காங்கிரஸின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்திதான் பொறுப்பா ? பீகாரில் இருந்து ஒரு பதில் !

HOME

காங்கிரஸின் அவலநிலைக்கு ராகுல் காந்தியைப் பொறுப்பாக்குவது நியாயமற்றது.

காங்கிரஸின் வீழ்ச்சி 1980-களில் தொடங்கிவிட்டது. ராகுல் காந்தி அரசியல் களத்திற்கே வராத 1990-களின் முற்பகுதியிலேயே, காங்கிரசின் வீழ்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

 பழமைவாய்ந்த மிகப்பெரிய கட்சியான காங்கிரஸின் அவலநிலையை, பொதுவாக இந்தி பேசும் மையப்பகுதியில், அதிலும் குறிப்பாக பீகாரின் சமீபத்திய வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்தால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 முக்கியத் தலைவர்கள் எழுப்பிய கேள்விகள் நியாயமற்றதாகத் தோன்றுகிறது.

பீகாரில் லாலு பிரசாத் யாதவ் 1990-ல் முதலமைச்சர் ஆவதற்கு முன்னர், பல மாநிலங்களைப் போலவே, பீகாரும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. பீகாரில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி 1980-களில் தொடங்கிவிட்டது என்பதற்கு அழுத்தமான சான்றுகள் உள்ளன. 1990-களின் முற்பகுதியில் ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அரசியல் களத்திலேயே இல்லை. 1990-களுக்குப் பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையின் கீழ் பீகாரில் காங்கிரஸ் ஓரளவு மீண்டுவந்தது என்பதற்குப் போதுமான, அழுத்தமான சான்றுகள் உள்ளன.

ராகுல் – சமீர் குமார் சிங்

‘ராகுலின் தலைமை குறித்து கேள்விகளை எழுப்பும் ‘ஜி-23 தலைவர்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள், இன்றைய யதார்த்த நிலையின் உண்மையைப் பார்க்கவில்லை. உண்மையில், காங்கிரஸ் பலமாக இருந்த காலங்களிலும் கட்சியால் பயனடைந்தவர்கள் இவர்கள்தான். காங்கிரஸின் பலவீனத்திற்கு இவர்களும் இவர்களுடைய ஆசைகளும்தான் உண்மையான காரணமாக இருக்கின்றன. அதிக நேரத்தை வீணாக்காமல், ராகுல் திரும்பவும் காங்கிரஸின் தலைவராகி, நிலமையை சரிசெய்ய வேண்டும்’ என்று பீகார் காங்கிரஸின் செயல் தலைவர் சமீர் குமார் சிங் கூறுகிறார்.

சமீரின் அவதானிப்புகளை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் மூன்றாம் தலைமுறை காங்கிரஸ் தலைவர். இவரது தாத்தா பனார்சி பிரசாத் சிங், ஜவகர்லால் நேருவின் கூட்டாளியாக இருந்தவர். பனர்ஜி 1950-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் முங்கர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்று, தனது வாழ்நாள் முழுவதும் அந்த தொகுதியின் பிரதிநிதியாக இருந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் ராஜேந்திர சிங் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக இருந்தார். பின்னர் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பீகாரில் அமைச்சராகவும் இருந்தார். ராஜேந்திர சிங்கின் மகன் சமீர் பீகாரில் உள்ள சட்டமன்ற கவுன்சில் (எம்.எல்.சி)  உறுப்பினராக இருக்கிறார். சமீரின் குடும்பம் 108 ஆண்டுகளுக்கு மேலாக, காங்கிரசுடன் இடைவிடாத தொடர்பைக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக கட்சியில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்து, ‘காங்கிரஸிற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை என்னால் கற்பனைசெய்து பார்க்க முடியாது’ என்று சமீர், தி வயர் பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

பீகாரில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கான வரலாற்று காரணங்கள்

பீகாரில் காங்கிரஸ் வீழ்ச்சியின் நிகழ்வு 1980-களில் தொடங்கியது, குறிப்பாக இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு. 1980-களின் பிற்பகுதியில் பகல்பூரில் நடந்த வகுப்புவாதக் கலவரங்கள் மற்றும் பின்தங்கிய வர்க்கங்களுடைய விருப்பங்களின் விளைவாக, எல்.கே.அத்வானியின் தலைமையின் கீழ் இங்கு இந்துத்துவம் தோன்றியது. ஜகந்நாத் மிஸ்ரா, பகவத் ஜா ஆசாத், சத்யேந்திர நாராயண் சின்ஹா, சந்திர சேகர் சிங், ராம் லக்கன் சிங் யாதவ் மற்றும் தாரிக் அன்வர் ஆகியோரைக் கொண்ட பீகார் காங்கிரஸின் அப்போதைய தலைமை, சமூகத்தின் சலசலப்புகளை புரிந்துகொள்ளத் தவறியது. சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை மறைத்து நிலைமையை சமாளித்து வந்தது.

வி.பி.சிங்

இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, 1984 மக்களவை மற்றும் 1985 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற மகத்தான வெற்றியின் தற்பெருமையில் காங்கிரஸ் மூழ்கியிருந்தது. ராஜீவ் காந்தியின் விசுவாசியாக இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங் காங்கிரஸைவிட்டு வெளியேறி, போஃபர்ஸ் ஊழலை முன்வைத்து காங்கிரஸிற்கு எதிரான அரசியல் ஆட்டத்தை ஆடினார். ஆனால் அவருக்கு அப்போது, போஃபர்ஸ் மோசடியைவிட, பின்தங்கிய மக்களின் முன்னேறும் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சோசலிச சக்திகளுடன் கைக்கோர்க்க அவர் செய்த முயற்சிகளே உதவின. வி.பி.சிங்கின் அரசியலால் நிகழ்ந்த விரைவான திருப்பங்கள் பீகாரில் காங்கிரஸிற்கு அழிவை ஏற்படுத்தியது. மண்டல் அரசியலின் மாவீரனும், இந்துத்துவாவின் கடுமையான எதிர்ப்பாளருமான லாலு பிரசாத் யாதவ் 1990-ல் பீகார் முதல்வரானார்.

சமூக சலிப்பு

லாலுவுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த ஜகந்நாத் மிஸ்ரா, பிண்டேஸ்வரி துபே, பவத் ஜா ஆசாத் மற்றும் சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​ஆகிய அனைவரும் ‘உயர்’ சாதியினராக இருந்தனர். லாலு பிரசாத் யாதவ் பொறுப்பேற்ற உடனேயே, காங்கிரஸ் ஆட்சியின்கீழ் முன்னேறிய உயர்சாதியினர் அடைந்திருந்த வாய்ப்பு வசதிகளை மாற்றி, பின்தங்கிய சமூகங்களுக்கு கிடைக்கும்படி செய்தார். அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார கட்டமைப்பில் அடிமட்டத்தில் இருந்த ஓபிசி மற்றும் தலித்துகள் திடீரென உயர் மட்டத்திற்கு மாறியதால், முதல்வர் பதவியை தங்களுக்கு சொந்தமானதாக வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட உயர் சாதியினர், தங்களது மீட்பராக ஆர்,எஸ்.எஸ். மற்றும் பிஜேபியைக் கண்டனர். அந்த சமயத்தில் பிஜேபியும் ஆர்எஸ்எஸும் ராமர் கோயில் அரசியலை தொடர்ந்து தீவிரமாக்கின.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சோசலிஸ்டுகள் பின்தங்கிய சமூகங்களை அணிதிரட்டினாலும், காங்கிரஸ் பாரம்பரியமாக தலித்துக்கள் மற்றும் பின்தங்கிய மக்களிடையே ஒரு சாத்தியமான ஆதரவு தளத்தைக் கொண்டிருந்தது. ஒரு தலித் தலைவரான ஜக்ஜீவன் ராம், யாதவரான முன்னாள் பீகார் முதல்வர் தாரோகா பிரசாத் ராய், ராம் லக்கன் சிங் யாதவ் மற்றும் சீதாராம் கேஸரி ஆகிய பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சோசலிச அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று மருந்தாக பணியாற்றினர்.

ஆனால் லாலுவின் தோற்றம், காங்கிரஸின் உயர்சாதித் தலைவர்களை லாலு குறிவைத்தது மற்றும் மண்டல் குழு ஆணைய அறிக்கைகள் என அனைத்தும் சேர்ந்து ஒ.பி.சி.க்களை லாலுவின் மடியில் தள்ளியது. 1989 பாகல்பூர் கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், மீண்டும் எழுந்துவரும் பிஜேபியை எதிர்ப்பதற்கு, லாலுவை ஒரு சக்திவாய்ந்த தலைவராகப் பார்த்தார்கள். தலித்கள், பின்தங்கிய சமூகத்தினர் மற்றும் முஸ்லிம்கள் தங்களது விசுவாசத்தை காங்கிரசிடமிருந்து லாலுவிடம் மாற்றிக்கொண்டனர். மறுபுறம், ராஜீவ் காந்தியை சூழ்ந்திருந்த பீகாரின் உயர்சாதி சகாக்களால், 1990-ல் ராஜீவ் காந்தி மக்களவையில் மண்டல் ஆணைய அறிக்கையை எதிர்த்துப் பேசுகிறார். இது மேலும், ஓபிசி மற்றும் தலித் மக்களை காங்கிரஸில் இருந்து அந்நியப்படுத்தியது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைச் செய்யப்படுகிறார்.

ஜக்ஜீவன் ராம்

“1980-கள் மற்றும் 90-களில் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் திசையை ஏற்றுக்கொள்வதில், அப்போதைய காங்கிரஸ் தலைமையின் ஒட்டுமொத்த தோல்விதான், காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது” என்று கூறியுள்ள சமீர், மேலும், “அப்போதைய காங்கிரஸ் எனது தாத்தா பனார்சி பிரசாத் சிங் மற்றும் மதுபானியைச் சேர்ந்த எம்.பி விபூதி மிஸ்ரா ஆகியோருக்கு ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் மந்திரி பதவி தர முன்வந்தபோது, அவர்கள் இருவரும் அப்போதைய இளம் தலித் தலைவரான ஜக்ஜீவன் ராமுக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரை செய்தனர். சமூகநீதியில் அப்போதைய காங்கிரஸிற்கு இருந்த ஈடுபாட்ட வெளிப்படுத்த ஜக்ஜீவன் ராம் அமைச்சராவதையே அவர்கள் இருவரும் விரும்பினர்,” என்கிறார்.

“காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்தில் இருந்தே அதன் கொள்கைகளாக இருந்த சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை மீதான தங்கள் உறுதிப்பாட்டை, 1980-கள் மற்றும் 90-களில் காங்கிரஸ் தலைவர்கள் இழந்தனர்” என்று சமீர் ஆதங்கப்படுகிறார். “ஜி-23 தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின்கீழ் கட்சி நல்ல நிலையில் இருந்தபோது அதிகபட்சமாக பயனடைந்தவர்கள். அந்தக் கனவைத்தான் அவர்கள் இப்போது பிரதிபலிக்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு பொறுப்பு ஏற்பதற்கு பதிலாக ராகுலைக் குறை கூறுகிறார்கள்” என்கிறார் சமீர். 

சோனியா-ராகுல் காந்தியின் கீழ் காங்கிரஸின் முன்னேற்றம்

324 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய பீகார் சட்டமன்றத்தில், 1990-ல் காங்கிரஸ் 27 எம்எல்ஏ-களை மட்டுமே கொண்டிருந்தது. அதன் பிறகு காங்கிரஸ் மேலும் வீழ்ச்சியடைந்து 1995 தேர்தலில் ஒற்றை இலக்க எம்எல்ஏ-களைப் பெற்றது. பின்னர் 1990-களின் பிற்பகுதியில் சோனியா காந்தி கட்சியின் தலைமையைக் கைப்பற்றியதும், மெல்ல மெல்ல கட்சி வளர்ச்சியடையத் தொடங்கியது.

பிஜேபியின் சோனியாவை இழிவுபடுத்தும் கடுமையானப் போரில், அதை எதிர்த்தவர் லாலு. அவர் 1998-ல் நாடாளுமன்றத்தில் சோனியா காந்திக்கு ஆதரவாக, “சோனியா எங்கள் பெரிய தியாகி ராஜீவ் காந்தியின் விதவை. சோனியா இந்தியாவின் மருமகள். சோனியா ஜி குறித்து வகுப்புவாத பிஜேபி கேள்வி எழுப்புவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று முழங்கினார். எந்த காங்கிரஸ் தலைவரும் லாலுவைப்போல சோனியாவுக்கு ஆதரவாக, வலுவாகப் பேசவில்லை. அதனால் சோனியாவும் லாலுவை நம்பத் தொடங்கினார். இது 2000-களின் முற்பகுதியில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி சகாப்தத்தை தொடங்கி வைத்தது. காங்கிரஸ் லாலுவுடன் நெருங்கியதும் காங்கிரஸின் பழைய தலைவர்கள் விலகிச் சென்றனர்.

சோனியாவின் “வெளிநாட்டு வம்சாவளி” பிரச்சினையில், மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜெகந்நாத் மிஸ்ரா காங்கிரஸில் இருந்து பிரிந்து ஷரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பகவத் ஜா ஆசாத் பிஜேபி ஆரவாளராக மாறினார். அவரது மகன் கிரிக்கெட் வீர்ர் கீர்த்தி ஆசாத் ஒரு பிஜேபி தலைவர். ஜெகநாத்தின் மகன் ஒரு பிஜேபி எம்எல்ஏ. இப்படி பல காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் பிஜேபி அல்லது ஜனதா தளம் (யுனைடெட்)இல் சேர்ந்துள்ளனர்.

ஆனால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையின் கீழ் பீகாரில் காங்கிரஸ் மெல்ல எழுந்துவந்தது, இது 2004 தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், மன்மோகன் சிங் அரசு உருவாக வழிவகுத்தது. மேலும், இது இரண்டு ஆட்சிக்காலங்கள் நீடித்தது. ஆர்ஜேடியுடனும் பின்னர் இடதுசாரிகளுடனும் கூட்டணி அமைத்ததன் மூலம் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தலில் முறையே 27 மற்றும் 19 இடங்களை வென்றிருக்கிறது.

ராகுலுக்கு முன் செல்லும் பாதை

பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கூறும் பெய்கள் குறித்து கேள்வி எழுப்பி, அவரை இடைவிடாமல் அம்பலப்படுத்திவரும் ஒரே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான். ராகுல் காந்தியின் சமீபத்திய ட்வீட்கள் மற்றும் அறிக்கைகளை பார்த்தோமானல், அவர் மோடியின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்பதையும், எதிர்ப்பது கடினம் என சொல்லப்பட்ட மோடியின் செல்வாக்கின் மீது அவர் தாக்குதல் நடத்திவருவதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.ஜே.டி மற்றும் இடதுசாரிகள் – குறிப்பாக சிபிஐ-எம்.எல்(விடுதலை)- தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்.ஜே.டி. உடன் நெருக்கமாக பணியாற்றுவதே, அவருக்கு முன்னோகிச் செல்ல இருக்கும் ஒரே வழி. பீகாரில் பெட்ரோலிய பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்வுக்கு எதிராக, மக்கள் மத்தியில் ஒரு பயனுள்ள இயக்கத்தை நடத்திவருவது சிபிஐ-எம்.எல். விடுதலை .கட்சிதான்.

  • ராகுல் யோகி

தி வயர் மின்னிதழில் நலின் வர்மா எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட கட்டுரை.

நலின் வர்மா

நலின் வர்மா ஒரு மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் உள்ள இன்வெர்டிஸ் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் வெகுஜன தகவல்தொடர்பு பேராசிரியர் ஆவார்.