கிடைத்த மறுநாளே பாண்ட்யா கொலைச் செய்யப்பட்டார். குஜராத் போலீசாரும் சிபிஐயும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, லஷ்கர் ஏ தூய்பா மற்றும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் ஆகியேரின் கூட்டு சதியே பாண்ட்யாவின் கொலை என அறிவித்தன. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு பின், குஜராத் உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலைச் செய்தது. இந்த வழக்கே மக அபத்தம். விசாரணையை சொதப்பி விட்டிருக்கிரார்கள். வேண்டுமென்றே சில பேரை மட்டும் விசாரணை வளையத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பலர் தேவையில்லாமல் பெரும் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கடுமையாக குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு அரசு தரப்பில் உச்சநீதமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்டு, அருண் மிஸ்ரா அமர்வுக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு அவர் தண்டனை வழக்கி தீர்பளித்தார். இது மோடியை மகிழ்விக்கும் தீர்ப்பு என்று வெளிப்படையாகவே தெரிந்தது.  

பாண்ட்யா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

நீதிபதி மிஸ்ரா 2020 செப்டம்பர் 2 அன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், லுடீயன்ஸ் டெல்லியில் உள்ள அவரது உத்தியேகபூர்வ பங்களாவில் இருந்து அவர் இன்னும் வெளியேறவில்லை. காலி செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் இருந்தும் அவர் காலி செய்யவில்லை. தற்போது அவர் தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், அவர் அந்த பங்களாவிலேயே தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு முன் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தந்து, இவர் 2020 டிசம்பரில் ஓய்வு பெற்றார். அன்றில் இருந்து காலியாக இருந்த இந்த பதவி, இப்போது நீதிபதி அருண் மிஸ்ராவைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகம் ஒருவகை இழுத்தல் தள்ளல் கோட்பாட்டைக் கொண்டது. இந்தியாவில் ஒவ்வொரு தன்னாட்சி பெற்ற அமைப்பும் மற்றொரு அமைப்பை கேள்வி கேட்கவும், கண்காணிக்கவும், ஒப்புதல் வழங்கவும் அதிகாரம் பெற்றிருக்கும். ஆனால், தற்போது இருக்கும் பாசிச இந்துத்துவ ஒன்றிய அரசானது, இந்திய ஜனநாயகத்தின் அனைத்து தன்னாட்சி பெற்ற அமைப்புகளின் அதிகாரத்தையும், ஒரே நபரின் கைகளில் குவித்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்கி வருகிறது.

  • ராகுல் யோகி

தி வயர் மின்னிதழில் வந்த கட்டுரையை தழுவி உருவாக்கப்பட்ட கட்டுரை இது.

நன்றி- TheWire

https://thewire.in/government/controversial-judge-who-praised-modi-to-be-nhrc-chief-opposition-leader-dissents