வன்னியர்களின் குலதெய்வத்தை திருடி கோடிகளை குவித்த சாமியாடி கைது!

HOME

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கருப்புசாமி கோயில் சாமியாடி கையால் பிடிகாசு வாங்க மக்கள் முண்டியடித்த நெரிசலில் சிக்கி 7 உயிர்கள் பலி!

துறையூர் அருகே சிங்கனாந்தபுரத்தில் உள்ள கருப்புசாமி கோயில் பல வன்னியர் குடும்பங்களுக்கு குலதெய்வக் கோயில். 16 வருடங்களுக்கு முன்பு மணச்சநல்லூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி தனபால், இந்தக் கோயில் குறிசொல்லி சாமியாடி ஆனார். இவர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்.

சாமியாடி தனபாலிடம் குறிகேட்க லட்சக்கணக்கில் மக்கள் கூட ஆரம்பித்தனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, சிங்கனாந்தபுரம் மக்கள் ஒன்றுகூடி கருப்புசாமி கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். அதற்காக, குறிசொல்லி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள சாமியாடி தனபாலிடம் ஒரு தொகை தரும்படி கேட்டதற்கு தர மறுத்துவிட்டார்.

அதேநேரம், சிங்கனாந்தபுரத்திற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில், முத்தையம்பாளையத்தில் தரிசாக கிடந்த சுமார் 40 ஏக்கர் நிலத்தை வாங்கி, திறந்தவெளியில் நலம்காக்கும் வண்டித்துறை கருப்புசாமி சிலையை பிரதிஷ்டை செய்து குறிசொல்ல தொடங்கிவிட்டார் சாமியாடி தனபால்.

செவ்வாய், புதன் கிழமைகளிலும் பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் குறிசொல்லுவார். அப்போது ஆயிரக்கணக்கில் கூடும் மக்கள் யாரும் செல்போனில் படம் எடுக்கக் கூடாது …….. மக்களை கண்காணிக்க பலபேர் அங்கு சுற்றி வருவார்கள்.

தனபால் சாமியாடி குறிசொல்லும்போது ஊர் பெயர், என்ன கலர் உடையில் வந்திருக்கிறார்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்களுடன் வந்திருக்கிறார்கள் என்ற அடையாளத்தை சொல்லி அழைத்து குறிசொல்லுவார். ஒருசில பணக்கார பக்தர்களை அழைத்து ‘வெற்றி மாலை’ போடுவார். வெற்றிமாலை வாங்கியவர்கள் பெரிய ஆளாக வளர்வார்கள் என்று குறி சொல்லுவார். வெளி மாவடங்களில் உள்ள பணக்கார பக்தர்களின் வீடுகளுக்கு திடீர் என்று சென்று, அங்கேயே குறிசொல்லி, பெரும்தொகையை காணிக்கையாக வாங்குவார்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவு நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாய்களை பக்தர்கள் பலியிடுவார்கள். அந்த இறைச்சியை மறுநாள் பிரியாணியாக சமைத்து பிரசாதமாக வழங்குவார்கள்.

அதுபோல, ஆண்டு முழுவதும் பக்தர்கள் செலுத்திய சில்லறைக் காசுகளை சேர்த்து வைத்து, சித்திரை பவுர்ணமி அன்று சாமியாடி தனபால் கையால் பிடிகாசு வழங்குவார். அந்த பிடிகாசை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

இந்த பிடிகாசு வழங்கும் விழா கடந்த 21.04.2019 அன்று நடைபெற்றது. அன்று காலை 9.30 மணியளவில் பிடிகாசு தீரப்போகிறது என்று வதந்தி பரவியதால் மக்கள் முண்டியடித்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, மிதிபட்டு, மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடந்த பின்னும், சாமியாடி தனபால் பிடிகாசு வழங்கும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவராஜ், மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சரக டிஐஜி லலிதாலெட்சுமி, எஸ்பி ஜியாவுல் ஷேக் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, பிடிகாசு நிகழ்ச்சியை நிறுத்தி, சாமியாடி தனபாலை கைதுசெய்தனர். இந்தக் கோயிலும், திருவிழாவும் இந்து அறநிலையத்துறையில் அனுமதி பெறாதது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசின் எந்த அனுமதியும் பெறாத இந்த திருவிழாவுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வந்துள்ளது. தீயணைப்பு வாகனங்களும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த உயிர் பலிகள் நடந்ததும், அன்று இரவே முதல்வர் பழனிசாமி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். பிரமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். கஜா புயல் 13 மாவட்டங்களை புரட்டிப் போட்டபோது நிவாரணம் வழங்க மாதக்கணக்கில் இழுத்தடித்த மத்திய, மாநில அரசுகள் இப்போது சாமி கும்பிடப்போய் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஓடோடி வருகிறது. என்ன கொடுமைடா சாமி!

  கொம்புக்காரன்