சாதிய அரசியல் அசிங்கம்! அவமானப்பட்ட மக்கள் போராட்டம்!

HOME

கடந்த 19-ஆம் தேதி முத்தரையர் சமூகத்தையும், அந்த சமூக பெண்களையும் இழிவாக பேசிய ஆடியோ வாட்ஸ்அப்பில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் போராட்டமும் கலவரமும் வெடித்தது. இரண்டு நாட்கள் அந்த மாவட்டத்தில் உள்ள 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. போக்குவரத்துக்கள் முடங்கின. கலவரத்தை கட்டுப்படுத்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்தப் போராட்டம் சிவகங்கை மாவட்டத்திலும் பரவியதால் அங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்தப் போராட்டத்தில், காவல்துறைக்குச் சொந்தமான 6 வாகனங்கள், சில கடைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சில் 3 போலீஸார் காயமடைந்தனர். 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. பொன்னமராவதி மட்டுமின்றி மாவட்டத்தினுள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 2,000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், அவதூறு ஆடியோ பரப்பியவர்களை கண்டுபிடிக்க, கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது காவல்துறை. அதைத் தொடர்ந்து, கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காட்டை சேர்ந்த செல்வகுமார் சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வசந்த் என்பவரும் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று (27 – 04 – 2019) சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய சுந்தர்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும், இன்று பேராவூரணியை சேர்ந்த சபரி, பாலாஜி, பிரகாஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் உள்ள சுமார் 8.5 லட்சம் ஓட்டுக்களில் 4.5 லட்சம் ஓட்டுக்கள் முத்தரையர்களின் ஓட்டுகள் என்றும், அந்த ஓட்டுகள் சுயேட்சையாக போட்டியிடும் முத்தரையர் செல்வராஜுக்கு கிடைத்தால் அவர் வெற்றுபெற்றுவிடுவார் என்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த சிலர் வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர். இந்த ஓட்டுகள் செல்வராஜுக்கு கிடைக்க வேண்டும் என்றால் முத்தரையர்களை ‘உசுப்பிவிடும்படி’ ஆடியோ ஒன்றை பதிவு செய்யுமாறு செல்வக்குமாரிடம் கூறியிருக்கிறார் வசந்த். அதனால்தான், சிங்கப்பூரில் இருந்த செல்வக்குமாரும் சத்தியராஜும் சேர்ந்து இந்த அவதூறு ஆடியோவை பதிவிட்டு பரப்பியுள்ளனர். அந்த ஆடியோதான் போராட்டத்தையும் கலவரத்தையும் வெடிக்க வைத்துள்ளது.

இந்த சம்பவம் மூலம், ஓட்டுக்காக தன் சொந்த சாதி மக்களை உசிப்பிவிடும் சாதிய அரசியலின் அசிங்கமான முகம் அம்பலமானது. இதில், மாற்று சமூகத்தினர் தங்களை இழிவுபடுத்திவிட்டதாக எண்ணி போராட்டம் நடத்தி, வழக்குகளில் சிக்கிய மக்கள்தான் அவமானப்பட்டுப் போனார்கள்.

இது கொடுமையிலும் கொடுமை.

  • வசீகரன்