தேர்தல் பற்றவைத்த சாதிய காட்டுத்தீ!

HOME

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நேரத்தில், முத்தரையர் சமூகத்தையும் அந்த சமூக பெண்களையும் இழிவாக பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் பரவி, பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் தஞ்சாவூர் பகுதியில் இந்த ஆடியோ பரவியது. இது தொடர்பாக முத்தரையர் அரசியல் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் மூர்த்தி, தஞ்சாவூர் காவல் நிலையத்தில் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை.

இந்த ஆடியோ புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பரவியதால் அங்கு போராட்டமும் கலவரமும் வெடித்தது. கடந்த 18-ஆம் தேதி இரவு முத்தரையர் சமூகத்தினர் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். காவல்துறை அலட்சியம் காட்டவே, மறுநாள் கூடிய முத்தரையர்கள் மறியல் போராட்டத்தில் இறங்கியதுடன் காவல் நிலையத்தையும் தாக்கினர். காவல்துறை வானத்தை நோக்கி சுட்டும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தது. இதனால் பதட்டம் மேலும் அதிகமானது.

போராட்டமானது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பரவியது. 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மூன்று நாட்களும் போக்குவரத்து முடங்கியது. அடுத்து இந்தப் போராட்டம் சிவகங்கை மாவட்டத்திலும் பரவியது. மாவட்ட நிர்வாகங்கள் புதுக்கோட்டை, சிவகங்களை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டன. போராட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு தெரிந்த வழி இதுதான் போலும்.

தேர்தலுக்கு முன்னர், முதலில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் செல்வக்குமார், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். பின்னர் என்ன நடந்ததோ, திடீர் என முதல்வர் எடப்பாடியை சந்தித்து, சால்வை அணிவித்து அதிமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இப்போது இந்த முத்தரையர்கள் யாருக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதே தெரியவில்லை.

இதுபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வன்னியர்களால் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருமாவளவனின் பானை சின்னத்தை வன்னியர்கள் சேதப்படுத்தியதால் வெடித்தது இந்தக் கலவரம். தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்த வன்னியர்கள் 62 ஓட்டு வீடுகளை அடித்து சேதப்படுத்தி பெண்களையும் தாக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பல இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டது. காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி ஜெயங்கொண்டத்தில் பாமக போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பாமக மாழ்பழம் சின்னம் வரைந்த இரண்டு வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பொன்பரப்பி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, வரும் 24-ஆம் தேதி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தருமபுரி தொகுதியில் உள்ள நத்தைமேடு வாக்குச் சாவடியில் ஒரு பாமககாரர் அதிகாரிகளை மீறிச் சென்று பல ஓட்டுக்கள் போடும் சம்பவம் நடந்துள்ளது. இதுபோல அந்த தொகுதியில் பல இடங்களில் நடந்துள்ளதாம். பாமகவின் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடும் அரக்கோணம் தொகுதியின் கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் பாமகவினர் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளே நுழைய முற்பட்டதால் காவல்துறை வானத்தை நோக்கி சுடும் சம்பவம் நடந்துள்ளது.

அன்புமணி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில், ‘வாக்குப்பதிவின்போது நாம் மட்டும்தான் வாக்குச்சாவடியில் இருப்போம்.. அப்புறம் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? உங்களுக்கே தெரியாதா,’ என்று பேசி பாமகவினருக்கு வாக்குச் சாவடியை கைப்பற்ற சிக்னல் கொடுத்தார். இதன் பிரதிபலிப்பாக பொன்னமராவதி, தருமபுரி, கீழ்விஷாரம் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்பின் பின்னணியில் இயங்கும் சமூக வலைத்தளங்கள், தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு பெருமைபேசும் வரலாற்றை கற்பித்து, அந்த சாதியினரை தற்பெருமையில் தலைகிறுகிறுக்கச் செய்துள்ளன. இப்படி மந்தையாக்கப்பட்ட சாதிகளின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சிதான் இப்போது பிஜேபி அமைத்திருக்கும் கூட்டணி.

பாமக, தேமுதிக, புதிய தமிழகம், வீரமுத்தரையர்  முன்னேற்ற சங்கம், சமத்துவ மக்கள் கட்சி போன்ற சாதிய பின்னணியுள்ள கட்சிகளுடன் ஆளும் கட்சியான பிஜேபியும், அதிமுகவும் கூட்டு சேர்ந்ததன் விளைவுதான் இப்போது தமிழகம் எங்கும் சாதிய கலவரங்களாக வெடித்து வருகிறது.

தேர்தலுக்காக சாதிய கட்சிகள் பற்ற வைத்த காட்டுத்தீயில் இருந்து தமிழ் சமூகத்தை நாம் எப்படிக் காக்கப் போகிறோம்?

  • வசீகரன்