கொடிக்கம்பங்கள் இடிப்பு! தமிழ் அரசியல் அடையாள அழிப்பு!

HOME

தமிழகம் எங்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களும் அவசர அவசரமாக இடிக்கப்படுகின்றன. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் 2016-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இப்போது உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வழங்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே தேர்தல் ஆணையம் இதனை அவசர அவசரமாக அமல்படுத்தியது. ஏன் இந்த அவசரம்?

பொதுவாக பார்க்கும்போது, அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் பொது இடத்தை ஆக்கிரமித்திருப்பதால் அதை இடிப்பது சரியாகத் தோன்றும். இந்தக் கொடிக்கம்பங்கள் அரசியல் கட்சிகள் மோதலுக்கும் ஜாதி மோதலுக்கும் இடமளிக்கிறது எனவும் தோன்றலாம். ஆனால், இந்தக் கொடிக்கம்பங்கள் தமிழ் அரசியலில் பிரிக்க முடியாத ஒரு அடையாளம்.

காவிரி நதிநீர் பிரச்சினை தொடங்கி டாஸ்மாக் மதுபானக்கடை பிரச்சினை வரை நீதிமன்ற உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தியதில்லை. ஆனால், இந்த உத்தரவு மட்டும் அவசர அவசரமாக அமல்படுத்தப்படுவது ஏன்?

தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய அதிமுக, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்?

தமிழ் அரசியல் கலாச்சாரத்தில், ஒவ்வொரு தொண்டனுக்கும் தனது கட்சியின் கொடிக்கம்பத்தை தான் வாழும் பகுதியில் ஏற்றுவது ஒரு கனவு. அதில், தனது பெயரை பொறித்துக்கொள்வது அவனுக்குப் பெருமை. இது நியாயமான ஒரு ஜனநாயக உணர்வு. அரசியல் கட்சிகளுக்கும் அவர்களுடைய கொடிக்கம்பம்தான் கொள்கை பேசும் அடையாளம்.

காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பெரும் தலைவர்கள்கூட தங்கள் கட்சியின் தொண்டர்களுடைய விருப்பத்திற்காக, பல ஊர்களுக்கு சென்று பல தெரு சந்திப்புகளில் கொடியேற்றியிருக்கிறார்கள். இந்த அடையாளங்கள் அனைத்தும் இப்போது முற்றாக அழிக்கப்படுகிறது.

அதிமுக-வை தொடங்கிய எம்ஜிஆர் இப்போது இல்லை. அதைப் பாதுகாத்த ஜெயலலிதாவும் இப்போது உயிருடன் இல்லை. அதிமுக இப்போது எடப்பாடியின் கையில் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் பொறித்த கொடிக்கம்ப கல்வெட்டுகள்தான் தமிழகமெங்கும் உள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் எடப்பாடியின் பெயர் இல்லை என்பதால்தான் இவை அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறாரோ எடப்பாடி.

தமிழகத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் தேசிய கட்சிகள் வளர முடியாது. பிஜேபி இன்று இந்தியாவின் ஆளுங்கட்சியாக இருக்கும்போதும், அதற்கு தமிழகம் எங்கும் கொடிக்கம்பங்கள் இல்லை. தெருவுக்குத் தெரு நின்று மாநிலக் கட்சிகளின் அடையாளத்தை எதிரொலிக்கும் கொடிக்கம்பங்களுடன் பிஜேபி-யால் போட்டியிட முடியாது. ஆகவே, தங்களுக்கு இல்லாத அடையாளம் யாருக்கும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறதோ பிஜேபி-யின் மத்திய அரசாங்கம்?

மன்னர்கள் ஆட்சி காலங்களில், பேரரசுகள் தங்கள் சார்ந்த மதங்களையும், தங்கள் பெருமை பேசும் அடையாளங்களையும் உயர்த்திப் பிடிக்க, மற்ற மதக் கோயில்கள் மற்றும் முந்தைய அரசு அடையாளங்களை அழித்தது போல மோடியின் பேரரசு தமிழ் அரசியல் அடையாளங்களை அழிக்கிறதா?

  • கொம்புக்காரன்