பலியாடுகள் இடையே போட்டி; யார் சத்திரியர் – வன்னியர்களா?நாடார்களா?

HOME

தமிழகத்தில் பிஜேபி தனக்கான ஆதரவு தளத்தை சாதியரீதியாக கட்டமைத்து வருகிறது. தமிழக சாதிகளை தனித்தனியாகப் பிரித்து, அந்த சாதிகளை தங்களுக்கான புராதான பெருமைகளைத் தேட வைக்கிறது இந்துத்துவம்.  அந்த தேடலில், ஏற்கனவே பார்ப்பனியம் இட்டுக்கட்டி வைத்திருக்கும் புராணங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றன சாதிகள். அந்த வகையில், இந்துத்துவ பிஜேபியின் வலையில் சிக்கியிருக்கும் சாதிகளில் வன்னியரும் நாடாரும் முக்கியமான சாதிகள். இந்த இரண்டு சாதிகளுக்கு இடையில் ‘யார் சத்திரியர்கள் ?’ என்பதில் நீண்ட காலமாக போட்டி நடந்து வருகிறது.

கடந்த ஆவணி அவிட்டத்தின்போது, காலாச்சார மீட்பு என்ற பெயரில் தங்களை சத்திரியர்கள் என்றுக் கூறிக்கொண்டு. வன்னியர்களும் நாடார்களும் பூணூல் அணியும் விழாக்களை நடத்தினர். அப்போது சென்னையில் நாடார்கள் நடத்தயிருந்த பூணூல் அணியும் விழாவுக்கு எதிராக வன்னியர்கள் காவல்துறையில் புகார் செய்து தடுத்தனர். இந்த இரண்டு சாதியாருக்குமான முட்டல் மோதல், ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு முன்பே  துவங்கிவிட்டது. 1924-வாக்கில்,  வன்னியர்களுக்கும் நாடார்களுக்கும் இடையேயான போட்டி உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது அவர்களுக்குள் நடந்த வாதப் பிரதிவாதங்களை இப்போது படிக்கும் போது, சுவாரசியமாக உள்ளது. அதே சமயம், விபரிதமாகவும் தோன்றுகிறது. அப்போதே இந்த விவகாரம் நீதிமன்றம் வரைச் சென்றுள்ளது.

சு. அர்த்தநாரீச வர்மா

வன்னியர்களின் சார்பாக சேலம் சு. அர்த்தநாரீச வர்மா என்பவர் ‘சத்திரியன்’ என்ற இதழையும், ஆ.சுப்பிரமணிய நாயகர் என்பவர் ‘வன்னிய குலமித்திரன்’ என்ற இதழையும் நடத்தியுள்ளனர். நாடார்களின் சார்பாக சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து விஜய துரைசாமி கிராமணி என்பவர் நடத்திய ‘சத்திரிய மித்திரன்’ என்ற இதழும், அருப்புக்கோட்டையில் இருந்து ‘நாடார்குல மித்திரன்’ என்ற இதழும் வெளிவந்துள்ளன. இரு தரப்பும் தங்களது சாதியை உயர்வாக காட்டிக்கொள்ள ஒருவர் மீது ஒருவர் சேற்றைவாரி வீசியிருக்கிறார்கள்.

சத்ரிய மித்திரன் இதழ் வன்னியர்களை பள்ளிகள். வேடர்கள், அன்னியர்கள் என்றும், மேலும் அவர்கள் கள்ளுக்குடிப்பவர்கள், கள்ளுகாவடி சுமப்பவர்கள், நண்டு நத்தை திண்பவர்கள், விதவைகளை மணப்பவர்கள் என்றும் இழிவாகப் பேசுகிறது. சத்ரியன் இதழ் நாடார்களை சாணார்கள், ஈழக்குலத்தவர்கள், கைத்தொழில் செய்யும் சாதி எனவும் குறிப்பிடுகிறது.  

விஜய துரைசாமி கிராமணி

அந்த காலத்தில் ‘பள்ளிபத்து’ என்ற கவிதாவியாசம் ஒன்று வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளிபத்தில் சொல்லப்பட்டுள்ள வன்னியர் வரலாறு வருமாறு:- செழித்த வனம் ஒன்றில் மாண்டவி என்ற முனிவர் வசித்து வந்தார். சம்பு என்ற பெருந்த பெண் நரி ஒன்று அவர் இருந்த இடத்திற்கு வந்தது. அம்முனிவர் அந்த பெண் நரியைக் கண்டு காமவெறிக்கொண்டு அதைப் புணர்ந்தார். பயத்துடனே தன் இருப்பிடத்திற்கு ஓடிச் சென்ற அந்த பெண் நரி அங்கு ஒரு புத்திரனை ஈன்றது. நரியின் பாலையும், நரி திண்ணும் உணவையும் உண்டு ஐந்தாறு வயது வரை வளர்ந்த அந்த புத்திரன், அதன்பின் அங்கு வாழ்ந்த வேடர்களுடன் சேர்ந்துக் கொண்டான். அவனை பெற்ற பெண் நரியின் பெயர் சம்பு என்பதால் அவர்கள் அவனுக்கு சம்புசுதன் என பெயரிட்டனர். அவன் பருவமெய்தி சடாமுடியும் தாடியுமாக இருந்தான்.

அந்த வனத்திற்கு அருகில் இருந்த மருதூர் என்ற நாட்டில் தோற்கருவி, துளைக்கருவி முதலிய வாத்தியங்களை கோயில்களிலும், இராஜ சமூகங்களிலும் வாசிக்கும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் இறந்துப்போனதால், அவனது மனைவி இளம் வயதில் விதவையாகி தனியாக வாழ்ந்துவந்தாள். அவள் தனது ஜீவனத்திற்காக அந்த காட்டிற்கு வந்து காய், கனி, கிழங்கு, விறகு ஆகியவற்றை எடுத்துச் செல்வாள். வாலிபனாக இருந்த சம்புசுதன், ஒரு தருணத்தில் அவளை பார்த்து, காமங்கொண்டு அவள் கையைப்பிடித்து இழுத்து புணர்ச்சிக்கு அழைத்தான். அந்த பெண் அவனை நோக்கி, ‘ஓ, முனியே!  நான் அமங்கலியாய் இருக்கிறேன். என்னைத் தொடுவது நீதியல்ல’ என்று சொல்லியும் அவன் அவள் கையைவிடுவதாக இல்லை. ‘முனிவனான இவன் கோபங்கொண்டு தன்னை சபித்துவிடுவானோ’ என்று பயந்துபோவள் மனந்தளர்ந்தாள். தன் பையில் வைத்திருந்த பொற்தாலியை எடுத்து அவன் கையில் கொடுத்து, ‘இதை உன் கையால் என் கழுத்தில் கட்டினால், உன் இச்சைப்படி நடந்துக் கொள்ளலாம்’ என்று அவள் சொல்ல, அதை கேட்டு சந்தோசமடைந்த சம்புமுனி, அங்கிருந்த எருக்கச் செடியின் நாரைக் கிழித்து அதில் பெற்தாலியை கோர்த்து அவள் கழுத்தில் கட்டினான். அதன் பின் அவர்கள் இருவரும் ஒரு பள்ளமாயிருந்த இடத்தில் கூடிப்புணர்ந்து சந்தோசமாய் இருந்தனர். இப்படி அவர்கள் பல காலம், பல வனங்களில் கூடித் திரிந்து பல பிள்ளைகளைப் பெற்றனர். பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்கு சம்பந்தம் செய்ய வேண்டி, என்ன செய்வது என்று அவள் ‘சம்பு மகரிஷி’யிடம் கேட்க, நாம் பள்ளத்தில் கூடி பெற்றதால் இவர்களுக்கு ‘பள்ளசாதி’ என பெயரிட்டு, ஊருக்குள்ளே சென்று மற்ற சங்கம சாதிகளில் இவர்களுக்கு சம்பந்தம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, அதன்படியே வாழ்ந்தார்கள் என நீள்கிறது இந்த கதை.

பூணூல் அணியும் வன்னியர்கள்

வன்னியர்களை இழிவுப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட இந்நூலை, காஞ்சிபுரம் ஐயங்கார் குளத்தைச் சேர்ந்த பென்னுசாமி முதலி என்பவர் வெளியிட்டுள்ளார், அவர் மீது வன்னியர்களால் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பென்னுசாமி முதலி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த நூலை முன்வைத்து, தொடர்ந்து சத்திரிய மித்திரன், நாடார்குல மத்திரன் இதழ்களில் வன்னியர்களை இழிவுப்படுத்தும் கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இவ்விதழ்கள் மீதும் வன்னியர்கள் வழக்கு தொடுத்து வெற்றிப் பெற்றுள்ளனர்.

1923 முதல் 1951 வரை சத்திரியன் இதழ் வெளிவந்துள்ளது. இவை அனைத்தையும் பொருள் வகைப்படுத்தி 17 தொகுதிகளாக ஆறு. அண்ணல் அவர்கள் தொகுத்துள்ளார். இந்த தொகுப்புகள் 2010 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளன. வன்னியர்களை பற்றிய அவதூறான செய்திகளையும், அவற்றிற்கு வர்மா அளித்த பதில்களையும், தொகுப்பாசிரியர் உள்ளது உள்ளபடி நேர்மையாக தொகுப்பில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பூணூல் அணியும் நாடார்கள்

1980 வாக்கில் முன்முதலாக, கடலூரைச் சேர்ந்த சண்முக கிராமணி என்பவர், இந்த வன்னியர் – நாடார் மோதல் தொடங்க காரணமாக இருந்ததாக தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் தேள்சீலை போராட்டமும், முலைவரி போராட்டமும்  நடத்திக் கொண்டிருந்தப்போது, வடதமிழகத்தில் வாழ்ந்த நாடார்கள் தங்களை சத்திரியர்கள் என நிரூபிக்க முன்றிருக்கிறார்கள். நாடார்கள் சத்திரியர்களில்லை, தாங்கள்தான் சத்திர்யர்கள் என நிரூபிக்க வன்னியர்கள் நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். இதற்காக இவர்கள் இருவருமே பார்ப்பனர்கள் எழுதித்தந்த சமஸ்கிருத ஆதாரங்களையே காட்டி வாதாடியிருக்கிறார்கள்.

இப்படி ஆதிகாலத்திலேயே, பார்ப்பனர்களின் கருத்தியல் வலையில் சிக்கிய பலியாடுகளான இரண்டு சாதிகளும், இப்போது போட்டிப்போட்டுக் கொண்டு, இந்துத்துவ பிஜேபியின் ஆதரவு தளமாக மாறிவருகிறன.

  • கொம்புக்காரன்